தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி
மசகு எண்ணெய் விலை மந்தமடையும்
படைத்துறை மேலும் தீவிர வளர்ச்சியடையும்
குறைந்த வட்டியும் பங்குச் சந்தை வளர்ச்சியும்
இலங்கை உதவி கேட்டு கையேந்தும்
இந்தியப் பொருளாதாரம் தடுமாறும்
இந்தியா மீதான சீனத் சீண்டல் தொடரும்
அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும்
தொழில்நுட்பம் என்றுமில்லாத அளவு துரித வளர்ச்சி
கொவிட்-19ஐ கையாளும் தொழில்நுட்பம். முகமூடிக்குள்ளே microphone, Bluetooth ஆகியை இருக்கும். புற-ஊதாக் கதிர்கள் மூலம் கைப்பேசிகளில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்படும்.
தகவல் இருப்பிடல், தகவல் பரிமாற்ற வேகம் பாரிய வளர்ச்சியைக் காணும்.
தொடர்பாடல் மேலும் இலகுவாகவும் மேலும் அதிகமாகவும் நடக்கும்
இணையவெளியில் நாடுகளிடையேயான ஊடுருவல், திருட்டு, தாக்குதல் போன்றவை தீவிரமடையும்.
செயற்கை நுண்ணறிவு பெரும் வளர்ச்சியைக் காணும்.
கணினிகள் தாமாகவே தமது அறிவை வளர்த்துக் கொள்வது (Machine Learning) மிகத்துரிதமாக வளரும்.
போக்குவரத்தில் தானியங்கிகள் மயமாகும்: Self-driving vehicles, self-navigating ships.
மனித எந்திரங்களின் பாவனை அதிகரிக்கும். தபால் மற்றும் பொதிகளை இயந்திர மனிதர்கள் விநியோகம் செய்வார்கள்.
முகில் (Cloud) தரவு இருப்பிடல் Data storage அதிகரிக்கும்.
ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை அமெரிக்கா பாவனைக்கு விடும்
5ஜீ பாவனை அதிகரிக்கும் ஆனால் பரவலான பாவனைக்கு வரமாட்டாது.
நீட்டித்த மெய்மம் Extended Reality (ER): தொலைவிடங்களை பக்கத்தில் கொண்டுவரும். மணமகனும் மணமகனும் வேறு நாடுகளில் இருந்து கொண்டு திருமணம் செய்வர். (சாந்தி முகூர்த்தம்……. இப்போதைக்கு வாய்ப்பில்லை) இணையவெளிக் காதல், மேலும் இலகுவாகும். ஆடைகளை Online shopping செய்யும் போது ஆடைகளை விற்பனை செய்பவர் உங்கள் மெய்நிகர் உருவத்திற்கு ஆடையை அணிவித்து அளவு சரி பார்த்துக் கொள்வார்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதிகள் தொழில்நுட்பங்கள் வளரும்.
நுண்மிய நாணயங்கள் மூலமான கொடுப்பனவுகள் அதிகரிக்கும். பிட்கொயின் போன்ற நுண்மிய நாணயங்களின் பெறுமதி வளர்ச்சி 2021இல் முடிவுக்கு வரும். பல அரசுகள் நுண்மிய நாணயங்களை அறிமுகம் செய்யும்.வ்
தகவற் செல்வம்
தகவல் என்பது பெரும் செல்வமாகும். உலகெங்கும் பெரு நிறுவனங்கள் தகவல் திரட்டலில் அதிக அக்கறை காட்டும். இதில் பெரு முதலீடு செய்யப்படும். பேஸ்புக், கூகிள் போன்ற பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அமெரிக்க அரசும் மேற்கு ஐரோப்பிய அரசும் தணிக்க முயற்ச்சி செய்யும். சீனாவும் தனது நாட்டில் தனியார் துறை நிறுவனங்களின் பெரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சி தடுப்பூசியின் வெற்றியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்கனவே உள்ள நச்சுக்கிருமி புதிய வடிவம் பெறலாம். புதிய நச்சுக்கிருமிகள் வராமல் இருக்க வேண்டும். இன்னும் மனிதர்களை தாக்கக் கூடிய 827,000 வகையான நச்சுக்கிருமிகள் விலங்குகளில் இருக்கின்றன. அவற்றை எந்த நாட்டிலாவது உணவாக உட் கொண்டால் மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாகலாம். பலநாடுகளிலும் வட்டி விழுக்காடு குறைவாகவே இருக்கும். பங்குச் சந்தை சுட்டிகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிக விலை அதிகரிப்பை எட்டும். இலங்கை வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில் உள்ள சிக்கல் அதிகரிக்க. அது பல நாடுகளிடமும் நிதி உதவி கேட்டு கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் சிறிய அளவில் நிதி உதவியை வழங்கலாம்.
பெரும்பாலான நடுவண் வங்கிகள் பணத்தை அச்சிடும். அதை அளவுசார் தளர்ச்சி (Quantitative Easing) என்னும் கௌரவப் பெயரால் அழைப்பர்.
எரிபொருள் விலை இரண்டு முதல் மூன்று விழுக்காடு அதிகரிக்கும். 2021 ஜனவரி முதல் வாரத்தில் நடந்த ஒபெக்+ நாடுகளின் கூட்டத்தில் சவுதி அரேபியாவும் இரசியாவும் முரண் பட்டுக் கொண்டன. கொவிட்-19இற்கான தடுப்பூசி பாவனைக்கு வந்தவுடன் மசகு எண்ணெய் விலை $50இற்கு மேல் அதிகரித்தது.
