Monday, 5 August 2019

சீனக் கனவு: சூழும் தளைகளை நீக்குமா சீனா?


சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை 2021-ம் ஆண்டு நிறைவு செய்யும் போது சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (harmonious) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவு என்கின்றார் அதன் அதிபர் ஜீ ஜின்பிங். சீனாவின் கனவை நிறைவேற்றுவதற்கு பல தளைகள் தடைகளாக இருக்கின்றன. உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக வர்த்தகம் செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்படாமல் இருக்க சீனாவின் இந்த வர்த்தகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். அதற்கு உரிய வசதிகளைப் பேண சீனாவின் ஆதிக்கம் உலகெங்கும் அதிகரிக்கப்பட வேண்டும். 

சீனாவின் நான்கு முனைப்பிரச்சனை
அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை அமெரிக்காவும் ஜப்பானும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை நான்கு முனை பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) என அழைக்கப்படுகின்றது. அதை சுருக்கமாக குவாட் (Quad) என அழைக்கப்பட்டது. இது கடந்த பத்து ஆண்டுகளாக ஜப்பான் முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கு எதிரான ஒரு நான்கு நாடுகள் இணைந்த பொறிமுறையாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்த ஒத்துழைப்பில் இந்தியா இணையக் கூடாது என சீனா நரேந்திர மோடியை சீனா மிரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் 2019 ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் நடந்த G-20 மாநாட்டில் இந்த நான்கு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து குவாட் பற்றி உரையாடியமை சீனாவிற்கு இன்னும் ஒரு தளையாகும்.

இரசியா நண்பனா எதிரியா?
மேற்கு நாடுகள் எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தமக்கு சாதகமாக இருக்கும் தற்போதைய உலக ஒழுங்கை குழப்ப முயலும் திரிபுவாத வல்லரசுகளாக சீனாவையும் இரசியாவையும் பார்ப்பதால் இரண்டையும் அடக்க முடியாமற் போனாலும் உலக அரங்கில் இருந்து ஓரம் கட்ட அவை முயல்கின்றன. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட இரசியாவும் சீனாவும் பல துறைகளிலும் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. இரசியா தன் கிழக்குக் கரையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆரம்பித்த கிழக்கு (Vostok) என்ற படைப்பயிற்ச்சியில் 2018-ம் ஆண்டு சீனாவையும் இணைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அளவிற்கு இரசியாவின் எதிரிகள் அதன் கிழக்குக் கரையில் மாறியிவிட்டனர். ஆனால் இரசிய சீன உறவுகள் தொடர்பான நிபுணரான அலெக்ஸாண்டர் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு ஒரு முழுமையான நிலையை அடைய மாட்டாது என்கின்றார். கஜகஸ்த்தான் போன்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் சீனா தனது படைத்துறைப் பயிற்ச்சிகளை செய்வது இரசியாவிற்கு ஆபத்தானது என்பதை இரசியா அறியும். கஜகஸ்த்தானில் பயங்கரவாத ஒழிப்பு என்னும் போர்வையில் சீனா படைப்பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தது. இரசியா தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனாவிற்கு தனது படைத்துறைத் தொழில்நுட்பத்தை விற்கவேண்டிய நிலையும் உள்ளது. ஆனாலும் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையும் உலகின் முதன்மை நாடாக உருவெடுப்பது இரசியாவைக் கரிசனை கொள்ள வைப்பதை மறுக்க முடியாது. சில இரசியப் படைத்துறை நிபுணர்கள். தற்போது சிறிய குழப்ப சூழ் நிலை உருவாகினாலும் நீண்ட கால அடிப்படையில் நேட்டோ நாடுகளினிடையில் இருக்கும் உறவு போல இரசிய சீன உறவு உறுதியாக இல்லை என்பது சீனாவை ஒரு புறம் சூழ்ந்துள்ள பிரச்சனையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கொரியத் தீபகற்பம்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த கொரியப் போரில் கொரியத் தீபகற்பம் பொதுவுடமை ஆட்சியின் கீழ் வட கொரியாவாகவும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் தென் கொரியாவாகவும் இரு நாடுகளாக்கப் பட்டன. பல முறை சீனாவாலும் ஜப்பானாலும் ஆக்கிரமிக்கப் பட்ட கொரியத் தீபகற்பம் சீனாவிற்கு ஒரு சவாலாக இப்போது இருக்கின்றது. பொருளாதாரத் துறையில் முன்னேறிய தென் கொரியா சீனாவிற்கு வர்த்தகத்தில் போட்டியாக இருக்கின்றது. வட கொரியா அணுக்குண்டுகளையும் ஏவுகணைகளையும் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் துருப்புச் சீட்டாகப் பயன்படும் வட கொரியா படைத்துறையில் பெரு முன்னேற்றம் காண்பது சீனாவிற்கு அச்சுறுத்தலாக அமையும். வட கொரியா தனது படைக்கல உற்பத்திகளை நிறுத்தில் தென் கொரியாவுடன் சமாதானமாகி இரு நாடுகளும் ஒன்றிணைக்கப்பட்டால் அது சீனாவிற்கு பல முனைகளில் பெரும் தலையிடியாக அமையும்.

