முதலாவது ஆளில்லா விமானம் 1783இல் உருவாக்கப்பட்டது. 1898இல் முதலாவது வானலை மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டது. அதைப் பறக்கவிட்டபோது நம்பமுடியாத பார்வையாளர்களில் சிலர் அது பயிற்றுவிக்கப்பட்ட குரங்குகளால் இயக்கப்படுவதாக நம்பினர். முதலாம் உலகப் போரில் 1915-ம் ஆண்டளவில் பிரித்தானியர்கள் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் எதிரியின் படைநிலைகளைப் படம் பிடித்தனர். 1935இல் நவீன ஆளில்லா விமானம் DeHaviland DH82B Queen Bee என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1937இல் அமெரிக்க கடற்படையினர் தமது ஆளில்லா விமானத்தை உருவாக்கினர். 1973இல் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதை 1982இல் நடந்த போரில் சிரிய வான்படைக்கு எதிராக வெற்றீகரமாகப் பயன்படுத்தியது. அதனால் திருப்தியடந்த அமெரிக்கா தனது ஆளில்லா விமான உற்பத்தியை அதிகரித்தது. பின்னர் அமெரிக்கா 1996இல் முழுமையான படைக்கலன் தாங்கிய தாக்குதல் ஆளில்லா விமானத்தை உருவாக்கியது. 2010இல் திறன்பேசிகள் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டன. 2013இல் அமெரிக்காவில் பொதிகளை விநியோக்கிக்கும் நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை பாவிக்கத் தொடங்கின.
புலப்படா ஆளில்லா விமானங்கள்
அமெரிக்கா ரடார்களுக்கு புலப்படாத (Stealth) ஆளில்லா விமானங்களை உருவாக்கியது. லொக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் அந்த விமானத்திற்கு RQ-170 Sentinel எனப் பெயரிடப்பட்டது. அவற்றில் ஒன்று ஈரானை வேவுபார்க்கச் சென்றபோது அங்கு பழுதடைந்து தரையிறங்கியது. அதை சீனர்கள் இணையவெளியூடாக ஊடுருவி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தரையிறக்கினர் எனச் சொல்லப்பட்டது. ரடார்களுக்கு புலப்படாத ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தை அறிய அப்படிச் செய்யப்பட்டது. என்பதை ஈரானும் சீனாவும் மறுத்திருந்தன.
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்
2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா ஆளில்லா போர்விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல்கள் பல நடத்தின. பராக் ஒபாமாவிற்கு இச்செயல் மிகவும் பிடித்திருந்தது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ உலகெங்கும் பல இரகசிய ஆளில்லா போர்விமானத் தளங்களை வைத்திருக்கின்றது. அவற்றில் இருந்து ஆபிரிக்காவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் பல தாக்குதல்கள் செய்தன. அவற்றால் பல அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அல் கெய்தா, ஐ எஸ் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பிரித்தானியாவின் படைத்தளங்களில் இருந்து சென்ற பல ஆளில்லாப் போர் விமானங்கள் 3500மைல்கள் பறந்து சென்று ஆப்கானிஸ்த்தானில் தாக்குதல் நடத்தின.
2014இல் ஈரான் தற்கொலை ஆளில்லா விமானங்களை உருவாக்கியது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் கடல், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகள் மீது மோதி அவை வெடிக்கச் செய்யப்படும். இவற்றின் பறப்புத்தூரம் 200கிலோ மீட்டர்களாகும். அவை பறக்க வல்ல ஆகக் கூடிய உயரம் 4500 மீட்டர். Shaher-129 என்னும் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை ஈரான் 2005-ம் ஆண்டு உருவாக்கியது. அமெரிக்காவின் MQ-1 Predator ஆளில்லா விமானங்களை ஒத்தவையான Shaher-129ஆல் கண்காணிப்பையும் தாக்குதலையும் செய்யலாம். 2021-ம் ஆண்டு ஈரான் உருவாக்கிய காசா என்னும் ஆளில்லாப் விமானம் 13குண்டுகளை ஒரேயடியாக தாங்கிச் செல்லக் கூடியது.
