Friday 19 November 2021

இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமை அமெரிக்காவிற்கு சவாலாகுமா?

  


நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இரசியாவின் S-500 வான் பாதுகாப்பு முறைமையின் முதலாவது அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது புலப்படாத்தன்மை கொண்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் இனம் கண்டு தாக்கி அழிக்கக் கூடியது என நம்பப்படுகின்றது. இது மரபுவழிக் குண்டுகளையும் அல்லது அணுக் குண்டுகளையும் தாங்கி வரும் பத்து எறியியல் ஏவுகணைகளை (Ballistic Missiles) ஒரேயடியாக இடைமறித்து அழிக்கக் கூடியது. S-500இல் இருந்து வீசப்படும் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் ஒலியின் வேகத்திலும் பார்க்க 14 மடங்கு (Mach-14) வேகத்தில் பாயக் கூடிய மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளாகும். இவற்றினுடைய செயற்படு நேர்ம் 3 செக்கண்ட்களாகும். முந்தைய S-400இன் செயற்படு நேரம் 10செக்கண்ட்களாகும். எதிரியின் மீயுர்-ஒலிவேக (Hypersonic) ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்கக் கூடியது. S-500 இன் முதலாவதாக 2018இல் பரீட்சிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இரசியப் படைகள் இவற்றை முழுமையாக பாவிக்க முடியும்.

ஒரு வான்பாதுகாப்பு/ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று பாகங்களைக் கொண்டது:

1. இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

2. கட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம்இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

3. ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும். இந்த ஏவுகணைகளின் வேகம் எதிரியின் ஏவுகணைகளிலும் பார்க்க அதிக வேகத்தில் பாயக்கூடியவையாக இருத்தல் அவசியம்.

சீன DF-41 ஏவுகணைகளை அழிக்க முடியாது

இரசியாவின் S-500இல் உள்ள ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 14 மடங்கு வேகத்தில் (Mach-14) பாயக்கூடியவை என்பதால் ஒலியிலும் 25மடங்கு  வேகத்தில் (Mach-25)  பாயும் சீனாவின் DF-41 ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் போகலாம். S-500 இன் ஏவுகணைகளான 77N6-N, 77N6-N1 200கிமீ/124மைல்கள் உயரம்வரை பாய்ந்து எதிரியின் ஏவுகணைகளை அழிக்கவல்லன. S-500இன் அடுத்த கட்ட முறைமைக்கு S-550 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை இரசியா வெளிவிடவில்லை.

அமெரிக்கப் பெருமைக்கு பேரிடி என்னும் இரசியா

இரசியர்கள் தங்களது S-500 வான் பாதுகாப்பு முறைமை ஒரு மந்திர குண்டு (Silver Bullet) எனப் பெருமைப்பட்டுக் கொண்டதுடன் அது அமெரிக்காவின் பெருமைக்கு பேரிடியாக அமையும் எனக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 Raptor, F-35 Lighting ஆகிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையால் இனம் காணமுடியாது எனக் கருதப்பட்டது. சிரியாவில் இரசியாவின் S-400 நிறுத்தப் பட்டிருந்த பிரதேசங்களில் இஸ்ரேல் அங்கு தன்னிடமுள்ள F-35 புலப்படா விமானங்களை பறக்க விட்டு பரிசோதித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. F-35 முதலில் போர் முனையில் பாவித்தது இஸ்ரேல் என இஸ்ரேலியப் படைத்துறையினர் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் அது எங்கு எப்போது என இஸ்ரேலியர்கள் சொல்லவில்லை. அது சிரியாவாக இருக்க வேண்டும் என ஊகம் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின்  THAAD & S-400



