சீனா மீது சினம் கொள்ள வைத்த ஆண்டு
சோதிடர்களை சோதித்த ஆண்டு
System சரியில்லை என நிரூபித்த ஆண்டு
அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு
பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு
ZOOM ஆண்டு
மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு
இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு
சீனா மீது சினம் ஏற்படுத்திய ஆண்டு
2020-ம் ஆண்டை திரும்பிப் பார்க்கையில் தெரிவதெல்லாம் கொரொனா நச்சுக்கிருமியும் அதனால் பரப்பப்பட்ட கொவிட்-19 தொற்று நோயும்தான். சீனாவில் இருந்து அந்த தொற்று நோய்க் கிருமிகள் பரவியதாக பலரும் நம்பியதால் சீனா மீது உலகெங்கும் வாழ் மக்களில் பலர் சினம் கொண்டுள்ளனர். நோய் உருவாகியதாகக் கருதப்படும் வுஹான் நகரில் இருந்து மற்ற சீனப் பிரதேசஙக்ளுக்கு பயணிப்பதை கடுமையான தடுத்த சீனா வுஹானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானங்கள் செல்வதைத் தடுக்கவில்லை. அதனால் சீனா அதிக முதலீடு செய்துள்ல இத்தாலிக்கும் வுஹானில் இருந்து அதிக விமானப் பறப்புக்கள் செய்யப்படும் நியூயோர்க் நகருக்கும் தொற்று நோய் பெருமளவில் பரவியது. புதிய வகைக் கிருமி ஒன்று பரவுகின்றது என எச்சரித்த சீன மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொவிட்-19 ஆல் கொல்லப்பட்டார். இதெல்லாம் சீனாவில் சாதாரணமப்பா என்பது போல் சீனா நடந்து கொண்டது.
சோதிடர்களை சோதித்த ஆண்டு
2020-ம் ஆண்டு அமோகமாக இருக்கப் போகின்றது, பிரம்மாண்டமாக இருக்கப் போகின்றது, சுபீட்சமாக இருக்கப் போகின்றது, இது ஒரு ஒளிமயமான ஆண்டு, மன்னர்களும் மக்களும் நேர்மையாக இருக்கப் போகின்ற ஆண்டு, பஞ்சம் என்பதே இருக்காது, ஐந்து கிரகங்கள் சாதகமாகவும் குரு ஆட்சி பெற்றும் இருக்கையில் பிறங்கும் அற்புதமான ஆண்டு என சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் 2020 உலகையே கலங்கடித்த ஆண்டு. மக்களின் செயற்பாடுகளை மாற்றியமைத்த ஆண்டு.
System சரியில்லை என நிரூபித்த ஆண்டு
கொவிட்-19 நோய் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளின் மருத்துவத் துறையும் சுகாதாரத்துறையும் சரிவர செயற்படவில்லை. தைவான் அரசு ஒரு கொடிய தொற்று நோய் வந்தால் எப்படிச் எதிர் கொள்வது என்ற தயாரிப்பு வேலைகளை முன் கூட்டியே செய்து வைத்து வருமுன் தன் மக்களைக் காப்பாற்றியது. வியட்னாம் நோய் வந்தவுடன் துரிதமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஒருவர் கூட நோயால் இறக்காமல் பார்த்துக் கொண்டது. இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நோயை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தயார் நிலையில் இருக்கவும் இல்லை வந்தவுடன் துரித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது ஒரு சாதாரண நச்சுக் கிருமிக் காய்ச்சல் என்றார். மக்கள் ஒன்றுகூடுவதை தடை செய்யும் படி மருத்துவ நிபுணர்கள் சொன்ன போது பிரித்தானிய தலைமை அமைச்சர் பப்பிற்கு போய் தண்ணியடிக்காமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்றார். பொதுவாக பல நாடுகளின் ஆட்சி முறைமை மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை கொவிட்-19 நோய் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அயோக்கிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்திய ஆண்டு
இந்தியாவில் மலேரியாக் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்ற பிழையான தகவல் வெளிவிடப்பட்டது. அதை பல நாடுகளும் வாங்க முயற்ச்சித்த போது இந்தியா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்க அதிபர் இந்தியா தமக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப் படும் என மிரட்டினார். பின்னர் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த மாட்டாது என்ற உணமை அறியப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் உரிய நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. தொற்று நோயைப்பரவ விட்டமைக்காக சீனா மீது உலக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஒஸ்ரேலியா தெரிவித்த படியால் அதற்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லையில் நடந்த மோதல்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளிவிட்டனர். உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கா ஆய்வு செய்யும் உள்ள பல்கலைக்கழங்களிலும் ஆய்வு கூடகங்களிலும் உள்ள கணினிகளில் இருந்து தகவல்களை திருட பல நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்ச்சிகள் நடந்தன. யார் முதலில் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிப்பது என்பதில் கடும் போட்டி நடந்தது ஆனால் ஒத்துழைப்புகள் நடக்கவில்லை. போதிய முன்னறிவித்தல் இன்றியும் உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்காமலும் ஊரடங்கு சட்டம் அறிவித்தமையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டனர். பல நூறு மைல்களை பல இலட்சம் பேர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அதின்போது இறக்க நேரிட்டச்ச்து. தன் நாட்டு மக்களை சிறப்பாக காப்பாற்றிய சிங்கப்பூர் அரசு வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்வோரை உதாசீனம் செய்தது.
