Thursday, 4 January 2018

ஈரானிய ஆர்ப்பாட்டம் உள்ளக எழுச்சியா வெளிநாட்டுச் சதியா?

ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து கிளர்ச்சியாக மாறுவதுண்டு. கிளர்ச்சி பின்னர் புரட்சியாக மாறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆட்சி மாற்றம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருக்கலாம். தீய ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டும் வரலாம். 2017-12-28-ம் திகதி ஈரானில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் ஒரு வாரத்துக்குள் வேறு வேறு வடிவம் எடுத்தது. ஆரம்பத்தில் பொருளாதாரக் காரணங்களுக்காக அதிபர் ரௌஹானிக்கு எதிராக உருவான ஆர்ப்பாட்டம் பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக மாறியது. இப்போது உச்சத் தலைவர் கொமெய்னி ஒழிக என்றும் ஆட்சிமுறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் கூக்குரலிடும் ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.

அரச ஆதரவு ஆர்ப்பாட்டம்
2018-01-03 புதன் கிழமை ஈரானிய அரசு அரச ஊழியர்களையும் மாணவர்களையும் அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் படி தூண்டியது.  முதலாம் திகதி திகட்கிழமை வரை 12 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் மூன்றாம் திகதி அது 21 ஆக உயர்ந்து விட்டது. ஈரானிய அரசு பொதுமக்கள் உடையில் தனது படையினரை ஏவு விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதாகவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.


பச்சைப் புரட்சி
2009-ம் ஆண்டு பச்சைப் புரட்சி என்னும் பெயரில் நடந்த ஆர்ப்பாட்டம் அடக்கப்பட்டது. அதில் 2 முதல் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அது மத்திய தர வர்க்கத்து மக்கள் தேர்தலில் ஊழல் நடந்தது என்ற ஆத்திரத்தில் செய்த ஆர்ப்பாட்டம். இப்போதைய ஆர்ப்பாட்டம் ஈரானிய அடித்தட்டு மக்களால் செய்யப்ப்டுகின்றது. இது ஈரானிய வட கிழக்கு நகர் மஷ்சட்டில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் விலைவாசி எதிர்ப்புத்தான் ஆரம்ப நோக்கமாக இருந்தது. அதிலும் முக்கியமாக அரிசி விலைக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகத்தான் ஆரம்பித்தது.  முக்கிய பங்கு வகித்தது. இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் கொம் நகருக்குப் பரவியது. தொடர்ந்து ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கும் விரிவடைந்தது. தற்போது பெரும்பாலான ஈரானிய நகர்களில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

மரியாதை இழந்த கொமெய்னி
இஸ்லாமியக் குடியரசு வேண்டாம். புரட்சிப்படை அழிக. சர்வாதிகாரி ஒழிக.  “death to Rouhani” “death to khamenei” என்பவை அவர்களின் கூக்குரலாக இருந்தது. கொம்ய்னி என்ற சொல் பாவிக்காமல் செய்யட் அலி என்ற அவரது முதற்பெயரைப் பாவித்தனர். காவற்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் கொழுத்தப்பட்டன. ஈரான் ஐந்து வல்லரசு நாடுகளுடனும் ஜேர்மனியுடனும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையின் படி நீக்கப்பட்ட பொருளாதரத் தடையால் வறிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஈரானில் வேலையற்றோர் 12%. இளையார் மத்தியில் 12%இலும் அதிக வேலையின்மை காணப்படுகின்றது. விலைவாசி அதிகரிப்பு பத்து விழுக்காட்டிலும் அதிகமாகும்.

பேசும் கைப்பேசிகள்
ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் கைப்பேசிகளினூடகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடந்தபோது ஒரு மில்லியன் கைப்பேசிகள் மட்டும் ஈரானில் பாவனையில் இருந்தன. இப்போது 48மில்லியன் கைப்பேசிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40மில்லியன் மக்கள் பாவிக்கும் செயலி டெலிகிராஃப் மூலமாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்துபவர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ஜாம். ஆனால் ஆர்ப்பாட்டம் ஒரு தலைமை இன்றி நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. விகிதாசார அடிப்படையில் உலகில் அதிக அளவு இறப்புத் தண்டனை ஈரானில் வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஈரானிய ஆர்ப்பாட்டங்களுக்கு வேறு வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டன:

1. ஈரானில் கடுமையான மதவாதிகள், மிதமான மதவாதிகள் என இரு பிரிவினர் ஆளும் தரப்பினரிடையே உள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மிதவாதிகளே வெற்றி பெற்றனர். மிதவாத அதிபருக்கு இடைஞ்சல் கொடுக்க கடும்போக்காளர்கள் கிளப்பிய ஆர்ப்பாட்டமாக இருக்கலாம். 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஹசன் ரௌஹானி.
2. இயல்பான மக்கள் எழுச்சியால் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
3. வெளியார் சதியால் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. இதில் சவுதி அரேபியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இணைந்து அல்லது தனியாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூபம் போட்டிருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன் ஈரானிய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் ஆர்ப்பாட்டம் பெருகாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

