Sunday, 1 January 2017

2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு

2017-ம் ஆண்டில் உலகின் போக்கை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படி மாற்றப் போகின்றார் என்ற கரிசனை பல உலக அரசுறவியலாளர்களாலும் ஆய்வாளர்களிடமும் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு கணிசமான அதிகாரங்கள் உள்ளன. பல சட்டங்கள் நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் 60 உறுப்பினர்களின் ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்ற முடியும். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளுடன் அமெரிக்க அதிபர் செய்யும் உடன்படிக்கைகள் மூதவையின் அங்கீகாரம் பெறவேண்டும். இதனால் அமெரிக்க மூதவை உலக விவகாரங்களில் டிரம்ப் எடுக்கும் தனி மனிதப் போக்கான முடிவுகளுக்குத் தடையாக அமையும்.

ஐநாவைக் கெடுத்தவர் கொரியாவைக் கெடுப்பாரா?
தென் கொரியாவின் அதிபராக ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவு செய்யப்பட்டால் அது 2017-ம் ஆண்டின் மிக மோசமான நிகழ்வாக அமையப் போகின்றது. 2016-ம் ஆண்டின் இறுதியில் பொதுச் செயலாளர் பதவி முடியப் போகும் பான் கீ மூனை தென் கொரியாவின் அதிபராக்குவதற்கு தற்போது தென் கொரியாவில் அதிபராக இருக்கும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உருவாக்கப்பட்டனவா என்ற ஐயமும் நிலவுகின்றது. ஐநாவின் வரலாற்றில் மிக மோசமான பொதுச் செயலாளராகக் கருதப்படும் பான் கீ மூனும் அவரது ஆலோசகராகக் கடமையாற்றிய விஜய் நம்பியாரும் இலங்கையின் இனக்கொலைக்கு துணை போனார்களா என்ற கேள்விக்கான விடை ஐநாவின் உள் இரகசியங்கள் அம்பலப்படும் போது மட்டும் தெரிய வரும்.

தென் சீனக் கடல்
2017இல் பிரச்சனைக்குரிய பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கும். அமெரிக்காவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவிற்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்டவருமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தென் சீனக் கடலைக் கலக்கப் போகின்றார்கள். 1962இல் நடந்த கியூப ஏவுகணை நெருக்கடி போல் இரு வல்லரசுகள் ஒரு போரின் விளிம்பு வரை செல்லக் கூடிய நிலை தென் சீனக் கடலில் உருவாகலாம்.


நேட்டோவிற்கும் துருக்கிக்கும் இடையில் முறுகல் உருவாகலாம்.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வழங்கப்படுவதற்குச் செய்யப்படும் இழுத்தடிப்பு துருக்கியை அதன் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது துருக்கிக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும் துருக்கியின் கொள்கையும் அமெரிக்காவின் கொள்கையும் முரண்பட்டுக் கொண்டன. இரசியாவுடனும் ஈரானுடனும் துருக்கி இணைந்து செயற்படுவது அமெரிக்காவிற்கு உகந்தது அல்ல. துருக்கியும் இரசியாவும் இணையும் போது மத்திய தரைக்கடலில் இரசியாவில் ஆதிக்கம் அதிகரிக்கும். துருக்கிய ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்கள் நேட்டோவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உகந்தவையாக இல்லை. அமெரிக்காவின் மிகப் புதிய ரக F-35 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை துருக்கி செய்துள்ளது. நேட்டோவிற்கும் துருக்கிக்கும் பிளவு ஏற்பட்டால் F-35இன் தொழில்நுட்பத் தகவல்கள் இரசியாவிற்குச் செல்ல வாய்ப்புண்டு.  2017இல் துருக்கியும் மேற்கு நாடுகளும் தமது உறவை மீள் பரிசீலனை செய்து கொள்ளும்.

