Friday, 6 July 2018

திறக்காத சீனக் கதவுகள் உடைக்கப்படுமா?

சீனாவிற்கு என்று ஒரு மிக நீண்ட வரலாறும் கலாச்சாரமும் இருக்கின்ற போதிலும் அதன் தற்போதைய ஆட்சி முறைமையும் பொருளாதாரக் கட்டமைப்பும் மிகவும் புதியதும் வளர்ச்சியடையாத ஒன்றுமாகும் என மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்ற போதிலும் அது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியைப் பேணி வருகின்றது. எந்த ஒரு முதலாளித்துவ நாடும் அப்படி ஒரு சாதனையை செய்ததில்லை. 1978-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தம் எண்பது கோடி மக்களின் வறுமையை நீக்கியது எனச் சொல்வதா அல்லது மேற்கு நாடுகளில் நிலவிய தாராண்மைவாதத்தை சீனா பயன்படுத்தி தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியது எனச் சொல்வதா?

மேற்கு நாடுகளில் பணவீக்கம் பெரும் பிரச்சனையாக இருந்த போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலிவான பொருட்கள் பணவீக்கத்தைத் தணிக்க உதவின. சீனாவின் பொருளாதாரம் வளர்ந்தால் சீனா தமது நாடுகளில் இருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளும் அதனால் தமது நாடுகளின் பொருளாதாரம் நன்மையடையும் என மேற்குலகில் உள்ள தாராண்மைவாத ஆட்சியாளர்கள் நம்பினர். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக சீனா மேற்கு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதி அது அந்த நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியிலும் பார்க்கக் குறைவாகவே உள்ளது. இந்த நிலை தொடர முடியாது சீனா தனது நாட்டுக்கான ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது தனது பொருளாதாரத்தைத் மற்ற நாடுகளுக்கு திறந்துவிடக்கூடிய வகையில் பொருளாதாரச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் உலக அரங்கில் வலிமையடையும் வேளையில் மேற்கு நாடுகள் பலவற்றில் தாராண்மைவாதிகள் தேர்தலில் தோல்வியடைந்து தேசியவாதிகள் ஆட்சிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அதன் ஏற்றுமதி 18 விழுக்காடாக இருக்கின்றது. 2017-ம் ஆண்டு சீனா அமெரிக்காவிற்குச் செய்த ஏற்றுமதி 506பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து செய்த இறக்குமதியின் பெறுமதி 130பில்லியன் டொலர்கள் மட்டுமே. இதுதான் அமெரிக்கத் தேசியவாதிகளை ஆத்திரப்படுத்துகின்றது. இதனால்தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் அதிகரித்து வர்த்தகப் போர் தொடுத்துள்ளார். பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை அதிகரிக்கின்றது. ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது அதிக ஏற்றுமதி செய்யும் சீனாவே என டொனால்ட் டிரம்ப் நம்புகின்றார். அது மட்டுமல்ல மேற்குலகத் தேசியவாதிகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன் படைத்துறைவளர்ச்சிக்கே வித்திடுகின்றது. எமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அப்பணத்தில் படைக்கலன்களை உருவாக்கி எமது நாடுகளுக்கே அச்சுறுத்தல் கொடுக்கும் நாடாக சீனா உருவாகின்றது என மேற்குலகத் தேசியவாதிகள் ஆத்திரப்படுகின்றார்கள். சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை விரும்பவில்லை. உள்நாட்டு மக்களின் கொள்வனவை அதிகரிக்கவே அது விரும்புகின்றது. அதற்கு உள்நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் சீனா எந்த ஒரு உற்பத்தியையும் ஏற்றுமதி செய்ய முடியாதவாறு சீனப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.
சீனா தனது ஏற்றுமதியால் கிடக்கும் பணத்தைக் கொண்டு மேற்குலக வர்த்தக நிறுவனங்களை வாங்கி அவற்றின் தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொள்கின்றது என்பதையிட்டும் மேற்குலகத் தேசியவாதிகள் கரிசனை கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல சீனா இணையவெளியூடாக தமது தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவும் அமெரிக்கா சீனாமீது இறக்குமதிக்கான வரி அதிகரிப்பால் செய்யப்படும் வர்த்தகப் போரின் ஒரு காரணியாகும்.

தமதமாகும் திருத்தம்
சீனா தனது பொருளாதாரத்தைச் சீர்திருத்தம் செய்வேன் என்றும் தனது நாட்டுப் பொருளாதாரம் திறந்து விடப்படும் என்றும் கடத்த பல பத்தாண்டுகளாக அடிக்கடி சொல்லி வந்தாலும் அது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. சீனாவின் பொருளாதாரம் சீர்திருத்தம் செய்யப் படும்போது அத்துடன் இணைந்த அரசியற் சீர்திருத்தமும் செய்யப்படவேண்டும் என்பதே சீனப் பொதுவுட்மைக் கட்சிக்காரர்களின் அச்சமாகும். அரசியற் சீர்திருத்தம் பலகட்சி முறைமையைக் கொண்டுவரும் அது பொதுவுடமைக் கட்சியின் ஆதிக்கத்தைப் பாதிக்கும். திறந்த பொருளாதாரம் நாட்டில் ஆட்சியின் பிடியைத் தளர்த்துவதுடன் சீனாவில் மேற்குகலக ஊடக ஆதிக்கத்திற்கும் வகுக்கும். அதனால் சீனப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கைகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வராமல் தனது பிடியை கட்சியும் ஆட்சியிலும் இறுக்கினார்.

சீனாவில் உள்நாட்டுக் கிளர்ச்சி
சீனா தனது பொருளாதாரக் கதவுகளைத் திறக்காவிடில் அதை வெளியில் இருந்து உடைக்கும் முயற்ச்சி அதற்கு எதிரான வர்த்தகப் போராகும். அதை உள்ளிருந்து உடைப்பது என்பது சிரமமான ஒன்றாகும். சீன அரசு தனது குடிமக்கள் மீதான தனது கண்காணிப்பை நவீன கருவிகளைக் கொண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் முன்னாள் படைவீரர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்துள்ளனர். சீனாவின் முன்னாள் படைவீரர் ஒருவர் தனக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கச் சென்றிருந்த வேளையில் அவர் காவற்துறையினரால் தாக்கப்பட்டார். இதை ஆட்சேபித்து பல்லாயிரக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ஆட்சேபணை தெரிவுக்கும் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதிக வயதான மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் ஓய்வூதியக் கொடுப்பனவு ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவில் 57மில்லியன் முன்னாள் படைத்துறையினர் இருக்கின்றனர். இவர்களின் அடியை ஒட்டி மற்ற முன்னாள் அரச ஊழியர்களும் போராட்டம் செய்யலாம். அது ஒரு போராட்டக் கலாச்சாரத்தை சீனாவில் வளரச் செய்ய வாய்ப்புண்டு. அதற்கு எதிராக சீன அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் அது அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுக்கலாம். இது சீனாவின் கதவுகளை உள்ளிருந்து உடைக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அதற்கு மேற்கு நாடுகள் தூபமிடலாம். ஆனால் அதை எல்லாம் அடக்கும் அனுபவம் சீனாவிற்கு உண்டு.

