Tuesday 28 September 2021

Evergrandeயின் வீழ்ச்சி சீனாவை வீழ்த்துமா?

  


ஒரு நாட்டில் உள்ள 300 பில்லியன் டொலர் கடன் பட்ட ஒரு தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் அது ஒரு பூகம்பமாக அமையும். ஆனால் சீனாவில் அது நிகழப்போவதில்லை. சீன அரசு தனது நாட்டு பொருளாதாரத்தையும் தனியார் நிறுவனங்களையும் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. Evergrande Real Estate சீனாவில் இரண்டாவது பெரிய மெய்ப்பேட்டை(Real Estate) நிறுவனமாகும். உலகிலேயே அதிக கடன் பட்டுள்ள நிறுவனம் அதுவாகும். சீனாவில் 280இற்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300இற்கும் அதிகமான தொடர் மாடிகளை அது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் பிரபல காற்பந்தாட்டுக் கழகத்தையும் அது வாங்கி வைத்துள்ளது. Evergrande Real Estate இன் உரிமையாளர் சூ ஜியாயின் $10.6பில்லியன் உடமையுள்ள செல்வந்தர்.

இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சீனர்களுக்கு பாதிப்பு

1.6 மில்லியன் சீனர்கள் Evergrandeஇடமிருந்து வீடுகளை வாங்குவதற்காக முற்பணம் செலுத்தியுள்ளனர். 80,000 சீனர்கள் அதில் முதலீடு செய்துள்ளனர். சொந்த வீடு என்பது சீன நடுத்தர வர்க்க மக்களின் பெரும் கனவாகும். Evergrandeயின் நிதி நெருக்கடியில் சீன அரசு துரிதமாகச் செயற்படாமல் நிதானமாக நிற்கின்றது. Evergrandeஇன் உரிமையாளரகள், முதலீட்டாளரகள், கடன் கொடுத்தவர்கள் உரிய பாடம் கற்கட்டும் என சீன அரசு காத்திருக்கின்றது. அதேவேளை தமது சேமிப்புக்களை முதலீடு செய்த சேமிப்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சீன அரசு செயற்படுகின்றது. அவர்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டும் அல்லது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகளை சீன அரசு தடை செய்து வருகின்றது.

Evergrande தேய்ந்த வரலாறு

2017இல் Evergrande தனது கடனில் பெருமளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதன் கடன் அதன் சொத்தின் பெறுமதியில் 240%ஆக இருந்தது. அதை 70%ஆகக் குறைப்பதாக Evergrande முடிவு செய்தது. 2018இல் ஐரோப்பிய நடுவண் வங்கி Evergrande கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நிறுவனம் என்றது.  2020 மார்ச்சில் தனது கடன் பளுவை ஆண்டு தோறும் $23.3 பில்லியனால் (150பில்லியன் யூவானால்) குறைப்பதாக அறிவித்தது. Evergrande தனது கட்டிட விலைகளில் 30%ஐக் குறைத்தது. 2020 ஒக்டோபரில் Evergrande ஹொங் கொங் பங்குச் சந்தையில் தனது இரண்டாம் நிலைப் பங்குகளை விற்று $555மில்லியன்களைத் திரட்டியது. 2020 நவம்பரில் மேலும் தனது பங்குகளை விற்று $1.8பில்லியனைத் திரட்டியது. 2021 ஜூன் மாதம் Fitch நிறுவனம் Evergrandeஐ B+இலிருந்து Bஆக தரம் தாழ்த்தியது. 2021 ஜூன் முதல் ஓகஸ்ட் வரை Evergrandeயின் மாதாந்த விற்பனை அரைவாசியாகக் குறைந்தது.

Evergrande பற்றிய உண்மைகளை வெளியட்டவர்க்கு தண்டனை

2012-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதிச் சந்தைப் பந்தயக்காரரான (Short Seller) Andrew Left என்பவர் Evergrande பட்டகடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது என எச்சரித்ததுடன் அது ஆறுவிதமான கணக்குப் பதிவு முறைகேடுகளைச் செய்து தனது பாரிய கடன்களை மறைக்கின்றது என்றார். ஹொங் கொங்கின் நிதிச்சந்தையை நெறிப்படுத்தும் நிறுவனமான Securities and Futures Commission (SFC) Andrew Left பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றார் எனக் குற்றம்ம் சாட்டி அவரிடம் இருந்து HK$1.6மில்லியனைத் தண்டப்பணமாக அறவிட்டது. Moody என்கின்ற அமெரிக்காவின் கடன்படுதிறன் தரப்படுத்தும் நிறுவனம் Evergrandeயைப் பற்றி ஆறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது அதன் மீதும் ஹொங் கொங் Securities and Futures Commission  குற்றம்சுமத்தி HK$1.4மில்லியன் தண்டமாக அறவிட்டது.

