உலகமயமாதல் என்பது தொழில்நுட்பம், பொருளாதாரம், கலாச்சாரம், சூழல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களினதும் வளர்ச்சிகளினதும் விளைவாக உருவானது. நாடுகள் இவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் தமது செல்வத்தைப் பெருக்க முயல்வதே உலகமயமாதலாகும். ஆனால் பெரு முதலாளிகள்
உலகெங்கும் தமது ஆதிக்கத்தை விரிவாக்குவதே உலகமயமாதலின் உண்மையான நோக்கமாகும்.
உலகமயமாதலின் வரலாறு
உலகமயமாதல்
என்ற சொல் 1970களில் உருவானது. அப்போது அதிகரித்துக் காணப்பட்ட உலக வர்த்தகம், முதலீடு,
பயணங்கள், தகவற்பரிமாற்றம் போன்றவை தொடர்பான
ஆய்வுகளின் விளைவாக இந்தச் சொல் உருவானது. உண்மையான உலகமயமாதலின் ஆரம்பப் புள்ளியாக எதைக் கொள்வது என்பதில் சில முரண்பாடுகள் நிலவுகின்றன. சிலர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததுதான் உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர். வேறு சிலர் கைத்தொழிற்புரட்சியே உலகமயமாதலின் ஆரம்பம் என்கின்றனர். இற்றைக்கு இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளிடையேயான வர்த்தகம் உருவானது. உலக வர்த்தகத்தின் முதலாம் கட்டத்தில்
நறுமண உணவுப் பொருட்களும் அறிவுமே அதிகம் பண்டமாற்று அடிப்படையில் பரிமாறப்பட்டன. ஆனால் 1400களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே உலக வர்த்தகத்தை பெரிய அளவில் வளரச் செய்தது. மனிதர்களும் பண்டங்கள் போல் பாவிக்கப்பட்டு அடிமை வியாபாரம் செய்யப்பட்டனர். இது உலக வர்த்தகத்தின் இரண்டாம் கட்டம். இதில் படைவலு மிக்க நாடுகள் மற்ற நாடுகளை ஆக்கிரமித்தன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையிலான போரே முதலாம் இரண்டாம் உலகப் போர்களாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒரு புதிய “உலக ஒழுங்கு” உருவானது. அது உலக வர்த்தகத்தின் மூன்றாம் கட்டமாகும். 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே உலகின் பெரு வல்லரசாகவும் பெரிய செல்வந்த நாடாகவும் இருந்தது. அதன் நாணயமே உலக நாணயமாக விளங்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாதலும்.
1765இல்
ஜேம்ஸ் வற் அவர்கள் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தது உலக வர்த்தகத்தின் முக்கிய அம்சமாகும். அது உலக வர்த்தகத்தை மேம்படுத்தியதுடன்
பிரித்தானியாவின் உலக ஆதிக்கத்திற்கு உந்து வலுவானது.
தொழில்நுட்பத்தால் இலகுவாக்கப் பட்ட போக்கு வரத்து வசதிகளும் தொடர்பாடல் வசதிகளும் உலகமயமாக்குவதை கொண்டிருக்கின்றன.
1830களில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சாரத் தந்தியும் உலக வர்த்தகத்தை மேம்படுத்தப் பயன்பட்டது. கைத்தொழிற் புரட்சியின் பின்னர் உற்பத்தி
செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்பனை செய்யவும் அந்த உற்பத்திகளுக்கு தேவையான
மலிவான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் நீராவியில் இயங்கும் கப்பல்களும்
மின்சாரத் தந்திகளும் பெரிதும் பயன்பட்டது. 1971இல் கண்டு பிடிக்கப்பட்ட மைக்குறோ புறொசெஸர் (Micro processor) தற்போது இணைய வெளியூடான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் வழிவகுத்தது.
உலகமயமாதலுக்கான
அமைப்புக்கள்
1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதியம் (IMF), 1947இல் செய்யப்பட்ட வரிகளுக்கும் வர்த்தகத்துக்குமான பொது உடன்படிக்கை, 1947இல் உருவாக்கப்பட்ட உலகவங்கி, 1957இல் உருவாக்கப் பட்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஆகியவை நாடுகளிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையே. பல பன்னாட்டு மாநாடுகள் கூட்டங்கள் உலகமயமாக்குதலை இலகுவாக்குவறகான
உடன்படிக்கைகளைச் செய்வதற்க்கு கூட்டப்பட்டன. பல நாட்டு ஆட்சியாளர்களின் உலகப்
பயணங்கள் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.
