அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் வைத்திருந்த “படைத்தளத்திற்கு” மாற்றீடாக இலங்கை திருகோணமலயில் இடம் தேடுகின்றது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா தனது கேந்திரோபாய நோக்கங்களுக்காகவும் தனது உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் உலகெங்கும் படைத்தளங்களை தனது நட்பு நாடுகளிலும் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிலும் வைத்திருக்கின்றது. அதே காரணங்களுக்காக உலகில் பல போர் முனைகளையும் தொடர்ச்சியாக திறந்து கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் இருபது ஆண்டுகள் நிலை கொண்டமைக்கு காரணம்:
1. அங்குள்ள தனக்கு ஆபத்தான தீவிரவாத அமைப்புக்களை ஒழிப்பது
2. அங்கு தனது படையினருக்கு ஒரு போர்ப்பயிற்ச்சிக் களத்தை உருவாக்குவது.
3. அங்குள்ள கனிம வளங்களைச் சுரண்டுவது
ஆக ஆப்கானிஸ்த்தான் அமெரிக்காவிற்கு ஒரு போர்க்களமாகவும் போர்ப்பயிற்ச்சிக் களமாகவும் பொருளாதார நலன்களுக்காகவும் பாவிக்கப் பட்டது. இருபது ஆண்டுகளில் சுழற்ச்சி முறையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினருக்கு நேரடிப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிக கடினமான பூகோள அமைப்பைக் கொண்ட நிலப்பரப்பில் பயிற்ச்சி பெற்றுள்ளனர் அமெரிக்கப் படையினர்.
ஆப்கானிஸ்த்தான் பேரரசுகளின் புதைகுழி என ஒரு புறம் அழைக்கப்பட்டாலும் மறுபுறம் அது வளங்களின் தொட்டில் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒன்று முதல் மூன்றுவரையிலான ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் அங்கு உள்ளன. ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள கனிம வளங்களை வரியின்றி தடையின்றி அகழ்ந்து எடுத்துக் கொண்டன.
ஒரு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளம் அமைத்து ஒரு எதிரி நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முயலும் போது படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நாட்டில் படைத்தளம் அமைக்கும் நாட்டிற்கு கடும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. அமெரிக்கா பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அமைத்தது போல் ஆப்கானிஸ்த்தானில் அமைக்க முடியாது. அமைக்கவும் கூடாது.
இலங்கை திருகோணமலையில் பல ஏக்கர் நிலம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதை சிங்களத்து அரிச்சந்திரன் கெஹலிய ரம்புக்வெல மறுத்தும் உள்ளார். இலங்கையில் 1980களில் அமெரிக்காவிற்கு திருக்கோணமலையில் ஒரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையமும் சிலாபத்தில் நீர்மூழ்கிகளுக்கான அதிதாழ் அலைவரிசை (Ultra-Low wave) தொடர்பாடல் நிலையமும் தேவைப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அத்தேவையை இல்லாமற் செய்துள்ளது. அமெரிக்கா நீண்ட காலம் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
1990களில் தொடர்ச்சியாக கடலில் பயணிக்கும் தம் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலையம் இலங்கியின் கிழக்கு கரையோரத்தில் தேவைப்பட்டது.
தற்போது அமெரிக்காவின் விமானம் தாங்கிகளையும் அதன் பரிவாரக் கப்பல்களையும் பாதுகாக்க அதிக அளவு ஆளில்லா விமாங்கள் தேவைப்படுகின்றன. விமானம் தாங்கி கப்பல்களில் மட்டுப்படுத்தப்பட்ட இடம் உள்ள படியால் அவை பயணிக்கும் கடற்பரப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா புதிதாக உலகெங்கும் பல ஆளில்லா போர்விமானத்தளங்களை பெற முயல்கின்றது. தற்போது அமெரிக்கா இலங்கையில் தனக்கு என ஒரு நிலப்பரப்பு வேண்டும் என்ற நிலையில் இருப்பது அதற்காக மட்டுமே. அதன் ஓர் அம்சமாக அமெரிக்கா திருக்கோணமலையில் கண் வைத்திருக்கலாம்.
திருக்கோணமலை ஆப்கானிஸ்த்தானிற்கான மாற்றீடு அல்ல.
No comments:
Post a Comment