உல்லாசப் பயணத்துறை, வான் பயணத்துறை போன்றவை 2021இன் பிற்பகுதியில் வளர்ச்சியடையும்.
இந்தியாவின் வங்கிகளின் வாராக்கடன் (அறவிட முடியாத கடன்) பிரச்சனை அதிகரிக்கும். இதனால் மேலும் சில வங்கிகள் மூடப் படுதல் அல்லது நடுவண் வங்கியால் பொறுப்பேற்க்கப்படும். புதிதாக வேலை தேடிவரும் இளையோரைச் சமாளிக்க இந்தியா எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் 2021இல் 2விழுக்காட்டிலும் குறைவாகவே பொருளாதாரம் வளரும். இது உள்நாட்டு குழப்பங்களைத் தோற்றுவிக்கும். இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்ட முயல்வதில் தோல்வியடையும்.
படைத்துறை
பெரிய ஏவுகணைகளில் தற்போது உள்ள துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்கள் கைத்துப்பாக்கிகளில் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா சந்திரனில் அணுவலு உற்பத்திநிலையத்தை அமைக்கவிருக்கின்றது. சீனா படைவலுவைப் பெருக்கும். சீனா படைத்துறைக்கு தேவையான தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பெறுவதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும். இந்தியா சீனாவின் நெருக்குவாரங்களால் அமெரிக்காவுடன் அதிக படைத்துறை ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.
குவாட்
ஒஸ்ரேலியா இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிடையேயான குவாட் எனப்படும் நான்கு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் (முக்கியமாக சுதந்திர கடற்போக்குவரத்து) தென் கொரியா, வியட்னாம் ஆகியவற்றுடன் மேலுல் ஒரு சில நாடுகள் இணைண்டு கொள்ளும். ஆனால் நேட்டோ போன்ற ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட மாட்டாது. அந்த ஒப்பந்தம் செய்யப் பட்டால் ஆசியப் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் பொறுப்பும் செலவும் அதிகரிக்கும். ஆனால் சீனாவை மனதில் கொண்டு பல போர் ஒத்திகைகள் நடக்கும்.
மேற்காசியா
வளைகுடா நாட்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆனால் அவற்றிற்கு துருக்கியுடன் விரோதம் வளரும். இஸ்ரேலுடம் அரபு நாடுகள் அரசுறவை மேலும் வளர்க்கும். அதனால் பலஸ்த்தீன விடுதலை என்பது தொலை தூரக் கனவாகும். ஈரான் மீது நெருக்குதல் அதிகரிக்கும். ஈரானில் தீவிரப் போக்குடையவர்களினதும் அல்லது படைத்துறையைச் சேர்ந்தவர்களினதும் ஆதிக்கம் அதிகரிக்கும். யேமனில் பிரச்சனைகள் தீராது. எதியோப்பியாவில் பிராந்திய மோதல் மோசமாகும். ஈரான் – அமெரிக்க சமரச முயற்ச்சி தோல்வியில் முடிவடையும். லிபியாவில் அமைதி தோன்றி மறையும்.
ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களின் கை ஓங்கும். தலிபான் ஐ எஸ் மோதல் அதிகரிக்கும். வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா முயற்ச்சிக்கலாம்.
தைவான் தனது படை வலுவைப் பெருக்குவதுடன் அமெரிக்கப் படைகளை தன் மண்ணில் நிலை கொள்ளும் படி வேண்டும்.
இரசியா
அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வளர முடியாத நிலை ஏற்படும். டொனால்ட் டிரம்ப் மூட்டிய தீயை எளிதில் அணைக்க முடியாது. அதானால் இரசியாவின் உலக ஆதிக்கம் மேலும் வளரும். இரசியா தனக்கு என ஓர் இடத்தை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொள்ளும். இரசிய சார்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சீனா தனது பொருளாதார வலிமையைப் பாவிக்கும்
சீனா தனது பொருளாதார வலிமையை அரசுறவியலுக்கு அதிகம் பாவிக்கும். நலிவடைந்திருக்கும் பொருளாதாரஙக்ளைக் கொண்ட பல நாடுகள் சீனாவிற்கான ஏற்றுமதி, சீனாவின் முதலீடு, சீனாவின் கடன் போன்றவற்றை எதிர் பார்த்து நிற்கின்றன. ஏற்கனவே சீனா தனது பொருளாதாரத்தடையை கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே போன்ற நாடுகள் மீது வெவ்வேறுவகைகளில் விதித்துள்ளது. சீனாவிடம் கடன் வாங்கிய கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்கின்றது.
தனிமைப்படும் அமெரிக்கா
ஆசிய நாடுகளின் ரிசெப் என்னும் பொருளாதார ஒப்பந்தமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தமும் ஏற்கனவே அமெரிக்காவை தனிமைப் படுத்திவிட்டன. மீண்டும் 2024இல் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அல்லது அவரைப் போன்ற ஒருவர் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை பல நாடுகளும் கருத்தில் கொள்ளும். அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்ய பல நாடுகளும் தயக்கம் காட்ட முனையும் என்பதால் அமெரிக்கா உலக அரங்கில் தனிமைப்படுத்தப் படும் செய்முறை 2021இல் ஆரம்பமாகும்.
2021இல் பல நாடுகள் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும். அதற்கு அலையும் நாடாக பிரித்தானியா இருக்கும்.
No comments:
Post a Comment