Sunday 7 November 2021

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்குமா?

  


இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்க முயல்கின்றது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமெரிக்கப் நாடாளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் காதில் இந்தச் செய்தி தேனாகப் பாய்ந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தமிழ் சட்டவாளர்களான மதியாபரணம் சுமந்திரன், கனக ஈஸ்வரன், திருமதி சந்திரகாசன் ஆகியோரை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளது என்ற செய்தியும் வெளிவந்ததால் தமிழர்களுக்கு தனிநாடே கிடைத்து விட்டது என்பது போல் துள்ளிக் குதிக்கின்றனர். ஓர் ஊடகம் பீதியில் தென்னிலங்கை எனச் செய்தியும் வெளிவிட்டுள்ளது.

அமெரிக்கா சொல்வதெல்லாம் உண்மையல்ல. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்வதுமுண்டு. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதன் அதிபரின் கீழ் உள்ள ஓர் அமைச்சு. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அது நாடாளமன்றத்தில் இருந்தே பெறவேண்டும். அமெரிக்க நாடாளுமன்றதின் மக்களவைக்கு நிதி தொடர்பாக அதிக அதிகாரமும் மூதவைக்கு வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கணிசமான அதிகாரமும் உள்ளன. வளரும் சீனாவை இலகுவாக எதிர் கொள்வதற்கு அதிக நிதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள படைக்கல உற்பத்தி முதலாளிகளும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி பெற உண்மைக்கு மாறான தகவல்களை பாதுகாப்புத்துறையை வழங்கும் படி தூண்டுவதுண்டு. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தெரியும். அவர்களுக்கும் படைக்கல உற்பத்தியாளர்கள் “கவனித்துக்” கொள்வாரகள்.

பெண்டகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் உள்ள ஒரு பந்தியில்:

The PRC has likely considered a number of countries, including Cambodia, Myanmar, Thailand, Singapore, Indonesia, Pakistan, Sri Lanka, United Arab Emirates, Kenya, Seychelles,

Tanzania, Angola, and Tajikistan, as locations for PLA facilities. எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதில் உள்ள likely considered என்ற சொற்றொடரை வைத்துப் பார்க்கும் போது சீனா நிச்சயம் தனக்கான படைத்துறை வசதிகளை இலங்கையில் அமைக்கும் என்ற கருத்து அதில் இல்லை. அப்படிக் “கருத்திற் கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பெண்டகனின் கருத்தை மறுத்த கொழும்பில் உள்ள சீனத் தூதுவரகம் “ஒரு கள்வன் மற்ற எல்லோரையும் கள்வன் என்பான். உலகெங்கும் 750இற்கு மேற்பட்ட படைத்தளங்களை வைத்துள்ளது அமெரிக்கா” என்றது.

இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதற்கான வழங்கற் பாதை மிகவுக் கடினமானதாகவே அமையும். இலங்கையில் சீனா படைத்தளம் அமைத்தால் அதை ஒரு போர் ஆகவே இந்தியா கருதி அதன் மீது இந்தியா கடலில் இருந்து வானில் இருந்து தரையில் இருந்து என பல முனைத் தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் இலங்கையில் உள்ள சீனப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தலாம். இலங்கையில் இருந்து மிகத் தொலைவில் உள்ள இந்தியாவின அருணாசலப் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கான தூரம் 4450கிமீ, கஷ்மீரில் இருந்து 4000கிமீ. இந்தியா அண்மையில் பரிசோதித்த அக்னி-5 ஏவுகணைகள் 5500 முதல் 8000கிமீ வரை பாயக் கூடியது. தமிழ்நாட்டுக் கரையோரத்தில் இருந்து குறுந்தூர ஏவுகணைகள் மூலம் இலங்கையின் எப்பகுதியிலும் தாக்குதல் செய்யலாம். இந்தியா Nuclear Triad நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா, இந்தியா, இரசியா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரையில் இருந்தும், வானில் இருந்தும் கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் அணுக்குண்டுகளை வீசக்கூடியவை என்பதால் அவை Nuclear Triad என அழைக்கபடுகின்றன. அதனால் இந்தியாவால் அம்மூன்று முனைகளில் இருந்தும் இலங்கையில் உள்ள நிலைகள் மீது அணுக்குண்டுகளையும் வீசலாம். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய SU-31 MKI போர்விமானங்கள 122 பிரம்மோஸ்-2 ஏவுகணைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதிமீயொலி (ஹைப்பர்சோனிக்) வேகத்தில் பாயக் கூடிய பிரம்மோஸ்-2 ஏவுகணைகளால் இலங்கையில் உள்ள எந்தப் பெரிய படைத்தளத்தையும் அழிக்க முடியும். இந்தியாவின் காளி ஏவுகணைகள் திட்டம் முழு வெற்றியளித்தால் அவற்றால் எதிரிகளின் அதிமீயொலி வேக ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.

