Tuesday 17 August 2021

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள்

  


2021 ஓகஸ்ட் 8-ம் திகதி அமெரிக்கா தனது யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டதை நிறைவு செய்தது. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலும் தனது வெள்ளோட்டத்தை ஓகஸ்ட் 4-ம் திகதி ஆரம்பித்தது. விமானம் தாங்கிக் கப்பல்களை முதலில் கடலில் இறக்கி பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படும். கடலில் பயணிக்கும் விதம் குண்டு வெடிப்பு அதிச்சியைத் தாங்கும் திறன், இயந்திரம் மற்றும் பல்வேறுகருவிகளின் செயற்பாடு போன்றவை தேர்வுக்கு உட்படுத்தப்படும். இந்தியா அமெரிக்காவிற்கும் பிரான்சையும் அடுத்து 1957-ம் ஆண்டில் இருந்தே விமானம் தாங்கிக் கப்பலைப் பயன் படுத்துகின்றது.

விமானம் தாங்கிக் கப்பல்களின் வகைகள்

ஒரு விமானம் தாங்கிக் கப்பலின் திறன் அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையிலும் திறனிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தனை விமானங்கள் அதிலிருந்து பறந்து செல்லும் போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: 1. மீகை- விமானம் தாங்கிக் கப்பல்கள் (Super-carriers) இவை 100,000 தொன் எடையுள்ளவை. 90 விமானங்களைக் கொண்டவை. 2. நடுத்தர விமானம் தாங்கிக் கப்பல்கள். இவை 40,000 தொன் எடையுடவை. 40 விமானங்களைக் கொண்டவை. 3. தாழ்ந்த தரமான விமானம் தாங்கிக் கப்பல்கள் இவை விமானம் தாங்கிக் கப்பல் உற்பத்தியிலும் கடற்போரிலும் அனுபவமில்லாத நாடுகள் வைத்திருக்கும் கப்பல்கள். இரசியா கடற்போர் அனுபவம் குறைந்த நாடு. சீனா கடற்போர் அனுபவமில்லாத நாடு.

நாசகாரிகள் சூழ வலம்வர.....

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ்நீர் மேற்பரப்புவான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

செலவு மிக்க வி/தா கப்பல்கள்

1988இல் இரசியா 70விமானங்கள் தாங்கிச் செல்லக்கூடிய 85,000 தொன் எடையுள்ள அணுவலுவில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை கட்ட முடி செய்திருந்தது. ஆனால் அதைப் பின்னர் கைவிட்டது. அதில் இரசியா சந்திக்கவிருக்கும் நிதிப் பிரச்சனை தொழில்நுட்பப் பிரச்சனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டது. சீனாவிடம் லியோனிங் என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அது மேலும் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் ஐ.எஸ்.எஸ் விக்ராந்த 23,000 கோடி ரூபாக்களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலிற்கான மொத்தச் செலவு $12.8பில்லியன்.

அரசுறவில் பெரும் பங்கு வகிக்கும் விமானம் தாங்கிகள்

அமெரிக்கா 11 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில்இரசியாபிரான்ஸ்ஸ்பெயின்தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர்: ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 100,000 தொன் அரசுறவுக்கு ஈடானது. (An aircraft carrier is 100,000 of diplomacy)

இரண்டும் தேறின

2021 ஓகஸ்ட் மாதம் உள்ள கணக்கின்படி உலகில் 41 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அதில் 11 அமெரிக்காவிற்கு சொந்தமானது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்கும் பாரிய அளவிலானவை. ஒவ்வொன்றும் 80விமானங்களைக் காவிச்செல்ல வல்லவை. அமெரிக்காவின் USS GERALD FORD கப்பலுக்கு அருகில் மூன்று தடவை குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது வெடிப்பு 3.9ரிக்டர் அளவுகோல் பூமி அதிச்சிக்கு ஈடானது. Kochin Shipyard Ltd என்னும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்தியாவின் விக்ராந்தை உற்பத்தி செய்துள்ளது. அதற்கான கடற் கடற்தேர்வுகளில் அது தேறியுள்ளதாக இந்தியக் கடற்படை அறிவித்தது. விக்ராந்த் வெடிப்புக்கு உள்ளாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதா எனத் தகவல் இல்லை.



மலையும் மடுவும்

262மீட்டர் நீளம் 62மீட்டர் அகலம். 14அடுக்குகள், 2300 அறைகள் கொண்டது விக்கிரந்த். அதில் 1700பேர் செயற்படுவர். விக்ராந்தின் மிதப்பு வேகம் 18கடல் மைல்கள். அதி உயர் வேகம் 28கடல் மைல்கள்.அமெரிக்க ஃபோர்ட் வகை விதா கப்பல்களில் 25 அடுக்குகள், வேகம் 30கடல் மைல்கள். அது 4539ஆளணிகளையும் 2700 அறைகளையும் கொண்து. ஃபோர்ட் கப்பல்கள் குறைந்த அளவு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு பல தானியங்கி முறைமைகளைக் கொண்டுள்ளது.

விமானங்கள் கப்பலில் இருந்து பல்வேறு வழியில் கிளம்பிச்செல்லும்:

1. catapult-based launch system (CATOBAR)- பாரம் குறைந்த விமானங்கள்

2. Short Take-Off, Barrier Assisted Recovery (STOBAR)

3. Short Take-Off and Landing (STOL)

4. Vertical take-off and short landing (VSTOL)

விக்கிராந்த்தில் STOBAR முறைமை உண்டு. ஃபோர்ட்டில் VSTOL முறைமை செயற்படுகின்றது. அத்துடன் மின்காந்த உந்து முறைமையும் பாவிக்கப்படுகின்றது. விக்கிராந்தில் மிக்-29கே அல்லது தேஜஸ் போன்ற நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் பயன்படுத்தப்படலாம். ஃபோர்ட்டில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஈடுபடுத்தப்படும். நான்காம் தலைமுறைப் போர்விமானத்திற்கும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் பழைய விரல்விட்டு சுழற்றும் தொலைப்பேசிக்கும் தற்போது உள்ள ஐ-போனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றது. விக்ராந்த் டீசல் மூலம் தன் வலுவைப் பெறுகின்றது. ஃபோர்ட் அணுவலுவால் இயக்கப்படுகின்றது. விக்ராந்த தொடர்ச்சியாக 6000மைல்கள் பயணிக்கும். ஃபோர்ட் பயணிக்கும் தூரத்திற்கு வரையறை இல்லை அது இருபது ஆண்டுகள் கடலில் பயணிக்கலாம்.

இந்தியாவிற்கு விக்ராந்த்அவசியம் தேவை

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியாஜப்பான்வியட்னாம்பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம்மியன்மார்இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பலாக விகிரமாதித்தியா வரவுள்ளது. அமெரிக்கா ஃபோர்ட் போன்று மேலும் பத்து கப்பல்களை உருவாக்கவுள்ளது. இந்தியாவின் நீண்ட கடலோரத்தைப் பாதுகாக்க ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் அவசியம் என படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 

அமெரிக்காவின் ஃபோர்ட் வகை வி/தா கப்பல்களிற்கு முந்திய தலைமுறைக் கப்பல்களான நிமிட்ஸ் வகைக் கப்பல்களை அழிக்க்க் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை சீனா உருவாக்கியது. அவற்றைத் தடுக்க அமெரிக்கா தனது வி/தா கப்பல்களை பாதுகாக்கும் ஆழி பேர்க் வகை நாசகாரக் கப்பல்களில் சிறந்த ரடார்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் இணைத்துள்ளது. அதனால் சீனா பாரிய எண்ணிக்கையில் குளவித் தாக்குதல் பாணியில் அமெரிக்க வி/தா கப்பல்களில் மீது தாக்குதல் செய்யும் திட்டத்துடன் உள்ளது. அதை முறியடிக்க அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவிக்கவுள்ளது. ஆனால் பாவம் இந்தியாவின் விக்ராந்த் சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு நின்று பிடிக்குமா?

காளி அம்மாள் காப்பாற்றுவாளா?

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...