அமெரிக்காவின் உலங்கு வானூர்திகளு தாக்குதல் ஆளிலிவிமானங்களும் செய்த தாக்குதலில் ஐ எஸ் எனப்படும் இஸ்ல்லாமிய அரசு அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 03-02-2022 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
சிரியாவின் வட மேற்குப் பகுதியில் துருக்கியை ஒட்டியுள்ள இத்லிப் மாகாணத்தின் Atmeh என்னும் கிராமத்தில் ஒலிவ் மரங்களால் சூழப்பட்ட ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தில் ஐ எஸ் தலைவர் அல்-குரேஷி தங்கியிருந்தார். அவரது வீட்டின் மீது அமெரிக்கச் சிறப்புப் படையணியினர் அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தியபோது கட்டிடத்தின் உள்ளிருந்து பெரிய குண்டு வெடிப்பு நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. கட்டிடம் முற்றுகையிடப்பட்டுள்ளது சரணடையுங்கள் என்ற உரத்த அறிவிப்பைக் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அல் குரேஷி செய்த தற்கொலைக் குண்டு வெடிப்பினால் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா தெரிவித்தது.
2019-ம் ஆண்டின் பின்னர் சிரியாவில் அமெரிக்கப் படையினர் செய்த இந்தத் தாக்குதல் இரண்டு மணித்தியாலங்கள் நடந்தது. கட்டிடத்தின் சிதைபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்ட நான்கு பெண்களினதும் ஆறு சிறுவர்களினதும் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 13 பேர் அங்கு கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. தாக்குதல் செய்த இருபத்தி ஐந்து அமெரிக்கப் படையினரும் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.
குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியாவில் உள்ள கொபானி நகரத்தில் உள்ள வான்படைத்தளத்தில் இருந்தே அமெரிக்க உலங்கு வானூர்திகள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின. குர்திஷ் போராளிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியக் குடியரசுப் படையினரின்(Syrian Democratic Force) உச்தவியுடன் தாக்குதல் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
தமது இருப்பிடங்களை மிக இரகசியமாகவும் அடிக்கடி மாற்றிக் கொண்டும் வாழும் ஐ எஸ் அமைப்பின் தலைவரை ஒரு துல்லியத் தாக்குதல் மூலம் அழித்தமை அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
ஈராக்கிலும் சிரியாவிலும் 2010களில் குர்திஷ் மக்களை ஐ எஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக கடும் தாக்குதல் செய்து வருகின்றனர்.
2019-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கியரான அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை தமது தலைவராக ஐ எஸ் அமைப்பின் சுரா சபை தெரிவு செய்தது.
பல்லாயிரக் கணக்கான யதீஷிய பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிய ஐ எஸ் அமைப்பின் தலை கொய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே. அமெரிக்காவின் திமிர் அதிகரிக்கின்றது என்பது தான் கவலைக்குரியது.
No comments:
Post a Comment