சொன்னவை வேறு நடந்தவை வேறு
உலகமயமாதல்
சூழல் பாதுகாப்பிற்கு உகந்தது என வாதிடப்பட்டது. ஆனால் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையப் பேசினார்கள் ஆனால் செயலில் ஏதும் இல்லை. சூழல்
பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வளர்முக நாடுகளின் மூளைவளங்களை கடத்துவதே வளர்ச்சியடைந்த நாடுகளின் பணியாக இருக்கின்றது. உலகமயமாதலினால் மகிழ்ச்சியடைந்த
அமெரிக்காவின் புதிய-தாராண்மைவாதிகள் உலகம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும் என
நம்பினார். உலகெங்கும் ஒரேமாதிரியான ஆட்சி முறைமை, ஒரேமாதிரியான
பொருளாதாரக் கொள்கை, ஒரேமாதிரியான வெளியுறவுக் கொள்கை வருமென
நம்பினர். ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, மார்கிரெட் தச்சர், ரொனி பிளேயர் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் மென்வலு
அழுத்தங்கள் சரிவராத இடங்களில் இவர்கள் தாராண்மைத் தலையீட்டாளர்களாக மாறினார்கள்.
முதலாவது தலையீடு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது. இது இவர்களின் உலகமயமாதல் கொள்கை
தொடர்பான ஐயங்களை உலகெங்கும் ஏற்படுத்தியது. உலகமயமாதல் என்னும் போர்வையில்
இவர்கள் உலகெங்கும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றார்கள் என்பது
வெளிப்படையானது.
உலகமயமாதலால் சீனா பெரும் நன்மையடைந்ததா?
1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னர் சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டது. அதனால் தனது பொருளாதாரத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உலக வர்த்தகத்தில் தான் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சீனாப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் உணர்ந்து உலக வர்த்தக நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்காக வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். இலகுவான உலக வர்த்தகத்தால் சீனா கைத்தொழில்நாடாக மாறிக்
கொண்டிருக்கின்றது. மேற்கு நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது
என்னும் பெயரில் சீனத் தொழிலாளர்களை மிகக் குறைந்த ஊதியம் வழங்கி தமது உற்பத்திச்
செலவைக் குறைத்துக் கொண்டன. உலகத்தின் தொழிற்சாலை (factory of the world) உலக உற்பத்திவலுவின் நிலையம் (the world’s manufacturing powerhouse) ஆகிய பட்டங்கள் சீனாவிற்குச் சூட்டப்பட்டன.
19-ம் நூற்றாண்டு பிரித்தானியாவிற்கு இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.
பிரித்தானியா தனது கண்டுபிடிப்புக்கள் மூலம் இந்தப் பட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால் உலக உற்பத்தி நிறுவனங்கள் பொருத்து நிலையமாகவே (assembly plant of the world) சீனா உண்மையில் இருக்கின்றது. வெளிநாட்டு
நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு
இலகுவானவையாக்கப்பட்டன. அதனால் சீனாவின் உள்நாட்டுக் கண்டுபிடிப்புக்கள்
மழுங்கடிக்கப்பட்டன. உலக அரங்கில் போட்டி போட்டு வர்த்தகம் செய்யக் கூடிய உயர்
தொழில்நுட்பத் திறன் பெறாத நாடுகள் கைத்தொழில் மயமாக்கப்பட முடியாத நாடுகளாகும்.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் ஏற்றுமதியில் தங்கியிருப்பது
சீனாவையே கவலையடைய வைத்துள்ளது. சீனாவின் தொழிலாளர்கள் குறைந்த அளவு ஊதியம்
பெறுவதால் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவு மிகவும் தாழ்ந்த நிலையிலேயா உள்ளது. அமெரிக்காவின்
உள்நாட்டு கொள்வனவு அதன் தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கையில்
சீனாவில் அது மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றது. இதனால உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடையும்
போது அது சீனாவை மோசமாகப் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டில் இருந்து சீனா இதில் அதிக
அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளது.
