Wednesday 29 September 2021

GSP+ வரிச்சலுகையும் இலங்கையும்

  


1971-ம் ஆண்டு நடந்த UNITED NATIONS CONFERENCE ON TRADE AND DEVELOPMENT (UNCTAD) இன் கூட்டதில் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருவானதுதான் GSP எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Generalized System of Preferences அதாவது பொதுப்படுத்தப்பட்ட சலுகைகளின் முறைமை.

GSP என்பது ஒரு தரப்பான வரிச்சலுகையாகும். இரு தரப்பு வரிச்சலுகையில் இரண்டு நாடுகளும் வரிச்சலுகை வழங்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையை வழங்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்தவிதமான வரிச்சலுகையையும் Generalized System of Preferences வழங்க வேண்டியதில்லை.

நாடுகளின் வருமான அடிப்படையில் GSP சலுகைகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு(வியட்நாம், இந்தோனேசியா) GSP சலுகையும் பாதிப்படையக்கூடிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கு GSP+ சலுகையும் வழங்கப்படுகின்றன. இவை தவிர மிகக் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு (பாங்களா தேசம், ஆப்கானிஸ்த்தான்) EBA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Everything but Arms (படைக்கலன்களைத் தவிர எல்லாம்) என்னும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. அச்சலுகைகள் கிடைக்கும் நாடுகள் படைக்கலன்களைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் இறக்குமதி வரியின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். சிறந்த உட்கட்டுமானங்களையும் அரச உதவிகளையும் கொண்ட சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைக் குறைத்து மற்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியை அதிகரிப்பதே இச் சலுகைகளின் உள் நோக்கம் எனவும் கருதப்படுகின்றது.

ஆர்மினியா, பொலிவியா, கேப் வேர்டா, கிரிகிஸ்த்தான், மங்கோலியா, பாக்கிஸ்த்தான், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு GSP+ சலுகை வழங்கப்படுகின்றன. ஆப்கானிஸ்த்தான், பங்களாதேசம் உள்ளிட்ட 49 நாடுகளுக்கு EBA வரிச்சலுகை வழங்கப்படுகின்றன.

GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையின் நோக்கங்கள்:

1. வளரும் நாடுகளின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்

2. வறுமையைக் குறைத்தல்

2. பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்

3. நல்லாட்சியை ஏற்படுத்தல்

இலங்கைக்கான GSP+ 2017 மே மாதம் வழங்கப்பட்டது. அது 2023வரை நடைமுறையில் இருக்கும். அதனால் இலங்கை $500மில்லியன் பெறுமதியான நன்மையைப் பெற்றுள்ளது.

 

GSP வரிச்சலுகையின் நிபந்தனைகள்

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் போன்றவற்றில் பன்னாட்டு மரபொழுங்குகளைப்(conventions) பேணவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கென 27 பன்னாட்டு மரபொழுங்குகளைப் பட்டியலிட்டுள்ளது. இதன் உள் நோக்கம் விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) பேணுவதாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு

2021 ஜூன் மாதம் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளை மீறுவதாகவும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டும் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் முடிவு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றம் எடுத்தது. அதன் அடிப்படையில் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியம் ஐவர் கொண்ட ஒரு குழுவை இலங்கைக்கு 2021 செப்டம்பர் 27-ம் திகதி அனுப்பியுள்ளது. அவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து இலங்கை அரச அதிபர், உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரைச் சந்திக்கின்றார்கள். பின்னர் அவரகள் தமது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றத்திற்கு சமர்பிப்பர்.  மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுத்துள்ளது.

GSP+வரிச்சலுகை ஓர் அரசுறவியல் கருவியா?

