எரிந்து முடிந்து
கொண்டிருக்கும் சிரியா, துள்ளும் வட கொரியா, பரிதவிக்கும் யேமன், 2008இல் தொடங்கி
இன்னும் முடியாத உலகப் பொருளாதாரப் பிரச்சனை, திக்கற்று
நிற்கும் குர்திஷ் மக்கள், பிராந்திய ஆதிக்கத்திற்கும் போட்டியிடும்
ஈரானு, சவுதி அரேபியாவும், தொடர்ந்து
வஞ்சிக்கப்படும் பலஸ்த்தீனியர்கள், அசைக்க முடியாத நிலையை
உறுதி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல், தென் சீனக் கடலை
மெதுவாகவும் உறுதியாகவும் ஆக்கிரமிக்கும் சீனா, சுயநலனை
முன்வைப்பதை அதிகரித்த ஐக்கிய அமெரிக்கா, சமூக பொருளாதாரச்
சிக்கல் மிகுந்த தென் அமெரிக்கா போன்றவற்றை உலகம் தலையில் சுமந்த படி 2018இல்
காலடி எடுத்து வைக்கின்றது.
Cyber Pearl Harbour
and Cyber NATO
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பைக்
கொடுத்த Pearl Harbour தாக்குதல் போல அமெரிக்காமீது ஒரு இணையவெளித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கப் பாதுகப்புத் துறையினரை கடந்த சில
ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துள்ளது. அது போன்ற நாடுகள் கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய
நாடுகள் மீதும் செய்யப்படலாம் என்ற அச்சமும் பரவலாக உண்டு அதைத் தடுக்க ஒரு Cyber
NATO உருவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு
நாடுகள் இணையவெளிப் போர் புரியும் ஆற்றலுக்கும் இணையவெளித் தாக்குதல்களில் இருந்து
பாதுகாக்கும் ஆற்றலுக்கும் அதிகம் செலவு செய்யும். எல்லா மேற்கு நாடுகளும் இணைந்து
இணையவெளித் தாக்குதலுக்கு எதிராக NATO
போன்ற ஒரு கூட்டமைப்பை உருவாகும்.
ஆசியா
ஜப்பான, சீனா என எழுச்சியுறும்
வல்லாதிக்க நாடுகளான ஜப்பானிலும் சீனாவிலும் உறுதியான தலைவர்கள் ஆட்சியில்
இருக்கின்றனர். ஜி ஜின்பிங் தனக்குத்தானே சர்வாதிகாரியாக முடிசூடிக் கொண்டுள்ளார்
என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன்
உள்நாட்டுப் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபாட்டு இருப்பதும் அங்கு மக்கள்
ஒரு பிராந்தியத்தில் இருந்து இன்னொரு பிராந்தியத்திற்கு குடி பெயர்வதற்கு அரச
அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனை இருப்பதும் 2018இல் சீன அரசுக்கு தலையிடி
கொடுக்கக் கூடிய மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கலாம். அதிக
வயோதிபர்களைக் கொண்ட மக்கள் தொகை, பாதுகாப்புக்கு அமெரிக்காவில்
தங்கியிருப்பு, சீன அச்சுறுத்தல்.
நீண்ட கால மந்த நிலையில் பொருளாதாரம். தென்
கொரியாவின் மிரட்டல் ஆகிய பிரச்சனைகள் ஜப்பானை 2018இல் ஆட்டிப் படைக்கப்
போகின்றது. இந்த நிலையில் ஜப்பான் தனது அரசுறவியல் கொள்கையை மாற்றி யோசிக்குமா
என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஒரு பட்டி ஒரு தெரு என்னும் புதியபட்டுப்பாதை
திட்டத்தில் ஜப்பான் தானும் இணைவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. உலக
நாடுகள் எங்கும் உட்கட்டுமானங்கள் தொடர்பான ஏற்றுமதி செய்தல் மற்றும் ஈடுபடுதல்
போன்றவற்றில் சீனாவிடம் தனது வருமானத்தை ஜப்பான் இழந்து கொண்டிருக்கின்றது. அதை
மீளக் கட்டி எழுப்புவதில் சீனாவின் போட்டியாளராக இருப்பதிலும் பார்க்க பங்காளியாக
இருப்பதால் ஜப்பான் அதிக நன்மை பெற முடியும் என ஜப்பானியர்கள் கருதுகின்றார்கள்.
