Monday, 20 December 2021

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்கள் அழிக்குமா?

  


2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா கடலில் இருந்தும் இஸ்ரேல் தரையில் இருந்தும் வீசப்படும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்துள்ளன. இரு நாடுகளும் தீவிரவாதிகளின் சிறிய ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் கூட்டமாக வந்து தாக்கும் ஆபத்தை எதிர் நோக்க லேசர் கதிர்களை பாவிக்க முயல்கின்றன. அமெரிக்கா தனது பெரிய கடற்கலன்களை எதிரி பல சிறிய படகுகளில் வந்து தாக்குதவதை தடுக்க லேசர் கதிர்களைப் பாவிக்கப் போகின்றது. அத்துடன் இரசியா மற்றும் சீனா போன்ற படைத்துறைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் பெருமளவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்கக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்கள்

லேசர் கதிர்களை ஒரு இலக்கின் மீது வீசும் போது அது உடனடியாக அந்த இலைக்கை கருகச் செய்துவிடும். ஒலியின் வேகம் ஒரு செக்கனுக்கு ஆயிரத்து நூறு அடி பயைப்பது. மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக்) என்பது ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்திற்கு மேல் இயங்குவது. தற்போது உள்ள மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளின் ஆகக் கூடிய வேகம் ஒலியின் வேகத்திலும் 24 மடங்காகும். ஆனால் லேசர் கதிர்களின் வேகம் ஒலியின் வேகத்திலும் ஒரு மில்லியன் மடங்காகும். ஒளியின் வேகத்தில் இயங்கும் லேசர் கதிர்கள் ஒரு செக்கனுக்கு 186,000மைல்கள் பயணிக்கும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வர 4 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

லேசர் படைக்கலன்களின் நன்மை:

துல்லியத் தாக்குதல். அசையும் இலக்குகளை (கடற்கலகள், தாங்கிகள், விமானங்கள், ஏவுகணிகள்) துல்லியமாக தாக்குவது கடினமானதாகும். லேசர் கதிர்கள் பிரபஞ்சத்திலேயே அதிக வேகத்தில் பணிப்பதால் அவை இலக்குகளை உடனடியாகவும் துல்லியமாகவும் தாக்கும். படைத்துறையில் Sensor-to-shooter time என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதவது எதிரி இலக்கை காணுதலுக்கும் அதன் மீது தாக்குதல் நவத்துவதற்கும் இடையில் உள்ள நேர இடைவெளி. சிறந்த கதுவிகளும் (ரடார்கள்) லேசர் கதிர் வீச்சும் அந்த நேர இடைவெளியை வெகுவாக குறைக்கும்.

2. மலிவானது. முன்னூறு டொலர்கள் செலவழித்து ஹமாஸ் அமைப்பு உருவாக்கும் ஆளில்லா போர் விமானத்தை தாக்கி அழிக்க இஸ்ரேலுக்கு $80,000 செலவில் உருவாக்கிய ஏவுகணை தேவைப்படுகின்றது. லேசர் கதிர் வீச்சுக்களை நூறு டொலர்களுக்கும் குறைவான செலவில் உருவாக்கலாம்.

3. மீள் நிரப்பல் தேவையில்லை. ஏவுகணைச் செலுத்தி ஒன்றில் இருபது ஏவுகணைகள் இருக்கும். அவற்றால் எதிரியின் இலக்குகளை தாக்கிய பின்னர் அவற்றில் ஏவுகணைகளை மீளவும் நிரப்ப பல நிமிடங்கள் எடுக்கும். லேசர் செலுத்திகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தால் அது தொடர்ச்சியாக லேசர் கதிர்களை எதிரியின் இலக்குகளை நோக்கி வீசிக் கொண்டே இருக்கும்.

லேசர் படைக்கலனிகளின் வகைகளும் வலிமையும்

1996இல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஆளில்லாவிமானங்களை அழிக்கும் லேசர் கதிர் வீசிகளை உருவாக்க தொடங்கின. இஸ்ரேல் தனியே உருவாக்கிய லேசர் படைக்கலன்கள் 100கிலோ வாட் வலிமையானவை. அமெரிக்கா உருவாக்கியவை 300 கிலோ வாட் வலிமையானவை. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.


அமெரிக்க கடல்-சார் பரிசோதனை

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக கப்பலான USS Portlandஇல் இருந்து High-energy lacer system மூலம் செலுத்தப்பட்ட லேசர் கதிர்கள் ஏடன் வளைகுடாவில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு இலக்கை அழித்துள்ளது. 2021 டிசம்பர் மாதம் 14-ம் திகதி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை கடற்போரில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்கர்கள் மார்தட்டுகின்றார்கள். USS Portlandஇன் கட்டளைத் தளபதி Laser weapon is redefining the war at sea என்றார். 2020 மே மாதம் அமெரிக்க கடற்கலன் ஒன்றில் இருந்து ஆளில்லா விமானத்தை லேசர் கதிர்கள் மூலம் அழிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த லேசர் கதிர்கள் 150 kilo watt வலுவுடையவை.

அமெரிக்கா பரிசோதிக்க தேர்வு செய்த இடம்

எரித்திரியா, யேமன், ஜிபுக்த்தி, சோமாலியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் நடுவே உள்ள ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா தனது புதிய கடல்-சார் லேசர் படைக்கலன்களை பரிசோதனை செய்துள்ளது. தீவிரவாதிகள் அமெரிக்காவின் பாரிய கடற்கலன்களை பல கூட்டங்களாக வரும் சிறு படகுகள் மூலம் செய்யும் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தனது புதிய லேசர் படைக்கலனை உருவாக்கியுள்ளது. பரிசோதித்த இடமும் திவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்து மிக்க இடமாகும்.

பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கி பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 300கிலோ வாட் வலிமையான லேசர் படைக்கலன்கள் வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise missiles) மட்டுமே அழிக்க வல்லன. மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்க மேலும் வலிமை மிக்க லேசர் கதிர்கள் உருவாக்க வேண்டும்.

சீனா வின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

2018-ம் ஆண்டு சீனா செய்த மொத்த மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைப் பரிசோதனைகள் பத்து ஆண்டுகளாக அமெரிக்கா செய்த பரிசோதைனைகளிலும் பார்க்க அதிகமானதாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் படைத்தளங்களை வைத்திருப்பதைப் போல் சீனாவால் அமெரிக்காவைச் சுற்றிவர படைத்தளங்களை வைத்திருக்க முடியவில்லை. இதைச்  சமாளிக்க சீனா கண்ட ஒரே வழி மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளாகும். இத்துறையில் சீனாவின் மிகையான வளர்ச்சி அமெரிக்காவிற்கு படைத்துறைச் சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதைச் சமாளிக்க அமெரிக்கா லேசர் கதிர் வீச்சை நம்பியுள்ளது. அதற்கான ஆய்வு வேலைகள் இரகசியமாகவும் துரிதமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய தனியான விண்வெளிப்படையணியில் லேசர் கதிர்வீசிகள் இணைக்கப்படும் போது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும்.

முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கையில் அவற்றில் லேசர் கதிர் மூலம் ஒரு துளை ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கச் செய்வது அமெரிக்காவின் நோக்கம் போல் இருக்கின்றது. லேசர் கதிர் வீசிகள் செய்மதிகளில், விமானங்களில், கடற்கலன்களைன் இணைக்கப்படவிருக்கின்றன. இறுதியில் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை கருக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா களமிறக்கும். அதன் மூலம் சீனாவிற்கான படைத்துறைச் சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக்கலாம். பின்னர் சீனா வேறு வழி தேடும்.

லேசர் கதிர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/03/blog-post.html

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...