Sunday 2 January 2022

2022இல் உலகம் எப்படி இருக்கப் போகின்றது?

 



முன்னைய ஆண்டுகளில் இருந்து 2022இலும் தொடரும் பிரச்சனைகள்: 1. உக்ரேன் எல்லையில் இரசியப் படைக்குவிப்பு, 2. தைவானை ஆக்கிரமிக்க முயலும் சீனா, 3. செல்வாக்கிழந்த ஆட்சியாளரகள்,4. பணவீக்கமும் அரச நிதிப்பற்றாக்குறையும் 5. பெருந்தொற்று நோய், 6 பொருளாதாரப் பிரச்சனை.

உக்ரேன்

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்கா இருமுனைப் போரை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டு திணறும் எனக் கருதப்பட்டது. இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு கடும் குளிர் நிலவும் ஜனவரி இறுதி உகந்ததாக இருக்கும். ஆனால் சீனாவின் 2022 பெப்ரவரியில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முதல் சீனா தைவானை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகள், ஜப்பான், கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் போட்டியைப் புறக்கணிக்கும். அதனால் சீனா பெரும் இழப்பீட்டைச் சந்திக்க வேண்டிவரும். நேட்டோ நாடுகள் உக்ரேனைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றாலும் உக்ரேன் மீது இரசியா போர் தொடுக்கும் போது நேரடியாக நேட்டோப்படையை களமிறக்குவதற்கான வாய்ப்பு குறைவு. இரசிய படைகளை உள்ளே வரவிட்டு கரந்தடித் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம். அத்தாக்குதலில் போலந்து மற்றும் துருக்கியப் படைகள் பெருமளவில் இரகசியமாகப் பங்கேற்பர். நேட்டோ நாடுகளின் புதிய படைக்கலன்களுடன் மரபு வழிப்போர்ப் பயிற்ச்சி பெற்ற படையினர் இரசிய ஆக்கிரமிப்பு படையினர் மீது தாக்குதல் செய்யும் போது பெருமளவு ஆளணி இழப்புக்களும் படைத்துறைப் பார ஊர்தி இழப்புக்களும் ஏற்படும். அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் உக்ரேனின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் மாறலாம். 2022  பெப்ரவரி இறுதியில் உக்ரேனில் ஒரு மோதல் நடக்கும். 

தைவான்

சீனாவின் தைவான் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு பல வழிகள் உண்டு. தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் சீனா தைவானை ஆக்கிரமிக்க முயலலாம். அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. தைவானியர்களிடையே சீன எதிர்ப்பு மோசமாகிக் கொண்டே போகின்றது. சீனாவிற்கு அடிபணிய வேண்டும் என்ற எண்ணம் இளம் தைவானியர்களிடையே இல்லை. மிக அதிக ஏவுகணைகளை தைவான் மீது ஒரேயடியாக வீசி தைவானை தரை மட்டமாக்கி அடிபணிய வைக்க முயற்ச்சிக்கலாம். தைவான் சீனாவின் மேற்குகரையோர நகரங்கள் மீது தனது ஏவுகணைகளை வீசி சீனப் பொருளாதாரத்தை சிதைக்க முயலலாம். ஹொங் கொங்கையும் ஷாங்காயையும் இலக்கு வைத்து தைவான் பல ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் தனிய தன்னைப் பாதுகாக்க மாட்டாது. ஜப்பான் தைவானை ஆக்கிரமிக்கும் படைகளை இலக்கு வைத்து தைவானுக்கு அண்மையாக உள்ள தீவுகளில் பெருமளவு ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் நீரிணையக் கடக்க முயலும் சீனப் படைகளை ஜப்பானியக் கடற்படைகளும் அமெரிக்க கடற்படைகளும் இணைந்து முதலில் தடுக்கும். தடையை மீறிச் சீனப் படையினர் செல்ல முயன்றால் பெரும் கடற்போர் நடக்கலாம். அது முற்றிய நிலையில் அமெரிக்க நகரங்களையும் ஜப்பானையும் இலக்கு வைத்து சீனா தனது மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை வீசலாம். அது பல நேட்டோ நாடுகளையும் ஒஸ்ரேலியாவையும் தென்கொரியாவையும் வியட்னாமையும் சீனாவிற்கு எதிரான போரில் ஈடுபட வைக்கும். சீனாவின் இந்த போர்ச் சூழலைப் பயன்படுத்தி இந்தியா முழுக் கஷ்மீரையும் கைப்பற்ற முயலலாம். ஒது ஓர் உலகளாவிய போராக மாறும் இடர் உண்டு.