மாறுகிறது நெஞ்சங்கள்
தற்போது 161 நாடுகள் இறக்குமதிகளுக்கு பெறுமதிசேர் வரிகள் விதிக்கின்றன. அமெரிக்கா சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதியால் அமெரிக்காவின்
3.2,மில்லியன் பேர்கள் வேலைகளை இழந்ததாகவும் ஜப்பானிடமிருந்து செய்யும் இறக்குமதியால் 896,000இற்கு மேற்பட்டவர்கள் வேலைகளை இழந்ததாகவும் அமெரிக்காவில் இருந்து கூச்சல்கள் எழுகின்றன. உலகமயமாதல் அமெரிக்காவை கைதொழிலற்றதாக்குகின்றது (deindustrializing) எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 2008-ம் ஆண்டில் உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து
யூரோநாணய வலயத்தில் ஏற்பட்ட நெருக்கடி,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும்
என்ற கருத்து வலுப்பெற்றமை, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலதுசாரிகளின் செல்வாக்கு
அதிகரித்தமை, டொனால்ட் டிரப்பின் வெற்றி ஆகியவை உலகமயமாதல் செல்வந்த நாடுகளான வட அமெரிக்க
மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களையும் பொருளாதார ரிதியாகப் பாதித்துள்ளது 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றியைக் கொடுத்ததில் முக்கியமானது உலக வர்த்தகம் தொடர்பாக அவர் முன்வைக்க கருத்துக்களே. உலகமயமாதல் எமது தொழிற்சாலைகளையும் எமது செல்வங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டன என்றார் அவர். ஹிலரி
கிளிண்டன் வென்றிருக்க வேண்டிய பென்சில்வேனியா, மிச்சிக்கன், விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் பெரு வெற்றியீட்டியமைக்குக் காரணம் அந்த மாநிலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டமையே.
மக்களின் விசனமும்
டிரம்பின் வெற்றியும்.
உலகமயமாதல் மேற்கு
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பாக
அமைந்தது. அவர்கள் பல நாடுகளில் செயற்படுவதால் பல வருமான வரி ஏய்ப்புக்களைச்
செய்யக் கூடியதாக இருந்தது. இந்த நாடுகளில் பலர் வேலைகளை இழந்ததால் அவர்கள்
செலுத்தும் வரியும் இல்லாமல் போனது. இவற்றால் அரச வருமானங்கள் குறைந்து கொண்டே
போனது. அதனால் சமூக நலக் கொடுப்பனவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன.
உட்கட்டுமானங்களின் பராமரிப்புகளும் மேம்படுத்துதல்களும் மோசமடைந்தன. பல
தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் பல பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். உலகமயமாதல்
அமெரிக்காவிற்கு நன்மையளிக்கவில்லை சில செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளித்தன என
அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கி விட்டனர் என்பதை உணர்ந்த டொனால்ட் டிரம்ப் அதற்கு
ஏற்பத் தனது தேர்தல் பரப்புரை வியூகத்தை வகுத்து வெற்றி கண்டார். இதையே Robert Putnam தனது Bowling Alone என்னும் நூலில் American
elites had been building an empire at the expense of a nation எனக் குறிப்பிட்டார். இதுதான் உலகமயமாக்குதலை இப்போது பின்வாங்கச்
செய்கின்றது. அமெரிக்கா பல நாடுகளுடன் செய்த மற்றும் செய்ய முயன்று கொண்டிருக்கும்
வர்த்தக உடன்படிக்கைகள் இனிச் செல்லுபடியற்றதாக்கும்.
தேவை ஒரு புதிய உலக ஒழுங்கு
உலக நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றின் மீது ஒன்று தங்கியிருப்பது
தவிர்க்க முடியாத ஒன்று. உலகெங்கும் உள்ள வர்த்தக நிறுவனங்களை உலகளாவிய போட்டி போடவைத்து தரமான மலிவான பொருட்களை
உற்பத்தி செய்ய முடியும். ஒரு சில நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டும்
உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்த வைக்கும் நிலையை மாற்றி உலங்கெங்கும் உள்ள
நிறுவனங்கள் உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமது வர்த்தகங்களைச் செய்து
உலகெங்கும் நன்மையளிக்கும் வகையில் செயற்பட்டு இலாபமீட்டும் புதிய உலக ஒழுங்கு
ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment