பேராசிரியர் அலெக்சாண்டர் லுக்கின் என்பவர் சீனாவில் மதிக்கப்படுகின்ற ஒரு இரசியர். அவர் இரசிய சீனக் கூட்டில் உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். அந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். அவர் இப்போது இரசியா சீன உறவு உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டது என்றபடியால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இனிக் கீழ் முகமாகவே இருக்கும் என்கின்றார்.
மக்கள் சீனத்தை முதல் அங்கீகரித்த இரசியா
மக்கள் சீனக் குடியரசு 1949 ஒக்டோபர் 1-ம் திகது உருவக்கப்பட்ட மறு நாளே அதை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது. மேற்கு நாடுகள் அதை அங்கீகரிக்க மறுத்திருந்தன. ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு தைவானில் தஞ்சமடைந்த ஷியாங் கே ஷேக்கையே முழு சீனாவினதும் ஆட்சியாளராகவும் அவரது ஆட்சியையே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தன. மாவோ சே துங்கின் ஆதரவு தனக்கு அரசியல் செல்வாக்கை சோவியத் ஒன்றியத்தில் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் அப்போதைய சோவியத் அதிபர் நிக்கித்தா குருஷேவ் சீனாவிற்கு பல படைத்துறை தொழில்நுட்ப உதவிகளை வழங்கினார். இரசியா வழங்கிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்தே சீனா அணுக்குண்டு உட்பட பல படைக்கலன்களை உருவாக்கியது.
நீண்ட தந்தி
அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் அரசுறவை உருவாக்குவதில் முன்னின்றி உழைத்தவர் ஜோர்ஜ் கென்னன் என்ற அமெரிக்கர். இரசியர்கள் மீது நல்ல மதிப்பை வைந்திருந்த அவரது முயற்ச்சியால் 1933-ம் ஆண்டு மொஸ்க்கோவில் அமெரிக்க தூதுவரகம் திறக்கப்பட்டது. சோவியத பொதுவுடமைவாதிகளின் கொள்கைகளை விரும்பாத ஜோர்ஜ் கென்னன் மொஸ்க்கோவில் இருந்து வாஷிங்டனுக்கு ஒரு 8,000 சொற்கள் கொண்ட ஒரு நீண்ட தந்தியை அனுப்பியிருந்தார். அத் தந்தி அமெரிக்க சோவியத் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் உலகெங்கும் பொதுவுடமைவாத மயமாக்க முயல்கின்றது. அது அடக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா உருவாக்கியது. அது அடக்கும் கொள்கை (Policy of Containment) எனப் பிரபல்யம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இரசியாவுடன் ஒத்துழைப்பதை ஜோர்ஜ் கென்னன் எதிர்த்திருந்தார். ஆனால் 1945இல் ஃபிராங்கிலின் ரூஸ்வெல்ட் இறந்த பின்னர் ஜோர்ஜ் கென்னனின் கொள்கை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் பெற்றது. அதுவே பனிப்போரை ஆரம்பித்து வைத்தது.
வறுமையில் இருந்த சீனா
1953-ம் ஆண்டில் ஜேசெப் ஸ்டாலினின் மறைவின் பின்பு சோவியத் ஒன்றிய ஆட்சியாளர்கள் உலக அரங்கில் ஓர் உடன் வாசம் செய்யும் வகையில் தமது கொள்கைகளை முன்னெடுக்க முயன்றனர். அதை மரபு வழி பொதுவுடமைவாதத்தில் இருந்து விலகிச் செல்லும் திரிபுவாதம் என சீனா ஆட்சியாளர் விபரித்தனர். அதன் பின்னர் சோவியத்திற்கும் சீனாவிற்கும் இடையில் பொதுவுடமைக் கோட்பாட்டு வேறுபாடு உருவாகியது. அப்போது வலிமை மிக்க சோவியத் ஒன்றியத்தால் சீனாவிற்கு ஆபத்து என்ற நிலை உருவான போது மேற்கு நாடுகளும் சீனாவும் ஒத்துழைக்க தொடங்கின. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கு நாடுகள் வசதிகள் செய்து கொடுத்தன. அப்போது சீனாவின் தனி நபர் வருமானம் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தின் 75இல் ஒரு பங்காக இருந்தது. அதனால் வறிய நாடாகிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி தமக்கு சவலாக அமையாது என்றும் சீனாவின் வளர்ச்சி சோவியத் ஒன்றியத்தை அடக்கும் கொள்கைக்கு உகந்ததாக அமையும் என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதினர்.
உக்ரேன் ஆக்கிரமிப்பு
2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தமையும் சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலைக் குழப்பியமையும் அமெரிக்க இரசிய உறவில் பெரும் விரிசனை ஏற்படுத்தின. அதனால் பராக் ஒபாமா தனது ஆசிய சுழற்ச்சி மையம் திட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது. அமெரிக்கா உக்ரேனிலும் சிரியாவிலும் சிக்கியிருக்கையில் சீனா தென் சீனக் கடலில் தனது செயற்கைத் தீவுகளை உருவாக்கியது. இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் செய்யும் நகர்வுகளும் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உறவை நெருக்கப்படுத்தியது எனப்படுகின்றது. 2015 ஜூன் 5-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கையொப்பமிட்டு வெளிவிட்ட அறிக்கை இரசிய சீன உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தது.
நடுவண் ஆசியா (Central Asia)
நடுவண் ஆசியாவில் முக்கிய நாடுகள் கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகியவையாகும். இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இவை சுதந்திர நாடுகளாகின. இவை அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொண்டவை. அதனால் சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் நடுவண் ஆசிய நாடுகளுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதைக்கும் பொருளாதாரப் வளையத்திற்கும் இந்த நாடுகள் அவசியமானவையாக உள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவின் ஆதிக்கத்திற்குள் மீண்டும் உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கொள்கையாகும்.