உலக கண்காணிப்பு
உலகக்கடற்பரப்பு முழுவற்றையும் கண்காணிக்கக்கூடிய வகையில் MQ4C Triton என்னும் ஆளில்லா விமானங்களை 2014இல் உருவாக்கியது. தொடர்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய MQ4C Triton விமானங்களில் உயர்தர உணரிகளும் ஒளிப்பதிவுக் கருவிகளும் பொருத்தப்பட்டன. மற்ற அமெரிக்கப் போர் மற்றும் வேவு விமானங்களுடன் தொடர்பாடல்களை இவை செய்ய வல்லன. இதனால் உலகெங்கும் உள்ள அமெரிக்க கடற்படைக்கலன்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறியக் கூடிய வல்லமையை அமெரிக்கப் படையினர் பெற்றனர்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பன்னாட்டு நிறுவனத்தின் மாநாட்டில் 2021 செப்டம்பர் 12-ம் திகது உரையாற்றிய இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெனி காண்ட்ஸ் ஈரானிய நிபுணர்கள் ஈராக், யேமன், லெபனான் ஆகிய நாடுகளில் செயற்படும் போராளிகளுக்கு ஆளில்லா விமானப் பயிற்ச்சி வழங்குவதாக குற்றம் சாட்டினர். ஈரானின் கஷான் படைத்தளத்தில் இந்தப் பயிற்ச்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
2021 மே மாதம் காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆளில்லா விமானத்தைப் பாவித்தனர். அதே வேளை சிரியாவில் இருந்தும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
2021 ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஓமானின் கடற்கரை ஓரத்தில் Mercer Street என்னும் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் செய்யப்பட்டது. கப்பலில் பணிபுரிந்த இருவர் கொல்லப்பட்ட அத் தாக்குதல் ஈரானின் வேலை என இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.
யேமனில் செயற்படும் ஹூதி போராளிகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையங்கள் போன்றவற்றில் பல தாக்குதல்களை நடத்தினர். 2005இல் இருந்து பல தீவிரவாத அமைப்புக்களும் ஆளில்லா விமானங்களைப் பாவிக்கத் தொடங்கின. அதில் முன்னோடியாக லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு திகழ்ந்தது. ஆனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பால் காத்திரமான இழப்புக்களைச் செய்ய முடியவில்லை. பல்-திரளப்போர் முறை (multi-domain warfare)
தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.
தலிப்பன்களை தலையெடுக்க வைத்த ஆளில்லா விமானங்கள்
தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றுவதற்கு Piram Qul என்ற தஜிக் போர்ப்பிரபுவைக் கொன்றே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. அவரை தற்கொலைத் தாக்குதலாளிகள் மூலமாக கொல்லும் போது அவருடன் பல பொதுமக்களையும் கொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அவரை வேறுவிதமாக கொல்ல தலிபான்கள் முடிவு செய்தனர். தலிபான்கள் தங்கள் ஆளில்லாப் போர் விமானப் படையணியை 2019இல் பல இயந்திரவியல் படித்த இளையோரைக் கொண்டு உருவாக்கியிருந்தனர். அவர்கள் தமக்குத் தேவையான ஆளில்லா விமானங்களை சீனாவின் விவசாயப் பண்ணைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானங்களை வாங்கி அதை பாக்கிஸ்த்தானுடாக ஆப்கானிஸ்த்தானுக்கு கடத்தினர். கிருமி நாசினி தெளிக்கும் பகுதியை அவர்கள் குண்டு வீசும் பகுதியாக மாற்றினர். அவர்கள் தலிபான்களின் உளவுப் பிரிவின் மூலம் போர்ப்பிரபு Piram Qul இருக்கும் இடத்தை அறிந்து கொண்டிருந்தனர். அவர் 2021 மே மாதம் 2-ம் திகதி கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் வானத்தைப் போல நீல நிறம் பூசிய ஆளில்லா விமானத்தை அங்கு அனுப்பி அதிலிருந்து வீசப்பட்ட குண்டின் மூலம் அவரைக் கொன்றனர். அதைத் தொடர்ந்து ஆப்கான் அரச படையினரின் பல சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தமது ஆளில்லா விமானங்கள் மூலம் அழித்தனர். அதன் பின்னர் பல பிரதேசங்கள் தலிபான்கள் வசம் வீழ்ந்தன. யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்கப் படைகள் விலகிக் கொண்டிருக்கையில் ஆப்கானிஸ்த்தான் தலிபானகளின் வசமானது.
ஆர்மீனிய அஜர்பைஜான் போர்
Bayraktar TB2 என்ற துருக்கி உருவாக்கிய ஆளில்லாப்போர் விமானங்கள் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் 2020இல் நடந்த போரின் திசையை மாற்றியது. இரசியப் படையினரின் வழிக்காட்டலுடனும் உதவியுடனும் ஆர்மீனியர்கள் போரிட்டனர். உலகப் புகழ் பெற்ற இரசிய போர்த்தாங்கிகள், கவச வாகனங்கள் மட்டுமல்ல அவர்களின் வான் படைத்தளங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள், ஆட்டிலறி நிலைகள் போன்ற பலவற்றை துருக்கியின் Bayraktar TB2 ஆளில்லாப் போர்விமானங்கள் அழித்தன. அந்தப் போரில் அஜர்பையான் வானாதிக்கம் செய்ய Bayraktar TB2 உதவின.
இக்கட்டுரையின் தொடர்ச்சியாக சீனா, இரசியா, இந்தியா ஆகியவற்றின் ஆளில்லாப் போர்விமானங்கள் பற்றியும் ஆளில்லா விமானங்களில் செயற்கை விவேகம் போன்ற புதிய தொழில் நுட்பம் உள்ளடக்கப் பட்டவை பற்றியும் தகவல்கள் உள்ளடக்கப்படும்.
No comments:
Post a Comment