மலிவான பணம் இனி இல்லையா?
ஐக்கிய அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையை புதிய அதிபர் டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போதே வெளியிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் எடுத்த முடிவு பிரித்தானியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார உறுதிப்பாடின்மையை உருவாக்கியுள்ளது. இதனால் பிரித்தானியாவிலோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ வட்டி விழுக்காடு அதிகரிக்கப்பட மாட்டாது. சீனாவில் நிலவும் உள்நாட்டுக் கடன் பிரச்சனை வட்டி அதிகரிப்புக்கு ஏதுவாக இல்லை. பிரித்தானியப் பவுண் தொடர்ந்தும் வலுவற்ற நிலையில் இருப்பதால் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பிரித்தானியாவில் விலைவாசி அதிகரிப்பு 2.7 விழுக்காட்டை எட்டலாம் என பிரித்தானிய நடுவண் வங்கி எதிர்வு கூறியுள்ளது. வட்டி அதிகரிப்பிற்கான நிர்ப்பந்தத்தை அதிகரிக்கின்றது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கும் போது வளர்முக நாடுகளில் இருந்து மூலதனம் அமெரிக்காவை நோக்கி நகரும் போது அந்த நாடுகளில் வட்டி விழுக்காடு அதிகரிக்க வேண்டி வரும். சீனா, இரசியா போன்ற நாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் மூலதன வெளியேற்றத்தையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளன.

தேர்தல்கள் நிறைந்த ஆண்டு
2017-ம் ஆண்டில் பிரான்சிலும் ஜேர்மனியிலும் நடக்கவிருக்கும் தேர்தல்கள் உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க நாடான ஜேர்மனியில் ஐரோப்பா மட்டுமல்ல உலக அரங்கிலும் சிறந்த தலைவராகக் கருதப் படும் அஞ்செலா மேர்க்கெல் அவரது குடிவரவிற்கு சார்பான கொள்கைகளால் உள் நாட்டில் தனது பிரபலத்தை இழந்துள்ளார். பிரான்ஸில் 2017 ஏப்ரலில் நடக்க விருக்கும் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக அமையும். வலதுசாரி வேட்பாளரான மரைன் லி பென்னின் வெற்றி பெற்றால் பிரான்சும் பிரித்தானியாவின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஆபத்து உண்டு. அதை இத்தாலியும் கிரேக்கமும் பின்பற்றும் போது ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் போகும் ஆத்துக்கு 2017 வித்திடலாம்.

இரசியப் பொருளாதாரம் மீட்சியுறும்.
இரசியாவின் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு 3.8விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டு 0.5 விழுக்காடு மட்டுமே சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2017-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பதையில் செல்லும் என பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் 5.6விழுக்காடாக இருந்த விலைவாசி அதிகரிப்பு 2017இல் அரைவாசியாகலாம் எனவும் ப.நா. நிதியம் சொல்கின்றது.

உலகெங்கும் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும்
2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட போல்ரிக் நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவீனங்களை 2017இல் அதிகரிக்கவிருக்கின்றன. லத்வியா 60 விழுக்காட்டாலும் லித்துவேனியா 35 விழுக்காட்டாலும் எஸ்த்தோனியா 9 விழுக்காட்டாலும் தமது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கவுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட போலாந்து தனது படைத்துறைச் செலவை 9 விழுக்காட்டால் அதிகரிக்கவுள்ளது.

இரசியா மேலும் வலுவடையும்
2020-ம் ஆண்டு தனது படைத்துறையை மிகவும் புதுமைப்படுத்தும் இரசியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இரசியப் படைக்கு 900 தாங்கிகளும் கவச வண்டிகளும் ஐந்து கேந்திரோபாயத் தாக்குதல் விமானங்கள் உட்பட 170 போர் விமானங்களும் எட்டு போர்க்கப்பல்களும், ஒன்பது தாக்குதல் படகுகளும் 2017-ம் ஆண்டு இணைக்கப் படவிருக்கின்றன. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் படைப்பிரிவுகள் மூன்றை இரசியா 2017-ம் ஆண்டு உருவாக்கும். கருங்கடலில் செயற்படும் இரசியக் கடற்படையில் மேலும் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைக்கப்படும். 2016-ம் ஆண்டின் இறுதியில் தனது படையினருக்கு உரையாற்றிய விளடிமீர் புட்டீன் தமது படை தமது எதிரிகளிலும் பார்க்க வலிமையானது என்றார்.