உலகப் பொருளாதாரம்

கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 2022இல் ஆறு மாதங்களாவது எடுக்கும். நோய்க்கான மருந்தும் 2022இல் பரவலாக பாவனைக்கு வந்துவிடும். உலகில் பல நாடுகளில் அரச துறையில் ஆட்குறைப்பு செய்யப்படும். ஓய்வூதியங்கள் பெறுவோர் சிக்கல்களைச் சந்திப்பார்கள். பணிபுரிவோர் வீட்டிலும் பணிமனையிலும் இருந்து செயற்படுவது 2022இல் நிரந்தரமாகிவிடும். 2022இல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல சிரமங்களை அரசுகள் எதிர் கொள்ளும். அதனால் உலகெங்கும் வட்டி விழுக்காடு அதிகமாக இருக்கும். பல நாடுகளின் திறைசேரிகள் விற்பனை செய்யும் கடன் முறிகள் எதிர்பார்த்த அளவு நன்மையத் தாராது. 2009இன் பின்னர் நடந்தது போல் அளவுசார் தளர்ச்சி எதிர்பார்க்கும் நன்மையைத் தராது.

சூழல் பாதுகாப்பு

மேற்கு நாடுகள் புவிப்பந்தை அசுத்தப்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் சீனா இந்தியா போன்ற நாடுகள் தாமும் தொடர்ந்து அசுத்தப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதனால் சூழல் வெப்பமாதலும் மாசுபடுத்தப் படுவதும் தேவையான அளவு குறைக்க முடியாமல் இருக்கும். புதுப்பிக்கக்கூடிய வலு (Renewable Energy) உற்பத்தியில் அதிக முதலீடுகள் செய்யப்படும். பசுமைக் கொள்கை பல நாடுகளில் வலிமையடையும்.

இந்தியா

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு 2022 ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கின்றது. 2022இன் ஆரம்பத்தில் கோவா, மணிப்புரி, பஞ்சாம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கின்றது. நல்ல தலைவர் இல்லாத காங்கிரசுக் கட்சி ஆளும் பரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான வெற்றியின் இரகசியம் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் வலுவற்ற தலைமையில் தங்கியுள்ளது. இந்தியா 2022இல் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புண்டு.

இலங்கை

2021இல் இலங்கை அரசின் நடுவண் வங்கி அந்நியச் செல்வாணிக் கையிருப்பு இன்மையால் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டது. 2022 இலங்கையின் அரசுக்கு சொந்தமான வர்த்தக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவை செயற்படா கடன்களால் நெருக்கடியை எதிர் நோக்கலாம். அவற்றுடன் ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி போன்றவையும் நிதி நெருக்கடியைச் சந்திக்கலாம். அவற்றை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியாமல் இலங்கையின் நடுவண் வங்கி திணறலாம். பெருமளவு நன்கொடை அல்லது உள்நாட்டுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து தப்ப முடியும். அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வதும் அதை அரசு இரும்புகரங்களால் அடக்குவதும் நடக்கும். இலங்கை ஆட்சியாளர்கள் படைத்துறையினரின் ஆட்சி வரும் என மிரட்டுவார்கள். ராஜபக்சே குடும்பத்தினர்களின் ஊழல்கள் பலவற்றை மேற்கு நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசியல்வாதிகள் அம்பலப் படுத்துவர். ஆட்சி கலையும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வார்கள். அமெரிக்காவுடனான SOFA ஒப்பந்தம் வேறு பெயரில் இலங்கையால் கைச்சாத்திடப்படலாம். இந்தியாவுடனான இலங்கையின் CEPA ஒப்பந்தம் மீளவும் காலம் கடத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஈழத் தமிழர்கள்

மீண்டும் ஈழத்தமிழர்களை 13இற்குள் முடக்கும் முயற்ச்சி 2022இல் உறுதியாக முன்னெடுக்கப்படும். ஏற்கனவே பல அரசியல்வாதிகள் அதற்கு விலைபோன நிலையில் மேலும் பல அரசியல்வாதிகள் விலைபோக வாய்ப்புண்டு. இலங்கையை 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் ஆற்றல் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவைக் கையாளும் திறனை இலங்கை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டே வருகின்றது. எல்லாத் தமிழர்களும் இணைந்து இந்தியாவிடம் 13ஐ முழுமையாக நிறைவேற்ற வைக்கும் கோரிக்கை இறுதியில் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும். வலுவிழந்த நிலையில் இருக்கும் இலங்கை அரசு சிங்கள மக்கள் நடுவில் மேலும் செல்வாக்கு இழக்க வைக்கும் நகர்வான 13ஐ முழுமையாக நிறைவேற்றுவதைச் செய்ய மாட்டாது. இந்தியாவை ஏமாற்றுவதற்காக அரச ஆதரவுடன் 13இற்கு எதிரான கிளர்ச்சிகளை பிக்குகள் தலைமையில் பெருமளவு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இலங்கையில் உள்ள இந்தியாவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் 13-ம் திருத்தம் மேலும் வலுவிழந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம். இந்தியாவிற்கு எதிராக சிங்களவர்கள் செய்யும் கிளர்ச்சியை அமெரிக்கா ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும். காணாமற் போனோர் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. காணி அபகரிப்பு தொடர்ந்து நடக்கும். ஜெனீவா இழுத்தடிப்பு தமிழர்களுக்கு பயனின்றி தொடரும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அமெரிக்கா தமிழரகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்பது மனப்பாலாகவே இருக்கும்.