ஈரானிய மக்கள் உணவிற்காகவும் சுதந்திரத்துக்கும் அழுகின்றார்கள் என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானிய மக்கள் தமது அரசை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றார் டிரம்ப்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் Gholamali Khoshroo அமெரிக்கா ஈரானிய விவகாரங்களில் தலையிடுவதாக தனது கடிதம் மூலம் குற்றம் சுமத்தினார். அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தை மீறியுள்ளதுடன் பன்னாட்டுச் சட்டங்களையும் மீறியுள்ளது என்றார் அவர். இதற்காக அமெரிக்கா மீது மற்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.  அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தத்தமது டுவிட்டர்களில் அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு ஈரானிய மக்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என்ற குற்றச் சாட்டையும் அவர் முன் வைத்தார்.


ஜோர்ஜ் டபிளியூ புஷ் காலத்தில் துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எலியட் ஏப்ராம்ஸ் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்க ஆதரவை ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் சதிதான் இந்த ஆர்ப்பாட்டம் என்ற சாயத்தைப் பூச வழிவகுக்கும் எனச் சொல்லும் சிலர் அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஈரானிய ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதன் மூலம் அதற்கு ஈரானிலும் உலகிலும் பிரபல்யப்படுத்த முடியும் எனச் சிலர் நம்புகின்றனர்.

பெண்டகனில் பணிபுரிந்தவரும் தற்போது American Enterprise Instituteஇல் ஒரு கல்வியாளராகப் பணிபுரிவருமான மைக்கேல் ரொபின் வார்த்தைகள் மூலமான ஆதரவை மட்டும் அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் அதைத் தாண்டி இப்போது செல்லக் கூடாது என்கின்றார். ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதாவை உறுப்பினர் ரொம் கொட்டன் இது அமெரிக்காவின் பிரச்சனை அல்ல ஈரானிய மக்களின் பிரச்சனையாகும் என்றார். அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் தாராண்மைவாதிகள் பலரின் கருத்தாக இருக்கின்றது.

2009-ம் ஆண்டு ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போதிய ஆதரவை வழங்காமல் இருந்தது தவறு என எல்லாம் முடிந்த பின்னர் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாய் இருந்த ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார். ஈரானின் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை கொடுக்க 2009இல் கிடைத்த சந்தர்ப்பத்தை பராக் ஒபாமா கை நழுவ விட்டார் என்ற குற்றச் சாட்டும் அப்போது முன் வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எதிரான ஈரானிய அரசின் அடக்கு முறைகளைச் சாக்காக வைத்து ஈரானுக்கு எதிராக மேலதிகப் பொருளாதாரத் தடைகளை மனித உரிமைகளைக் காரணம் காட்டி கொண்டு வருவதற்கு டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் காத்திருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி அமெரிக்காவின் சதிதான் ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என ஈரானிய உச்சத் தலைவர் தெரிவித்த கருத்து அபத்தமானது எனச் சொல்லி நிராகரித்தார். மேலும் அவர் ஈரானிய மக்கள் சுதந்திரம் வேண்டி இயல்பாகக் கிளர்ந்து எழுந்துள்ளார்கள்; 2009-ம் ஆண்டு உலகம் விட்ட தவறை இம்முறையும் விடக்கூடாது என்றார். ஈரானியக் குடிமக்கள் அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் வெள்ளை மாளிகைப் பேச்சாளர்.

அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக எழுப்ப வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. நிக்கி ஹேலி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் என்றார்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல ஆனால் நடக்கும் ஆர்ப்பாடத்தால் ஈரானிய அரசு தனது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர். உண்மையில் 2018 ஜனவரி 4-ம் திகதியில் உள்ள நிலைமையின் படி ஈரானில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமளவிற்கு ஆர்ப்பாட்டம் தீவிரமடையவில்லை. வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கருத்தும் டிரம்பின் டுவிட்டர்களும் நிக்கி ஹேலியின் உரைகளும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாகவே இருக்கின்றன.

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஈரானிய ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கும் மக்கள் ஈரானிய அரசைத் தூக்கி எறிவார்கள் என்கின்றார். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாட்டு வெளியுறவுத் துறையினர் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமது கருத்துக்களை கவனமாக வெளியிடுகின்றனர். ஈரானிய மக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரி. அவரது கருத்து ஈரானிய அதிபரின் கருத்தை ஒட்டியதாக இருக்கின்றது.

ஈரானுக்கு மூன்று மோசமான எதிரிகள் இருக்கின்றனர்.

முதலாவது இஸ்ரேல். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கக் கூடாது என்பது ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஈரான் பலவகைகளில் உதவி செய்கின்றது. ஈரானியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கின்றது. ஈரானியப் படைகள் அடுத்து லெபனானிலும் பெருமளவு நிலைகொள்ளலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. ஈரானியப் படைகள் லெபனான் கோலான் குன்றுகள் பக்கம் போனால் நிச்சயம் அங்கு போர் வெடிக்கும்.

ஈரானின் இரண்டாவது எதிரி அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு அழிவு வரட்டும் என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் பதமாகும். ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும்பயங்கரவாதிகளுக்குஈரான் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இப்போதும் பின் லாடனின் குடும்பத்தினர் ஈரானில் வசிக்கின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் நடந்து கொள்கின்ற விதமும் யேமனில் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈரான் உதவி செய்தவும் அமெரிக்காவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மூன்றாவது எதிரி சவுதி அரேபியா. இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பகைமை சியா பிரிவிற்கும் சுனி பிரிவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் உருவானது என்பதிலும் பார்க்க ஈரானில் மதப் புரட்சி நடந்து மதவாத ஆட்சி ஏற்பட்டமையே பகமைக்கு முக்கிய காரணம். ஈரானிய மதவாதிகள் அதே போன்ற ஆட்சி முறைமையை சவுதி உட்பட மற்ற அரபு நாடுகளிலும் உருவாக்க முனைகின்றார்கள் என்ற அச்சம் சவுதி ஆட்சியாளர்களை ஈரானிய ஆட்சியாளர்களைக் கடுமையாக வெறுக்க வைக்கின்றது.

ஊடகங்களின் பூடகங்கள்
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பிரபலமான ஊடகமான அல் மொனிட்டர் ஈரானிய ஆர்ப்பாட்டம் இஸ்ரேலை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது என்கின்றது. ஆர்ப்பாட்டம் தீவிரமடையும் விதம் அமெரிக்காவை ஆச்சரியப்பட வைக்கின்றது என்றது அமெரிக்காவின் பிரபல ஊடகமான வேல் ஸ்றீட் ஜேர்ணல். ஈரான் தனது வெளியுறவுத் துறையின் செயற்பாட்டிற்காக அதிலும் முக்கியமாக யேமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் செலவு செய்யும் பல பில்லியன் டொலர்களை நிறுத்தி அதை உள் நாட்டு அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்கின்றது வேல் ஸ்றீட் ஜேர்ணல். அரப் நியூஸ் என்ற சவுதி அரேபிய ஊடகத்தின் ஆசிரியத் தலையங்கத்தில் ஈரான் அயல் நாடுகளைக் குழப்புவதை விடுத்து தன் நாட்டில் நல்லபடியாக ஆள முயல வேண்டும் என்கின்றது.  அல் ஜசீரா ஈரானில் கடுமையான பதவிப் போட்டி இருப்பதன் விளைவே ஆர்ப்பாட்டம் என்கின்றது.

ஈரானில் ஓர் உள்ளக கிளர்ச்சி இயல்பாகவே தோன்றுவதற்கான காரணிகள் பல உண்டு. ஈரானில் 2017 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான சலுகைகள் பல நிறுத்தப்பட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டது. ஈரானிய அதிபர் ரௌஹானிக்கும் அவருடன் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற Mohammad Baqer Qalibafஇற்கும் இடையில் இன்னும் பகைமை நிலவுகின்றது. ரௌஹானியின் இன்னொரு போட்டியாளர் இப்ராஹிம் ரைசி. அவரது தலைமையில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கூட்டு செயற்படும் நகரமான மஷ்சட்டில்தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. அந்த நகரின் பள்ளிவாசலில் அவரது மாமனர் மதகுருவாக உள்ளார்அடுத்த உச்சத் தலைவர் யார் என்ற போட்டியும் கடுமையாக உள்ளது. 

அட்ர் பிரான்ஸ் அதிபர் போட்ட குண்டு
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து தமது பொது எதிரியான ஈரானுக்கு எதிராக ஒரு போரை ஆரம்பிக்க உலகை இட்டுச் செல்கின்றன என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் குற்றம் சாட்டினார்.

ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உள்ளே உருவாக்கப் பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதை ஈரானின் மூன்று எதிரிகளும் ஈரானின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அதைத் திருப்ப தம்மால் முயன்ற எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் ஈரானில் உச்சத்தலைவர், பாராளமன்றம், அதிபர், படைத்துறை ஆகிய நான்கு முக்கிய அதிகார மையங்கள் உள்ளது. படைத்துறையும் உச்சத் தலைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அந்த ஒற்றுமை இருக்கும் வரை ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது கடினம். படைத்துறைக்குள் வெளி சக்திகள் ஊடுருவுவது மிகவும் கடினம் என்பதை சிஐஏ ஈரானியப் படைத்தளபதிக்கு ஒரு இடை ஆள் மூலம் ஈராக் மற்றும் சிரியா தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அவர் வாசிக்கவே மறுத்து விட்டார். அந்த அளவிற்கு ஈரானியப் படையினர் மத்தியில் அமெரிக்க வெறுப்பு உள்ளது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...