கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச்
செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல், பேச்சுக்களை கேட்டறிதல், முடிவுகளை எடுத்தல், பல்வேறு மொழிகளை ஒன்றில்
இருந்து ஒன்றிற்கு மாற்றுதல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. அமெரிக்காவின் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான The McKinsey Global Institute செயற்கை விவேகம் 1. கணினி தொலைநோக்கு, 2. இயற்கை மொழி, 3. இணையவெளி உதவி, 4. பொறிகளை (இயந்திரங்களை) தானாக சிந்திக்க வைத்தல், 5. இயந்திரங்கள் தாமாகக் கற்றுக் கொள்ளல் ஆகிய
அம்சங்களைக்க் கொண்டது என்றது. மனித விவேகம் தேவைப்படாமல் கணினிகளை தாமாகச் செயற்பட
வைப்பதே செயற்கை விவேகம்.
பொறிகள் (இயந்திரங்கள்)
கற்றல் – Machine Learning
உட் செலுத்தப்படும்
தகவல்களை அடிப்படையாக வைத்து கணினி போன்ற பொறிகள் தாம் எப்படிச் செயற்பட வேண்டும்
என்பதை தாமாகவே அறிந்து கொள்ளல் பொறிகள் கற்றல் எனப்படும். செயற்கை விவேகம்
பொறிகள் கற்றலை உருவாக்குகின்றது. பொறிகள் கற்றலின் ஒரு பிரிவு ஆன்ற கற்றல் ஆகும்.
மிக மிக அதிகமான தகவல்களை பொறிகள் கையாளும் போது உருவாக்கப்படும்
படிமுறைத்தீர்வுகளில் (algorithms) ஆன்ற கற்றல் உருவாகின்றது. அதிக
மக்கள் தொகையால் அதிக தரவுகள் உருவாகின்றன. அதிக தரவுகளை கணினிகள் கையாளும் போது
ஆன்ற கற்றல் கிடைக்கின்றது.
மக்களைப் பெற்ற மகராசியாக
சீனா
சீனாவின் மிக அதிகமான
மக்கள் தொகை சீன அரசின் தகவல் திரட்டல், பராமரித்தல், நிரைப்படுத்தல் போன்றவற்றில் கடுமையான
வேலைப்பளுவை அதன் மீது சுமத்தியது. அத்தியாவசியமே கண்டுபிடிப்பின் தந்தை என்ற
முதுமொழிக்கு ஏற்ப சீனா அதற்காக கணினிகளை பெருமளவில் பாவிக்கும் திறனை வளர்க்க
வேண்டிய சீனாவில் உருவானது. அத்துடன் இளையோருக்கான தட்டுப்பாடும் அதிக அளவிலான
முதியோரைப் பராமரிக்க வேண்டிய சூழலும் இயந்திர மயமாக்கலை சீனாவில்
நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதனால் தானியங்கியாக இயந்திரங்கள்
செயற்படச் செய்யும் தொழில்நுட்பத்தில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னிலையில்
இருக்கின்றது. 2017-ம் ஆண்டு உலகெங்கும் செயற்கை விவேகத்தில் செய்யப்பட்ட
முதலீட்டில் 47% சீனாவில் செய்யப்பட்டது. சீனா எதையும் திட்டமிட்டு திறம்படச்
செய்யும். அதிலும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுவதில் சீனாவிற்கு
மேற்கு நாடுகள் நிகரல்ல. 2017-ம் ஆண்டு 2030 சீனாவை செயற்கை
விவேகத்தில் உலகின் முதற்தர நாடாக மாற்றும் திட்டம் வரையப்பட்டது. அதற்காக
30பில்லியன் டொலர் பெறுமதியான நிதியும் ஒதுக்கப்பட்டது.
செயற்கை விவேகமும்
பொருளாதாரமும்
முகாமைத்துவ ஆலோசனை
நிறுவனமான The McKinsey Global Institute இன் கணிப்பின் படி
2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள்
ஏதோ ஒருவகையான செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக
செயற்கை விவேகத்தால் இயக்கப்படும். செயற்கை விவேகத்தால் மொத்த
உலகப் பொருளாதார உற்பத்தி 11%ஆல் அதிகரிக்கும் என Price Waterhouse
Coopers என்னும் நிறுவனம் எதிர்வு
கூறியுள்ளது. சீனாவைப் போலவே வேலை செய்யக் கூடிய இளையோர் தொகை குறைவாக உள்ள ஜப்பான் முப்பரிமாண
அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின்
மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது
என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு
கூறியுள்ளது. இன் கணிப்பின் படி 2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள் ஏதோ ஒருவகையான
செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக செயற்கை
விவேகத்தால் இயக்கப்படும்.
முகங்களை இனம் காணிவதில் முதலிடத்தில் சீனா
சீனாவில் 200மில்லியன் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றார்கள். செயற்கை
விவேகத்தின் மூலம் முகங்கள் பதிவு செய்யப்பட்டு அத்துடன் அந்த முகங்களுக்கு
உரியவர்களின் தகவல்கள் இணைக்கப்படும். யாராவது குற்றச் செயல் செய்யும் போது
கண்காணிப்புக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டால் கணினித் தொகுதிகள் தாமாகவே குற்றச்
செயலில் ஈடுபட்டவர்களை கண்டறியும். முகங்களை வைத்து ஆட்களை இனம் காணும்
தொழில்நுட்பத்தில் சீனா தன்னிகரில்லாமல் இருக்கின்றது. இருந்தும் பல சிக்கல்கள்
அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சீனாவின் பிரபல தொழில்நிறுவனத்தின் இயக்குனர் தெருவைச்
சட்டவிரோதமான வகையில் கடந்து சென்றதாக செயற்கை விவேகம் முடிவு செய்தது. ஆனால் அந்த
இயக்குனர் வேறு இடத்தில் இருந்திருந்தார். தீவிரமான மனித விசாரணையின் பின்னர் அந்த
இயக்குனரின் படம் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்தது அவரது முகத்தின் படம்
கண்காணிப்புக் கருவியில் பதிவாகி அதை செயற்கை விவேகம் சட்ட விரோதமாக தெருவைக்
கடப்பதாக முடிவெடுத்தது.
சீனாவும் 5G தொழில்நுட்பமும்
செயற்கை விவேகத்தில் கணினிகளிடையேயான
தகவற்பரிமாற்றம் துரிதமாக நடைபெறுவது மிக அவசியமாகும். அந்தத் தேவை சீனாவில்
அதிகமாக இருப்பதால் துரித தகவற்பரிமாற்றம் செய்யக் கூடிய 5G தொழில்நுட்பத்தில் சீனா உலகின் முதற்தர நாடாக திகழ்ந்து அதன்
போட்டி நாடுகளை அச்சமடையச் செய்துள்ளது.
படைத்துறையில் செயற்கை விவேகம்
போர்க்களத்தில் செயற்கை விவேகம் பரந்த அளவில் பாவிப்பதற்கான
முன்னெடுப்பை பல வல்லரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பொதுவாக killer robots
என அழைக்கப்படும் lethal autonomous weapons systems போன்றவற்றை உருவாக்குவதில்
அதிக அக்கறை காட்டப்படுகின்றது. எண்மியச் செயற்பாடுகளுக்கும் மனித உடற் செயற்பாடுகளுக்கும்
இடையில் உள்ள இடைவெளிகள் குறைந்து கொண்டே போகின்றன. 2030இற்குப் பின்னர நடக்கவிருக்கும்
போர்களில் செயற்கை விவேகம் கொண்ட கணினிகள்தான் ஜெனரல்களாக இருந்து போரை நடத்தும். போர்முனையில்
ஆளில்லாவிமானங்களில் இருந்து தாங்கி வரை எல்லாவற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகளும்
உணரிகளும் களநிலவரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி அந்த ஜெனரலுக்கு அனுப்ப அது இடும்
கட்டளைப்படி போர் நகர்த்தப்படும். மரபு வழி நடவடிக்கைகளிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில்
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முழுக்க முழுக்க தாமாக தீர்மானம் எடுத்து எதிரியை
அழிக்கக் கூடிய படைக்கலன்களும் போர் முனைகளில் செயற்படும்.
ஆளில்லாப்போர் விமானங்களும்
செயற்கை விவேகமும்
2019 மார்ச் மாதம் 25-ம்
திகதியில் இருந்து 29-ம் திகதி வரை ஜெனீவாவில் படைத்துறையில் செயற்கை விவேகம்
பாவிப்பது பற்றிய மாநாடு நடைபெற்றது. அதில் ஆளில்லாப் போர்விமானங்கள் தாக்குதல்
நடத்தி எதிரிகளைக் கொல்லும் முடிவுகளை தாமே எடுப்பதை தடை செய்யும் முன்மொழிபு
வைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் இரசியாவும் எதிர்த்தன ஆனால் சீனா அதை
ஆதரித்தது. ஆனால் படைத்துறையில் இரகசியமாக செயற்கை விவேகத்தை மிகவும் வேகமாக சீனா
உட்புகுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் படைத்துறைச்
சமநிலையை தனக்குச் சாதகமாக்க செயற்கை விவேக்த்தை சீனா பயன் படுத்துகின்றது. 2017-ம்
ஆண்டு ஜூன் மாதம் சீனா செயற்கை விவேகத்தின் மூலம் ஒரேயடியாக 119 ஆளில்லாப்
போர்விமானங்களை இயக்கி பலரையும் வியக்க வைத்தது. அமெரிக்காவின் F-35, F-22 போன்ற முன்னணி போர் விமானங்களும் இரசியாவின் மிக்-35
போர்விமானங்களும் செயற்கை விவேகத்தின் மூலம் தம்முடன் பல ஆளில்லாப்போர் விமானங்களை
இணைத்துக் கொண்டு அணிவகுத்துப் பறந்து எதிரியின் இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்தை
வளர்த்துள்ளன. தாய் விமானத்து விமானியே எல்லா விமானங்களையும் நெறிப்படுத்துவார்.
செயற்கை விவேகத்தின் மூலம் ஆளில்லாப் போர் விமானங்கள் அத்தாய் விமானத்துடனும் உடன்
பறக்கும் மற்ற ஆளில்லாப் போர்விமானங்களுடனும் தாமாகவே தொடர்பாடலை ஏற்படுத்தி
செயற்படும். ஆனால் சீனா இதில் ஒரு படி மேலே போய் ஆளில்லாப் போர்விமானங்களில்
இருந்து ஒரு மனித விமான பேசுவது போல் பேசி தாய் விமான விமானியுடன் தொடர்பாடலை
ஏற்படுத்தும்.
முப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும்
குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு
ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial
intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன.
முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த
செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக்
கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த
பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல
சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில்
செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை
விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால்
தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது
700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும்
கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை
அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள்.
இணையவெளிப் போரும் செயற்கை
விவேகமும்
இரசியா இணையவெளியூடாக தமது
நாடுகளின் மக்களாட்சி முறைமையை குழப்பும் செயலில் ஈடுபடுவதாகவும் சீனா
இணையவெளியூடாக தமது தொழில்நுட்பங்களைத் திருடுவதாகவும் மேற்கு நாடுகள் குற்றம்
சுமத்துகின்றன. இணையவெளியூடான சட்ட விரோத நடவடிக்கைகளை இரசியா செயற்கை விவேகத்தின்
மூலம் தீவிரப்படுத்துவதாகக் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா
பல நாடுகளின் கணினித் தொகுதிகளில் ஊடுருவி அங்கு உறங்குநிலை தாக்குதல் முறைமைகளை (Sleeper cell virus) நிலைபெறச் செய்துள்ளதாகவும் தேவை ஏற்படும் போது
அவை அந்த நாடுகளின் படைத்துறை மற்றும் குடிசார் வழங்கற் துறை போன்றவற்றின் கணினித்
தொகுதிகளை செயலிழக்கச் செய்யலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஈரான் மீது 2019
ஜூன் இறுதியில் அமெரிக்கா அப்படி ஒரு தாக்குதல் மேற்கொண்டிருந்தது. செயற்கை
விவேகத்தைப் பயன்படுத்தும் போது இணையவெளித் தாக்குதல் மற்றும் சட்ட விரோதச்
செயற்பாடுகள் துரிதமாகவும் துல்லியமாகவும் நிறைவேற்றப்படலாம்.
செயற்கை விவேகம் உலகெங்கும்
வாழும் மக்களின் இன மற்றும் மத முரண்பாடுகளை இல்லாமற் செய்யவும் ஒருங்கிணைக்கவும்
பயன்பட்டால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment