Saturday, 18 September 2021

AUKUS: ஆங்கில முக்கூட்டணிக்கு சீனா அஞ்சுமா?



 ஒஸ்ரேலியா(A), பிரித்தானியா(UK),  அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து இந்த மூன்று ஆங்கிலம் பேசும் நாடுகளின் கூட்டணியை AUKUS என அழைக்கின்றனர். மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2021 செப்டம்பர் 15-ம் திகதி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடி இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த மூன்று நாடுகளின் கூட்டணி இணையவெளிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology), கடல் நீரடிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதாகவும் அந்தக் கலந்துரையாடலில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடன் கனடாவும் நியூசிலாந்தும் இணைந்து ஐந்து கண்கள் (Five Eyes) என்னும் உளவுக் கூட்டமைப்பை அமைத்துள்ளன. 


"ஜெய்ஹிந்த்" கும்பல்களின் உளறல்

AUKUS ஒத்துழைப்பு பற்றிய செய்தி வந்தவுடன் "ஜெய்ஹிந்த்" கும்பல்கள் தங்கள் youtube Channelsகளில் "சீனா அச்சம்", "கலக்கத்தில் சீனா" என்ற தலைப்பில் உளற ஆரம்பித்துவிட்டன. AUKUS சீனாவிற்கு எதிரான கூட்டணியா என்ற கேள்விக்கு அதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும் கடற்பரப்பில் மூன்று நாடுகளின் படைத்துறையை ஒருங்கிணைப்பதே தமது நோக்கம் என்றனர். ஒஸ்ரேலியாவை சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது இந்த AUKUS ஒத்துழைப்பின் முக்கிய நோக்கம் என்று சொல்லலாம். ஒஸ்ரேலியாவிற்காக இந்த மூன்று நாடுகளும் உருவாக்கவிருக்கும் அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் தென் சீனக் கடல்வரையும் பயணிக்க வல்லன. டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலும் பார்க்க அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமாகப் பயணிக்க வல்லன, நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்க வல்லன, புலப்படுவதற்கு கடினமானவை. 

சீனாவின் எதிர்வினை

AUKUS உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் மூன்று நாடுகளையும் தங்கள் பனிப்போர்க்காலத்து கருத்தியல் தப்பெண்ணங்களை கைவிட வேண்டும் என்றார். மேலும் அவர் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவற்றிற்கிடையிலான நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டுமே தவிர மூன்றாம் நாடு ஒன்றை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றார். "கலக்கத்தில் சீனா" என்பதிலும் பார்க்க கரிசனை கொண்ட சீனா என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை சீனத் தூதுவரின் கருத்தில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

UNDERSEA FIBRE OPTIC CABLES கடலடி ஒளியிழை வடம்,

கடலடியில் வைக்கப்பட்டுள்ள ஒளியிழை வடம் மேற்கு நாடுகளின் குடிசார் மற்றும் படைத்துறைத் தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை துண்டிக்காமலும், ஒற்றாடல் செய்யாமலும் இருக்க அவற்றுக்கான பாதுகாப்பு அவசியமாகும். அவற்றைப் பாதுகாப்பதற்கு சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுகின்றது. அதற்கான ஒத்துழைப்பு AUKUS இன் நோக்கங்களில் ஒன்றாகும் .  துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology) மூலம் ஒற்றாடல் தடுக்கப்படலாம். பல வழிகளில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் படைத்துறை ஒத்துழைப்பு செய்கின்றபோதிலும் நீர்மூழ்கித்துறையில் அவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பு மற்றவற்றிலும் மேம்பட்டதாக இருக்கின்றது. அமெரிக்கா ஒஸ்ரேலியாவிற்கு அதன் Hobart வகை நாசகாரிக் கப்பல்களில் பாவிக்கக் கூடிய Tomahawk தொலைதூர ஏவுகணைகளை விற்பனை செய்யவிருக்கின்றது.  