கைவைக்க முடியுமா தைவானில்?
2019 ஜூலை 29-ம் 30-ம் திகதிகளில் தைவான் Han Kuang drill என்னும் பெயரில் பாரிய போர் ஒத்திகையைச் செய்துள்ளது. அதில் 9வகையான 117 ஏவுகணைகள் உண்மையாக வீசிப் (live-fire) பயிற்ச்சி செய்யப்பட்டன. 29-ம் திகதி திங்கட் கிழமை தைவானின் F-16 போர் விமானங்கள் AGM-84 Harpoon ஏவுகணைகளை வானில் இருந்து கடற்பரப்பில் வீசிப் பரிசோதனை செய்தன. இலக்குகளாக பழுதடைந்த தைவானின் கப்பல்கள் பாவிக்கப்பட்டன.  துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய நடுத்தர தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணைகள், Sky Bow I and Sky Bow II என்னும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள், Hsiung Feng III என்னும் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள் அவற்றுள் அடங்கும். ஏவுகணை வீச்சுக்கள் இலக்குகளைத் தாக்குதவில் 95% வெற்றியளித்துள்ளன என தைவான் அறிவித்துள்ளது. தைவான் தன் படைப்பயிற்ச்சியை செய்து கொண்டிருக்கும் போது தைவானுக்கு வட கிழக்காக இருக்கும் மியக்கோ நீரிணையூடாக சீனாவின் ஆறு போர்க்கப்பல்கள் கடந்து சென்றன.

தைவானிற்கு போட்டியாக சீனா
தைவானின் போர்ப்பயிற்ச்சி பிராந்திய அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்ற சீனா தைவான் போர்ப்பயிற்ச்சி செய்யும் போது தானும் ஒரு பெரிய போர்ப்பயிற்ச்சி செய்தது. சீனாவின் போர்ப்பயிற்ச்சி தைவானுக்கு அமெரிக்கா 2.2பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்ய எடுத்த முடிவிற்கு பதிலடியாக அமைந்திருந்தது. அத்துடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி என மீள் உறுதி செய்ததுடன் தேவை ஏற்படின் தைவானை சீனாவுடன் மீளவும் இணைக்க படை நடவடிக்கையும் செய்யப்படும் எனற சீனாவின் வெள்ளை அறிக்கைக்கு உயிர் கொடுப்பதாகவும் அமைந்தது. தைவான் தீவை ஓட்டியுள்ள கடற்பரப்பையும் வான் பரப்பையும் சீனா எப்படித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதற்காகவே சீனாவின் பயிற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக இணைக்காவிடில் அது சீனாவின் காலில் ஒரு தளையாக அமையும்.