பலரது வாழ்க்கை முறைமையை மாற்றிய ஆண்டு
போக்கு வரத்துக் கட்டுப்பாடு ஒன்று கூடல் தடை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், உல்லாச விடுதிகள் போக்குவரத்துத் துறையில் பணி புரிவோர் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து பணிபுரியும் முறைமை பெருமளவில் அறிமுகப் படுத்தப் பட்டது. மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணைய வெளி மூலம் கல்வி கற்கும் ஏற்பாடு பரவலாக அறிமுகமானது. ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது
ZOOM ஆண்டு
அமெரிக்காவில் வாழும் சீனர் ஒருவர் உருவாக்கிய ZOOM என்ற செயலி உலகெங்கும் பாவிக்கப் பட்டது. காணொலி மூலமான தொடர்பாடல் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் கலவி கற்பவர்களுக்கும் பெரிதும் உதவி செய்தது. உலக முடக்கத்தின் போது ZOOM மூலமான தொடர்பாடல் உலக இயக்கத்திற்கு உதவியது.
மாநிலங்களின் உரிமையை இந்தியா பறித்த ஆண்டு
பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்ட இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை சிதைப்பதில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பகிரங்கமாக செயற்படுகின்ற ஆண்டாக 2020 அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரினாமுல் காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் அமித் ஷா பனர்ஜீயைப் பார்த்து நீ தனித்து நிற்கப் போகின்றாய் என்றார். மக்களாட்சிக்கு பல கட்சிகள் வலிமையாக இருப்பது அவசியம் ஆனால் காங்கிரசுக் கட்சி தலைமையின்றி தடுமாறுகின்றது. ராகுல் காந்தியைத் தவிர மற்ற எல்லோரும் ராகுல் தான் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்கின்றனர். காங்கிரசு கட்சியினர் ராகுல் திறன்படச் செயற்பட வேன்டும் என்கின்றனர். ஆனால் கட்சிக்கு ஒரு திறமை மிக்க தலைவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் காங்கிரசுக்கு தலைமை தாங்க கூடாது என்பது எழுதாத சட்டமாக உள்ளது.
இலங்கை கடனில் மூழ்கிய ஆண்டு
கடந்த பல பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வரவிலும் பார்க்க அதிக செலவு செய்து வந்த இலங்கை அரசுக்கு கொவிட்-19 கடைசி வைக்கோலாக அமைந்துள்ளது. இலங்கையின் கடன்படு திறனை மூன்று நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தாழ்த்தியுள்ளன. அத்துடன் இலங்கையில் வங்கிகள் ஆபத்தான சூழலில் செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நிதி உதவு தேவைப்படுகின்றது. 2020இல் இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை வெறும் கையுடன் திரும்பி அனுப்பியது இலங்கை அரசு. அவர் மிலேனியம் சவால் ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கு 480மில்லியன் டொலர் உதவியை வழங்க தயாராக இருந்தார். அதற்கு பதிலாக இலங்கையை அமெரிக்கப் படைத்துறையினர் கட்டுப்பாடின்றி பாவிக்கும் உரிமையைக் கோரியிருந்தார். சீனாவை அதிருப்திப் படுத்தும் நடவடிக்கையை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
மேற்காசிய அரசுறவியலை மாற்றிய ஆண்டு
இஸ்ரேலுடன் சில அரபு நாடுகள் அரசுறவியல் தொடர்புகளை 2020இல் ஏற்படுத்திக் கொண்டன. ஆனாலும் இஸ்ரேலில் உறுதியான ஆட்சி இல்லை. இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை இஸ்ரேல் சந்திக்க வேண்டிய சூழல். சவுதி அரேபியா அனுபவமற்ற இளவரசரின் ஆட்சியில் ஆட்டம் காண்கின்றது. ஈரான் படைத்தளபதியினையும் அணு விஞ்ஞானியையும் பாதுகாக்க முடியாமலும் அந்த இழப்பீட்டிற்கு பதிலடி கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. துடுக்குடன் செயற்படும் துருக்கியை அடக்க யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இரசியா
வரலாற்றில் மிகப்பெரிய இணைய வெளி ஊடுருவலை இரசியா அமெரிக்கா மீது செய்து மிகப்பெரிய தகவல் அபகரிப்பைச் செய்தது என்ற குற்றச் சாட்டு இரசியாமீது 2020இல் வைக்கப்பட்டது. அதற்கான அறுவடையை இரசியா 2021இல் செய்யலாம். லிபியாவில் துருக்கியும் இரசியாவும் குட்டையைக் குழப்பின. இரசியா அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் இரசியா அப்பம் பகிரும் வேலையை வெற்றிகரமாக செய்தது. அங்கு துருக்கியையும் பிரான்ஸையும் இரசியா ஓரம் கட்டியது.
அமெரிக்கா
சீனாவிற்கு எதிரான வர்த்தகப் போரையும் தொழில்நுட்பப் போரையும் 2020இல் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். அது போல் போர் என்றால் பொருளாதாரம் கிழியும். அடி வாங்கிய சீனாவிலும் பார்க்க அடித்த அமெரிக்காவிற்கு அதிக காயம். 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை வெற்றிகரமாகவும் துரிதமாகவும் உருவாக்கிய அமெரிக்கா அடுத்த தலைமுறை பெரு-விமானம் தாங்கிக்கப்பல்களையும் ஆழக்கடல்களில் பாவிக்கத் தொடங்கியது. 2020இல் சீனா தைவானைக் கைப்பற்றாமல் தடுப்பதில் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.
சீனா
பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பதை தென் சீனக் கடலில் நிரூபித்த சீனா அதே பாணியை இமய மலைச்சாரலிலும் 2020இல் செய்தது. அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் 2020இல் இரகசியமாக இமையமலைச் சாரலில் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். மேற்காசியாவில் குர்திஷ் மக்களைப் பலி கொடுத்தது போல இமய மலைச்சாரலில் தீபெத்திய இளையோர் பலியிடப்படுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பல ஆசிய நாடுகளுடனும் சீனா செய்துள்ள வர்த்தக் ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பாதிப்பை ஈடு செய்யலாம். சீனாவில் பெருமுதலாளிகள் உருவெடுப்பதை இட்டு 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சி கரிச்னை கொள்ளத் தொடங்கியுள்ளது.
FANG நிறுவனங்க்களின் ஆண்டு
FANG என சுருக்கமாக அழைக்கப்படும் Facebook, Amazon, Netfliz, Google ஆகிய நாற்பெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது வருமாந்த்தை பெருமளவில் 2020இல் பெருக்கிக் கொண்டன. இந்த நிறுவனங்களின் தனியாதிக்கத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் தணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். எண்மியக் கொடுப்பனவுகள் 2020இல் மிகவும் அதிகரிதிருந்தன. நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பாவனையும் 2020இல் அதிகரித்திருந்தன. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்துள்ளது.
உலகமயமாதல் நிறுத்தப்பட்டு தேசியவாதம் தலை தூக்கியது. சில்லறை வர்த்தகத் துறை பாதிக்கப்பட்டு இணையவெளி வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சோதனைக்கு உள்ளாகிய வேளையில் குவாட் என்னும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணக் கரு 2020இல் உருவானது.
சோதனைகள் நிறைந்த ஆண்டான 2020இல் ஆட்சியாளர்கள் படிப்பினை பெறவில்லை.
No comments:
Post a Comment