போட்டிக் களமாகும் ஆசிய-பசுபிக் பிராந்தியம்

தனது Queen Elizabeth விமானம் தாங்கிக் கப்பலை தென் சீனக் கடலூடாக ஜப்பானுக்கு அனுப்பி ஜப்பானுடன் ஒரு போர் ஒத்திகையை பிரித்தானியக் கடற்படை செய்தது. ஆசிய-பசுபிக் என்னும் பெரும் கடற்பரப்பில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் AUKUS கூட்டணி உருவாகியுள்ளது. அதன் முதற்பணியாக அணுவலுவில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதாகும். சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒஸ்ரேலியாவில் 1.2மில்லியன் சீனர்கள் வாழ்கின்றார்கள். சீனா கடந்த சில ஆண்டுகளாக ஒஸ்ரேலியாவை தன் பிடிக்குள் கொண்டு வர பல வழிகளில் முயல்கின்றது. ஒஸ்ரேலியா சீனாவிற்கு 150மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியை சீனாவிற்கு 2020இல் செய்திருந்தது. ஒஸ்ரேலியா ஆகக் கூடிய ஏற்றுமதியை அதாவது மொத்த ஏற்றுமதியில் 39%ஐ சீனாவிற்கே செய்கின்றது.  சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும், சீன முதலீடும் ஒஸ்ரேலியாவில் கற்கும் சீன மாணவர்களும் ஒஸ்ரேலியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்தன. கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து உருவாகியதா என்பது தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா பகிரங்கமாக அறிவித்தமை சீன ஒஸ்ரேலிய உறவை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து சீனா ஒஸ்ரேலியா மீது பல பொருளாதார மிரட்டல்களை ஒஸ்ரேலியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மீதான தடை என்னும் பெயரில் விடுத்தது. 

அவசரப்படும் ஒஸ்ரேலியா

தற்போது உள்ள அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கையைப் பார்ப்போமானால் அமெரிக்கா-68, இரசியா-29, சீனா-12, பிரித்தானியா-11, பிரான்ஸ்-8, இந்தியா-1. பிரேசில் தனக்கென அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் வழியில் துருக்கியும் செல்லலாம்.  சீனாவின் கடற்படை வலு கடந்த பத்தாண்டுகளாக மிகையான வளர்ச்சிப் பாதையில் செல்வதால் ஒஸ்ரேலியாவிற்கு அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. பிரான்ஸ் ஒஸ்ரேலியாவிற்கு உருவாக்க ஒத்துக் கொண்ட டீசல் வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் காலதாமதம் ஆவதுடன் காலாவதியும் ஆகிவிட்டது. 

நியூசிலாந்து ஏன் இல்லை?

ஆசிய பசுபிக் பிரந்திய ஒத்துழைப்பில் பசுபிக் பிராந்தியத்தின் இன்னொரு முக்கிய நாடாகிய நியூசிலாந்து ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுகின்றது. நியூசிலாந்து மக்கள் அணுக்குண்டுகளை எதிர்ப்பவர்கள். நியூசிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அணுக்குண்டுகள் தாங்கிய அமெரிக்க கப்பல்களும் விமானங்களும் நியூசிலாந்திற்கு வரக்கூடாது என நியூசிலாந்து 1985இல் தடை விதித்தபின்ன முடிவிற்கு வந்தது. நியூசிலாந்து விலகியிருப்பதற்கு அல்லது தவிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம். இன்னும் ஓர் ஆங்கிலக் குடும்ப நாடாகிய கனடா அதன் பூகோள இருப்பிடம் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

அமெரிக்க அணுவலு பாதுகாப்பானதா?

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு 93-97% Highly Enriched Uranium மூலப்பொருள்களைப் பாவிக்கின்றன. ஆனால் சீனாவும் பிரான்ஸ்சும் 20% Low Enriched Uraniumஐப் பாவிக்கின்றன. Highly Enriched Uranium பாவனையின் போது பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகின்றது. ஒஸ்ரேலியா அணுக்குண்டுகளுக்கு எதிரான கொள்கையுடைய நாடு. ஒஸ்ரேலியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அதன் இயக்க வலுவை மட்டும் அணுவலுவில் இருந்து பெற்றுக்கொள்ளும் என நம்பலாம். 

இலாபம்தான் அமெரிக்காவின் இலக்கு

சீனாவை சமாளிக்க அமெரிக்கா தனது படைகளை ஒஸ்ரேலியாவில் குவிப்பதிலும் பார்க்க ஒஸ்ரேலியாவிற்கு தனது படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது அமெரிக்காவிற்கு இலாபகரமான ஒன்றாகும். சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது கடற்படை வலிமையை ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில் விரிவு படுத்தியும் புதுமைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளால் சீனாவைத் தனித்து சமாளிக்க முடியாது என்ற நிலையில் சீனாவிற்கு எதிராக பல கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

1. அமெரிக்க இந்தியக் கூட்டணி

சீனாவின் படைவலு பெருகி வருவதால் அச்சம் கொண்ட இந்தியா அமெரிக்காவுடன் LEMOA என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம்.  அதே போல் இந்தியாவும் அமெரிக்காவின் படைத்தளஙகளை தமக்கு தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். 

