அமெரிக்க
அதிபரின் குணங்களையும் செயற்பாடுகளையும் ஆய்வு செய்த வட கொரிய அரசுறவியலாளர்கள்
அவர் போருக்கும் தயார் அமைதிப் பேச்சு வார்த்தைக்கும் தயார் எனக் கண்டறிந்தனர்.
அமெரிக்கா வட கொரியாமீது போர் தொடுக்கத் தயாராகின்றது என அறிந்த வட கொரியா அவரது
பேச்சு வார்த்தைக்கு விரும்பும் மனதைத் தட்ட அவரது மகளின் கணவரான ஜரர்ட் குஷ்னர்
சரியான ஆள் என்பதையும் அறிந்து கொண்டனர். இந்நிலையில் வட கொரிய அரசு குஷ்னரைச்
சந்திக்க விரும்புவதாக அமெரிக்காவிடம் தெரிவித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறைச்
செயலாராக இருந்த ரிக்ஸ் ரில்லர்சனூக்கும் ஜரர்ட் குஷ்ன்ருக்கும் ஒத்துவராத நிலை
இருந்தது. குஷ்னரின் வேண்டுதலின் பேரிலேயே ரில்லர்சன் வட கொரிய அதிபரை
சந்திக்காமல் அப்போது சிஐஏயின் அதிபராக இருந்த மைக் பொம்பியோ சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டது.
இதுவரை சொன்னவை
இதுவரை
காலமும் அமெரிக்க ஊடகங்களும் அரசும் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் அவர்களை ஓர் அமெரிக்க மாணவனைக் கைது செய்து பல
ஆண்டுகள் தடுத்து வைத்திருந்து நடைப்பிணமாக ஒப்படைத்தவர் என்றும், தனக்குப் பிடிக்காதவர்களை வெறிநாய்களைக் கொண்டு கடித்துக் குதற
வைப்பவர் என்றும் தன் எதிரிகளை விமான எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கிக் கொல்பவர்
என்றும் மலேசிய விமான நிலையத்தில் நச்சுப் பதார்த்தத்தால் தனது
மாற்றந்தாய் மகனைக் கொன்றவர்
என்றும் அடிமை முகாமில் பல்லாயிரக்
கணக்கானோரை அடைத்து வைத்திருப்பவர்
என்றும் இணையவெளியில் பயங்கரவாத நடவடிக்கைகள் செய்பவர் என்றும் அறிமுகம் செய்து
வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபரை சிறிய ரொக்கெட் மனிதன்
என்று சொல்ல அதற்குப் பதிலடியாக அவரை இவர் புத்தி பேதலித்த கிழவன் என விபரித்தார்.
ஆனால் இப்போது கிம் ஜொங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் சரி சமாக நின்று
பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்கக்
கழுத்தில் வட கொரியக் கத்தி
அமெரிக்காவின்
வட கொரியா தொடர்பான நிலைப்பாட்டிற்குக் காரணம் அது உற்பத்தி செய்த கண்டம் விட்டுக்
கண்டம் பாயும் ஏவுகணைகளும் பரீச்சித்த அணுக் குண்டுகளுமே ஆகும். அமெரிக்காவின்
எப்பாகத்தையும் வட கொரியாவால் அணுக்குண்டால் தாக்கி அழிக்கக் கூடிய நிலை
உருவாகிவிட்டது. வட கொரியாவின் ஹவசாங்-14, ஹவசாங்-15 ஏவுகணைகள் 8100மைல்கள் பாயக் கூடியவை. வட
கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள தூரம் 6423மைல்கள். ஆறு
மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவும் வட கொரியாவும் போரின் விளிம்பு வரை
சென்றிருந்தன. உலகம் எப்போதும் கண்டிராத வகையில் நெருப்பும் கடுப்பும் நிறைந்த தாக்குதலை
வட கொரியா மீது செய்வேன் என டிரம்ப் முழங்கியிருந்தார். அமெரிக்க அதிபர் வட கொரிய
அதிபருக்கு மரியாதை கொடுத்து நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக்
காரணம் வட கொரியாவிடம் உள்ள படைக்கலன்கள்தான். 7 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் 1200 நடுத்தர தூர ஏவுகணைகளையும் வட
கொரியா வைத்துள்ளது. ஒரு மில்லியன் படையினரைக் கொண்ட வட கொரியா எண்ணிக்கை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய படையினரிக் கொண்டுள்ளது. இணையவெளிப் போரைப் பொறுத்தவரை வட கொரியா ஒரு வல்லரசு என நிபுணர்கள் கருதுகின்றனர். இரு நூறுக்கு மேற்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை வட கொரியா வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐம்பது முதல் அறுபது வரையிலான அணுக்குண்டுகளை வட கொரியா வைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவற்றை அழிக்க அமெரிக்கா முயன்றால் அந்த
முயற்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள்
பல்லாயிரக் கணக்கான எறிகணைகளை வட கொரியா தென் கொரியத் தலைநகர் சியோல் மீது வீசி
பேரழிவை ஏற்படுத்தலாம். தென் கொரியாவில் இருக்கும் 28,500 அமெரிக்கப் படையினர்
மீதும் ஜப்பானில் நிலைகொண்டிருக்கும் 54,000 அமெரிக்கப் படையினர் மீதும் வட
கொரியாவால் ஏவுகணைகள் வீசித் தாக்குதல் செய்ய முடியும். அமெரிக்காவின் ஏவுகணை
எதிர்ப்பு முறைமை நூறு விழுக்காடு வெற்றி தரும் எனச் சொல்ல முடியாது. அதனால் வட
கொரியாமீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டத்தை தென் கொரியா கடுமையாக எதிர்த்து
வந்தது.