சீனா

சீனா செய்ய முயலும் பொருளாதாரச் சீர்திருத்தம் சீன மக்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும். சீன அதிபரின் பொதுச் செழுமைத் திட்டம் பல பணமுதலைகளின் மறைமுக எதிர்ப்புக்கு உள்ளாகும். உலக அரங்கில் சீனாவின் ஏற்றுமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம். மோசமடைந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் சீர்திருத்தப்பட முடியாமல் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் பட்ட கடன்களை அடைக்க முடியாமல் திணறும். ஜீ ஜின்பிங் ஆட்சியிலும் கட்சியிலும் தன் பிடியை இறுக்க எடுக்கும் முயற்ச்சிகள் எதிர்ப்பை சந்திக்கும்.

இரசியா

பெலரஸ் மற்றும் மோல்டோ நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க இரசியா தொடர்ந்து முயற்ச்சி செய்யும். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனை சீர் செய்யப்படும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரிக்கும். தனது எரிவாயு ஏற்றுமதியை இரசியா அரசுறவியல் கருவியாக (Diplomatic Tool) மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாவிக்கும்.

படைக்கலப் போட்டி

உலக நாடுகளிடையே படைக்கலப் போட்டி மேலும் தீவிரமடையும். முன்னணி நாடுகள் எல்லாம் தமது படைத்துறைச் செலவை அதிகரிக்கும். அமெரிக்காவின் தொலைதூரக் குண்டு வீச்சுமானமன B-21 Raider, ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள், Ford Class விமானம் தாங்கிக் கப்பல்கள், இரசியாவின் எஸ்-500 ஏவுகணை எதிர்ப்பு முறைமை, சீனாவின் அடுத்த மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள், இந்தியாவின் அக்னி-6 ஏவுகணைகள் 2022-ம் ஆண்டு முழுமையான பாவனைக்கு வரும். ஜப்பான் தனது படைவலிமையைப் பெருக்கும். அமெரிக்காவுற்கு அடுத்தபடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பான் இருக்கும். ஆனால் அம்முயற்ச்சி 2022இல் நிறைவடைவதற்கான வாய்ப்பு குறைவு.

துருக்கி ஒரு குழப்படி பிள்ளை போல் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரியும். சவுதி அரேபியா அடங்கும். இஸ்ரேல்-ஈரான் முறுகல் மேலும் தீவிரமடைந்து அவை இணையவெளியில் மோசமாக மோதிக் கொள்ளும். செயற்கை விவேகம் பல மடங்கு முன்னேற்றம் அடையும். துளிம கணினித்துறை (Quantum Computing) பெருமளவு முன்னேற்றமடையும். ஈரன் – அமெரிக்க யூரேனியப் பதப்படுத்தல் பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கும்.

நாடுகளிடையே முறுகல்கள் தீவிரமடைவதும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும், உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் புதிய படைக்கலன்களும், இயற்கை அனர்த்தங்களும் 2022இன் அம்சங்களாக இருக்கும்.

2 comments:

Anonymous said...

இந்திய மக்கள் தொகை சீனாவை விட உயரும்.
ஆனால் போர் என்று படைகள் மோதும் நிலை வந்தால்
எத்தனைஇந்திய வீர்ர்கள் ஒரு சீன படை வீரனுக்கு சமன் ?
ஒலிம்பிக் போன்றவற்றை அவதானித்தால் இந்த கேள்வி எழவே செய்யும் !

Vel Tharma said...

உலகின் மிகச்சிறந்த சிறப்பு நடவடிக்கை படையணியாக சீனாவின் Snow Leopard Commando Unit மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பிரித்தானியப்படையணி முதலாம் இடத்தில் இருந்தது. முதற் பத்து சிறப்பு படையணிகளில் இந்தியப் படையணி இல்லை. சீனர்களின் கர அடி கலையும் அவர்கள் உயிரைக் கொடுத்து போராடக் கூடியவரகள் என்பதாலும் அவர்கள் முதலாம் இடத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் அனுபவம் கேள்விக்குறி.
இந்தியர்கள் கவலைப்பட வேண்டிய ஒன்று: பாக்கிஸ்த்தான் நாலாம் இடத்தில் இருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...