அமெரிக்காவின்  Terminal High Altitude Area Defence என்னும் வான்பாதுகப்பு முறைமை தாட் (THAADஎனச் சுருக்கமாக அழைக்கப்படும். அதிலும் பார்க்க இரசியாவின் S-400 வான்பாதுகாப்பு முறைமை சிறந்ததாக விளங்கியது. அமெரிகாவின் தாட் உயர் மட்டத்தில் வரும் ஏவுகணைகளையும் விமானங்களையும் மட்டும் இடைமறித்து அழிக்க வல்லது. ஆனால் இரசியாவின் S-400 அதி உயர்மட்டம்உயர் மட்டம்தாழ் மட்டம் ஆகிய மூன்று வகையான ஏவுகணைகளையும் விமானங்களையும் இடை மறித்து அழிக்க வல்லன. அத்துடன் தாட் ஒரு செக்கண்டிற்கு முன்னூறு கிமீ வேகத்திலும் குறைவான வேகத்தில் வரும் ஏவுகணைகளை மட்டும் இடைமாறிக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தன. ஆனால் இவற்றுடன் செய்மதிகளில் இருந்து செயற்படும் Space Based Infrared System (SBIS) மற்றும் விமானங்களில் இருந்து செயற்படும் Airborne Lace ஆகியவை இணக்கப்பட்ட பின்னர் அவற்றின் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. S-400 ஒரு செக்கண்டிற்கு 480கிமீ வேகம் வரை பாயும் ஏவுகணைகளை இடைமறிக்க வல்லன. ஒரு S-400இன் விலை $500மில்லியன் ஆனால் ஒரு தாட் முறைமையில்ன் விலை அதிலும் பார்க்க ஆறு மடங்காகும். வான் பாதுகாப்பு முறைமையில் இரசியா அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி முன்னேறியுள்ளது என்பதை S-400 நிலை நாட்டியது. S-500 இன்னும் ஒரு படி முன்னேற்றத்தை சுட்டிக் காட்டுகின்றது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500

S-500 வான் பாதுகாப்பு முறைமையை S-400இல் இருந்து மேம்படுத்தாமல் அதன் ரடார்கள்கணினி முறைமைகள்ஏவுகணை வீசும் முறைமைகள்ஏவுகணைகள் ஆகியவற்றை முற்றிலும் புதியனவாக இரசியர்கள் உருவாக்கியுள்ளன. இரசியா சீனாவிற்கும் இந்தியாவிற்கும் S-500 வான்பாதுகாப்பு முறைமையை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதனால் பாதிப்படையப் போவது

கரிசனை கொள்ள வேண்டிய ஜேர்மனி

2021 ஏப்ரலில் ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேர்மனிக்கு இரசியாவால் ஏற்படப்போகின்ற இடர் நேரடியானதும் திட்டவட்டமானதுமாகும் என்றார். ஜேர்மனியிடம் இருக்கும் பழைய Tornado போர் விமானங்கள் இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை எதிர்கொள்ள முடியாதவை. இரசியாவின் S-500 செயற்படத் தொடங்கியதும் ஜேர்மன் போர் விமானங்கள் இரசியாப் பக்கம் தலைகாட்டவே முடியாது.

அமெரிக்காவின் B-21 Raider இரசியாவின் S-500ஐ அழிக்குமா?

அமெரிக்காவின் B-21 Raider போர்விமானங்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் எதிரி நாடுகள் உருவாக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தகர்க்க வல்லது என அதன் உற்பத்தியாளர்கள் Northrop Grumman Corporation தெரிவித்துள்ளது. அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எதிரியின் எந்த ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மைசிறந்தswept-wing fighter பொறிமுறைபல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன. B-21 Raider இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்க்கக் கூடியவை என அதன் உற்பத்தியாளர்களான Northrop Grumman Corporation சொல்கின்றனர்.

இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான S-400, S-500 போன்றவற்றிற்கு ஈடான வான்பாதுகாப்பு முறைமைகள் அமெரிக்காவிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் இரசிய வான்பாதுகாப்பு முறைமைகளை தகர்கக் கூடியவையா என்பதை ஒரு போர்க்களத்தில் தான் பார்க்க முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...