GSP+வரிச்சலுகை பெறும் துறைகளில் நான்கு இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். அது இலங்கையின் வேலைவாய்ப்பில் 15% ஆகும். அதில் 90% பெண்களாகும். 2010-ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது இலங்கைக்கான GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. குடிசார் உரிமைகள், அரசியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சித்திரவதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறீசேன அதிபராக இருந்த போது மீளவும் வழங்கப்பட்டது. GSP+வரிச்சலுகை ஒரு அரசுறவியல் கருவியாகப் பாவிக்கப்படுகின்றது என கருத இடமுண்டு.

Soft Equity Research என்ற நிறுவனம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பற்றிச் செய்த ஆய்வின் முடிவுகள்:

1. GSP+ ஏற்றுமதிச் செயற்பாட்டை அதிகரித்தது

2. GSP+ஐ இழப்பது பரந்த அளவிலான வெற்றிடத்தை ஏற்படுத்தாது.

3. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வருங்கால மேலதிக ஏற்றுமதியைப் பாதிக்கலாம்.

4. சிறு உற்பத்தியாளர்களின் இலாப வரம்பைக் குறைக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஆகக் கூடிய GSP+வரிச்சலுகை 9.4% ஆகும். இலங்கையினுடைய ரூபாவின் பெறுமதி அண்மைக் காலங்களாக 9.4% இலும் அதிக மாக தேய்மானம் அடைந்த நிலையில் டொலரின் மதிப்பில் இலங்கையில் உற்பத்திச் செலவு குறைந்துள்ளமையால் GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படும் இழப்பு ஏற்கனவே ஈடு செய்யப்பட்டு விட்டது எனச் சொல்லலாம்.

GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது இலங்கையின் ஏற்றுமதி பாதிக்கப்படும். ஏற்றுமதி குறையும் போது இலங்கையின் ரூபாவின் பெறுமதி குறைவடையும். அந்த வகையில் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது ஏற்படும் இழப்பீடு ஈடு செய்யப்படும். வெளிநாட்டு கொள்வனவாளர்களின் கொள்வனவு விலையில் பெரும் பாதிப்பு ஏற்படாது. 01/01/2019 ஒரு அமெரிக்க டொலர் ரூபா 180.66 ஆக இருந்ட்தது. 31/08/2021இல் அது ரூபா 198.98 ஆக இருக்கின்றது. இக்காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9%இற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

GSP+வரிச்சலுகை பெறும் இலங்கை உற்பத்தியாளர்கள் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவதையிட்டு பெரிதும் கவலையடைந்துள்ளார்கள். Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யும் Boteju Industriesஇன் உரிமையாளர் Janaka Boteju GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவது எமது நிறுவனத்திற்கு இறப்பு வீடு (It is like a funeral for us) போன்றது என்றார். தற்போது இலங்கை மக்கள் எதிர் கொள்ளும் நெருக்கடியை மனதில் கொண்டு உடனடியாக GSP+வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தாமல் கால அவகாசம் வழங்க வாய்ப்புண்டு. 2008-ம் ஆண்டு இலங்கைக்கான GSP+வரிச்சலுகையை நிறுத்தும் முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்தது. அது Marks & Spencerஇன் இரகசிய நடவடிக்கைகளால் இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 

GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டவுடன் இலங்கையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடனடியாக தமது உற்பத்தியை தூக்கிக் கொண்டு போய் பங்களாதேசத்தில் வைத்துவிடும் என்பது போல் கருத்துத் தெரிவிப்பது சுத்த அபத்தமாகும். GSP+வரிச்சலுகை நிறுத்தினால் ஏற்படும் இழப்பை தமது உற்பத்தி செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் சமாளிக்கலாம். மூலப்பொருள்கள் வழங்குவோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் விலைக் குறைப்பைக் கேட்கலாம். ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கலாம். உற்பத்தி திறனை அபிவிருத்தி செய்யலாம். 2019 நவம்பரில் இலங்கை அரசு தனது வரி விதிப்பை குறைத்துள்ளது. 2010-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் GSP+வரிச்சலுகையை நிறுத்திய போது அதில் தொடர்புடைய எத்தனை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...