இதில் இணக்கம் கண்டால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான
முரண்பாட்டில் விட்டுக் கொடுப்புகள் அல்லது சமரசங்கள் ஏற்பட்டால் சீன
விரிவாக்கத்தை தடுக்கும் அமெரிக்க, ஜப்பானிய, இந்தியக் கூட்டணி வலுவிழக்கலாம். ஆனால் ஜப்பான் தனது படைவலிமையை
அதிகரிப்பதை நிறுத்தப் போவதில்லை. 2018-ம் ஆண்டில் ஜப்பான்
தன்னுடைய உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை அமெரிக்காவின் அதிநவீனமான F-35-B விமானங்கள் தாங்கக் கூடிய வகையில்
மாற்றியமைக்கவிருக்கின்றது. சீன ஆட்சியாளர்கள் மக்கள் மீதான தமது பிடியை மேலும்
இறுக்கவிருக்கின்றார்கள். சீனாவின் காவற்துறை 2018இல் படைத்துறையின் கீழ் கொண்டு
வரப்படவிருக்கின்றது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் பெப்ரவரி 9-ம்
திகதி முதல் 25-ம் திகதிவரை நடை பெறவிருக்கின்றது. அங்கு வட கொரியாவின்
பரப்பரப்புக்கள் பல நடைபெறலாம்.
இந்தியா 2018இல் பாக்கிஸ்த்தானுடனும்
பங்களாதேசத்துடனுமான தனது எல்லைகளை அடைத்துக் கொள்ளவிருக்கின்றது. எல்லை தாண்டிய
தீவிரவாதம் சட்ட விரோதக் குடிவரவு போன்றவற்றைத் தடுப்பதற்காக இந்தியா இதை
முன்னெடுக்கவிருக்கின்றது. 2017-ம் ஆண்டின் இறுதி வாரத்தில் கூட இந்தியாவின்
மூன்று படைவீரர்களை பாக்கிஸ்த்தானியப் ப9-டைகள் கொலை செய்தன. அதற்குப் பதிலடியாக இந்தியப்
படையினர் எல்லை தாண்டிச் சென்று பாக்கிஸ்த்தானியப் படை நிலைகள் மீது தாக்குதல்
நடத்திவிட்டுத் திரும்பினர். அமெரிக்கா இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை
வளர்ப்பதும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் பாக்கிஸ்தானுடன் கடுமையான நிலைப்பாட்டை
எடுப்பதும், இந்தியா பாக்கிஸ்த்தானுடனான படை வலிமை இடைவெளியை
தனக்கு சாதகமாக அதிகரிப்பதும் பாக்கிஸ்த்தானை சீனா பக்கம் அதிகம் சாய வைக்கின்றது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருடாகச்
செல்வது இந்தியாவை கடும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியா தைவானுடன்
படைத்துறைத் தொடர்புகளை ஏற்படுத்துவது சீனாவை ஆத்திரப்படுத்துகின்றது. இவற்றால்
இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் 2018இல் கடுமையாக முரண்பட
வேண்டியிருக்கும்.
ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி
அரேபியா ஆகியவை தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானுக்கு பல தொல்லைகளைக் கொடுக்கலாம்.
எரிபொருள் விலையும் ஈரானுக்கு சாதகமாக இருக்காது. உள்நாட்டில் இயல்பாகவும்
வெளிநாடுகளின் தலையீட்டுடனும் பல குழப்பங்கள் உருவாகலாம். 2018இல் உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளை ஈரான் எதிர் கொள்ளவேண்டியிருக்கும். லெபனான் வரை
தனது ஆதிக்கத்தை நீட்டும் ஈரானின் திட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும். ஈரானின்
ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிடமிருந்து பல பிரச்சனைகளை எதிர் கொள்ள
வேண்டியிருக்கும்.
