Wednesday 3 November 2021

சீனா-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு ஆபத்தானது.

  



இந்தியத் திரைப்படங்கள் துருக்கியில் எடுக்கப்படுவதுண்டு. மலிவான வெளிநாட்டு படப்பிடிப்பு செய்வதற்கு உகந்த இடங்கள் பல அங்குள்ளன. இந்திப் படப்பிடிப்பிற்கு துருக்கி சென்ற அமீர் கான் துருக்கிய அதிபரின் மனைவியான முதற் பெண்மணியை சந்தித்தமைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் அரசுறவியல் இழுபறி கஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் தீவிரமானது. 2020 பெப்ரவரியில் துருக்கிய அதிபர் ரிசெப் எர்துவான் இந்தியா இப்போது படுகொலைகள் பரவலாக நடக்கும் நாடாகிவிட்டது; என்ன படுகொலை; இந்துக்களால் செய்யப்படும் இஸ்லாமியப் படுகொலை என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையில் தொடரும் முறுகல்

2021 செப்டெம்பரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் துருக்கி இந்தியாவின் கஷ்மீரிலும் சீனாவின் உய்குரிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். கடந்த மூன்று ஆண்டுகளாக துருக்கி ஐநா சபையில் கஷ்மீர் பிரச்சனை ஐநா சபையினூடாக தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நிலைப்பாடு அது உள்நாட்டுப் பிரச்சனை. இந்திய பாக் பிரச்சனை என்பது ஓர் இருதரப்பு பிரச்சனை. அதில் மூன்றாம் நாட்டின் தலையீடு இருக்க கூடாது என்பதாகும். 5 வல்லரசுகள் உட்பட பெரும்பான்மையான நாடுகள் கஷ்மீர் தொடர்பாக தலையிடுவதில்லை. கஷ்மீரின் உரிமைகளை மோடி அரசு பறித்த போது சவுதி கருத்து தெரிவிக்கவில்லை. பாக்கிஸ்த்தான் சவுதியை இந்தியாவிற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் படி வலியுறுத்திக் கேட்டிருந்தது. துருக்கி ஐநாவில் கஷ்மீர் விவகாரங்களை எழுப்பும் போது இந்தியவின் தலைமை அமைச்சர் அல்லது பிரதிநிதி கிரேக்கம் ஆர்மினியா மற்றும் சைப்பிரஸ் அரசுறவியலாளரக்ளைச் ஐநாவில் சந்தித்து உரையாடுவார்கள். 2021-ம் ஆண்டு சைப்பிரசை 1974இல் துருக்கி ஆக்கிரமித்து இரண்டாகப் பிளந்து வைத்திருப்பதையும் அது ஐநா முடிவுகளுக்கு மாறானது எனவும் சுட்டிக் காட்டியது இந்தியா.

துருக்கி – பாக் சிறப்பு உறவு

நாடுகளிடையேயான “சிறப்பு உறவு” பல்வேறு காரணங்களுகாக உருவாக்கப்படுகின்றது. பொதுவான கொள்கைகளும் பொதுவான வெளியுறவும் முதன்மை முக்கிய காரணமாகும். இரண்டு நாடுகளும் படைத்துறையில் இணைந்து ஒன்றை ஒன்று பாதுகாப்பது இரண்டாவது கரணமாகும். பொருளாதார் ஒத்துழைப்பு மூன்றாவது காரணமாகும். துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் சிறப்பு உறவு வித்தியாசமானதாகும் நடுவண் ஆசியாவில் உள்ள தேர்க்மெனிஸ்த்தான், அஜர்பைஜான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் துருக்கிக்கு பாக்கிஸ்த்தான் தேவைப்படுவதுடன் போர் முனை அனுபவமுள்ள பாக்கிஸ்த்தான் படையினரின் உதவி துருக்கிக்கு தேவைப்படுகின்றது. அதற்கு பாக்கிஸ்த்தானின் எதிரியான இந்தியாவிற்கு எதிராக தனது நகர்வுகளைச் செய்து பாக்கிஸ்த்தானுடனான தனது உறவை சிறப்பாக்கிக் கொண்டிருக்கிறது துருக்கி.

உலக அரங்கில் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் துருக்கி

உலக அரங்கில் உறுதிப்பாட்டுடன் இருக்கும் துருக்கி நேட்டோ சகாக்களின் வேண்டுகோளை மீறி எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவேன் என அடம்பிடிக்கின்றது. அதனால் துருக்கிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அஜர்பைஜானுக்கு உதவி செய்து ஆர்மினியாவை தோற்கடித்த துருக்கி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். துருக்கியில் கைது செய்யப்படும் ஐ எஸ் அமைப்பினரை தண்டிக்காமலும் அவர்கள் பற்றிய விபரங்களை தனது நட்பு நாடுகளுக்கு வழங்காமலும் அவர்களை 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களது நாட்டுக்கு அனுப்பி விடுகின்றது என்ற குற்றச் சாட்டும் உண்டு. அல் கெய்தாவின் கிளை அமைப்பாகக் கருதப்படும் ஹயத் தஹீர் அல் ஷாம் என்னும் தீவிரவாத அமைப்புடனும் துருக்கி தொடர்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. சீனா நேரடியாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றது. சீனா இஸ்லாமியத் தீவிரவாதத்தை விரும்புவதில்லை. அது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் பரவலாக முன் வைக்கப்படுவதில்லை. இதனால் சீன-பாக் உறவிலும் பார்க்க துருக்கி-பாக் உறவு இந்தியாவிற்கு அதிக பாதகங்களை விளைவிக்கக்கூடியது

கஷ்மீருக்கு துருக்கியின் கூலிப்படை?

சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து படைக்கலன்களை உற்பத்தி செய்வது போல் பாக்-துருக்கி இணைந்த படைக்கல உற்பத்தி செய்கின்றன. ஆனால் துருக்கி ஐயாயிரம் தீவிரவாதிகளை சிரியாவில் இருந்து திரட்டி கஷ்மீருக்கு அனுப்ப திட்டமிடுவதாக கிரேக்கத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அவற்றின் படி அந்த தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை துருக்கி வழங்குகின்றதாம். கஷ்மீரில் செயற்படும் தீவிரவாதிகளுக்கு துருக்கி உற்பத்தி செய்யும் ஆளிலிவிமானங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. பாக்கிஸ்த்தானை இப்படிச் செய்து மகிழ்ச்சிப்படுத்தி கிரேக்கத்திற்கு எதிரான துருக்கியின் நகர்வுகளுக்கு பாக்கிஸ்த்தானியப் படைகளை பாவிக்க துருக்கி பெறுகின்றது.

இந்தியாவிற்கு மிகவும் ஆபத்தானது துருக்கி, பாக்கிஸ்த்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைவதுதான்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...