சீனா மாற்றி யோசிக்குமா?
சீனா தனது வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மேற்கு நாடுகளில் தங்கி இருக்காமல் அதன் அயல்நாடான இந்தியாவுடன் தனது வர்த்தகத்தை வளர்க்கலாம். 2017-ம் ஆண்டு இந்தியாவையும் பாக்கிஸ்த்தானையும் சீனாவும் இரசியாவும் உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைத்துக் கொள்ள சீனா சம்மதித்தது. 1956-ம் ஆண்டு கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை உருவாக்குவதில் இருந்து மற்ற நாடுகளுடன் இணைந்து செயற்பட்ட இந்திய இப்போது அந்த அமைப்பில் இருந்து மெதுவாக நழுவிக் கொண்டு மேற்கு நாடுகளுடன் கூட்டுச் சேருகின்றது. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுற்கு வந்த பின்னர் அந்த அமைப்பு தேவையற்ற ஒன்றாகிவிட்டது என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். சீனப் பொருளாதாரமும் படைத்துறையும் துரிதமாக வளர்வதால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்க அது மேற்கு நாடுகளுன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை உருவானது. இந்தியாவின் பழப் பெரும் அரசுறவியல் ஞானியான சாணக்கியரின் போதனை “உன் அயலவன் உனக்கு இயற்கையாகவே எதிரியாக இருப்பான். அதனால் அவனுக்கு எதிரியாக உள்ள அவனது அயலவனுடன் நீ நட்பை வளர்த்துக்கொள்” என்பதாகும். பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வியாபித்து இருப்பதல் அது சீனாவின் ஓர் அயல் நாடுபோல் இருக்கின்றது. இதனால் இந்தியா
அமெரிக்கா, ஜப்பானுடன், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளின் நட்பாக இருக்க வேண்டிய நிலை உருவானது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இந்தியாவுடன் அதிக அளவு தொழில்நுட்ப ஒத்துழைப்பைச் செய்கின்றது. அதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் இந்தியா LEMOA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Logistics Exchange Memorandum of Agreement ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதன் படி இந்தியாவின் படை நிலைகளை அமெரிக்கா தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் படைத்துறை நிலையை அமெரிக்காவிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. 2007-ம் ஆண்டு ஜப்பானியத் தலைமை அமைச்சரின் முயற்ச்சியால் நான்முனைப் பாதுகாப்பு உரையாடல் என்னும் அதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் இந்தியா LEMOA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Logistics Exchange Memorandum of Agreement ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதன் படி இந்தியாவின் படை நிலைகளை அமெரிக்கா தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் படைத்துறை நிலையை அமெரிக்காவிற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. 2007-ம் ஆண்டு ஜப்பானியத் தலைமை அமைச்சரின் முயற்ச்சியால் அலுவல் முறைசாரா அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் செயற்பாடுகளில் ஒன்றாக மலபார் போர்ப்பயிற்ச்சி செய்யப்படுகின்றது. இப்போர்ப்பயிற்ச்சி வரலாறு காணாத பெரிய போர்ப்பயிற்ச்சியாகக் கருதப்படுகின்றது.

இந்தியாவை இழுக்க முயன்ற சீனா
இந்திய சீன உறவில் எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகளாக தீர்க்க முடியாததாக இருக்கின்றது. இப்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை எனப்படும் One Belt One Road Initiative மேலும் ஒரு பிரச்சனையை இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பிரச்சனையை உருவாக்கியுள்ளது. அதன் ஒரு அம்சமான சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான பொருளாதாரப் பாதை பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் ஊடாகச் செல்கின்றது. முழுக் கஷ்மீரும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் இந்தியா அதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமது பட்டுப்பாதையில் சீனா இணைய வேண்டும் என வேண்டுதலும் விடுத்திருந்தார். சீனாவின் புதிய பட்டுப்பாதையைக் பகிரங்கமாக எதிர்க்கும் இந்தியா அந்த வேண்டு கோளைப் பற்றி ஏதும் சொல்லவைல்லை.

அமெரிக்காவைச் சீண்ட சீனா தயங்குவதில்லை
ஜிபுக்தியிலும் பசுபிக் கடற்பிராந்தியத்திலும் அமெரிக்கப் போர் விமானிகளின் பார்வைக்கு குந்தக்கம் ஏற்படும் வகையில் சீனா அவர்களை நோக்கி லேசர் கதிர்களைப் பாய்ச்சுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இது ஒரு போர் என்று வரும் போது வலிமை மிக்க
அமெரிக்க வான்படையை எப்படிக் கையாள்வது என்பதை சீனா பரீட்சித்துப் பார்கின்றது போல் இருக்கின்றது. சீனாவின் இந்தப் படைத்துறை ரீதியான தன்னம்பிக்கையை உடைக்க மேற்கு நாடுகள் பொருளாதார அடிப்படையில் சீனாவைச் சிதைக்கச் சதி செய்யலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...