இந்துமாக் கடல் இந்தியாவின் கடலல்ல என அடிக்கடி சொல்லும் சீனா தென் சீனக்
கடலும் கிழக்குச் சீனக் கடலும் தன்னுடையது என வலியுறுத்தி வருவதுடன் தென் சீனக்
கடலில் கடற்படுக்கையில் உள்ள மணலை வாரி இறைத்து பவளப் பாறைகள் மேல் நிரப்பி பல
தீவுகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் பிரதாஸ் தீவுகள், பரசெல் தீவுகள். ஸ்காபரோ ஷோல், ஸ்பிரட்லி தீவுகள் ஆகியவை முக்கியமானவையாகும். சீனா தீவுகள் நிர்மாணிக்கும் கடற்பிரதேசத்திற்கு வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், புருனே போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி
வருகின்றன. சீனா பன்னாட்டுக்கடற்பரப்பில் தீவுகளை நிர்மாணிப்பதாக அமெரிக்கா
சொல்கின்றது. இதனால் உலகிலேயே இரு வல்லரசுகளுக்கு இடையில் போர் மூளும் ஆபத்துள்ள
பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கின்றது. ஆண்டு தோறும் 5.3ரில்லியன்
அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் கடந்து செல்லும் தென் சீனக் கடல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்
போக்குவரத்தும் எரிபொருளும்
தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும்
இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்
கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர் நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர்
நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல
தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும்
Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம்
தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. தென்
சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன. முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது
எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக்
கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம்
என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு.
இந்தியா, ஜப்பான், ஐக்கிய
இராச்சியம் உட்பட இருபது நாடுகள் கலந்து கொள்ள ஆண்டு தோறும் நடக்கும் பசுபிக் {The
Rim of the Pacific (RIMPAC)} விளிம்பு நாடுகளின் கடற்போர்ப் பயிற்ச்சியில்
கலந்து கொள்ள சீனாவிற்கு விடுத்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் இந்தப் படைப்பயிற்ச்சிக்கு சீனாவும் இரு தடவைகள் அழைக்கப்பட்டிருந்தது.
சீனா தென் சீனக்கடலில் தான் செயற்கையாக நிர்மாணித்த தீவுகளில் ஒன்றான ஸ்பிரட்லி
தீவில் பலவிதமான வலிமை மிக்க படைக்கலன்களை நிறுத்தியுள்ளது. சீனா அங்கு தீவுகளை
நிர்மாணிக்க ஆரம்பித்த போது அவற்றில் படையினரோ படைக்கலன்களோ நிறுத்தப்பட மாட்டாது
என அறிவித்திருந்தது. தற்போது சீனா அத்தீவுகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகள், இலத்திரனியல் குழப்பும் முறைமைகள் (electronic
jammers) போன்றவற்றை நிறுத்தியுள்ளமைக்கு உறுதியான ஆதரங்கள் கிடைத்திருப்பதால்
சீனாவுடன் இணைந்து பயிற்ச்சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்கப்
பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
தீவுகளுக்குள் தீப்பந்தம்
ஸ்பிரட்லி தீவுகளில் சுபி, மிஸ்சீஃப், ஃபியரி குரொஸ் ஆகிய
இடங்களில் விமானத் தளங்களை சீனா அமைத்துள்ளது. அவற்றுடன் உழங்கு வானூர்திகளுக்கான
கட்டமைப்பு உட்படப் பல சிறு கட்டமைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. பரசல்
தீவுகளில் உள்ள வூடி தீவில் பல காத்திரமான படைநிலைகளை சீனா நிர்மாணித்துள்ளதுடன்
ரடார் வசதிகளையும் உழங்கு வானூர்திகளுக்கான நிலைகளையும் நிர்மாணித்துள்ளது. இத்தீவுகளில்
சீனா வான் சண்டை விமானங்களையும் வேவு விமானங்களையும் ஏவுகணைச் செலுத்திகளையும்
பெருமளவில் நிறுத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவக்கூடிய சீர்வேக ஏவுகணைகச்
செலுத்திகளும் {ground-launched cruise missiles (GLCMs)
இனிவரும் காலங்களில் மேலும் பல தீவுகளை
படைத்துறை மயமாக்கும் திட்டம் சீனாவிடம் உண்டு. இரசியாவிடமிருந்து சீனா வாங்கும்
எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளும் அங்கு நிறுத்தப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவுகளா தீர்த்துக் கட்டுவோம் என்கின்றது அமெரிக்கா
இரண்டாம் உலகப் போரில் இருந்து மேற்குப் பசுபிக்
கடலில் சிறிய தீவுகளை சிதறடிக்கும் அனுபவம் அமெரிக்காவிற்கு நிறைய உண்டு என
அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகன் 2018 ஜூன் மாத
இறுதியில் தெரிவித்தது. சீனா உருவாக்கிய
செயற்கைத் தீவுகளை துவம்சம் செய்வது அமெரிக்காவிற்கு பெரும் பணியல்ல என்றா
அமெரிக்கக் கடல்சார் படையின் லெப்டினண்ட் ஜெனரல் கென்னத் மக்கென்சீ. மேலும் அவர்
தனது கருத்து சரித்திர அடிப்படையிலான உண்மை என்றும் அதன் மூலம் தான் சீனாவிற்கு
எதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் தற்போது
அமெரிக்கா பாரிய படைத்தளம் வைத்திருக்கும் குவாம் தீவு உட்படப் பல தீவுகளை பசுபிக்
மாக்கடலில் வைத்திருந்தது. போர் உக்கிரமாக நடக்கும் போது அத்தீவுகள் ஜப்பானுக்கு
அவை சொத்தாக இல்லாமல் பொறுப்பாக மாறியிருந்தது. அங்குள்ள படையினருக்கான ஆதார
வழங்கல்களைச் செய்வது பெரும் சிரமாக இருந்தது.
சீனக் கொல்லையில் அமெரிக்கக் கொள்கை
சிங்கப்பூரில் நடந்த ஷங்கிரிலா உரையாடல்
மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ்
சீனாவின் தென் சீனக் கடற் கொள்கை அமெரிக்காவின் திறந்த கடற் கொள்கைக்கு எதிரானதாக
இருப்பதால் இரு நாடுகளும் உடன்படாத நிலைகளில் அமெரிக்கா சீனாவுடன் கடுமையாகப்
போட்டியிடும் என்றார். அமெரிக்கா சீனாவுடன் ஆக்கபூர்வமான பயன்சார் உறவைத் தொடர
விரும்பினாலும் போட்டியிட வேண்டிய கட்டங்களில் தீவிரமாகப் போட்டியிடுவோம் என்றார்
ஜிம் மத்தீஸ்.
எகிறும் சீனா இரசியாவிற்கு அடங்கியது.
தென் சீனக் கடலில் வியட்னாமின் கரையில் வியட்னாமிற்காக
ஸ்பெயின் செய்த கடற்படுக்கை எரிபொருள் அகழ்வு முயற்ச்சி சீனாவின் மிரட்டலால்
கைவிடப்பட்டது. பின்னர் அதே பணியை இரசியா தற்போது இரசியா மேற்கொண்டு வருகின்றது.
இதை எதிர்த்து சீன வெளியுறவுத் துறை கடுமையான தொனியில் அறிக்கை ஒன்றை
வெளிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் பிலிப்பைன்ஸ் தென் சீனக்
கடலில் எரிவாயு உற்பத்தி செய்ய எடுத்த முயற்ச்சியும் சீனாவின் மிரட்டலால்
கைவிடப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்த சீன அதிபர் Reed Bank என்னும் கடலோரத்தில் ஒரு தலைப்பட்சமாகச் செய்யப்படும் எரிபொருள் அகழ்வுகள்
சீனாமீதான போராகக் கருதப்படும் என்றார். 2016-ம் ஆண்டு பன்னாட்டு கடல் எல்லை
தொடர்பான தீர்ப்பாயம் Reed Bank உட்படப் பல தீவுகளை பிலிப்பைன்ஸுக்கு
சொந்தமானது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது.