எல்லாவற்றையும் இயக்கியது மருமகனே
சிங்கப்பூரில்
இருந்து செயற்படும் அமெரிக்கச் செல்வந்த வர்த்தகரான Gabriel Schulze டிரம்பின் மகளின் கணவரான ஜரட்
குஷ்னருடன் நெருங்கிய தொடர்புள்ளவர். Gabriel Schulze மூலமாக வட கொரியா குஷ்னரை அணுகியது.
டிரம்பிற்கும் கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான சந்திப்பு சம்பந்தமானவற்றை அமெரிக்க
வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவிற்குப் பின்னால் இருந்து கொண்டு குஷ்னரே
எல்லாவற்றையும் இயக்கினார். ஆரம்பத்தில் இரு தரப்பு உளவுத் துறையினரும் இலாபத்தை நோக்கமாகக்
கொண்ட சில வர்த்தகர்களுமே இரு தரப்புப் பேச்சு வார்த்தை தொடர்பாக கலந்துரையாடி முடிவுகளை
எடுத்தனர். அதில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஓரம் கட்டப்பட்டிருக்கலாம். சீனாவும் அமெரிக்க
வெளியுறவுத் துறையை ஓரம் கட்டிவிட்டு டிரம்பின் மகளுடனும் குஷ்னருடனும் தொடர்புகளை
ஏற்படுத்தி அவர்கள் மூலமாக டிரம்புடனான பல பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டது. அதையே வட
கொரியாவும் பின்பற்றியது.
டிரம்ப்
– கிம் கூட்டறிக்கை
டொனால்ட்
டிரம்பும் கிம் ஜொன் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து புன்னகை மிளிரப் பேச்சு
வார்த்தை நடத்தி ஒரு கூட்டறிக்கையை வெளிவிட்டனர். அந்த அறிக்கையை ஆரம்பத்தில்
இரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதைத் தூக்கிப் பிடித்துப்
பத்திரிகையாளர்களுக்கு காண்பித்த போது அவர்கள் அதைப் படம் பிடித்து அதில்
உள்ளவற்றை அம்பலப் படுத்தினர். அதில் வட கொரியாவை அணுப்படைக்கலன்களற்ற
பிரதேசமாக்குவது எப்படி என்ற விபர்ம் இருக்கவில்லை. கிம் ஜொங் உன் அணு அகற்றலுக்கு ஒத்துக் கொண்டாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் அதற்கான செயன்முறை மிக மிக விரைவாக ஆரம்பிக்கப்படும் என்றார்.
கூட்டறிக்கையில் நான்கு முக்கிய விடயங்கள் உள்ளன:
1. அமெரிக்காவும்
வட கொரியாவும் தத்தம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப புதிய உறவை ஏற்படுத்தி
அமைதியையும் செழுமையையும் உருவாக்க வேண்டும்.
