Friday 30 December 2016

2016 ஒரு மீள் பார்வை

2016-ம் ஆண்டு கொலைகளுடன் ஆரம்பமானது. ஒரு புறம் இஸ்லாமிய அரசு தம்மிடம் அகப்பட்ட மேற்கு நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொன்றது. மறு புறம் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் தான் பயங்கரவாதிகள் எனக் கருதுவோரை எந்தவித விசாரணையும் இல்லாமல் கொன்றுகொண்டிருந்தது. 2016 ஜனவரி இரண்டாம் திகதி சவுதி அரேபியாவில் 47 பேர் கொல்லப் பட்டனர். இதில் சியா இஸ்லாமிய மத போதகரான ஷேக் நிமர் அல் நிமர் அவர்களைக் கொன்றது உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 2016-ம் ஆண்டு இறுதியிலும் சிரிய நகர் அலெப்பேயில் பல்கொலைகள் நடந்தன. அதன் எதிரொலியாக துருக்கியில் இரசியத் தூதுவர் படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சக் கோரிக்கை மோசமடைந்த ஆண்டு
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்த்தான், யேமன், மியன்மார் போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர்களும் குழப்பங்களும் 2016-ம் ஆண்டை கடந்த 70 ஆண்டுகளிலேயே மோசமாகப் பாதிக்கப் பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். இதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு அபாயகரமான பாதைகளில் பயணித்து தஞ்சக் கோரிக்கை செய்தனர். கனடாவைத் தவிர எல்லா நாடுகளிலும் குடிவரவிற்கு எதிரான கொள்கை வலுப்பெற்றது. தேர்தல் வாக்கு வேட்டைகளில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகள் குடிவரவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டனர். 

சீன இரசிய உறவு உச்சமடைந்தது.
2016-ம் ஆண்டு இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு உச்சமடைந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வளர்ச்சியடைந்து இரசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா 2016இல் மாறியுள்ளது. அது மட்டுமல்ல இரசியாவிடமிருந்து அதிக அளவில் படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் நாடாக சீனா 2016இல் உருவெடுத்துள்ளது. இரு நாடுகளும் படைகலன் உற்பத்தி தொடர்பாக பல ஒத்துழைப்புக்களைச் செய்யவும் ஆரம்பித்துள்ளன.

சீனா ஒத்திவைத்த கொள்கைகள்
2016-ம் ஆண்டு சீனா தனது இரு பெரும் கொள்கைகளை ஒத்திவைத்துள்ளது. ஒன்று தைவானை ஆக்கிரமித்துத் தன்னுடன் இணைப்பது. இரண்டாவது சீன நாணயத்தை உலக நாணயமாக்குவது. சீனாவின் உள்ளூர் கொள்வனவை அதிகரிக்கச் செய்து பொருளாதாரம் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை பெருமளவில் குறைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதை உணர்ந்த சீனா தனது நாணயத்தின் பெறுமதி தேவைக்கேற்ப அடிக்கடி மாற்றும் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு சீனா தனது நாணயத்தின் பெறுமதியை குறைந்த நிலையிலேயே வைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. 23 மில்லியன் மக்களைக் கொண்ட தைவானில் அது தனிநாடாக வேண்டும் என்ற கொள்கையுடையோர் வெற்றி பெற்ற நிலையிலும் அங்குள்ள இளையோர் மத்தியில் சீனா மீதான வெறுப்பு அதிகரித்த நிலையிலும் அதை ஆக்கிரமித்தோ அல்லது வேறு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மூலமாகவோ அதை தன்னுடன் இணைக்கும் கொள்கையை சீனா ஒத்தி வைத்துள்ளது. ஆனால் சீனா தைவானை தனது 34வது மாகாணம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருக்கின்றது. டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துச் சொல்ல தைவார் அதிபர் ஷாய் இங் வென் தொலைபேசி மூலம் தொடர்பாடல் செய்தமை தொடர்பாக சீனா தெரிவித்த கருத்துக்கள் அதை உறுதி செய்துள்ளன. 2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. ஆனால் ஆண்டு இறுதியில் சீனா சுதாகரித்துக் கொண்டது. ஆனாலும் சீனாவை ஒரு சந்தை பொருளாதாரமாக எப்போது மாற்றுவது என்பதில் சீன ஆட்சியாளர்களால் ஒரு தெளிவான முடிவை இன்னும் எடுக்கவில்லை.

ஈரான்
பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்ட ஈரான் தனது உறவை சீனாவுடனும் இரசியாவுடனும் மேம்படுத்திக் கொண்டது. ஆனால் இரசியாவிற்க் தனது விமானத் தளங்களைப் பாவிக்க ஈரான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இரசியாவுடன் ஈரான் செய்த ஒத்துழைப்பு சிரியாவில் ஈரானுக்கு வேண்டியவரான பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்குவதில் ஈரானியப் படைத்துறையின் உயர் அதிகாரிகள் நேரடியாகப் பங்கு பற்றினர். 2016-ம் ஆண்டின் இறுதியில் சிரியாவில் 25000 ஈரானியப் படைகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. அலெப்பேயை அசத்தின் படைகள் இரசிய விமானத் தாக்குதல்களின் உதவியுடன் விடுவிக்கச் செய்த போரை ஈரானியப் படைகளே நெறிப்படுத்தின. இரசியாவின் வேண்டுதலுக்கு இணங்க சிரியாவில் நடக்கும் போர் தொடர்பான “சமாதானப் பேச்சு” வார்த்தையில் ஈரானையும் ஒரு தரப்பாக இணக்க அமெரிக்கா 2016 ஒக்டோபரில் இணைத்துக் கொண்டது ஈரானுக்கு உலக அரசுறவியல் வெற்றியாகும்.

அசையாத புட்டீனும் இரசியாவும்
2014-,ம் ஆண்டில் இருந்தே உலக அரங்கில் புட்டீன் தலைமையிலான இரசிய எழுச்சி வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் திக்கு முக்காடச் செய்துகொண்டிருக்கின்றது. சிரியாவில் இருந்து மேற்கு ஐரோப்பா நோக்கி புகலிடக் கோரிக்கையாளரை அவர் திட்டமிட்டு அனுப்பினாரா என்பதை உறுதி செய்ய முடியாத போதும் அந்த புகலிடக் கோரிக்கையாளர்களால் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. 2016இல் உலக எரிபொருள் விலையை இருபது டொலர்கள் வரை வீழ்ச்சியடையச் செய்து இரசியாவில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி அங்கு அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாக்க அவரின் எதிரிகள் போட்ட திட்டம் 2016இல் வெற்றியளிக்கவில்லை. இரசியாவின் 2016-ம் ஆண்டிற்கான பாதீடு எரிபொருள் விலை நூறு டொலர்கள் என்ற அடிப்படையில் 2015-ம் ஆண்டு தீட்டப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் தேய்வடைந்த நிலையிலும் புட்டீனின் செல்வாக்கு இரசியாவில் ஆட்டம் காணாமல் இருக்கின்றது. சதுரங்க ஆட்டத்திலும் குங்குபூ சண்டையிலும் வல்லவரான புட்டீன் எதிரியை திக்கு முக்காடச் செய்தவதிலும் தருணம் பார்த்து எதிரியை தாக்குவதிலும் தான் வல்லவர் என 2016-ம் ஆண்டு சிரியாவில் நிரூபித்துள்ளார். பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார்.

குர்திஷ் போராளிகள் - தீரமிக்க போர்
2016-ம் ஆண்டில் பல முனைகளில் குர்திஷ் போராளிகள் தீரமிக்க பல போர்களைச் செய்தார்கள். பல இடங்களில் இருந்து இஸ்லாமிய அரசு அமைப்பினரை விரட்டி அடித்தார்கள் ஆனால் ஈராக்கிலோ சிரியாவிலோ அவர்களுக்கு என சட்ட பூர்வ சுயாட்சி உரிமை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் அழிக்கப்பட்ட பின்னர் குர்திஷ் மக்களுக்கு எதிரான இனக்கொலை தொடர வாய்ப்புண்டு. அப்போது அமெரிக்க ஏற்கனவே செய்தது போன்று குர்திஷ் மக்களை கால்வாரி விட்டுவிடும். அவர்களுக்கு என்று ஓர் அரசு இன்னும் உருவாகவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளைச் செய்யவே அவர்களது நிதி போதாது. ஒருதலைப் பட்சமான இணைப்பாட்சி அரசு ஒன்றை சிரியாவில் பிரகடனம் செய்தார்கள். மற்ற அமைப்புக்களும் அப்படிப் பிரகடனம் செய்யும் போது எல்லோரும் இணைந்து ஒரு கூட்டாட்சியை அமைப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் தமக்கென நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்ற அமைப்புகள் அப்படி ஒரு பிரகடனம் செய்யவில்லை.

மாசுபட்ட சீனா
சீனாவின் சூழல் மோசமாக மாசுபட்டு விட்டது. 46 கோடி மக்கள் சீனாவின் சூழல் மாசுபாட்டில்னால் பாதிக்கப் பட்டுள்ளனர். எங்கும் புகை மண்டலமாக இருப்பதால் அடிக்கடி மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனப் பலநகரங்களில் பல தடவைகள் உத்தரவிடப்படுவதுடன் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்படும். ஆனால் அதிபர் ஜி ஜின்பிங் நாட்டையும் பொதுவுடமைக் கட்சியையும் தனது இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளார். ஷி துரிதமாக அதிகாரத்தை தன் வசப் படுத்தியது போல் வேறு எவரும் சீனாவில் செய்யவில்லை. அவரது தந்தைக்கு சீனப் பொதுவுடமைக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கும் அவருக்கு உதவியாக இருந்தது. கட்சி, படைத்துறை பொருளாதாரம், குடிசார் சமூக அமைப்பு என எல்லாவற்றிலும் தனது பிடிகளை அவர் இறுக்கிக் கொண்டிருக்கின்றார். பொருளாதார நிபுணரான லி கெக்கியாங்கை பொருளாதார விடயங்களில் கூட ஷி ஓரம் கட்டிவிடுகின்றார்.

இந்தியா
தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இந்தியா மொத்தத் தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் இருந்த பிரித்தானியாவை ஆறம் இடத்திற்கு தள்ளி தான் ஐந்தாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல ஐயங்கள் நிலவுகின்றன. 2016-ம் ஆண்டின் மோசமான சொதப்பலாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி நாணயத் தாள்களைச் செல்லாது என அறிவித்தது அமைந்தது. இந்தியா பாக்கிஸ்த்தான் மீது அதிக நெருக்கடிகளைக் கொடுக்கின்ற அளவிற்கு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. இந்தியா பாக்கிஸ்த்தானை உலக அரங்கில் ஓரம் கட்டிவிடும் என பாக்கிஸ்த்தானிய ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

துருக்கி
துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே. அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம் சிக்கலடைந்தும் துருக்கியின் பிராந்தியம் பெரும் குழப்பமடைந்தும் இருக்கும் நிலையிலும் துருக்கியில் ஓர் உறுதியற்ற நிலை உருவாகுவது விரும்பத்தக்கதல்ல. 2016 ஜூலை 16-ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் துருக்கியப் படைத்துறையினரின் ஒரு பகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இறங்கினர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல்லை துருக்கியின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பொஸ்பரஸ் பாலத்தை அவர்கள் முதலில் மூடினர்காவற்துறையைச் சேர்தவர்கள் பலர் தலைநகர் அங்காராவிலும் இஸ்த்தான்புல்லிலும் கைது செய்யப் பட்டனர். விடுமுறையில் அதிபர் ரிசெப்  எர்டோகன் தங்கியிருந்து விட்டு வெளியேறிய உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு நடந்தது. இது அவரைக் கொல்ல எடுத்த முயற்ச்சி எனக் கருதப்பட்டது. புரட்சியாளர்கள் படைத்தள பதியாகிய Chief of Defense General Hulusi Akarஐ பணயக் கைதியாகப் பிடித்தனர்உலங்கு வானூர்தி ஒன்று தலைநகர் அங்கோராவின் மேலாகப் பறந்து ரவை மழை பொழிந்தது. ஆனால் துருக்கியில் தனது செல்வாக்கை அதிகரிக்க அதிபர் எர்டோகன் அரங்கேற்றிய நாடகம் இது எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படைக்கலன்களின் போட்டி
2016-ம் ஆண்டு பல புதிய படைக்கலன்கள் பாவனைக்கு வந்தன அமெரிக்காவின் F-35 lightening என்னும் விமானம் இரசியாவின் SU-35 என்னும் விமானம் சீனாவின் J-20 என்னும் போர் விமானம் ஆகியவை உலகக் கவனத்தை ஈர்த்தன. இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் இந்தியா படைக்கலன் விற்பனையை ஆரம்பித்துள்ளது. ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் இரசியாவின் -300, -400 ஆகியவையும் அமெரிக்காவின் தாட் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் 2016இல் பாவனைக்கு வந்தாலும் இதுவரை சரியான முறையில் போர்க்களத்தில் பாவிக்கப்படவில்லை. உலக வரலாற்றில் அதிக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் AC-130J Ghostrider என்னும் புதிய போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கப் போவதாக அறிவித்தது. இந்த விமானம் அமெரிக்கப் படைகளுக்கு நெருக்கமாக நின்று செயற்படக்கூடியது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் இதை ஒரு a badass plane என விமர்சிக்கின்றனர்.  badass என்பது a tough, uncompromising, or intimidating person எனப் பொருள்படும். இந்த விமானம் வலிமை மிக்கதும் விட்டுக்கொடுக்காததும் பயமூட்டுவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.

சனியனை இறக்கி பெனியனுக்குள் விட்ட பிரித்தானியா
பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றவர்களின் வாயை அடக்குவதற்காக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் விலகுவதா என அறிய ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தினார் முடிவுகள் அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைய அவர் பதவி விலகினார். இது ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிரித்தானியாவிலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆண்டு
2016இல் சமூகவலைத்தளங்கள் தகவற்பரிமாற்றத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தின. பல பொய்யான செய்திகள் கூட பரப்பப்பட்டன. சுதந்திரமான தகவற்பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் சமூகவலைத்தளங்கள் மூலம் பல செய்திகள் பரப்பப்பட்டன. அமெரிக்கத் தேர்தலின் இறுதி நேரத்தில் பல பொய்யான செய்திகள் சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டன. 


2016-ம் ஆண்டு உலகெங்கும் வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது. அதுமட்டுமல்ல வெள்ளைத் தேசிய வாதம் டொனால்ட் டிரம்பின் வெற்றியில் தலையெடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு சிரியா ஈராக் யேமன் ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் பெரும் போரையும் மேலும் லிபிய உடபடப் பல நாடுகளில் பெரும் குழப்ப நிலையையும் 2017 ஆண்டிற்கு சொத்தாகக் கொடுக்கின்றது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...