கிழக்கு ஐரோப்பியா
உக்ரேனில் பிரச்சனை உக்கிரமடையும். ஏற்கனவே
உக்ரேனுக்கு ஜவலின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்யும் முடிவை அமெரிக்கா
எடுத்துள்ளது. உக்ரேனுக்கு தாக்கும் திறன் கொண்ட படைக்கலன்களை வழங்குவதில்லை என்ற
கொள்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக 2017இன் இறுதியில் முடிவு செய்தது. இது
இரசியாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலகின் தரம் மிக்க தாங்கிகளை
உற்பத்தி செய்யும் இரசியாவின் தாங்கிகளை எதிர்க்கக் கூடிய வகையில் அமெரிக்கா
உருவாக்கிய ஜவலின் ஏவுகணைகளை உக்ரேனில் பரீட்சித்துப் பார்க்க அமெரிக்கா
முயல்வதாகத் தெரிகின்றது. அமெரிக்காவின் FGM-148 Javelin ஏவுகணைகள் தனி ஒருவரால் தூக்கிச் செல்லக் கூடியது. அதனால் மறைந்திருந்து
தாக்குவதற்கு இலகுவானதாகும். இவை அமெரிக்காவின் இரு பெரும் படைக்கல உற்பத்தி
நிறுவனங்களான Raytheon,
Lockheed Martin ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டவை. பெலரஸ்
2018இல் இரசியாவிடமிருந்து மின்சாரம் வாங்கப் போவதில்லை என 2017இன் இறுதியில்
பெலரஸ் அறிவித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரசியாவுடன் படைத்துறை ரீதியில்
அதிக ஒத்துழைப்புச் செய்யும் நாடு பெலரஸ் ஆகும். பெலரஸை ஒரு சர்வாதிகாரி போல்
ஆண்டு கொண்டிருக்கின்றார் அலெக்சாண்டர் லுக்காஷெங்கோ. அவரது ஆட்சி முறைமை ஐரோப்பிய
ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ இணைவதற்கு ஏற்புடையதல்ல. ஆனால் இரசியாவிற்கான
பெலரஸின் கேந்திர முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து அவர் இரசியாவுடன் பொருளாதார
ரீதியில் பேரம் பேச முயல்வது எப்படி வெற்றியளிக்கும் என்பதை 2018 எமக்குச்
சொல்லும். ஆனால் பெலரஸை தமது நாட்டின் ஒர் பகுதியாகப் பார்க்கும் விளடிமீர்
புட்டீனின் கொள்கையை பெலரஸியர்கள் விரும்பவில்லை. தமது அயல்
நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமான லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலும்
நேட்டோவிலும் இணைந்திருப்பதை. பெலரஸியர்கள் அக்கறையுடன் அவதானிக்கின்றார்கள். அந்த
மூன்று போல்ரிக் நாடுகளின் அபிவிருத்தி பெலரஸை இரசியாவிடமிருந்து விலகத் தூண்டும்
என்பதை புட்டீன் அறிவார். அதனால் அந்த போல்ரிக் நாடுகளுக்கு பிரச்சனை கொடுத்து
பெலரஸை அடக்கும் முயற்ச்சியில் 2018இல் புட்டீன் ஈடுபடலாம்.
மேற்கு ஐரோப்பா
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து
வெளியேறுவது, ஜேர்மனியில் உறுதியற்ற ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களை மீறும் போலாந்து, அதை
வழிமொழியும் ஹங்கேரி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல தலையிடிகளை ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு கொடுக்க விருக்கின்றது.
தேர்தல்கள் நிறைந்த அமெரிக்கா
2018-ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய அமெரிக்காவின்
பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. மூதவையில் 33
தொகுதிகளுக்கான தேர்தலும் அத்துடன் நடக்கும். பிரேசிலிலும்
மெக்சிக்கோவிலும் அதிபர் தேர்தல் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. மெக்சிக்கோ அமெரிக்காவின் மூன்றாவது பெரிய
வர்த்தகப் பங்காளியாகும். அமெரிக்காவின் 482,000 வேலைவாய்ப்புக்கள்
மெக்சிக்கோவுடனான வர்த்தகத்தில் தங்கியிருக்கின்றது. கியூபாவின் தற்போதைய அதிபர்
ராவுல் காஸ்ரோ 2018இல் ஓய்வு பெற உப அதிபர் Miguel Díaz-Canel அவரது இடத்திற்கு வரவிருக்கின்றார். பெருவில் நடைபெறவிருக்கும் தென்
அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஆர்ஜெண்டீனாவில் நடை பெறவிருக்கும் G-20 நாடுகளின் மாநாட்டிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற
மாட்டார் என எதிர்பார்க்கப்பட்கின்றது டிரம்பின் வித்தியாசமான நிலைப்பாடு மற்ற
நாட்டுத் தலைவர்கள் பலரை அவர் நேரில் சந்திப்பதில் அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
ஹ்யூமோ சாவோஸ் 1999-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து வெனிசுவேலா நாட்டில்
ஏற்பட்ட உள் நாட்டுக் குழப்பம் அங்கிருந்து இரண்டு மில்லியன் மக்களை
வெளியேற்றியுள்ளது. 2018-ம் ஆண்டிலும் பெருமளவு மக்கள் வெளியேறலாம். அது பிராந்திய
அமைதிக்குப் பாதகமாக அமையலாம். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளிடையேயான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். 2018-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் அதிரடி
நடவடிக்கைக்களுக்கு குறைவிருக்காது.
பங்குச் சந்தை
உலகப் பங்குச் சந்தை 2017இல் சாதனை மிகு
வளர்ச்சியைக் கண்டபடியால் சில அதிக விலைகளைச் சரி செய்யும் வகையில் 2018இல்
பங்குச் சந்தை வளவர்ச்சி மிதமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
உலகப் பொருளாதார வளர்ச்சி வளர்முக நாடுகளின் அதிலும் முக்கியமாக இந்தியாவினதும்
சீனாவினதும் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் தங்கியுள்ளது. 2018இல் 10முதல் 15
விழுக்காடு வளர்ச்சியை உலகப் பங்குச் சந்தை பெறலாம்.
தொழில்நுட்பமும் எரிபொருளும்
பட்டரி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து
பட்டரியில் இயங்கும் வாகனங்களின் பாவனை அதிகரிக்கும். அது எரிபொருள் விலைகளுக்கு சவாலாக
அமைவதல் எரிபொருள் விலை 2018இலும் மந்தமாகவே இருக்கும். எரிபொருள் உற்பத்தி
செய்யும் நாடுகளின் தலைமையை சவுதி அரேபியா இழக்கும் வாய்ப்பு உள்ளது. இரசியா தலைமை
தாங்கலாம், ஒபெக் என்ற அமைப்பே செயலிழக்கலாம் அல்லது
கலைக்கப்பட்டு புதிய அமைப்பு இரசியா தலைமையில் உருவாகலாம். 3D அச்சு, செயற்கை விவேகம் போன்ற தொழில் நுட்பங்களும்
ஆளில்லா விமானங்கள் மூலமான விநியோகங்களும் 2018இல் மேன்மையடையும். மைக்குறோசொப்ட்
இன் அதிபர் பில் கேட்ஸ்ஸின் கருத்துப்படி இனி வரும் காலங்களில் விஞ்ஞானம், இயந்திரவிய, பொருளாதாரம் ஆகியவற்றில் திறன்
மிக்கவர்களுக்கே வேலை வாய்ப்புக்களின் முதலிடம் கிடைக்கும்.
ஊடகங்கள் – சமூகவலைத்தளங்கள்
பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு
சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படும்
அவற்றிற்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். பெரும் செல்வந்தர்கள் கைகளில் பல ஊடகங்கள்
இருப்பதால் சமூகவலைத்தளங்களின் பாவனை 2018இல் அதிகரித்துக் கொண்டே போகும்.