சீனாவின் தரைவழிப்பட்டுப்பாதையும் இரசியாவும்
நடுவண் ஆசிய நாடுகளை இரசியா ஐரோப்பிய ஆசிய பொருளாதார ஒன்றியம் (Euro Asian Economic Union) என்ற பொருளாதாரக் கூட்டமைப்பின் கொண்டு வர முயல்கின்றது. சீனா நடுவண் ஆசிய நாடுகளை தனது பொருளாதார விரிவாக்கத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பின் (Belt and Road Initiative) மூலம் சுரண்ட முயல்கின்றது. இங்கிருந்துதான் இரசிய சீன முரண்பாடு தோன்ற வாய்ப்புண்டு. மெல்ல மெல்ல மென்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா. அதே உபாயத்தை இந்திய எல்லையிலும் நடுவண் ஆசியாவிலும் நிறைவேற்ற முயற்ச்சிக்கின்றது. தஜிகிஸ்த்தானில் பெரும்பான்மையாக வாழும் தஜிக் மக்கள் ஈரானுடன் கலாச்சாரத் தொடர்புள்ளவர்கள். தஜிக்கிஸ்த்தான் உய்குர் மக்களை அடக்க சீனாவிற்கு உதவுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா தனது பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (Belt and Road Initiative) திட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தை இணையவெளியூடாக நடத்திய போது அதில் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் கலந்து கொள்ளவில்லை. இரசியா சார்பில் ஒரு அதிகாரி மட்டும் கலந்து கொண்டார். நடுவண் ஆசிய நாடுகளில் வேற்று நாட்டுப் படைகள் இருப்பதை இரசியா விரும்புவதில்லை. ஆனால் தஜிக்கிஸ்த்தானில் சீனப் படைகள் நிலை கொண்டுள்ளன. பல நடுவண் ஆசிய நாடுகளுக்கு சீன படைக்கலன்களை விற்பனை செய்வதுடன் பயிற்ச்சியும் வழங்குவது இரசியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இரசியா தலைமியிலான ஒருமித்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Organisation) என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இரசியா, கஜகஸ்த்தான், ஆர்மினியா, கிரிகிஸ்த்தான், பெலரஸ், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகள் உள்ளன. அதில் ஒரு நாடான தஜிகிஸ்த்தானில் சீனப்படைகள் நிலை கொள்வதை இரசியா வெறுக்கின்றது. சீனா ஆண்டு தோறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் 30,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி அவர்களுக்கு கொன்ஃபியூசியஸ் தத்துவங்களை போதிக்கின்றது. இது அந்த நாடுகளை ஒரு நீண்டகால அடிப்படையில் சீனமயமாக்கும் முயற்ச்சியாக பார்க்கலாம்.
குறுங்கால அடிப்படையில் சீன இரசிய உறவு உறுதியானது.
சீனாவும் இரசியாவும் இணைந்து ஜப்பானைச் சூழவுள்ள கடற்பகுதியில் 2021 ஒக்டோபர் நடுப்பகுதியில் பத்து கடற்படைக் கலன்களுடன் செய்த போர்ப்பயிற்ச்சியும் அதற்கு சீனா அனுப்பிய தன் முன்னணி நாசகாரிக் கப்பல்களும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் தற்போது உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இரசியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் இரசியாவை சீனாவிற்கு நெருக்கமாக்கின்றது என்பதை உணர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர்கள் இரசியாவுடனான முறுகலை உறைநிலையில் வைத்து விட்டு சீனாமீது அதிகம் கவனம் செலுத்தலாம் எனக்கருதுகின்றனர். இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரே நேரத்தில் போர் தொடுத்தால் அமெரிக்கா நிச்சயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். குவாட்டை ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு என காட்டாமல் இருப்பதற்கு அமெரிக்கா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. ஆனால் தேவை ஏற்படின் குவாட் உறுப்பு நாடுகளான ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா, அமெரிக்கா இணைந்து சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை செய்யும்.
ஆர்க்டிக் பிராந்தியம்
சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் தோன்றக் கூடிய இன்னொரு பிராந்தியம் ஆர்க்டிக் வளையம் ஆகும். இரசியா அதை தனது பிராந்தியம் என நினைக்கின்றது. ஆர்க்டிக் வளைய பிராந்தியத்தில் உரிமையுள்ள நாடுகளில் சீனா இல்லை. ஆனால் அங்கு சீனா அதிக அக்கறை காட்டுகின்றது. பனிப்பாறைகளை உடைத்துக் கொண்டு செல்லக் கூடிய அணுவலுவில் இயங்கும் முப்பதினாயிரம் எடை கொண்ட ஒரு கப்பலை சீனா உருவாக்குவது இரசியாவை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலா அல்லது வர்த்தக கப்பலா என்பதைக் கூட சீனா இரகசியமாக வைத்திருக்கின்றது.
சீனாவின் நீண்ட கால கொள்கை உலக ஒழுங்கை தனக்கு ஏற்ப மாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும். அது இரசியாவிற்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இரசியாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட காலம் பேண முடியாது. தன்னையும் உள்ளடக்கிய ஒரு பல்துருவ ஆதிக்கத்தை இரசியா உருவாக்கும் முயற்ச்சியில் வெற்றி பெறும் வரை இரசிய சீன உறவு உறுதியாக இருக்கும்.
No comments:
Post a Comment