போருக்கும் பின் அமைதி
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவைப் போல் மீண்டும் ஓர் அழிவு வரக் கூடாது என்பதில் தாராண்மைவாதிகள் அதிக கவனம் செலுத்தினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரிய நாடுகளிடையே போர் நடக்காமல் இருப்பதை தாராண்மைவாதிகள் உறுதி செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாக ஏற்படுத்துவதில் தாராண்மைவாத ஆட்சியாளர்கள் சில வெற்றிகளையும் கண்டனர். உலக நாடுகள் எல்லாம் தாராண்மைவாதிகளால் ஆளப்பட வேண்டும் என்பதில் தாராண்மைவாதிகள் அதிக அக்கறை காட்டினர். அதற்காக பல தீய வழிகளில் ஆட்சி மாற்றங்களையும் செய்தனர். மனித உரிமை என்ற கூச்சல் அவர்களது ஆட்சிகளை மாற்றும் நடவடிக்கைகளுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
முதலாளித்துவத்தின் ஒரு முகமூடிதான் தாராண்மைவாதம்
முதலாளித்துவம் என்பது சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்கு உரியது அரசுக்கு உரியதல்ல என்பதை முக்கியமாக அம்சமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவம் பொருளாதாரத்தில் தனிநபர் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றது. முதலாளிகளுக்கு இடையில் சந்தை அடிப்படையிலான போட்டி சரியான முறையில் நடப்பதை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி என்பது முதலாளித்துவவாதிகளின் கொள்கையாகும். சந்தையின் செயற்பாடுகளில் அரசு தலையிடுவதை முதலாளித்துவவாதிகள் எதிர்க்கின்றார்கள். முதலாளித்துவத்தின் இன்னொரு முகமூடிதான் தாராண்மைவாதம் எனவும் கருதப்படுகின்றது.
நேட்டோவும் தாராண்மைவாதமும்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு நாடுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உலகில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் தாராண்மைவாத ஒழுங்கு இப்போது பெரும் சவாலை அந்த நாடுகளில் இருந்தே எதிர் கொள்கின்றது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாராண்மைவாதம் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு என்பது அமெரிக்கா தலைமையிலான தாராண்மைவாத ஒழுங்கை உலகெங்கும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. தாராண்மைவாதத்தை எதிர்க்கும் டொனால்ட் டிரம்பினுடைய இலக்குகளில் ஒன்று நேட்டோவைக் கலைப்பதுதான்.
குடிவரவும் தாராண்மைவாதமும்
எழுபது ஆண்டுகளாக மேற்கு நாடுகள் உலகில் கட்டி எழுப்பிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட தாராண்மைவாத ஒழுங்கிற்கு 2016-ம் ஆண்டு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் சவால் விடப்பட்டது. தாராண்மைவாதத்தின் எதிரிகளின் முகாமைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற பிரித்தானியாவில் தராண்மைவாதத்தின் விரோதிகள் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறச் செய்வதற்கான முன்னேற்பாட்டில் வெற்றி கண்டனர். தாராண்மைவாதிகள் குடிவரவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமையே அவர்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. தாராண்மைவாதிகள் மக்களின் சமூகநலன்களில் அக்கறை காட்டுவதால் அவர்களின் தலைமையிலான அரசுகள் அதிக செலவீனங்களைச் செய்ய வேண்டி ஏற்ப்பட்டது. அரச கடன்கள் கட்டுக்கடங்காமல் போயின. மக்கள்மீது வரிச்சுமை அதிகரிக்கப்பட்டன.
பிரபல்யவாதத்தின் எழுச்சி
21-ம் நூற்றாண்டின் உருவான பிரச்சனைகளில் ஆபத்தானது பிரபல்யவாதம். அது சாதாரண மக்களின் கரிசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. பொதுவாக சாதாரண மக்கள் குறுகிய கால நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்வர். மொத்த மனித இனத்தின் நன்மைகளையோ அல்லது மொத்த தேச நலனையோ பற்றி அதிகம் சிந்திக்காமல் தம் தனிப்பட்ட நலன்களில் அவர்கள் அக்கறை செலுத்துவர் என பிரபல்யவாதத்தை எதிர்ப்போர் கருதுகின்றனர். பிரபல்யவாதம் 19-ம் நூற்றாண்டில் இரண்டு தடவைகள் அமெரிக்காவில் எழுச்சியுற்றது. முதலாவது 1855இல் அயர்லாந்தில் இருந்தும் ஜேர்மனியில் இருந்தும் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக உருவானது. இரண்டாவது 1873-ம் ஆண்டு விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அதற்கென உருவான கட்சி ஐந்து ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. மேற்தட்டு மக்களின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டதுதான் தாராண்மைவதம் எனப் பிர்பல்யவாதிகள் வாதிடுகின்றனர். பிரபல்யவாதிகள் தம்மை வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் எதிரானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்.
ஆட்சியதிகார பிரபலவாதிகள்
உலகெங்கும் ஆட்சியதிகார பிரபலவாதிகள் (authoritarian populists) தேர்தல் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது 2016-ம் ஆண்டின் பின்னர் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதில் இரசிய விளடிமீர் புட்டீனும் துருக்கியின் எர்டோகனும் முக்கியமானவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாராண்மைவாதம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பொதுவுடமைவாதத்தை அகற்றின. இப்போது அங்கிருந்து தாராண்மைவாதத்தை பிரபல்யவாதிகளும் வலதுசாரிகளும் அகற்றுகின்றார்கள்.
