சீனா, இந்தியா, மியன்மார், பங்களாதேசம், நேப்பாளம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்ட நீர்க்கோபுரம் எனப்படும் திபெத்தை 1950இல் இருந்து சீனா கைப்பற்றி வைத்திருக்கின்றது. அன்றிலிருந்து சீனா திபெத்தில் பெரும் அபிவிருத்தித் திட்டம் என்னும் போர்வையில் சீனர்களை திபெத்தில் குடியேற்றி திபெத்தியர்களை முடக்குகின்றது. திபெத்தியர்களுக்கும் அவர்களின் ஞானப்பெரும் தந்தையான தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகளையும் தொடர்ந்து துண்டித்து வருகின்றது. தற்போது உள்ள தலாய் லாமாவிற்கு அடுத்து வரும் 15வது தலாய் லாமாவை தாமே தெரிவு செய்வோம் என சீனா அடம் பிடிக்கின்றது. அடுத்த தலாய் லாமா தெரிவில் இந்தியா தலையிடக் கூடாது என இந்தியாவையும் சீனா எச்சரித்துள்ளது. சீனாவிற்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேரும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் திபெத்தியர்கள் பகடைக்காய்களாக்கப்படலாம்.
திபெத்தின் வரலாறு
13-ம் நூற்றாண்டில் சீனாவைக் கைப்பற்றிய மங்கோலியர் தீபெத்தையும் கைப்பற்றினர். சீனாவின் மிங் பேரரசு 14-ம் நூற்றாண்டில் மங்கோலியரை விரட்டியடித்த போது தீபெத்தை தனியாக விட்டனர். 18-ம் நூற்றாண்டில் சீனாவின் கிங் பேரரசின் பிடியின் கீழ் திபேத் கொண்டு வரப்பட்டது. 1911இல் திபெத் சுதந்திர நாடாகியது. 1914-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் கஷ்மீர் நகர் சிம்லாவில் “சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டில்” கையொப்பமிட்டன. அதில் திபெத்தை உள்-திபெத், வெளி-திபெத் என இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டு உள்-திபெத் சீனாவின் ஆட்சியின் கீழும் வெளி-திபெத் ஒரு தனிநாடாகவும் அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சீனாவிற்கும் பிரித்தானியா ஆண்ட இந்தியாவிற்கும் இடையிலான எல்லை என்னும் மக்மான் கோடு வரையப்பட்டது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1950-ம் ஆண்டு சீனா வெளி-திபெத்தையும் ஆக்கிரமித்து தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் 1914இல் கொண்ட சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டையும் இரத்துச் செய்ததுடன் மக்மான் கோட்டையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக முடிவு செய்தது. திபெத்தை சீனா கைப்பறியமையால் ஆசியாவின் பல நாடுகளிற்கு நீர் வழங்குகின்ற இமயமலையின் முக்கிய பகுதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திபெத் இமயமலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த பீடபூமியாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கவசப் பிரதேசமாக இருந்த திபெத் சீனா வசமானது. திபெத்தை சீனா ஆக்கிரமிக்க முன்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லை என ஒன்று இருந்தில்லை. தற்போதைய பாக்கிஸ்த்தான், இந்தியா பங்களாதேசம், மியன்மார் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிரித்தானியப் பேரரசால் நேப்பாளத்தையும் திபெத்தையும் கைப்பற்ற முடியவில்லை. திபெத்தை சீனர்கள் தம் மண்டரின் மொழியில் சிஜாங் என அழைக்கின்றனர். சிஜாங் என்றால் மேற்குச்செல்வ வீடு எனப் பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய-இந்தியப் படையின் தளபதியாக இருந்த ஃபிரான்சிஸ் தக்கர் என்பவர் இரசியாவிலும் பார்க்க சீனா ஆபத்தானது என்றும் சீனாவிடமிருந்து திபெத் பாதுகாகப்பட வேண்டியது என்றும் தெரிவித்திருந்தார்.
திபெத்தில் சீனா நிறைவேற்றும் திட்டங்கள்
1999-ம் ஆண்டில் இருந்து திபெத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அந்த அபிவிருத்தி திட்டங்களுடன் ஹன் சீனர்கள் அங்கு குடியேற்றியும் வருகின்றது. அதற்காக திபெத்தில் வறுமை ஒழிப்பையும் மேற்கொண்டது. 2006-ம் ஆண்டு திபெத்திற்கான தொடரிப்பாதை உருவாக்கப்பட்டு அங்கு சீனாவின் மற்றப் பாகங்களில் இருந்து பயணிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. 2010இல் உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்த விமான நிலையம் திபெத்தில் 13மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டது. சீனாவின் மிகப்பெரிய செப்பு இருப்பு திபெத்தில் உள்ளது. மேலும் இரும்பு, துத்தநாகம், ஈயம், கட்மியம், யூரேனியம் போன்ற கனிம வளங்கள் திபெத்தில் உள்ளன. அவற்றின் பெறுமதி ஒரு ரில்லியன் டொலர்களிலும் அதிகமானது.