அமெரிக்காவும் விட்டு வைக்காது
அமெரிக்க விமானப் படையினர் தமது விமானித் தட்டுப்பாட்டை நீக்க 2017இல் 4000 புதிய விமானிகளை இணைப்பதுடன் விமானிகளின் ஊதியத்தையும் அதிகரிக்கவிருக்கின்றனர். அமெரிக்காவின் புதிய F-35 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் A வகை விமானங்கள் 43 விமானப் படைக்கும், B variants விமானங்கள் 16 Marine Corps படைப்பிரிவிற்கும், நான்கு C models கடற்படைக்கும் சேர்க்கப்படவுள்ளன.
அமெரிக்கா தனது புதிய F-35 போர் விமானங்கள் உலக கேந்திரோபாயச் சமநிலையை தமக்கு சாதகமாக மாற்றும் என எதிர்பார்க்கின்றது. 2017 ஓகஸ்ட் மாதம் F-35 ஐரோப்பாவில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அது எதிரியின் எங்க ஏரியா உள்ளே வராதே (anti-access area denial environment) நிலைப்பாட்டைத் தகர்க்கும் என அமெரிக்கப்படை நம்புகின்றது.

தீவிரவாத அமைப்புக்கள்
சிரியாவில் அடக்கப்பட்ட நிலையிலும் ஈராக்கில் முடக்கபட்ட நிலையிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு தனது 2017ஐ ஆரம்பிக்கின்றது. சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக ஐ எஸ்ஸிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் 2017இல் வெளியில் தெரியக் கூடிய வகையில் ஆதரவுகளை வழங்க மாட்டாது. ஆனல் ஈரானுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளைத் திசை திருப்ப மறைமுக ஆதரவுகள் இனிவரும் நாட்களில் ஐ எஸ்ஸிற்கு கிடைக்கும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா, நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ கரம், எதியோப்பியாவில் செயற்படும் அல் ஷபாப், காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் ஆகியவை 2016-ம் ஆண்டு சந்தித்த பின்னடைவுகள் 2017இல் மேலும் மோசமாகலாம்.

இரசியாவும் சுனி முஸ்லிகளும் மோதுவார்கள்
இரசியாவின்  144மில்லியன் மக்கள் தொகையில் சுனி முஸ்லிம்கள் இருபது மில்லியன்களாகும். இந்த நிலையில் சுனிகளுக்கு எதிராக சிரியாவில் இரசியா செயற்பட்டமை உள்நாட்டில் ஒரு பாதகமான சூழலை இரசியாவிற்கு ஏற்படுத்தும். சிரியாவில் இரசியப் படைகள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்ல சிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள சியா ஆட்சியாளர்கள்டுடன் படைத்துறை ரீதியில் இணைந்து செயற்படுவதும் ஈராக்கில் உள்ள சியா ஆட்சியாளர்களுடன் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் சுனி முஸ்லிம்களை இரசியாவிற்கு எதிராக திரும்பச் செய்ய வாய்ப்புண்டு. அமெரிக்க உளவுத் துறை இரசியாவிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரை ( proxy war) சுனி முஸ்லிம்கள் மூலம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

எரிபொருள் விலை
பன்னாட்டு வலு முகவரகம் 2017இல் உலக மசகு எண்ணெய்க்கான தேவை 1.3 மில்லியன் பீப்பாய்களால் அதிகரிக்கு என எதிர்வு கூறியுள்ளது. எரிபொருள் உற்பத்தி நாடுகள் எரிபொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த 2017இலும் முயற்ச்சி செய்யும். ஆனால் அமெரிக்காவின் ஷேல் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும் அமெரிக்கா தேவை ஏற்படின் தனது எரிபொருள் இருப்பை உலகச் சந்தையில் விற்கத் தயாரக இருப்பதும் 2017இல் எரிபொருள் விலையை பெருமளவில் அதிகரிக்க விடாது. சில ஆய்வாளர்கள் 2017இன் முற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 53டொலர்களாகவும் ஆண்டு இறுதியில் 56 டொலர்களாகவும் இருக்கும் என எதிர்வு கூறியுள்ளனர். ஒரு சிலர் 2018இன் இறுதியில் 100டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவின் நாணயமற்ற செய்கை
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நரேந்திர மோடியின் அரசு நாணயத்தைச் செல்லாமற் செய்தமை நாட்டின் பணப் புழக்கத்தை குறைத்துள்ளது. நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கிவிட்டு போதிய அளவு புதிய தாள்களை வேண்டுமென்றே அடிக்காமல் விட்டனர். இது வங்கிகளின் நிதி இருப்பை அதிகரிக்கப் பண்ண செய்யபட்ட சதி. குறைக்கப்பட்ட நாணயப் புழக்கம் 2017-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் G-20 நாடுகளில் அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக 2017இலும் இந்தியா திகழும். உலக அரங்கிலும் தனது செல்வாக்கை இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால் இந்தியா பல உள்நாட்டுப் பிரச்சனைகளை தொடர்ந்தும் எதிர்கொள்ளும். 2016இல் விழ்ச்சியடைந்த எரிபொருள் விலை விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது. 2017இல் அந்த உதவி இல்லாமல் போகலாம்.

