Thursday, 29 April 2021

சீனாவிடமிருந்து இந்தியாவை அமெரிக்கா பாதுகாக்குமா?

  


பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்க இந்திய உறவை மேம்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. சீனா பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசுர வேகத்தில் முன்னேறியதும் சீன விரிவாக்கத்திற்கு சீனா தயாராகின்றது என்ற நிலையுமே அமெரிக்க இந்திய உறவிற்கு வித்திட்டது. பராக் ஒபாமாவின் ஆசியச் சுழற்றி மையம் கொள்கையில் இந்தியாவிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். இந்தியா ஒரு வல்லரசு நாடாக இல்லாத போதிலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் போட்டியில் படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கும் நாடாக இருக்கின்றது. அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அமெரிகாவுடன் பெருமளவில் படைத்துறை ஒத்துழைப்பை மேற்கொண்டால் ஆசிய பசுபிக் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு பெரும் பாதகமாக அமையும். அமெரிக்காவின் உடனடி தேவை சீனா தைவான் தீவைக் கைப்பற்றுவதை தடுப்பதாகும்.

நேட்டோவின் பங்காண்மை நாடாக இந்தியா

2021 ஜூன் 14-ம் திகதி நடக்கவிருக்கும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியாவை நேட்டோவின் பங்காளியாக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒரு நிபுணர் குழுவால் முன்வைக்கப்படவுள்ளது. அக்குழுவின் இணைத்தலைவரான அமெரிக்காவின் முன்னாள் துணை வெளியுறவுத் துறைச் செயலர் வெஸ் மிசேல் இந்துஸ்த்தான் ரைம்ஸ் பத்திரிகையில் இந்திய – நேட்டோ ஒத்துழைப்பைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அது நேட்டோ இந்தியாவை பங்காளியாக இணையும் அழைப்பை விடுக்க வேண்டும், அதை தன் தயக்கத்தை எறிந்துவிட்டு இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்துடன் அவர் தனது கட்டுரையை ஆரம்பித்துள்ளார். நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிற்கு ஆப்கானிஸ்த்தான், ஒஸ்ரேலியா, ஈராக், பாக்கிஸ்த்தான், கொலம்பியா, ஜப்பான், நியூசீலாந்து, மொங்கோலியா, தென் கொரியா ஆகிய ஒன்பது பங்காண்மை நாடுகள் உள்ளன. பங்காண்மை நாடுகளுக்கு உறுப்புரிமையுள்ள நாடுகளுக்கு இருப்பது போன்ற கூட்டு பாதுகாப்பு பொறுப்பு இல்லை. நேட்டோவின் அமைப்பு விதிகளின் ஐந்தாவது பிரிவின் படி ஒரு உறுப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடுகள் அந்த அச்சுறுத்தல் தமக்கு வந்தது போல் கருதிச் செயற்பட வேண்டும். நேட்டோவின் பங்காண்மை நாடுகளுடன் இணையவெளிப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்றவற்றில் பெருமளவில் ஒத்துழைக்கும்.

தயக்கத்தை கைவிட்ட இந்தியா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என்கின்றது சீனா. மேலும் சீனா இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது எனக் கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஜேர்மனி என்னும் அமெரிக்கா வளர்த்த கடா

இரண்டாம் போரில் இரு கூறுகளாக்கப் பட்ட ஜேர்மனியின் மேற்குப் பகுதியை பொதுவுடமை சோவியத் ஒன்றியத்திடமிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் நடந்த பனிப்போரில் ஜேமனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றதுடன். பனிப்போரின் முடிவில் கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் ஒன்றிணைக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் பொருளாதார வலிமை மிக்க நாடாக உருவெடுத்தமைக்கு ஜேர்மனை அமெரிக்காவிற்கு செய்த ஏற்றுமதியும் ஒரு காரணமாகவும். ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஜேர்மனி தற்போது நோட்ஸ்ரீம்-2 என்னும் குழாய்த்திட்டத்தின் மூலம் இரசியாவிடமிருந்து பெருமளவு எரிவாயுவை இறக்குமதி செய்ய முனைகின்றது. இரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதன் விரிவாக்க முயற்ச்சிக்கு தடை போட நினைக்கும் அமெரிக்காவிற்கு ஜேர்மன் – இரசிய வர்த்தகம் தடையாக அமைகின்றது.

இன்றைய சீனாவின் நிலையை நாளை இந்தியா எடுக்குமா?

இன்று சீனாவிடமிருந்து அமெரிக்கா எதிர் கொள்ளும் சவால்களை இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவிடமிருந்தும் அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய வசதிகளை அமெரிக்கா 1980களில் சீனாவிற்கு செய்து கொடுத்தது. சீனாவில் சந்தைப் பொருளாதாரத்தை வளர்த்தால் அதுவும் ஒரு முதலாளித்துவ நாடாக மாறிவிடும் என அமெரிக்கா நம்பியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க அது அமெரிக்காவைப் போல் ஒரு முதளாளித்துவ நாடாக மாறியே ஆக வேண்டும் என அமெரிக்கா நம்பியிருந்தது. ஆனால் அந்த மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பிடி நாட்டில் தளரவில்லை. மாறாக மேலும் இறுக்கமடைந்துள்ளது. ஜி ஜின்பிங்கின் பிடி சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் சீனப் படைத்துறையிலும் கடுமையாக இறுக்கமடைந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி போலச் செயற்படுகின்றார்.

பொறுப்பு ஏற்க விரும்பாத அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பில் தாம் தேவைக்கு அதிகமான பங்கு வகித்ததாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பிற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் விட்ட தவறை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விட அமெரிக்கா விரும்பவில்லை. அதனால்தான் 2021 ஜனவரியில் குவாட் என்னும் ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பில் அமெரிக்கா பாதுகாப்பு பொறுப்பை ஏற்க மாட்டாது என அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா பெரிதும் விரும்புகின்றது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மாட்டாது. அதே வேளை இந்தியாவை சீனா போரில் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டால் சீன வெற்றியைத் தவிர்க்க அமெரிக்கா பல வகையிலும் இந்தியாவுடன் ஒத்துழைக்கும். அப்படி ஒரு நிலை இருக்கும் போது சீனா இந்தியா மீது போர் தொடுப்பதை தவிர்க்கும். 


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...