இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையை வெறுக்கும் அமைப்பு. 1928-ம் ஆண்டு எகிப்த்தில் உள்ள சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட
உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா உட்பட எண்பத்து ஐந்திற்கு மேற்பட்ட நாடுகளில் இதன் செயற்பாடு உண்டு. இது தற்போது
எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும்
என்று வலியுறுத்துகின்றது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல
மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு
நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது.
முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய
சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்பும் தடை
செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல்
வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக்
கொள்கையுடைய அமைப்பாக மாறியதாகக் கருதப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேர்சி
எகிப்த்தில் 2011-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் கிளர்ச்யின் பின்னர் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை அப்போது நன்கு கட்டமைக்கப் பட்ட அமைப்பாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அப்புரட்சியின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பிக் கொண்டார். அவர் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபர் பதவிக்கு வந்தார். அவர் நாட்டில் இஸ்லாமிய மதவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்ட இளையோர் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்தவே விரும்பினர். இதனால் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இதைத் தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திய எகிப்தியப் படைத் துறையினர் எகிப்தை மீண்டும் தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இஸ்லாமிய சகோரத்துவ அமைப்புத் தடை செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறப்புத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் இன்று(ஓகஸ்ட்-2015) வரை சிறையில் இருக்கின்றார். நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேர்சியின் பேச்சாளராகத் தொழில் பார்த்த பெண்ணுக்குக் கூட ஆளில்லா நிலையில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சகோதரத்துவ அமைப்பிற்கு எதிரான வன்முறைகள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைத் தடை செய்த எகிப்தின் படைத்துறையினரின் அரசு அதற்கு எதிராக என்றும் இல்லாத அளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்புத் தண்டனை நீதி மன்றங்களால் விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு நாடாக துருக்கி இருக்கின்றது. துருக்கியில் அந்த அமைப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருக்கின்றது.
அமைதியா வன்முறையா என்ற குழப்பம்
தொடரும் அடக்கு முறைகளால் பல இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் வன்முறைசார் போராட்டத்தைத் தாம் ஆரம்பிக்க வேண்டும் என குமுறுகின்றனர். ஆனால் அதன் தலைமை அமைதியான வழிகளைக் கடைப்பிடிக்கும் படி உறுதியாகச் சொல்கின்றது. இதனால் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன அந்த அமைப்புக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. எகிப்திய அரசு எல்லா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரையும் பயங்கரவாதிகளாகக் கருதுகின்றது. சிறையில் இருந்து 2015 மே மாதம் விடுதலையான சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் குஜ்லான் அடக்கு முறை மிகுந்த அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பது தணலைக் கையில் எடுப்பது போலாகும் என்றார். மேலும் அவர் அமைதியைக் கடைப்பிடித்தல் படைக்கலன்களை ஏந்துவதிலும் பார்க்க வலிமையானது. இப்படிச் சொன்னதால் அவர் பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.
பிளவுகள்
ஏற்கனவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்த்தீனக் கிளையினர் பிளவடைந்து வன் முறையில் இறங்கியதால் உருவாகிய அமைப்புத்தான் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்பட்டு இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பு. 1987இல் ஏற்பட்ட இந்தப் பிளவின் இஸ்ரேலிய உளவுத் துறையும் பலஸ்த்தின விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் பங்கு பற்றி இருந்தது. இது போன்ற இன்னும் ஒரு பிளவு சகோதரத்துவ் அமைப்புக்குள் தோன்றுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு எகிப்தில் தனது நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்றது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவராக இருக்கும் அய்மன் அல் ஜவஹாரி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவரே.
எகிப்திய ஆட்சியாளரை தண்டிக்கச் சொல்லும் அறிஞர்கள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் எகிப்தை ஆளும் அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியின் ஆட்சிக்குத் துணை செய்பவர்களும் ஊழியம் செய்பவர்களும் இஸ்லாமிற்கு எதிராகச் செயற்படும் குற்றவாளிகள் என்கின்றனர். இக்குற்றாவாளிகள் கொல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி எகிப்தின் சினாய் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு உரிமை கோரி இருந்தது. ஆனால் எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிசி அந்தக் குண்டு வெடிப்பை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா தீண்ட விரும்பாத சகோதரத்துவ அமைப்பு
2015 ஜூன் மாதம் இஸ்லாமியச் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்த போது அவர்களை அமெரிக்க அரசு சந்திக்க மறுத்து விட்டது. 1950களிலும் 1960களிலும் அப்போதைய எகிப்தின் அதிபர் அப்துல் கமால் நாசர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். மத சார்பற்றவரான நாசர் மதவாத அமைப்பான இஸ்லாமிய சகோதரத்து அமைப்பினருக்கு எதிராகச் செயற்பட்டார். அதிலும் மோசமான நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அல் சிசியால் எடுக்கப்படுகின்றது.
தம்மை ஆய்வு செய்யும் சகோதரத்துவ அமைப்பு
இத்தகைய சூழ் நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக மாற்ற வேண்டும் என அமைப்பின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கின்றன. அமைப்பின் மேல் மட்ட உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு அரபுப் புரட்சியினால் அப்போதைய படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியைக் கலைத்ததில் இருந்து 2013-ம் ஆண்டு மொஹமட் மேர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டமை வரை தமது அமைப்பின் செயற்பாடுகளை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். தமது அமைப்பைச் சேர்ந்த இளையோர் சினாயில் இருந்து செயற்படும் அன்சர் பெயிற் அல்-மக்திஸ் (Ansar Beit al-Maqdis) என்னும் ஐஸ் எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய அமைப்புடனோ அல்லது நேரடியாக ஐ எஸ் அமைப்பினருடனோ இணைவதையிட்டுக் கரிசனை கொண்டுள்ளது. எகிப்த்தில் புரட்சித் தண்டனை என்னும் பெயரிலும் பிரபல எதிர்ப்பியக்கம்
என்னும் பெயரிலும் இரு புதிய அமைப்புக்கள் உருவாக்கியுள்ளன. இவை வன்முறைப்
போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.
மாறவேண்டும்
தற்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கையாளும் போது அமைப்பு தனது வன்முறை அற்ற கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகின்றது. அல்லாவிடில் அதற்குள் பிளவு ஏற்படும் அல்லது ஐ எஸ் அமைப்பை நாடி அதன் உறுப்பினர்கள் செல்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment