Tuesday, 23 November 2021

சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai கணாமற் போனது ஏன்?

 


ZHANG GAOLI என்னும் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் 2018-ம் ஆண்டு தன்னை மிரட்டி உடலுறவு கொண்டதாக Peng Shuai நவம்பர் இரண்டாம் திகதி சீன சமூக வலைத்தளமான Weiboவில் குற்றம் சாட்டினார். அவரது பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டது.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமின் தற்போதைய பொதுச் செயலாளரும் அதிபருமான ஜீ ஜின்பிங் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஜீ ஜின்பிங்கை அவர் பதவியில் இருந்து அகற்ற முயற்ச்சி செய்யலாம் என ஜீ அஞ்சுகின்றார். அதனால் அவரது ஆதரவாளரகளை பொதுவுடமைக் கட்சியில் இருந்து அகற்ற ஜீ முயற்ச்சி செய்கின்றார். ஜீ ஜின்பிங் இலக்கு வைத்தவர்களில் முக்கியமானவர் சீனாவின் முன்னாள் துணை தலைமை அமைச்சர் ZHANG GAOLI ஆகும். அவர் மீதுதான் சீன டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை சுமத்தினார். சீனாவில் இது போன்று பொதுவுடமைக் கட்சியின் உயர் அதிகாரிகள் மீது விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டுவதில்லை. Peng Shuai குற்றம் சாட்டு வைத்தமையை ஜீ ஜின்பிங் தன் எதிரிகளை பழிவாங்க செய்யும் நகர்வுகள் என முதலில் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இரண்டு தடவை விம்பிள்டனிலும் பிரெஞ் திறந்த போட்டியிலும் வெற்றி பெற்ற டெனிஸ் வீராங்கனை Peng Shuai பாலியல் குற்றச் சாட்டை வைத்த சில நாட்களில் காணாமல் போய்விட்டார். அவர் பற்றிய செய்திகள் யாவும் தணிக்கை செய்யப்பட்டன. ZHANG GAOLI மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு போல் மேலும் பல பொதுவுடமைப் புள்ளிகள் மீதும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai குற்றம் சுமத்தலாம் என்பதால் அவரது வாயை மூடுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு பல சீனப் பெண் விளையாட்டு வீரர்களும் இதே போன்ற குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கினால் பல சீன தலைகளில் தலைகளுக்கு இடர் ஏற்படலாம் என்ற அச்சத்திலும் டெனிஸ் வீராங்கனை Peng Shuai தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

சீனாவில் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை பல்கலைக்கழக மாணவிகள், ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் சீன அதிகாரிகளுக்கு எதிராக சுமத்திய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, குற்றம் சாட்டுபவர்களே தண்டிக்கப்படுகின்றார்கள் என அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Peng Shuai தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை #MeToo பரப்புரையாளர்களிடம் முறையிட்டார். சீனா பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களை விரும்புவதில்லை. #MeToo பரப்புரையாளர்களை சீனா கடுமையாக வெறுக்கின்றது. எட்டு வயதில் டெனிஸ் ஆடத் தொடங்கிய 12 வயதில் இருதய சிகிச்சை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் டெனிஸ் விளையாட முடியாது எனச் சொன்ன போதும் அவர் தன் விடா முயற்ச்சியால் சீனாவின் சிறந்த விளையாட்டு வீரர்ராக உருவெடுத்தார். சீனாவின் விளையாட்டுத் துறையின் விதிகளின் படி விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் விளையாடுவதால் கிடைக்கும் வருவாயின் அரைப்பங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். இதை எதிர்த்து முதல் போர்க்கொடி உயர்த்தையவர் Peng Shuai. நாட்டுக்காக விளையாட மாட்டேன் என அவர் சூளுரைத்தபோது அவரைத் தேசத் துரோகியாக சீன ஊடகங்கள் சித்தரித்தன.

2021-11-21 ஞாயிற்றுக் கிழமை 35 வயதான Peng Shuai ஒலிம்பிக் அதிகாரி தோமS பச்சுடன் காணொளியில் உரையாடியதாக செய்தி வெளிவந்தது. இருந்தும் அவரது பாதுகாப்பு பற்றி அந்த அதிகாரி திருப்தியடையவில்லை. அவருடன் உரையாடலில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் Peng Shuai நலமுடன் இருப்பது நிம்மதியளிக்கின்றது என்றார்.

உலக டெனிஸ் அமைப்பின் அதிகாரி 2021 நவம்பர் 22 திங்கட் கிழமை Peng Shuai உடன் இன்னும் ஒரு காணொளி உரையாடலை மேற்கொண்டார். WTA எனப்படும் உலக டெனிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் Peng Shuaiஇன் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவிடத்து தங்கள் அமைப்பில் இருந்து சீனாவை வெளியேற்றுவோம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். இரு பெரும் டெனிஸ் ஆட்டக்காரர்களான Roger Federer, Rafael Nadal ஆகியோர் Peng Shuaiஇற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். 2022 பெப்ரவரியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கின்றது. மேற்கு நாடுகள் அதைப் புறக்கணிப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கையில் Peng Shuai காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். பன்னாட்டு விளையாட்டு அமைப்புக்கள் அவர் மீது காட்டிய அக்கறைக்கு சீன அரசு பணிந்து விட்டதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...