குவாட்(QUAD) ஒன்று கூடாத கூட்டணி

சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நாடுகளான ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான உரையாடல் ஒன்று முன்னாள் ஜப்பானிய அதிபர் சின்சே அபேயால் தொடக்கி வைக்கப்பட்டது.  முதலில் இந்தியா அதில் இணைந்தால் சீனாவை அது சினம் கொள்ளவைக்கும் என தயங்கியது. ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் பாதிக்கப்படும் என கரிசனை கொண்டு தயங்கியது. சீனா இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து செய்யும் அத்து மீறல்களாலும் ஒஸ்ரேலியாவில் சீனாவின் மறைமுகத் தலையீடுகளாலும் இரு நாடுகளும் அந்த உரையாடலில் பங்கேற்றன. இதை ஒரு படைஅதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்யும் மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது. ஆனாலும் இது ஒரு பாதுகாப்பு உரையாடல் மட்டுமாக இருக்கின்றது. ஒரு படைத்துறைக் கூட்டணியாக உருவாகவில்லை. 

ஒன்று போனால் ஒன்று வரும்

ஒஸ்ரேலியாவிற்கு தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் உருவாக்குவதாக 2016இல் இரு நாடுகளும் 37 பில்லியன் டொலர் பெறுமடியான ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த வருமான வாய்ப்பு தமக்கு கிடைக்காததால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏமாற்றமடைந்திருந்தன. பிரான்ஸால் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை மட்டும் உருவாக்க முடியும். தற்போது அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை வைத்திருக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒஸ்ரேலியாவிற்கு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஒத்துக் கொண்டமையினால் ஒஸ்ரேலியாவிற்கு பிரான்ஸ் உருவாக்க இருந்த 12 டீசல் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டுளது. பிரான்ஸ் தனக்கு துரோகமிழைக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி தன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸின் முதுகில் குத்திவிட்டார்கள் என்றார். பிரான்ஸும் தென் சீனக் கடலுக்கு தன் கடற்படையை அனுப்பியிருந்தது. தனது ஆட்சேபனையாக அமெரிக்காவில் கடற்படையுடன் நடக்கவிருந்த ஒரு நிகழ்வையும் பிரான்ஸ் இரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஒஸ்ரேலியாவிற்குமான தனது தூதுவர்களை உரையாடலுக்காக அழைத்துள்ளது. இது இந்தளவில் முடியுமா அல்லது பிரான்ஸின் சினம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான நட்பைப் பாதிக்குமா, நேட்டோ ஒத்துழைப்பை பாதிக்குமா, ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸைப் பின்பற்றுமா போன்ற கேள்விகளுகான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீனா பிரான்ஸிற்கு தன் நட்புக்கரத்தை நீட்டலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்த கொவிட்-19இற்கான தடுப்பூசிகளை இத்தாலியும் பிரான்சும் தடுத்திருந்தன. அது ஒஸ்ரேலியாவை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. 

  • பசுபிக் பிராந்தியத்தில் படைத்தளம் உள்ள பிரான்ஸை ஒதுக்கிவிட்டு அங்கு படைத்தளம் இல்லாத பிரித்தானியாவைக் கொண்டு வருவதால் சீனா கலக்கமடையாது. 

சீனாவை எதிர்க்க உருவாக்கப்படும் பல கூட்டணிகள் சீனாவின் வலிமை தொடர்பாக அதன் போட்டியாளர்கள் கரிசன கொண்டிருப்பதைக் கட்டியம் கூறுகின்றது. புதிய AUKUS கூட்டணியால் சீனாவை அடக்க முடியாது. அது  உலக ஆதிக்கத்திற்கான தனது பாதையில் அமைதியான எழுச்சி என்னும் போர்வையில் தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவிலும் பார்க்க மூன்று மடங்கு பாதுகாப்பிற்கு செலவு செய்யும் சீனாவால் தனது பாதுகாப்புச் செலவை மேலும் அதிகரிக்க முடியும். 



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...