1994இல் மைக்குறோசொஃப்ற்றின் பில் கேட்ஸ் வங்கித்தொழில் அவசியம் ஆனால் வங்கிகள் அவசியமில்லை என்றார். இப்போது வங்கிகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணவைப்பீடு, பணம் மீளப்பெறல், பங்குகள் வாங்குதல் போன்ற பல நடவடிக்கைகளை கைப்பேசிகளில் உள்ள செயலிகள் மூலம் செய்ய முடியும். செயலிகள் மூலம் வங்கிகளில் எந்த நேரமும் வாடிக்கயாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி, படைத்துறை வளர்ச்சி, போன்றவற்றிற்கு கணித் தொழில்நுட்பத்தின் பல்வேறுவகைகளிலும் முன்னேற வேண்டும் என்பதைச் சீனா உணர்ந்துள்ளது. சீனாவின் இணையவெளிப் பொருளாதாரம் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.4 விழுக்காடாகும். இது அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளினதிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தத் துறையை மேம்படுத்துவதன் மூலம் சீனா கைத்தொழில் உற்பத்தி துறையில் குன்றும் வளர்ச்சியை ஈடு செய்யலாம்.
கைப்பேசிச்செயலித் துறையில் முன்னோக்கிப் பாய்ந்த சீனா
மீகச்செயலி(SUPER APP) என்பது பல செயலிகள் செய்யக்கூடியவற்றைச் செய்யக் கூடிய ஒரே செயலி ஆகும். மீகச்செயலிகளை உருவாக்கி பயன்பாட்டில் விடுவதில் சீனா உலகில் முன்னணியில் இருக்கின்றது. சீனாவின் வீச்சற் (WeChat) என்னும் செயலிக்குச் சொந்தக்காரர்கள் முதலில் மீகச்செயலியை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து அலிப்பே என்னும் செயலி மூலம் பணக்கொடுப்பனவு செய்யும் நிறுவனம் வெற்றீகரமாக மீகச்செயலியை உருவாக்கிப் பயன்படுத்தியது. சீனாவைத் தொடர்ந்து பல ஆசிய நாடுகள் மீகச்செயலிகளை உருவாக்கியுள்ளன. மேற்கு நாட்டின் ஊபர் என்னும் வாடகைப் போக்கு வரத்து நிறுவனத்தின் செயலியிலும் பார்க்க மிகச் சிறந்த மீகச்செயலியை ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதால் மிகச்செயலிகள் ஊபர் நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தோல்வியடைய வைத்தன.
நிதித் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிப்பாய முயலும் சீனா
நிதிச்சேவைகள் (Financial Services) என்பது நிதித்துறையில் செயற்படும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், பங்குச் சந்தை, வீடு விற்பனை முகவரகங்கள் போன்றவை வழங்கும் சேவைகளாகும். நிதிச் சேவைகள் துறைக்கு தேவையான மென்பொருள்களையும் வன்பொருள்களையும் வழங்குவது நிதித்தொழில்நுட்பம் (FinTech) என அழைக்கப்படுகின்றது. இத்துறையில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், லித்துவேனியா, சுவிற்ச்சலாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரேலியா, கனடா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் முதற்தரப் பத்து நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் சீனா அப்பட்டியலில் 21-ம் இடத்தில் இருக்கின்றது. 21-ம் இடத்தில் இருந்தாலும் சீனா கடந்த சில ஆண்டுகளாக நிதித்தொழில்நுட்பத் துறையில் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. சீனப் பொருளாதாரத்தில் செய்யப்படும் கொடுப்பனவுகளில் 66விழுக்காடு கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படுகின்றன. சீனாவின் 1408மில்லியன் மக்களில் 780மில்லியன் மக்கள் கைப்பேசிச் செயலிகளூடாக தமது கொடுப்பனவுகளைச் செய்கின்றனர். சீனாவில் கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படும் கொடுப்பனவுகலின் பெறுமதி 52 ரில்லியன் டொலர்களாக இருக்கையில் அமெரிக்காவில் அது 98 மில்லியன்கள் மட்டுமே.
அகன்ற அலைவரிசையில் அதிகம் பாய்ந்த சீனா
தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் அகன்ற அலைவரிசையின் 4ஜீ (நான்காம் தலைமுறை) எனப்படுவது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது. 5ஜீ தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹூவாவே நிறுவனம் உலகின் முன்னோடியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் அது தம் நாடுகளில் உளவு பார்க்கின்றது எனக் குற்றம் சாட்டி ஹூவாவே நிறுவனம் தம் நாடுகளில் செயற்படுவதைத் தடை செய்துள்ளன.
நாணயத்தை எண்மிய மயப்படுத்தும் சீனா
வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் அதிக அளவு நிதிக்கொடுப்பனவுகள் இணையவெளியூடாக நடைபெறுவதால் சீனா தனது தேசிய நாணயமான யூவானை எண்மிய மயப்படுத்தியுள்ளது. அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் தமது நாணயங்களை எண்மியப்படுத்தும் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கையில் சீனா அதை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்க டொலரின் இடத்தை சீனாவின் யுவான் நாணயம் பிடிக்க வேண்டும் என்ற சீனக் கனவை நிறைவேற்றும் முதற்படியாக சீனாவின் எண்மிய நாணயம் அமையும் என சீன ஆட்சியாளர்கள் நம்புகின்றார்கள். சீனாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும், முக்கியமாக ஈரான், இரசியா போன்ற நாடுகள் தமது நாணயத்தை எண்மியப் படுத்தினால் அவை தமக்கிடையேயான கொடுப்பனவுகளை டொலர் மூலம் செய்வதை விட்டு எண்மிய நாணயங்களால் செய்ய முடியும்.
செயற்கை விவேகம்
சீனா தனது நாட்டில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தியதில் அதன் செயற்கை விவேகம் பெரும் பங்காற்றியது. முகமினங்காணல் தொழில்நுட்பத்தின் மூலம் சீனா நாட்டில் குற்றச் செயல்களையும் தீவிரவாதத்தையும் குறைக்க முயல்கின்றது. சீனாவில் 2.6மில்லியன் கண்காணிப்புக் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கையாகும். உலகிலேயே அதிக அளவு மக்களைக் கொண்ட சீனாவில் அரசும் தனியார் துறையினரும் மிக அதிக அளவு தரவுகளைக் கையாளவேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இது செயற்கை விவேகம் மூலம் தரவுகளைக் கையாள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் செயற்கை விவேக மேம்பாட்டிற்கு சீனாவில் அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவதால் சீனாவில் செயற்கை விவேகம் வேகமாக முன்னேறி வருகின்றது.
எண்மியத் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் எண்மிய குற்றச் செயல்களும் வளர்ந்து வருகின்றது. இதில் எல்லா நாடுகளும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே எண்மியத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மக்களுக்கு பயனுடையதாக அமையும்.
No comments:
Post a Comment