வலிமையில்லாச் செயற்கைத் தீவுகள்
ஒரு நாடு தன் தரையில் இருந்து வான் நோக்கியும்
தரையில் இருந்து தரைக்குமான ஏவுகணைச் செலுத்திகளை நிலத்துக்குக் கீழ் அல்லது
பாறைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருப்பது வழமை. அவற்றை எதிரியின் ஏவுகணை
வீச்சால் அழிக்க முடியாத வகையில் வைத்திருப்பது வழமை. இது படைத்துறை விமானங்களின்
ஓடுபாதைகளுக்கும் விமானத் தரிப்பிடத்திற்கும் பொருந்தும். மணல் வாரி இறைத்து
உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் படைக்கலன்களை மறைத்து வைத்திருப்பது கடினமான
ஒன்றாகும் நிலத்தைத் துளைத்துக் கொண்டு போகக்கூடிய ஏவுகணைகளால் தென் சீனக் கடலில்
உள்ள தீவுகளின் படை நிலைகளை இலகுவாக அழிக்க முடியும். அமெரிக்காவின் புலப்படாப்
போர்விமானங்களில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் வீசப்படும்
ஏவுகணைகள் தென் சீனக் கடற் தீவுகளில் உள்ள படை நிலைகளைத் துவம் செய்ய முடியும்.
சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து செயற்கைத் தீவுகளுக்கான வழங்கல்களை
அமெரிக்காவின் கடற்படையால் துண்டிக்க முடியுமானால் அது அத் தீவுகளின் அழிவிற்கு
வழிவகுக்கும். 2018 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீனாவின் ஸ்பிரட்லி தீவின் மேலாக
அமெரிக்காவின் அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக் கூடிய B-52 விமானங்கள் பறந்து சென்றன. இந்த விமானங்கள் டியாகோகாசியாத்
தீவில் உள்ள அமெரிக்கத் தளத்தில் இருந்து சென்று தென் சீனக் கடலில் மேலாகப்
பறந்துவிட்டுத் திரும்பின. இப்பறப்பு தனது பன்னாட்டு வான்பரப்பில் தான் வழமையாகச்
செய்யும் பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து சீனா வூடி தீவில் (Woody
Island ) இருந்து தனது ஏவுகணைச் செலுத்திகளை அகற்றியது. இதை
இஸ்ரேலிய செய்மதிகள் பதிவு செய்துள்ளன. 2018 ஜூன் 6-ம் திகதி தென் சீனக் கடலைப்
படைத்துறை மயமாக்குவது சீனாவல்ல அமெரிக்காவே நெ சீனா குற்றம் சாட்டியது. அத்துடன்
போர்விமானப் பறப்புக்களுக்குப் பயந்து சீனா தனது கடல் இறையாண்மையை விட்டுக்
கொடுக்காது என்றும் சூளுரைத்தது. அமெரிக்கா தனது மற்ற நட்பு நாடுகளையும் தென்
சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளையும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை தென்
சீனக் கடலில் செய்யும் படி வேண்டு கோளும் விடுத்துள்ளது.
சீனாவின் பன்மிகையொலி ஏவுகணைகள்
சீனா அண்மைக்காலங்களாக ஒலியிலும் பன்மடங்கு
வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டி வந்தது.
தற்போது அது அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு
வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணைகளை சீனா வெற்றீகரமாகப் பரிசோதனை செய்தும் உள்ளது. மேலும்
சீனா கடந்த பத்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக்
கூடிய ஆளில்லாப் போர்விமானத்தையும் உருவாக்கியுள்ளது. தாக்குதல் மற்றும் குண்டு
வீச்சுக்குப் பாவிக்கக் கூடிய இந்த ஆளில்லா விமானங்கள் கறுப்பு பாணம் என்னும்
குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்கக் கடற்படைக்கு பெரும்
அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியது.
கடந்த சில ஆண்டுகளாக தென் சீனக் கடல் தொடர்பாக
வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த அமெரிக்கா தற்போது பல படை நகர்வுகளைத்
தொடர்ச்சியாகச் செய்கின்றது. தென் சீனக் கடலினூடான சுதந்திரப் போக்கு வரத்தை
அமெரிக்கா எப்படியும் உறுதி செய்யும் என வலியுறுத்தியும் வருகின்றது. தென் சீனக்
கடல் இரு வல்லரசுகளுக்கும் இடையில் போரை ஆரம்பிக்காவிடினும் பனிப்போரை ஆரம்பித்து
விட்டது.
No comments:
Post a Comment