2. வட கொரியாவும்
அமெரிக்காவும் தமது முயற்ச்சிகளை இணைத்து நிலையான அமைதியுடைய ஆட்சியை கொரியத்
தீபகற்பத்தில் ஏற்படுத்துதல்
3. வட
கொரிய அதிபரும் தென் கொரிய அதிபரும் 2018 ஏப்ரல் மாதம் 27-ம் திகதி செய்த
பிரகடனத்தின்படி கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவகற்றலைச் செய்தல்
4. அமெரிக்காவும்
வட கொரியாவும் போர்க்கைதிகளையும் இறந்த போர்க்கைதிகளின் எச்சங்களையும் பரிமாறுதல்
டொனால்ட்
டிரம்பும் கிம் ஜொங் உன்னும் கையொப்பமிட்ட கூட்டறிக்கையில் அணுவகற்றல் (Denuclearization) பற்றிக்
குறிப்பிட்டிருந்தாலும் அது எப்படி நிறைவேற்றப்படும் எனவோ அல்லது எப்போது
நிறைவேற்றப்படும் எனவோ குறிப்பிடவில்லை.
டிரம்ப்-கிம்
ஜொங் உன் சந்திப்பின் பின்னர் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டிரம்ப் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். “சந்திப்பு பெரு வெற்றி. நாம் சிறந்த உறவை உருவாக்குவோம் கொரியத் தீபகற்பத்துடனான அமெரிக்க உறவில் பெரிய மாற்றம் ஏற்படும்”
என்றார் டிரம்ப். கிம் ஜொங் உன் “பழைய சிந்தனைகள் பெரும் சந்திப்பிற்குப் பெரும் தடையாக இருந்தன. இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. இதன் மூலம் பெரிய மாற்றத்தை உலகம் இனிக் காணும்.”
என்றார்.
அனுபவம்
புதுமை
தனக்கு
முன் பரீச்சயம் இல்லாத ஒருவருடன் தனக்குப் முன் அனுபவம் இல்லாத ஒரு துறை தொடர்பாக பேச்சு வார்த்தை செய்ய டிரம்ப் போதிய தாயரிப்பு இன்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கிம் ஜொங் உன்னைப் பொறுத்தவரை ஓர் அமெரிக்க அதிபருடன் சந்தித்து உரையாடியதே அவருக்கு பன்னாட்டரங்கில் கிடைத்த ஒரு அங்கீகாரம். ஒரு தேறாத நாட்டின் இரக்கமற்ற குணமுடைய ஆட்சியாளர் என அவருக்கு மேற்கு நாட்டு ஊடகங்கள் வரைந்த பிம்பத்தை இச் சந்திப்பு துடைத்தெறிந்துவிட்டது. அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அவரது தந்தையோ அல்லது பேரனோ சாதிக்காத ஒன்றை கிம் ஜொங் உன் சாதித்து விட்டார்.
சீனக் காட்டில் மழை
வட கொரிய அதிபருடனான
சந்திப்பின் பின்னர் டிரம்ப் சொன்ன இரண்டு வாசகங்கள் சீன ஆட்சியாளர்களின் காதில்
தேனாகப் பாய்ந்திருக்கும். முதலாவது வட கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்யும்
“ஆத்திரமூட்டும் போர் விளையாட்டு” நிறுத்தப்படும் என்பது. இரண்டாவது. எமது
படையினர் கொரியாவில் இருந்து வெளியேறுவதை நான விரும்புகின்றேன் என டிரம்ப் சொன்னது.
டிரம்ப் அப்படிச் சொன்னதை அவரது குடியரசுக் கட்சிக்காரர்களே எதிர்த்துள்ளார்கள்.
