Saturday 9 January 2021

டிரம்ப் பதவி நீக்கம் செய்யப் படுவாரா?

 


அமெரிக்க அரசியல் சட்டதின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடியவர் அதிபர் டொனால்ட் டிரம்ப். உலகின் வலிமை மிக்க பதவியான அமெரிக்க அதிபருக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்களும் உண்டு. டிரம்ப் 2017 ஜனவரியில் பதவிக்கு வந்தவுடன் அவர் தனது சட்டத்துறையினரிடம் அதிகம் உரையாடியது தன்னை தானே மன்னிக்க முடியுமா என்பதுதான். டிரம்ப் தனது பதவிக்காலம் இன்னும் 27 நாட்கள் இருக்கின்றன என்ற வேளையில் தனக்கு வேண்டிய 29 சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு மன்னிப்பும் தண்டனைக் காலக் குறைப்பும் வழங்கினார். அதில் வரி ஏய்ப்பிற்காக சிறையிலிடப்பட்ட ட்ரம்பினது சம்பந்தி சார்ல்ச் குஷ்ணரும் ஒருவர்.

தீயாரைச் சேர்வதை விரும்பிய டிரம்ப்

டிரம்பிற்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும். வட கொரிய அதிபரையும் சீன அதிபரையும் புகழ்ந்தவர். அஞ்செலா மேர்க்கலுடன் மோசமாக நடந்து கொண்டவர். சர்வாதிகாரிகள் எவ்வளவு கடுமையானவராகவும் தரம் தாழ்ந்தவராகவும் இருக்கின்றார்களோ அந்தளவு அவர்களுடன் நான் சுமூகமாக பழகுகிறேன் என்றவர் டிரம்ப். ஆமாம் சாமிகளைத்தான் அமைச்சரவையிலும் உயர் பதவிகளிலும் வைத்திருந்தார். முரண்படுபவர்களை சடுதியாக மாற்றினார். மற்ற எந்த அரசியல்வாதிகளும் செய்யாத அளவிற்கு டிரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்தினார். கடையில் ஃபேஸ்புக், டுவிட்டர், யூரியூப் போன்றவை ட்ரம்பின் கணைக்கை மூடி அவரைச் செயற்பட முடியாமல் தடுத்து விட்டன.

வரியா? வரியில்லயா?

பொதுவாக டிரம்பின் குடியரசுக் கட்சியினர் வரிவிதிப்பைக் குறைப்பை விரும்புபவர்கள். டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஆட்சியில் இருக்கும் போது அதிக வரி விதிக்கப்படும். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் செல்வந்தர்கள் மீதான வரிகளைக் குறைத்தார். கொவிட்-19 தொற்று நோயால் பல அமெரிக்க நடுத்தர குடும்பத்தினர் பாதிப்படைதுள்ள நிலையில் அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அதிக வரிவிதிப்பு அவசியம். அதனால் புதிய அதிபர் ஜோ பைடன் அதிக வரிகளை விதிப்பேன் என தேர்தல் பரப்புரையின் போது கூறியுள்ளார். இதனால் பல செல்வந்தர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை

வாஷிங்டன் டிசியின் பாதுகாப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் ஒரு மாநிலமாகும். ஆனால் மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநிலத்திற்கு என ஓர் அரசு இல்லை. மற்ற மாநிலங்களுக்கென தனித்தனி காவற் துறையும் பாதுகாப்புப் படையும் உள்ளன. வாஷிங்டனுக்கு தனியாக பாதுகாப்புப் படை இல்லை. அதன் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனும் பொறுப்பாகும். நாடாளமன்றத்தின் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறை பொறுப்பாகும். 2021 ஜனவரி ஆறாம் திகதி பயங்கரவாதிகள் அமெரிக்க நாடாளமன்றத்தை தாக்கிய போது மாநகர காவல் துறையினரால் அதை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டனர் எனவுக் குற்றம் சாட்டப்படுகின்றது. பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாத நிலையில் மாநகர முதல்வர் பெண்டகனைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு படையினரை அனுப்பச் சொல்லி கேட்ட போது பெண்டகன் படையினரை அனுப்ப மறுத்து விட்டது. செய்தி கேட்ட அயல் மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் தமது காவல் படையினரை அனுப்பட்டுமா என பெண்டகனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது பெண்டகன் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டது. உலகில் எங்கு பயங்கரவாதிகள் தாக்கினாலும் உடனே செல்லும் அமெரிக்கப் படையினர் தம் நாட்டில் எதையும் செய்யவில்லை.

டிரம்ப் கூட்டிய கூட்டம்

2021 ஜனவர் ஆறாம் திகதி வெள்ளை மாளிகைக்கு அண்மையாக டிரம்ப் தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஒரு கூட்டம் நடத்தினார். அதில் அவர் தனது தேர்தல் வெற்றி திருடப்பட்டு விட்டது. தனது துணை அதிபர் மைக் பென்ஸ் தன்னுடன் ஒத்துழைக்காமல் கோழைத்தனமாக நடக்கின்றார் என முழங்கினார். அங்குள்ள மக்களை கப்பிட்டல் ஹில் நோக்கிச் சென்று நாடாளமன்றம் தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க வேண்டும் என்றார். அதன் பின்னர் நடந்தவை அமெரிக்க மக்களாட்சியின் கோர முகத்தை அம்பலப் படுத்தியது.


டிரம்ப் பயங்கரவாத்தை தூண்டினாரா?

2016-ம் ஆண்டிற்கு முன்னர் தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கிலரி கிளிண்டனை சிறையிலடையுங்கள் என்ற வாசகத்தை அடிக்கடி சொல்லி தேர்தல் பரப்புரை செய்தவர் டிரம்ப் ஆனால் அவரது பதவிக்கால முடிவில் டிரம்பை சிறையில் அடையுங்கள் என்ற வாசகம் பரவலாக அடிபடுகின்றது. அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது அவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடுக்க முடியாது. ஆனால் அவரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்க முடியும். ஆனால் டிரம்ப் பதவியில் இருக்கும் போது தனக்கு வேண்டிய பழமைவாதக் கொள்கையுடையவர்களை நீதித்துறையில் நியமித்துள்ளார். 2021 ஜனவரி 6-ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டம் நடத்த முடியாமல் ஒரு பயங்கரவாதக் கூட்டம் பல பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த பயங்கரவாத நடவடிக்கையின் பின்னணியில் டிரம்ப் இருந்தார் என நிரூபிக்க முடியுமானால் அவர் 2020 ஜனவரி 20-ம் திகதி மதியம் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.

டிரம்பிற்கு எதிராக வலதுசாரி நாளிதழ்

டிரம்ப் தானாகவே பதவி விலக வேண்டும், டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் டிரம்ப் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இப்போது முன் வைக்கப்படுகின்றன. அவற்றிற்கு அவரது எதிர்க்கட்சியினரிடையே வலிமையாகவும் ஆளும் கட்சியினரிடையே சிறிதளவும் ஆதரவு உண்டு. தீவிர வலது சாரியான ரூபேர்ட் மெர்டொக்கின் நாளிதளான வால் ஸ்றீட் ஜேர்ணலின் ஆசிரிய குழாம் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஃபொக்ஸ் நியூஸ் ஊடகம் டிரம்ப்பிற்கு ஆதரவாக தொடர்ந்து செயற்படுகின்றது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறையில் பணி புரியும் எண்பதிற்கு மேற்பட்டோர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அமெரிக்கப் நாடாளமன்றத்தில் நடந்த தாக்குதலுகான தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பதவியில் இருக்கக் கூடாது என்னும் அமெரிக்கர்

அமெரிக்கர்க்ளில் 57%மானோர் டிரம்ப் உடனடியாக பதவியில் இருந்து அகற்றப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். அதில் 14% குற்றம் சுமத்துதல் மூலம் பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் எனக் கருதுகின்றனர். முப்பது விழுக்காட்டினர் இருபத்தி ஐந்தாம் திருத்தம் மூலம் துரிதமாகப் பதவி நீக்கப்படவேண்டும் என நினைக்கின்றனர். பதின்மூன்று விழுக்காட்டினர் டிரம்ப் தானாக பதவி விலக வேண்டும் என நினைக்கின்றனர். ஐம்பத்தி ஐந்து விழுக்காட்டினர் தவறு செய்துவிட்டதாக கருதுகின்றனர். டிரம்பின் குடியரசுக் கட்சியின் எழுபத்தி ஏழு விழுக்காட்டினர் தன் பதவிக்காலம் முடியும்வரை பதவியில் இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 

டிரம்பை பதவி நீக்க இரு வழிகள்

அமெரிக்க அதிபரை இரண்டு வழிகளில் பதவி நீக்கம் செய்யலாம். ஒன்று குற்றம் சாட்டுதல் மூலம் பதவி நீக்குதல், இரண்டு தரமற்றவர் எனப் பதவி நீக்குதல். அமெரிக்க அதிபர் மீது ஒரு குற்றப்பத்திரிகையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்குதல் செய்து அவர் குற்றம் புரிந்தார் என மக்களவை உறுப்பினர்களின் பெரும்பானையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் குற்றப்பத்திரிகையும் மக்களவைத் தீர்மானமும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவைக்கு சமர்பிக்க வேண்டும். மூதவை நீதித்துறையினரின் உதவியுடன் விசாரணை செய்யும். பின்பு மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் குற்றம் செய்ததை ஏற்றுக் கொண்டால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு துணை அதிபர் அதிபராகப் பதவி ஏற்றுக் கொள்வார். டிர்ம்பின் பதவிக்காலம் 2021 ஜனவரி 20-ம் திகதி மதியம் வரை இருக்கும் என்பதால் முதவையின் நீதி விசாரணை அதிலும் நீண்ட காலம் எடுக்கும். நூறு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஐம்பது பேரும் அவரின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர் ஐம்பது பேரும் உள்ளனர். குடியரசுக் கட்சியினரில் ஆகக் குறைந்தது 17பேர் டிரம்ப் குற்றவாளி என வாக்களிக்க வேண்டும். ஆனால் இதுவரை மூவர் மட்டுமே டிரம்ப் பதவி விலக்கப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளனர். டிரம்பை பதவி நீக்க இரண்டாவது வழி இலகுவான வழியாகத் தோன்றும். ஆனால் நிறைவேற்றும் சாத்தியம் குறைவு.  இது அமெரிக்க அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. டிரம்ப் பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் என அமெரிக்காவின் துணை அதிபரும் அவரது அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் முடிவு செய்தால் அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். நாடாளமன்றத்தின் மீதான தாக்குதலை ஆட்சேபித்து டிரம்பின் அமைச்சரவையில் இருந்து இருவர் பதவி விலகி விட்டனர். திறைசேரிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வழியில் பதவி நீக்குவது பற்றி கலந்துரையாடியதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அவர் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக இல்லை என்றும் கருதப்படுகின்றது.

அமெரிக்க நாடாளமன்ற மக்களவைத் தலைவர்

அமெரிக்க நாடாளமன்றத்தின் மக்களவையின் தலைவர் நான்சி பெலொசி துணை அதிபர் உடனடியாக டிரம்பை அமெரிக்காவின் அரசியலமைப்பின் இருபத்தி ஐந்தாம் திருத்தத்தின் படி பதவி நீக்க வேண்டும் அல்லது 2021 ஜனவரி 13-ம் திகதி அமெரிக்க நாடளமன்றம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்து பதவி நீக்கம் செய்யும் என சூளுரைத்துள்ளார். நாடாளமன்றத் தாக்குதலின் பின்னர் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார். அமெரிக்க நாடாளமன்றத்தின் மூதவையின் தலைமைப் பொறுப்பு துணை அதிபருக்கு உரியது. அதைப் பயன்படுத்தி மைக் பென்ஸ் தேர்தல் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் அவரை நிர்ப்பந்தித்திருந்தார். ஆனாலும் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு பென்ஸ் ஆதரவாக இல்லை.

தடாலடியாக காலில் விழுந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே டிரம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக முழங்கினார். பின்னர் தனது வெற்றியை திருடி விட்டதாக புலம்பினார். தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்தார். கடையில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடி தேர்தல் முடிவை உறுதி செய்வதை தடுக்க முயன்றார். அவருக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு நகரம் தமிழ்த்திரைப்படத்தில் வடிவேலுவின் சண்டித்தனத்தை நினைவு படுத்துகின்றார்.

 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...