கட்டிடக் குமிழி 

ஒரு நாட்டில் கட்டிடங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அவற்றின் விலை அதிகரிக்கும். அதன் மூலம் இலாமீட்ட பல முதலீட்டாளர்கள் கடன்பட்டு கட்டிடங்களைக் கட்டுவாரகள், அளவிற்கு அதிகமாகக் கடன்பட்டு தேவைக்கு அதிகமான கட்டிடங்களைக் கட்டும் போது கட்டிய கட்டிடங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் அவற்றைக் கட்டியவர்கள் தாங்கள் பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் கடன் கொடுத்த வங்கிகள் நிதிநெருக்கடிக்கு உள்ளாகும். 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்த போது சீனாவையும் அது பாதித்தது. அதனால் தனது பொருளாதார வளர்ச்சி குறையாமல் இருக்க சீன அரசு தனது வங்கிகளுக்கும் மாகாண அரசுகளுக்கும் கட்டிடத்துறைக்கும் உட்கட்டுமானத் துறைக்கும் அதிக கடன் வழங்கும் படி அறிவுறுத்தியது. பல தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கடன் பட்டு கட்டிடங்களைக் கட்டின. தேவைக்கு அதிகமாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதில் Evergrande மிக அதிகமான கட்டிடங்களைக் கட்டியது. சீனாவெங்கும் பல தொடர் மாடி வீடுகளைக் கொண்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்து நகரங்களின் அழகைக் கெடுக்கின்றன. அப்படிப்பட்ட பல கட்டிடங்கள் வெடிவைத்து தகர்கப்படுவதும் சீனாவில் நடந்தன. சீனாவின் கட்டுமானத் துறை பற்றிய பிரச்சனை பற்றி அறிய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்

சீனாவின் கட்டுமானப் பிரச்சனை

சீனாப் பொருளாதரத்தை Evergrande பாதிக்குமா?

சீனர்கள் தமது நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன என்றவுடன் தமது முதலீடுகளை தமது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில் சீன அரசு மூலதன வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வைஹ்ட்திருக்கின்றது. அதனால் 1997-1998இல் ஆசிய நாடுகளில் நடந்த நிதி நெருக்கடி போல் சீனாவில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் Goldman Sach என்ற அமெரிக்க நிறுவனம் சீனாவின் மெய்ப்பேட்டை(Real Estate) துறையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வீழ்ச்சி சீனாவின் பொருளாதார வளர்ச்சியை 1.4% 4.5% வரை குறைக்கும் என எதிர்வு கூறியுள்ளது.



ஒஸ்ரேலியா பாதிக்கப்படுமா?

1980களில் இருந்து சீனா தொடர்ச்சியாக 40ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியைடையும் போது ஒஸ்ரேலியா 1992இல் இருந்து தொடர்ச்சியாக பொருளாதார வளச்சியை அடைந்து வருகின்றது. சீனாவின் கட்டுமானத்துறைக்கு தேவையான இரும்புத்தாது ஒஸ்ரேலியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இரும்புத் தாதின் விலை 2021 மேயில் உச்சத்தைத் (ஒரு தொன் $240) தொட்டு பின்னர் கடும் வீழ்ச்சியைக் கண்டது. 2021 செப்டம்பர் 27-ம் திகதி ஒரு தொன் இரும்புத்தாதின் விலை $109. சீனா தனது உட்கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தும் போது ஒஸ்ரேலியாவின் சீனாவிற்கான ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் அமெரிக்கா தனது உட்கட்டுமானங்களில் பெருமளவு செலவு செய்யவிருப்பதால் அமெரிக்காவிற்கான ஒஸ்ரேலியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதிகரிக்கும்.

  •  சீனாவின் கட்டிடத்துறை நெருக்கடி உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் பாதுகாக்க (Ring Fence) முடியும் என்ற கருத்து பொருளியலாளர்களால் பரவலாக முன் வைக்கப்படுகின்றது.

அயர்லாந்தும் ஸ்பெயிலும் 2008இன் பின்னர் நிதி நெருக்கடிக்கு உள்ளான போது அவற்றின் கட்டிடத்துறை உற்பத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடாக இருந்தது. தற்போது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடு கட்டிடத்துறையில் இருந்து வருகின்றது. ஆனால் சீனா தனித்துவமானது. சீனா Evergrande Real Estateஇன் முதலீட்டாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியைச் செய்யலாம். இரண்டு மில்லியனிலும் அதிகமான சீனர்களில் அதிருப்தியை சீனா சம்பாதிக்க விரும்பாது. ஆனால் சீனக் கட்டிடத்துறை பாதிப்படைவதை சீனா தவிர்க்க விரும்பாது. சீனாவில் வெற்றிடமாக இருக்கும் கட்டிடங்களை விரைவில் நிரப்பக் கூடியவகையில் சீனப் பொருளாதாரம் வளர்வதற்கான அறிகுறிகள் இல்லை. சீனா தற்போது பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க பொருளாதாரச் சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது.  சீன அரசின் தற்போதைய தலையாய நோக்கம் பொதுச் செழுமை எனப்படும் எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் என்பதே. சீனாவின் தற்போதைய பொருளாதார நோக்கங்கள் பற்றி அறிய கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:

https://www.veltharma.com/2021/09/blog-post.html


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...