Monday 22 November 2021

ஜெர்மனியின் தெரிவு ஜப்பானின் பாதையா சுவிஸின் பாதையா?

  


ஜெர்மனியின் புதிய அரசு தனது பொருளாதாரப் பாதையையும் தேசியப் பாதுகாப்பையும் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் வகையில் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஜெர்மனி தனது பாதுகாப்பிற்கு ஒதுக்கும் நிதி போதாது என அதன் நேட்டோ நட்பு நாடான அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. ஜெர்மனி பாதுகாப்பிற்கு அதிக நிதியை செலவிட்டால் அதிக வரி சேகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜெர்மனி எடுத்தால் அந்த இரண்டு நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம். ஜெர்மனியின் இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை.

இரசிய – பெலரஸ் படை ஒத்திகை

இரசியா பெலரஸுடன் இணைந்து ஆண்டு தோறும் செய்யும் “மேற்கு” என்னும் பெயர் கொண்ட படைத்துறை ஒத்திகை போல்ரிக் நாடுகளையும் சுவிஸ், பின்லாந்து போன்ற நடுகளையும் ஜெர்மனியையும் கைப்பற்றும் இலக்குடன் செய்யப்படுவதாக இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு 2017-ம் ஆண்டில் இருந்தே முன் வைக்கப்படுகின்றன. நேட்டோ நாடுகள் செய்யும் ஒத்திகை எப்படி இரசிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பதை இலக்காகக் கொண்டுள்ளன. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை கைப்பற்றி ஆளக் கூடிய படை வலிமை உலகின் எந்த ஒரு நாட்டிடமும் இல்லை. ஆனால் மேற்கு நாடுகள் இரசியா பிளவு படுவதை விரும்புகின்றன.

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும்

ஜெர்மனியின் பசுமைக் கட்சியும் சமூக மக்களாட்சிக் கட்சியும் தமது மண்ணில் அணுக்குண்டுகள் இருக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனியில் வைத்துள்ள படைத்தளங்களில் அணுக் குண்டுகளும் உள்ளன. உலக அமைதிக்கும் மனித குலத்தின் இருப்புக்கும் அணுக்குண்டுகள் மிக ஆபத்தானவை. ஆனால் ஜெர்மனியின் போட்டி நாடான இரசியாவிடம் உலகிலேயே அதிக அளவில் அணுக்குண்டுகள் உள்ளன. அத்துடன் சீனாவின் DF-41 போன்ற மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் ஜெர்மனி வரை பாய்ந்து அணுக்குண்டுகளை வீச வல்லன. அணுக்குண்டு ஒழிப்பு என்பது உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய ஒன்றாகும். ஜெர்மனி போன்ற உலக வர்த்தகத்தில் தங்கியிருக்கும் பெரிய நாடு ஒன்று தன் பாதுகாப்பிலும் ஒழுங்கான உலக வர்த்தகத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜெர்மனிய மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையோ அல்லது பாதுகாப்பையோ பெரிது படுத்துவதில்லை. ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்ட்ப்ப் படைகளின் வெளியேற்றம் தொடர்பாக கணிசமான அளவு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஜெர்மனியின் சமூக மக்களாட்சிக் கட்சியும், பசுமைக் கட்சியும் பழமைவாத மக்களாட்சிக் கட்சியும்(FDP) இணைந்து அமைத்துள்ள புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான நிலைப்பாடும் செயற்பாடுகளும் முந்தைய அரசினது கொள்கைகளில் இருந்து எவ்வளவு தூரம் வேறுபடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பனிப்போரில் பயனடைந்த ஜெர்மனி

ஜப்பானும் ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட நாடுகள். பின்னர் அவ்விரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகின. இரண்டிலும் அமெரிக்கா படைத்தளம் அமைத்து வைத்துள்ளது. இரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளன. இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியுள்ளன. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரில் ஜெர்மனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. சோவியத் ஒன்றியத்தை சார்ந்து இருந்த கிழக்கு ஜெர்மனி பனிப்போரின் முடிவில் மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளின் படைவலிமைப் பட்டியலில் ஜப்பான் 5-ம் இடத்திலும் ஜெர்மனி 15-ம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் ஜப்பான்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஜப்பான் தனது படைவலிமையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சின்சே அபே ஜப்பானிய தலைமை அமைச்சராக இருந்த போது 2013-ம் ஆண்டு ஜப்பான் தனது வெளியுறவுத் துறையையும் படைத்துறையையும் மறுசீரமைப்புச் செய்தது. ஜப்பானின் தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு கேந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அவசர பாதுகாப்பு தேவை ஏற்படும்போது செயற்படுவதற்கென அமைச்சரக்ளைக் கொண்ட ஒரு சபையும் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா பொருளாதாரப் பாதுகாப்பிற்கான அமைச்சு ஒன்றை உருவாக்கினார். ஜப்பானின் ஏற்றுமதியில் 20% சீனாவிற்கு செல்கின்றது ஆனால் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் போகும் ஏற்றுமதி 8% மட்டுமே. இருந்தும் புவிச்சார் அரசியல் நிலைமைகளை ஜப்பான் கருத்தில் கொண்டு சீனாவிற்கு எதிரான தன் நகர்வுகளை ஜப்பான் மேற்கொள்கின்றது. தைவானை சீனா ஆக்கிரமித்தால் ஜப்பானுக்கு ஏற்படப் போகும் இடர்களுக்கு ஈடாக அல்லது அதிலும் அதிகமான இடர்களை இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதால் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படும்.

சுவிஸ்லாந்தின் பாதுகாப்பு

சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது. ஜெர்மனியும் சுவிற்சலாந்தைப் போல் நடு நிலை பேணிக் கொண்டு படைத்துறைச் செலவை குறைக்க வேண்டும் என்ற கருத்து ஜெர்மனியில் முன்வைக்கப்படுகின்றது. பூகோள அமைப்பும் புவிசார் அரசியல் சூழ்நிலையும் ஜெர்மனிக்கு ஓர் உறுதியான பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

தைவானை சீனா கைப்பற்றுவதை தடுக்கும் வகையில் தைவானை நோக்கி ஜப்பான் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கு சவால் விடக் கூடிய அளவில் தனது படை வலிமையையும் பெருக்குகின்றது. இரசியா  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு எதிராக என்ன நகர்வுகளை ஜெர்மனி செய்கின்றது? தம்மை ஆக்கிரமித்து பல கொடுமைகள் செய்த ஜப்பான் மீது சீனர்களுக்கு ஜப்பான் மீது கடுமையான வெறுப்பு உள்ளது. தம்மை ஆக்கிரமித்த ஜெர்மனியை தோற்கடித்த இரசியர்களுக்கு ஜெர்மனி மீது அந்த அளவு வெறுப்பு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...