மேற்காசியா
சவுதி அரேபியா
பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் என்பது மட்டுமல்ல பல இஸ்லாமிய தீவிரவாத
அமைப்புக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும். பல அபிவிருத்தித் திட்டங்களைக்
கைவிட வேண்டி வரும். சவுதி அரேபியாவின் இஸ்ரேலை எதிர்க்காத நிலைமை வளைகுடா
நாடுகளிடையேயான ஒத்துழைப்பைப் பாதித்து மேற்காசிய கேந்திரோபாய சமநிலையில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும். பலஸ்தீனியர்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்.
2018இல் புதிய அணுகு முறைகளை பலஸ்த்தீனியர்கள் மேற்கொள்ளுவார்கள்.
Fintech என்னும் நிதித் தொழில்நுட்பம்
நிதித்தொழில்நுட்பம்
என்பது நிதிச் சந்தை, பங்குச் சந்தை, வங்கித் துறை,
மறைந்தநாணயங்கள் (crypto-currencies)
ஆகியவற்றில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தை இணைத்து அதன் மூலம் அவற்றின்
நடவடிக்கைகளை இலகு படுத்துவதும் துரிதப்படுத்துவதுமாகும். Fintech நிதித் தொழில்நுட்பத்தில் இலண்டன் தனது மேலாண்மையை
உறுதி செய்யும் வகையில் 2017-ம் ஆண்டு பல முதலீடுகளைச் செய்துள்ளது. சன்பிரான்ஸிஸ்கோ, பீஜிங், நியூயோர்க் ஆகிய நகரங்கள்
நிதித்தொழில்நுட்பத்தில் ஏற்கனவே முன்னணி நிலையில் உள்ளன. நிதித்தொழில்நுட்பத்தின்
மூலம் இலண்டனில் 2.4பில்லியன் முதலீடுகள் நிதிச் சந்தையில் பெறப்பட்டுள்ளன. இது
மற்ற ஐரோப்பிய நகரங்களான ஸ்ரொக்ஹொம், பரிஸ், அம்ஸ்ரடம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும். 2017-ம் ஆண்டு இந்தத் துறையில் பிரித்தானியா 825மில்லியன்
பவுண் முதலீடு செய்துள்ளது.
இணையவெளிப் போர் முறைமை
2018இல் அதிகம் செய்திகளில் அடிபடவிருப்பது
இணையவெளிப் போர் முறைமை,
இணைய
வெளித் திருட்டு மற்றும் ஊடுருவல்களே. இவற்றிற்கு எதிரான பாதுகாப்புக்களில் எல்லா
நாடுகளும் அக்கறை செலுத்தும். இணையப் பாவனை தொடர்பான் நம்பிக்கையீனம் 2018இல்
அதிகரிக்கும். நாடுகள் தமது தேர்தல்களை இணையவெளியூடான பாதிப்பில் இருந்து
பாதுகாப்பதில் அதிக அக்கறைக் காட்டும். போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள்
போன்றவற்றில் இணையவெளித் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கான
தொழில்நுட்பத்தை உள்ளடக்குதல் 2018இல் அதிகரிக்கும். தற்போது ஐரோப்பிய
ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசியா
இணையவெளி மூலம் பரப்புரைகளைச் செய்தும் இணையவெளி ஊடுருவல் மூலம் தேர்தல் முடிவுகளை
மாற்றி அமைத்தும் தனக்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தும் முயற்ச்சியில்
ஈடுபடலாம் என இரு அமைப்புக்களும் கரிசனை கொண்டுள்ளன. இதற்காக அந்த நாடுகளுடன்
பாதுகாப்புத் துறையிலும் இணையவெளியிலும் பல ஒத்துழைப்புக்களை
மேற்கொள்ளவிருக்கின்றன. அதில் முதற்படியாக 2018-ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும்
போலாந்தும் பல ஒத்துழைப்புக்களைச் செய்யவதற்காக தலைமை அமைச்சர் தெரெசா மே 2018இன்
முற்பகுதியில் போலாந்து செல்லவிருக்கின்றார்.
தேசியவாதங்களும்
பிரபலவாதங்களும் அதிகரிக்கவிருக்கும் 2018இல் உலக வருமான சமமின்மை, போர்கள், போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்வுகாண
முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனம் 2018இல் மேலும் அம்பலமாகும்.
No comments:
Post a Comment