நாடு கடந்த திபெத்திய அரசு
1959-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது அங்கிருந்து தப்பியோடிய தலாய் லாமாவிற்கு ஜவகர் லால் நேருவின் அரசு அடைக்கலம் கொடுத்து இந்தியாவில் நாடு கடந்த திபெத்திய அரசையும் அமைக்க அனுமதித்தார். ஆனால் 1954-ம் ஆண்டு செய்த இந்திய சீன ஒப்பந்தத்தில் திபெத்தை “சீனப் பிராந்தியமான திபெத்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஒரு இலட்சம் திபெத்தியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அவர்களின் அரசியற் செயற்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் திபெத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல திபெத்தை ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக்கூட அறிவிக்கவுமில்லை. 2020-ம் ஆண்டு அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் திபெத்திற்கான கொள்கை மற்றும் உதவிக்கான சட்டம் (Tibetan Policy and Support Act) என ஒன்று நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் அமெரிக்கா திபெத்தில் ஒரு துணைத்தூதுவரகத்தை அமைக்க வழிவகுப்பதுடன் திபெத் தொடர்பாக தவறிழைக்கும் சீனர்களுக்கு எதிராக பொருளாதரத் தடைகளையும் அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கான தடையையும் விதிக்க முடியும். ஆனால் இவை திபெத்தின் விடுதலைக்கு வழிவகுக்க மாட்டாது.
இந்தியாவின் தடுமாற்றம் மிகுந்த வெளியுறவுக் கொள்கை
1965-ம் ஆண்டு அப்போது இந்திய தலைமை அமைச்சராகவிருந்த லால் பகதூர் சாஸ்த்திரி திபெத்தின் நாடுகடந்த அரசிடம் தான் அவர்களின் அரசை அங்கீகரிப்பேன் என உறுதியளித்தார். ஆனால் அதைச் செய்யமுன்னர் அவர் இறந்துவிட்டார். 2014-ம் ஆண்டு மோடி தனது தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு வெளிநாடுகளில் இயங்கும் திபெத்திய அரசின் தலைமை அமைச்சரை அழைத்தது. ஆனால் தனது 2019 தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு அப்படி யாரையும் அழைக்கவில்லை. 2019இல் சீனப்படையினருடன் மோதிய போது கொல்லப்பட்ட திபெத் போராளியின் இறுதிச் சடங்கில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். பின்னர் டுவிட்டரில் அது தொடர்பான தனது பதிவை நீக்கியிருந்தார். 2021இல் மோடி தலாய் லாமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் திபெத்தியர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்தியாவிடம் திபெத் போராளிகள்
2020 செப்டம்பர் 1-ம் திகதி லடாக் பிரதேசத்தில் உள்ள பங்கொங் சோ என்ற இடத்தில் சீனா எல்லை தாண்டி அமைத்திருந்த ஒரு படை நிலை மீது திபெத்தியப் போராளிகள் தாக்குதல் நடத்தி அந்த படைநிலையையும் அங்கிருந்த படைக்கலன்களையும் கைபற்றினர். இந்தத் தாக்குதலில் நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற திபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் திபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. 1950களில் இருந்தே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உளவுத்துறைகள் இணைந்து திபெத்தியப் போராளிகளுக்கு பயிற்ச்சியளித்து வருகின்றனர். சிறப்பு எல்லைப் படை என்னும் பெயரில் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இப்படையணியில் ஐயாயிரம் முதல் பன்னீராயிரம் போராளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிடமிருந்து திபெத்தை மீட்க பன்னீராயிரம் படையினர் போதாது.
திபெத்தை மாற்றியமைக்கும் சீனா
கடந்த பத்து ஆண்டுகளாக சீனா திபெத்தில் பல உட்கட்டுமானங்களைச் செய்யும் அபிவிருத்தி என்ற போர்வையில் பல சீனர்களை அங்கு குடியேற்றி அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்றி வருகின்றது. இதனால் அங்கு ஒரு தனிநாட்டுக்கான போர் செய்வது கடினமாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவின் முகமறி தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மூலமும் பல்வேறுவகையான உளவாடல்களினாலும் திபெத்தியர்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையிலான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டன. திபெத்தில் இருந்து 2மில்லியன் திபெத்தியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் வெள்ளையறிக்கை
சீனாவின் எழுச்சியை முடக்குவதற்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்குள் திபெத்தின் பிரிவினைவாதத்தை தூண்வதும் உள்ளடக்கப் பட்டிருக்கும் என சீனா கருத இடமுண்டு. அதனால் 2021 மே மாதம் சீனா திபெத் தொடர்பான தனது வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வெள்ளையறிக்கையில் கூறப்பட்டவை:
1. திபெத் மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,
2. 15வது தலாய் லாமாவை சினாவே தெரிவு செய்யும்,
3. திபெத்திய பௌத்த சமூகம் சமூகவுடமையை(Socialisam) கடைப்பிடிக்க வழிகாட்டப்படும்,
4. திபெத் மீதான சீனக் கட்டுப்பாடு மேலும் இறுக்கப்படும்,
2013-ம் ஆண்டு சீன தேசிய மக்கள் பேரவையில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவை சிறப்பாக ஆள்வதற்கு எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படவேண்டும்; எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படுவதற்கு திபெத்தில் உறுதிப்பாடு நிலவ வேண்டும் என்றார். அந்த அளவிற்கு திபெத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கின்றது. சீனாவின் பல பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது அப்படியிருக்கையில் மிகச் சிறந்த நீர் மூலமான திபெத்தை சீனா இலகுவில் விட்டுக் கொடுக்காது.
No comments:
Post a Comment