சீனா
சீனக் கூட்டாண்மைகளின் (Corporates) கடன்பளு 18ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என Bank for International Settlements மதிப்பிட்டுள்ளது. இது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 170 விழுக்காடாக இருப்பது ஓர் ஆபத்தான நிலையாகும். கடன் கொடுத்த வங்கிகள் பேராபத்தை எதிர்கொள்கின்றன. சீனாவின் நாணயத்தின் மதிப்புக் குறைந்த வேளையிலும் 2016-ம் ஆண்டு ஒக்டோபரில் சீனாவின் ஏற்றுமதி 7.3 விழுக்காட்டால் குறைந்துள்ளது. புதிய அமெரிக்க அதிபரின் வர்த்தகக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படப்போகும் நாடாக சீனா அமைய வாய்ப்புண்டு. சீனாவின் நாணயப் பெறுமதி ஏற்ற இறக்கத்தில் சீன அரசு விதிக்கும் கட்டுப்பாடும் சீனாவில் இருந்து மூலதனங்கள் வெளியேறுவதற்கு சீன அரசு விதித்துள்ள தடைகளும் இல்லாவிடில் சீன நாணயம் மதிப்பற்ற ஒன்றாகிவிடும் எனக் கூறும் பொருளாதார நிபுணர்களும் உள்ளனர். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சீனா தென் சீனக் கடலில் தனது விரிவாக்க முயற்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரிக்கா தனது அணுகு முறையை மாற்றும் வரை அதைத் தடுக்க முடியாது. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கு எதிராக சீனா தனது நடவடிக்கைகளை சற்று அடக்கி வாசிக்கும். அமெரிக்காவும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு 2016இன் இறுதியில் உச்சமடைந்திருக்கும் நிலையில் இந்திய எல்லைகளைல் சீனப்படைகள் ஆதிக்கம் காட்டுவதைக் குறைத்துக் கொள்ளும்.

தீவிரவாத அமைப்புக்கள்
ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசின் கோட்டையாக விளங்கிய அலெப்பேயின் வீழ்ச்சி அதன் அழிவிற்கு வழிவகுக்காது. சிரிய உள்நாட்டுப் போர் 2017இல் தணியலாம் ஆனால் முடிவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு அதிக படைக்கலன்கள் கிடைக்கும். ஆனால் அவை இஸ்ரேலுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டால் அதன் பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஹிஸ்புல்லா அறியும். அல் நஸ்ரா அமைப்பு சிரியாவில் அதிக தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளும். ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் பதுங்கியிருக்கும். கஷ்மீரில் இந்தியா தனது அடக்கு முறையை அதிகரிக்கும்.

இணையவெளி மோதல்கள்
இணையவெளி ஊடுருவல்கள் திருட்டுக்கள் கொள்ளைகள் மட்டுமல்ல தீவிரவாத நடவடிக்கைகள் கூட 2017இல் அதிகரிக்கும். அதற்கு எதிரான போர்முறைமைகளும் அதிகரிக்கும். இது இரசியா அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளிடை பெரும் மோதல்களையும் உருவாக்கும்.

பல பன்னாட்டு உடன்படிக்கைகள் 2016இல் பெரும் சவால்களைச் சந்திக்கும். இரசியாவும் சீனாவும் ஐநா சபையில் மேற்கு நாடுகளுக்கான தமது சவால்களையும் தடைகளையும் அதிகரித்து உலகில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அசைக்க முயலும்.


மொத்தத்தில் 2017இல் உலகம் திணறப் போகின்றது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...