 

இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்காது ஆனால் இந்தியாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இலங்கையை சீனா பாவிக்கும் என்பது உண்மையா எனப்பார்ப்போமானால்:

1. மலாக்கா நீரிணை வழியான நீண்ட கடல் பாதை 3108கடல் மைல்கள் அதனூடாக இலங்கைக்கு வரும் சீனாவின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா அந்தமான் தீவில் வைத்து தாக்கும்.

2. மியன்மார் ஊடாகவும் வங்கக் கடலூடாகவும் சீனா தன் படைகளைக் கொண்டு வரலாம். உலகின் மிக பெரிய விரி குடா. தரைவழியாக படகுகளை மட்டும் நகர்த்தலாம். அப்படி இலங்கை வரும் சீனப் படைகளை அந்தமான் நிக்கோபார் விசாகப்பட்டினம், சென்னை ஆகிய துறைமுகங்களி இருந்து இந்தியா தாக்குதல் நடத்தும்.

3. பாக்கிஸ்த்தான் ஊடாக குவாடர் துறைமுகம். அங்கிருந்து அம்பான்தோட்டை.க்கு சீனா தனது படைகளைக் கொண்டு வரலாம். தற்போது எந்த ஒரு கடற்கலன்களும் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தில் இல்லை. பாக்கிஸ்த்தானின் கடற்படைக் கலன்களை சீனா பாவிக்கலாம். ஆனால் இந்தியாவின் மேற்கு கரையில் உள்ள ஆறுக்கு மேற்பட்ட துறைமுகங்களில் இருந்து இந்தியாவால் தாக்குதல் செய்ய முடியும்.

சீனாவால் பகிரங்கமாக ஒரு படைத்தளத்தை இலங்கையில் வைத்திருக்க முடியாது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களில் பெரிய கொள்கலன்களில் இந்தியாவைத் தாக்கக் கூடிய அசையும் ஏவுகணைச் செலுத்திகளை மறைத்து வைத்திருந்து தேவை ஏற்படும் போது இந்தியா மீதோ அல்லது இலங்கையை ஒட்டிய கடற்பரப்பில் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் மீதோ சீனாவால் தாக்குதல் செய்ய முடியும்.

ஜிபுக்தியில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான படையினரைக் கொண்ட ஒரு படைத்தளத்தை சீனா வைத்துள்ளது. அங்கிருந்து சீனாவின் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியாது. கடற் கொள்ளையரிடமிருந்து தனது சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே சீனா அங்கு ஒரு படைத்தளத்தை வைத்துள்ளது. அங்கு சீனா மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் படைத்தளம் அமைத்துள்ளன.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சீனா இலங்கையில் படைத்தளம் அமைத்தால் தமது நாடு போர்க்களமாகும் என்பது தெரியும்.

2019 ஒக்டோபரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நகர்வுகளைச் செய்கின்றது. அவற்றில் ஒன்றாக பெண்டகனின் அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...