ஹொங் கொங்
2003-ம் ஆண்டு ஹொங் கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற முயற்ச்சி எடுத்த போது அது பேச்சுரிமைக்கு எதிரானது என பெரும் ஆர்ப்பாட்டம் நடந்ததால் அது கைவிடப்பட்டது. அது போலவே 2012-ம் ஆண்டு ஹொங் கொங்கில் கல்வியில் மாற்றம் அறிமுகம் செய்ய முற்பட்ட போது பெரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அது கைவிடப்பட்டது. 2014-ம் ஆண்டு ஹொங் கொங்கில் அரசியல் சீர்திருத்தம் வேண்டி மாணவர்கள் தண்ணீர்ப் பாய்ச்சலில் இருந்தும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் இருந்தும் பாதுகாக்க கைகளில் குடையுடன் செய்த குடைப்புரட்சி இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பல அரசியல்வாதிகளின் தேர்தலில் போட்டியிடும் உரிமை பறிக்கப்பட்டது. 2019இல் ஹொங் கொங்கில் சீனாவிற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சீனாவிற்கு நாடுகடத்தும் சட்டம் நிறைவேற்றப்படுவதை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம் செய்தமையினால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் அது முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்டம் ஹொங் கொங்கில் நடக்கின்றது. சீனாவின் தங்க வாத்தாகக் கருதப் படும் ஹொங் கொங்கை சீனா கவனமாக கையாளாவிடில் அதுவும் ஒரு தைவானாக மாறலானம்.

செயற்கைத் தீவுகள்
சீனாவின் இயற்கைத் தீவுகளான ஹொங் கொங்கும் தைவானும் ஒரு புறமிருக்க தென் சீனக் கடலில் சீனா செயற்கையாக உருவாக்கிய தீவுகளை தொடர்ந்து பேணுவதிலும் தனது ஒன்பது புள்ளி வரைபடம் மூலம் தென் சீனக் கடலில் 90% கடற்பரப்பை தனதாக்குவதிலும் சீனா பல சவால்களை எதிர் நோக்குகின்றது. தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடுவதில் சீனாவுடன் போட்டி போடும் நாடுகள் தமக்கு துணையாக அமெரிக்காவைக் கருதுகின்றன. அதிலும் அமெரிக்காவின் முன்னாள் பரம வைரியான வியட்னாம் அமெரிக்காவுடன் மிகவும் நெருங்கி வருவதுடன் தென் சீனக் கடலில் தனது கடற்பரப்பில் உள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை இரசியாவிடம் வியட்னாம் ஒப்படைத்தமை பல சிக்கல்களை சீனாவிற்கு உருவாக்கியுள்ளது.

வெளிப்பிரச்சனைகளும் பார்க்க உட் பிரச்சனைகள் மோசமானவை
சீனாவில் மோசமாகிக் கொண்டு போகும் உள்நாட்டுக்கடன் இப்போது கட்டுக்கு அடங்காத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து கொண்டு செல்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க சீனா தொடர்ந்தும் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதால் சீனாவின் உள் நாட்டுக் கடன் அளவிற்கு மீறியுள்ளது. இனியும் பணப்புழக்கத்தை அதிகரித்தல் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மக்கள் தொகையில் வயோதிபர்கள் அதிகமாகவும் இளையோர் குறைவாகவும் இருப்பது சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. அத்துடன் பெண்களின் தொகை நாட்டில் குறைவாக இருப்பதால் பல சமூகப் பிரச்சனைகளை சீனா எதிர் கொள்கின்றது. உலகிலேயே அதிக நீர்த் தட்டுப்பாடு உள்ள நகரமாக சீனத் தலைநகர் பீஜிங்க் இருக்கின்றது.

எல்லாப் பிரச்சனையையும் எதிர் கொள்ள சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான மூன்று ரில்லியன் டொலர்கள் உதவி செய்யுமா?



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...