Tuesday, 23 July 2019

தென் சீனக் கடலும் தென் அமெரிக்காவும்


சீனாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தென் கொரியா, ஜப்பான், குவாம் தீவு, பிலிப்பைன்ஸ் உட்பட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் சீனாவைச் சுற்றி நிலை கொண்டுள்ளன. இந்த நிலையில் தென் அமெரிக்காவில் சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாக அமெரிக்காவில் இருந்து கூக்குரல்கள் எழுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தென் அமெரிக்கப் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரிவில் உள்ளவர்களின் கருத்துப்படி சீனாவின் செல்வாக்கும் சீனா ஏற்படுத்தும் தாக்கங்களும் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஒரு முழுமையான அணுகுமுறை மாற்றத்தை செய்ய வேண்டி உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைச் சேவைக்கான குழுவின் முன் கருத்துத் தெரிவித்த அட்மிரல் கியேர்க் ஃபல்லர் சீனா எமது அயலில் தனது வாழ்வை அதிகரிப்பதுடன் தென் அமெரிக்கப் பிராந்திய நாடுகளின்பங்காளர் அமெரிக்காஎன்ற நிலையை இல்லாமற் செய்ய முயல்வதுடன் அந்த நாடுகளில் உள்ள மக்களாட்சி முறைமையையும் சட்டத்தின் படியான ஆட்சியையும் வலுவிழக்கச் செய்யும் முயற்ச்சியிலும் இறங்கியுள்ளது என்றார்.

மன்றோ கோட்பாடு
தென் அமெரிக்காவில் வேறு நாடுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஐக்கிய அமெரிக்கா 1823-ம் ஆண்டே மன்றோ கோட்பாடு என்னும் பெயரில் உருவாக்கியது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜேம்ஸ் மன்றோ அமெரிக்காவின் பாதுகாப்பு பற்றி பாராளமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து தெரிந்து எடுக்கப் பட்டதே மன்றோ கோட்பாடாகும். அதன் படி தென் அமெரிக்க நாடுகளில் மக்களாட்சி முறைப்படி அந்நியத் தலையீடு இன்றி நடக்க வேண்டும்.

புதிய பட்டுப்பாதையா மாட்டும் பாதையா?
தென் அமெரிக்க நாடுகளுடன் 2025-ம் ஆண்டளவில் 500பில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தைச் செய்ய திட்டமிட்டுள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள 19நாடுகள் சீனாவின் ஒரு பாதை ஒரு வலயம் எனப்படும் புதிய பட்டுப்பாதையில் பங்கேற்கவுள்ளன. அந்த 19 நாடுகளுக்கும் சீனா 150பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் வழங்கவும் ஒத்துக் கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அரசியல் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கருதுகின்றது.

தென் சீனக் கடல்
தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், புருனே ஆகிய நாடுகள் தென் சீனக் கடலின் எல்லை தொடர்பாக சீனாவுடன் முரண்படுகின்றன. பன்னாட்டு நியமங்களை மீறி சீனா தென் சீனக் கடலில் 90% தன்னுடையது என்கின்றது.  அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. தென் சீனக் கடலில் சீனா உருவாக்கிய செயற்கை தீவு போன்ற சிறிய தீவுகளை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப்படையின் குண்டுகளை வீசி துவம்சம் செய்த அனுபவம் உண்டு. 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஷங்கிரிலா உரையாடல் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் சீனாவின் தென் சீனக் கடற் கொள்கை அமெரிக்காவின் திறந்த கடற் கொள்கைக்கு எதிரானதாக இருப்பதால் இரு நாடுகளும் உடன்படாத நிலைகளில் அமெரிக்கா சீனாவுடன் கடுமையாகப் போட்டியிடும் என்றார். அமெரிக்கா சீனாவுடன் ஆக்கபூர்வமான பயன்சார் உறவைத் தொடர விரும்பினாலும் போட்டியிட வேண்டிய கட்டங்களில் தீவிரமாகப் போட்டியிடுவோம் என்றார் ஜிம் மத்தீஸ்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் படைத்தளத்தைக் கொண்டுள்ள பிலிப்பைன்ஸின் சீனா தொடர்பான கொள்கை மாற்றமடையத் தொடங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனக் கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மீன் பிடிக் கப்பல் மீது மோதி அதைத் தகர்த்து விட்டு அதில் இருந்தவர்களை தண்ணீரில் தத்தளிக்க விட்டுச் சென்றது பன்னாட்டு நியமங்களுக்கு முரணானது எனச் சொல்லி பிலிப்பைன்ஸில் அதன் சீன சார்பு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டேயிற்கு எதிராக கண்டனக் குரல்கள் பிலிப்பைன்ஸுக்கு உள்ளும் வெளியும் இருந்து எழுந்தன. அதற்குப் பதிலளித்த ரொட்ரிகோ டுட்டார்டே அமெரிக்கா தனது 7வது கடற்படைப்பிரிவை சீனாவின் வாசலில் நிறுத்தினால் நானும் அதனுடன் இணைந்து சீனாவிற்கு எதிராக போர்புரியத் தயாராக உள்ளேன். அமெரிக்கா சீனாவுடன் போர் புரியத் தயாராக இல்லாத நிலையில் என்னால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றார் ரொட்ரிகோ டுட்டார்டே. ஆனால் வியட்நாம் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதில் உறுதியாக இருக்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவும் லத்தின் அமெரிக்காவும்
அமெரிக்கா என்றால் வெறும் ஐக்கிய அமெரிக்கா மட்டுமல்ல அது வட துருவத்தில் இருந்து தென் துருவம்  வரை செல்லும் ஒரு பெரிய கண்டமாகும். ஐக்கிய அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா எல்லாம் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் 23 நாடுகளும் தென் அமெரிக்காவில் 12 நாடுகளும் இருக்கின்றன. அமெரிக்கக் கண்டத்தில் இப்படிப் பல நாடுகள் இருந்த போதும் அமெரிக்கா என ஐக்கிய அமெரிக்காவைத்தான் பலரும் குறிப்பிடுகின்றார்கள். தென் அமெரிக்காவில் ஸ்பானிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட நாடுகளை லத்தின் அமெரிக்கா என அழைப்பர். ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கொஸ்ர ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எக்குவேடர், எல் சல்வடோர்,  பிரெஞ் கயானா, குவாடலோப், குவாட்டமாலா, ஹெய்ட்டி, ஹொண்டரூஸ், மார்டினெக்ஸ், மெக்சிக்கோ, நிக்காரகுவா, பனாமா, பரகுவே, பெரு, பியூட்டொ ரிக்கோ, உருகுவே, வெனிசுவேலா போன்ற நாடுகள் லத்தின் அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படும்.

