Sunday, 21 November 2021

ஏன் அழுதார் ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு?

 

 
மட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. தற்போது தெலுங்கானா என அழைக்கப்படும் பிரதேசம் நிஜாம் என்னும் ஒரு இஸ்லாமிய மன்னரின் கீழ் ஹைதராபாத் நிஜாம் என்னும் பெயரில் தெலுங்கு மொழி பேசும் பிரதேசமாக வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்தது. மொழிவாரியாகப் பிரிக்கும் போது மட்ராஸின் தெலுங்கு மக்கள் வாழும் பிரதேசத்தை பிரித்து தெலுங்கானாவுடன் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்னும் மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் Andhra Pradeshஐ ஆந்திரம், தெலங்கானா என இரண்டாகப் பிரித்தார்கள்.

 மறைந்த நடிகர் என் டி ராமராவ் ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய தலைவராக அவரின் மகளின் கணவர் சந்திரபாபு நாயுடு இருக்கின்றார். அவர் இப்போது எதிர்க்கட்சித் தலைவர். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) ஆந்திரப் பிரதேசத்தின் பிரபலமான இன்னோர் அரசியல்வாதி YSR ராஜசேகர ரெட்டி. இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர். இவர் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். காங்கிரசுக் கட்சி மாநிலத் தலைவர்களை மதிப்பதில்லை என்பதற்கு இவரும் ஓர் உதாரணம். இவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து வந்து YSR congress என்னும் கட்சியை ஆரம்பித்து மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர். தற்போது அவரது மகன் ஜகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருக்கின்றார். (வாரிசுகள் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை) YSR காங்கிரசின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவையும் அவரது மனைவியையும் பற்றி இழிவாகப் பேசினார்கள். இதனால் சினமடைந்த சந்திரபாபு சட்ட மன்றத்தில் காரசாரமாகப் பேசினார். ஆந்திர சட்ட சபையை கௌரவர்களின் சபைக்கு ஒப்பிட்டார். 2024-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு முதல்வராகத்தான் சபைக்கு வருவேன் எனச் சொல்லி சட்ட சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி தேம்பி அழுதார். YSR காங்கிரசின் உறுப்பிர்கள் அவர் நாடகமாடுகின்றார் என்றனர். தனது மனைவியும் முன்னாள் முதல்வர் என் டி ராம ராவின் மகளுமான புவனேஸ்வரி எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடவில்லை என்றார். அவரை அவமானப் படுத்திவிட்டார்கள் என்றார். தான் கௌரவத்திற்காக கௌரவத்துடன் வாழ்பவர் என்றார். தனது மனைவியின் கௌரவத்தை பாதுகாக்க தான் பேச முற்பட்ட போது அவைத்தலைவர் (சபாநாயகர்) தன் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டார் என்றார் நாயுடு. 

 YSR காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா செல்வராகவன் சந்திரபாபு நாயுடுவின் கட்சியினர் சபைக்கு ஒரு காணொளியைக் கொண்டு வந்து காட்டி அது நான் நடித்த நீலப்படம் என்று சொன்னீர்கள். அப்போது உங்களுக்கு நீதி என்றால் என்னவென்று தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். YSR காங்கிரசுக் கட்சித் தலைவரும் முதல்வருமான ஜகன்மோகன் ரெட்டி உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்த சந்திரபாபு நாயுடு நாடகம் என்கின்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...