டிரம்ப் மிக விரைவாக மிக அதிகமான விட்டுக் கொடுப்புக்களைச் செய்கின்றார்
என்கின்றனர் அவர்கள். ஆனால் படையினர் வெளியேற்றம் இப்போது திட்டத்தில் இல்லை
என்றார் டிரம்ப். அமெரிக்காவின் எதிரிகள் பாவிக்கும் “ஆத்திரமூட்டும் போர்
விளையாட்டு” என்றசொற்றொடரை டிரம்பும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொன்னது
பல அமெரிக்கர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. தென் கொரியாவைப் பாதுகாக்கச் செய்யும்
போர்ப்பயிற்ச்சி என்பதையே அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் பாவித்தனர். வட
மற்றும் தென் கொரியத் தலைவர்கள் 2018 ஏப்ரல் 27-ம் திகதி செய்த சந்திப்பிலும்
பின்னர் டிர்ம்பும் கிம் ஜொங் உன்னும் செய்த சந்திப்பிலும் சீனாவின் கரிசனைகள்
கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. தென் கொரியாவுடன் போர்ப்பயிற்ச்சி செய்வதை
நிறுத்துவதாலும் தென் கொரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாலும்
அமெரிக்கா பெரும் தொகைப் பணத்தைச் சேமிக்க முடியும் என தான் அமெரிக்க அதிபர்
தேர்தல் பரப்புரை செய்யும் போது டிரம்ப் அடிக்கடி சொல்லியிருந்தார். ஆனால் சில
படைத்துறை ஆய்வாளர்கள் டிரம்ப் அமெரிக்காவின் நட்பு நாடுகளைப் பகைப்பதாலும்
அமெரிக்காவின் படையினரை பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றுவதாலும் இதுவரை
அமெரிக்கா உலக அரங்கில் செலுத்தி வந்த ஆதிக்கத்தை இரசியாவிற்கும் சீனாவிற்கும்
தாரைவார்த்துக் கொடுக்கின்றார் என்கின்றனர். மேலும் சிலர் அமெரிக்க அதிபராக
டிர்ம்ப் பதவி வகிப்பது இரசியாவிற்கும் சீனாவிற்கும் பெரும் பேறாக உள்ளது
என்கின்றனர்.
எதையும்
சாதிக்கவில்லை
டொனால்ட்
டிரம்பும் கிம் ஜொங் உன்னும் கை குலுக்கியதும் முதுகில் தட்டியதும் ஒருவரை ஒருவர் பாராட்டியதும் மட்டுமே செய்தார்கள். உருப்படியாக ஏதும் செய்யவில்லை. என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இச்சந்திப்பைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் மட்டத்திலும்
நிபுணர்கள் மட்டத்திலும் பல சந்திப்புக்கள் செய்து சரியான கலந்துரையாடல்களும்
முடிவுகளும் எட்டினால் இரு நாடுகளுக்கும் இடையில் உருப்படியான உறவுக்கு வழி
பிறக்கும். டிரம்ப்பிற்கு முன்னர் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தவர்கள்
வேண்டுமென்றே கொரியப் பிரச்சனையித் தீர்க்காமல் இருந்தார்களா? கொரியாவில் பிரச்சனை
இருக்கும் வரைதான் அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் நிலை கொண்டு அமெரிக்க
ஆதிக்கத்தை பசுபிக் பிராந்தியத்தில் வட பகுதியில் நிலை நிறுத்த முடியும்.
நோபல்
பரிசு யாருக்கு
டிரம்பும்
கிம் ஜொங் உன்னும் பேச்சு வார்த்தை நடத்த முன்னரே டிரம்பினது ஆதரவாளர்கள்
டிரம்பிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனச் சொல்வதுடன்
நிற்காமல் டிரம்ப் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அதைச் சொல்லி கூச்சலிடவும்
தொடங்கிவிட்டனர். ஆனால் நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டியவர் தென் கொரிய அதிபர்
மூன் ஜே இன் ஆவார். பேச்சு வார்த்தையில் அவரும் கலந்து கொண்டிருக்க வேண்டும் ஆனால்
அவரை டிரம்ப் ஓரம் கட்டிவிட்டார். தென் கொரியாவில் நடக்க வேண்டிய பேச்சு
வார்த்தையை சிங்கப்பூரில் வைத்ததே அவரை ஓரம் கட்டத்தான். சிங்கப்பூர் இருபது
மில்லியன் செலவில் சந்திப்பிற்கான வசதிகளைச் செய்து கொடுத்தது. சிங்கப்பூர் துணைத்
தலைமை அமைச்சர் தர்மன் சண்முகரத்தினமும் வெளிநாட்டமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும்
சந்திப்பு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
கிம்
ஜொங் உன் வட கொரியாவைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க சீன உறவு சீரடைந்த
பின்னர் கொரியாவில் முதலீடு செய்து இலாபமீட்டுவராக டிரம்பின் மருமகன் ஜரர்ட் குஷ்னர்
திகழ்வார் என்பதில் ஐயமில்லை. டிரம்பின் மகளின் பல உற்பத்திப் பொருட்களை சீனாவில் விற்பனை
செய்ய சீன அரசு அனுமதித்துள்ளதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
கொரியத் தீபகற்பத்தை அமெரிக்கப்
படையற்ற பிரதேசமாக
மாற்றினால் அது அந்தப் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சீனாவிற்குப் பாதகமாக அமையலாம். ஜப்பான் தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும்.
No comments:
Post a Comment