திசைமாறிய அஞ்செலா மேர்க்கல்
ஜேர்மனித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த அஞ்செலா மேர்க்கல் குடிவரவு தொடர்பான தனது கொள்கையை மாற்றுகின்றார். போலாந்திலும் ஹங்கேரியிலும் தேர்தல் மூலம் தாராண்மைவாதத்தை எதிரிப்பவர்கள் அதிலும் முக்கியமாக குடிவரவு சுதந்திர ஊடகம் ஆகியவற்றிற்கு எதிரானவர்கள் பதவியைக் கைப்பற்றினர். சுவீடனிலும் நெதர்லாந்திலும் தாராண்மைவாதத்திற்கு எதிரான தீவிரவாதங்களைக் கொண்டவர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெறுகின்றனர். தாராண்மைவாதத்திற்கு எதிரானவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நாடுகளின் வரிசையில் இத்தாலியும் இணைந்து கொண்டது.
சோவியத்தின் எழுச்சி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நாற்பத்தைந்து ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் படைக்கலத் தொழில்நுட்ப அடிப்படையிலும் படை வலு அடிப்படையிலும் மேற்கு நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் ஒரு போர் மூண்டால் பேராபத்து விளைவிக்கக் கூடிய நிலையிலும் இருந்த படியால் போர் தவிர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெரும் போர் ஏதும் முளாமல் இருப்பதற்கு தாராண்மைவாதம் முழு உரிமை கொண்டாட முடியாது.
அமெரிக்க வீழ்ச்சி
இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகச் செல்வத்தில் மூன்றில் இரண்டு பகுதியை தன்னிடம் வைத்திருந்தது. 1960இல் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியில் 40விழுக்காடாகக் குறைந்தது. 1980இல் அது மேலும் குறைந்து 26விழுக்காடானது. தற்போது அது மேலும் குறைந்து 22விழுக்காடாக உள்ளது. அமெரிக்கா பொருளாதார ரீதியில் உலகில் செலுத்திய ஆதிக்கம் வலுவிழக்கும் நிலையில்தான் அமெரிக்கா முதன்மையாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் மக்களிடையே செல்வாக்குப் பெற்றார். தாராண்மைவாதத்தை ஒழித்துக் கட்டாவிட்டால் அது தனது நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு முயலும் என உணர்ந்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட இரகசியமாகச் செயற்பட்டிருக்கலாம்.
பிரபல்யவாதிகள் மேற்கு நாடுகளில் செல்வாக்கு பெறுவதற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களே. பல மேற்கு நாட்டு நகரங்களில் சுதந்திரமாக நடமாட முடியாது என்ற நிலை உருவாகலாம் என்ற அச்சமே குடிவரவிற்கு எதிரான கொள்கையுடையோரைப் பிரபலப்படுத்தியது. பல ஐரோப்பிய நகரங்களில் குடிவரவாளர்களின் எண்ணிக்கை உள்நாட்டு மக்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்தது. இலண்டன் உட்படப் பல முக்கிய நகரங்களில் குடிவரவாளர்கள் நகரபிதாக்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரபல்யவாதிகள் குறை சொல்ல மட்டுமே
பிரபல்யவாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கூச்சலில் சிறந்து விளங்குவது போல் ஆட்சிக்கு வந்தபின்னர் சிறந்த ஆட்சியை வழங்குவதில்லை. அவர்களால் தாராண்மைவாதிகள் ஏற்படுத்திய “ஒழுங்கை” குழப்ப முடியும் ஆனால் அவர்களால் தமது பாணியில் ஓரு ஒழுங்கை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. தாராண்மைவாதிகள் பல ஆண்டுகள் முயற்ச்சித்து வளர்த்த நாடுகளிடையேயான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வர்த்தகப் போர் எனப்படும் இறக்குமதித்தீர்வை அதிகரிப்பு இறக்குமதிக் கடுப்பாடு போன்றவற்றால் குழப்ப முடியும். ஆனால் உலக வர்த்தகம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குன்றலை தடுக்க முடியாது. அமெரிக்காவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதியால் உறுதியான தலைமையைக் கொடுக்கக் கூடிய நிலை நிலவுகின்றது. ஆனால் டிரம்பால் ஓர் உறுதியான அரச முகாமையை இன்னும் கட்டி எழுப்ப முடியவில்லை. அமெரிக்க அதிபருக்கு இருக்கும் அதிக அதிகாரம் அவரை உறுதியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. பிரித்தானியாவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதிகளால் ஓர் உறுதியான தலைமைய வழங்க முடியவில்லை. தாராண்மைவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் இருந்து பின்வாங்கினர். ஆளும் கட்சியிலேயே செல்வாக்கில்லாத தெரெசா மே தலைமை அமைச்சராக இருந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கின்றார்.
விதிகளை மீறுவது
உலக வர்த்தக அமைப்பு என்பது விதி அடிப்படியிலான தாராண்மைவாதிகளால் உருவாக்கப்பட்டது. அதன் நடைமுறைகளை மீறியச் செயல்களைப் பிரபல்யவாதிகள் செய்கின்றனர். ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு விரோதமாக டிரம்ப் ஜெருசேலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத்தூதுவரகத்தை அமைத்தார்
பிரபல்யவாதிகள் அவ்வப்போது சொல்லும் கருத்துக்கள் நாகரீக வளர்ச்சியடைந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் குடிவரவாளர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் மனிதாபிமானமற்றவையாகவும் இருக்கின்றன. உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கோ அல்லது அமைதிக்கோ அவர்களால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்களது வெற்றி தற்காலிகமானதே. தாராண்மைவாதம் தம்மீது வரிச்சுமையை அதிகரிக்கின்றது என்பதால் பெருமுதலாளிகளால் களமிறக்கப்பட்டவர்களே பெரும்பாலான பிரபல்யவாதிகளாக இருக்கின்றனர்.
No comments:
Post a Comment