லத்தின் அமெரிக்காவில் சீனா
2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளில் தனது அதிக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது உறவை விரிவு படுத்தியது. இதனால் பல லத்தின் அமெரிக்க நாடுகள் இடதுசாரிகளின் பக்கம் திரும்பியது. வலதுசாரிகளைக் கொண்ட நாடுகளுடன் இரசியா உறவை வளர்க்க சீனா பல லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தகத்தை விரிவாக்கியது. அவற்றிற்கு தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தல், படைக்கலன்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றிடமிருந்து மலிவு விலைக்கு மூலப் பொருட்களை வாங்குதல் அவற்றில் முதலீடு செய்தல் ஆகியவற்றை சீனா பெருக்கியது. வெனிசுவேலா, பிரேசில், ஆர்ஜெண்டீனா, எக்குவேடர் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளையும் சீனா ஏற்படுத்திக் கொண்டது. 2014-ம் ஆண்டு லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன் 22பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 1994-ம் ஆண்டு ஆர்ஜெண்டீனாவின் இறக்குமதியில் 3.4விழுக்காடு சீனாவில் இருந்து வந்தது. இது 2014இல் 16.5விழுக்காடாக உயர்ந்தது.

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள்
மெக்சிக்கோ, பிரேசில், கொலம்பியா ஆகிய மூன்று பெரிய தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஆதரவு வலதுசாரிகள் ஆட்சியில் தற்போது இருப்பது அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அமெரிக்காவையும் அதன் அதிபர் டிரம்பையும் பெரிதும் விரும்பும் ஜேர் பொல்சொனரொ பிரேசிலின் அதிபராக 2019 ஜனவரி பதவி ஏற்றார். பிரேசிலில் அமெரிக்கா செய்மதி ஏவும் நிலையத்தை அனுமதித்த அவரது தலைமையில் தென் அமெரிக்காவில் பல நாடுகளை இணைத்த ஒரு வர்த்தகக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்கக் கோட்டை என்னும் குறியீட்டுப் பெயரிடப்பட்ட  இந்த வர்த்தகக் கூட்டமைப்பு சீனாவின் ஒரு பாதை ஒரு பட்டி என்ற புதிய பட்டுப்பாதை போன்றதாக அமையவிருக்கின்றது. இது தென் அமெரிக்காவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்ச்சியாகும்.

உனசூரில் இருந்து புரசூர்
ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், சிலி கொலம்பியா, எக்குவேடன், கயானா, பரகுவே சூரினாம், வெனிசுவேலா ஆகிய நாடுகளைக் கொண்ட உனசூர் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்தை காலம் சென்ற வெனிசுவேலா அதிபர் 2008-ம் ஆண்டு உருவாக்கியிருந்தார். அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டிருந்த நாடுகளின் கூட்டமைப்பாக அது அமைக்கப்பட்டது. அந்த அமைப்பை இப்போது ஓரம் கட்டிவிட்டு அமெரிக்க ஆதரவு நாடுகளான ஆகியவை  2019 மார்ச் மாதம் Progress of South America என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டவை என்றாலும் அவற்றின் நோக்கங்களில் அமெரிக்காவிற்கு பிடித்த வார்த்தைகளான மக்களாட்சி, மனித உரிமை போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

சீனா பல நாடுகளுக்கு கொடுக்கும் கடன்களும் அங்கு நிர்மாணிக்கும் உள்கட்டுமானங்களும் அந்த நாடுகளில் படைத்தளங்களை அமைக்கும் நீண்ட கால உள் நோக்கங்களை கொண்டது எனக்கருத இடமுண்டு. அந்த வகையில் தென் அமெரிக்காவில் எப்போதும் சீனாவின் ஆதிக்கமும் படை நிலைகளும் இருக்கக் கூடாது என்பதில் மன்றோ கோட்பாட்டு அடிப்படையில் அமெரிக்கா கருதுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...