Monday, 19 September 2016

பசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந்தியாவும்

ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன், இந்தியத்  தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பிரித்தானியத் தலைமை அமைச்சர் தெரெசா மே ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பைச் செய்த சீன அரசு பராக் ஒபாமாவிற்கு திட்டமிட்டு அவமரியாதை செய்தது. ஒபாமாவின் விமானம் தரை இறங்கியவுடன் அவர் விமானத்தில் இருந்து இறங்குவதற்கான தானியங்கிப் படி வழங்கப் படவில்லை. அவர் வழமைக்கு மாறாக விமானத்தின் உள்ளிருந்து இறக்கப் பட்ட படியால் இறங்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல ஒபமாவை வரவேற்க சீனாவிற்கு ஏற்கனவே பேச்சு வார்த்தைக்கு எனச் சென்றிருந்த அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசான் றைஸ் ஒபாமாவிற்கு அண்மையில் செல்லாமல் அநாகரீகமான முறையில் தடுக்கப்பட்டார். ஒபாமாவின் வருகைக் காணச் சென்றிந்த அமெரிக்க ஊடகவியலாளர்களுடன் சீனா அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டனர். ஊடகவியலாளர்களுக்கு இது எங்கள் நாடு இது எங்கள் விமான நிலையம் என சீன அதிகாரிகள் அவர்கள் மீது சீறினர். சீனா கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றில் செய்ய முனையும் விரிவாக்கத்திற்கு பராக் ஒபாமாவின் நிர்வாகம் எந்த அளவு தடை விதிக்கின்றது என்பதையும் அதனால் சீனா எந்த அளவு ஆத்திரம் அடைந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.

பசுபிக் மாக்கடலின் மேற்குக் கரை
பசுபிக் மாக்கடல் கிழக்கே அமெரிக்கக் கண்டத்தையும், மேற்கே ஆசியக் கண்டத்தையும் ஒஸ்ரேலியாவையும் எல்லைகளாகக் கொண்டது. உலக எரிபொருள் விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்து மாக்கடலினூடாக பசுபிக் மாக்கடலுக்குச் செல்கின்றது. உலக வர்த்தகத்தின் 30 விழுக்காடு தென் சீனக் கடலின் ஊடாகச் செல்கின்றது. அதில் 1.2ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் அமெரிக்காவிற்குச் செல்கின்றது.  ஒஸ்ரேலியா, கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் பசுபிக் வளைய நாடுகளாகும். ஜப்பானும், இரசியாவின் மேற்குப் பிராந்தியம்மு பசுபிக் மாக்கடலுடன் தொடர்பு பட்டிருப்பதால் அவையும் பசுபிக் நாடுகளாகக் கருதப்படக் கூடியவையே, தென் கொரியாவும் இவ்வாறே பசுபிக் நாடாகும். சீனாவைப் பொறுத்தவரை தனது கடற்பரப்பு அதிகரிப்பிற்கும் பிராந்திய வர்த்தகத்திற்கும் இடையில் தடுமாறுகின்றது. சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சரும் சீனப் பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னோடியுமான டெங் ஜியாபிங் (Deng Xiaoping) அவர்களின் முக்கிய கொள்கையாக மற்ற நாடுகளுடன் மோதாமல் இருத்தல் என்பது இருந்தது. இதில் இருந்து எப்படி விலகுவது என்பதையிட்டு சீனா ஆழமாகச் சிந்திக்கின்றது. சீனாவுடன் ஓரு மோதலுக்கு என்றும் தயாராக இருப்பதால் மட்டுமே சீனாவுடனான மோதலைத் தடுக்கலாம் என ஜப்பானின் கொள்கை மாற்றமடைந்துள்ளது.

கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரையில் ஆதிக்கம்
பசுபிக் மாகடலின் கிழக்குக் கரையில் இருக்கும் அமெரிக்கா அதன் மேற்குக் கரையில் சீனா முழுமையான ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. அதை முந்திக் கொண்டு தான் அங்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு துடிக்கின்றது. ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடனான உறவு அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்ற ஆசிய நாடுகள் சீனாவை இட்டு கொண்டுள்ள அச்சமும் அமெரிக்காவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால்தான் பல ஆண்டுகள் அமெரிக்காவுடன் போர் புரிந்த நாடாகிய வியட்நாமின் மக்கள் அமெரிக்காவை உலகிலேயே அதிகம் நேசிப்பவர்களாக மாறியுள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தேவடியாள் மகன் என அழைத்த பிலிப்பைன்ஸ் அதிபர் அமெரிக்காவிற்கு ஆசியானில் தோன்றியுள்ள புதிய தடையாகும். கம்போடியா ஏற்கனவே சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக மாறிவிட்டது.

ஆசியான் நாடுகள்
புரூனே, மியன்மார்(பர்மா), கம்போடியா, இந்தோனேசியா, லாவொஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும். இவற்றில் கம்போடியாவைத் தவிர ஏனைய நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தைப் பெரிதும் விரும்புகின்றன. அதே வேளை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தப்ப ஐக்கிய அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை நாடி நிற்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு சமநிலையைப் பேணுவதில் அவை திண்டாடுகின்றன. தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள முரண்பாடு சீனாவின் அயல் நாடுகளை அமெரிக்கா பக்கம் சாய வைத்துள்ளது.

வரைபடம் மூலம் ஆக்கிரமிக்கும் சீனா
அமெரிக்கா ஆசியச் சுழற்ச்சி மையம் என்ற திட்டத்தையும் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பாங்காண்மைத் திட்டத்தையும் தொடர்ந்து பசுபிக் மாக்கடல் மீதான ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்துள்ளது.  பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை பல பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் வேளையிலும் பசுபிக்கை ஒட்டிய நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் படைத்துறை ஒத்துழைப்புக்கள் சீனாவிற்குச் ச்வால் விடக்குடிய வகையில் அமையும். பசுபிக் மாக்கடலிலும் தென் சீனக் கடல் போல் ஒரு கொதிநிலையை உருவாக்கும் வகையில் சீனாவின் கல்வி அமைச்சு ஒரு புதிய உலக வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் பசுபிக் மாக்கடலின் பெரும் பகுதியும் ஹவாய் தீவும், மைக்குரோனேசியாவின் பெரும் பகுதியும் சீனாவிற்கு சொந்தமானது எனக் காண்பிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை 
அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை ஒப்பந்தம் பசுபிக் வளைய நாடுகளுடனான வர்த்தகத்தை சீனாவை முந்திக் கொண்டு விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2012இல் தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே. ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றியே அதிகம் உரையாடினார். ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, வியட்னாம், சிங்கப்பூர், புரூனே, ஒஸ்ரேலியா, நியூ சிலாந்து, கனடா, சிலி பெரு ஆகிய நாடுகள் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மையில் இணைய ஒத்துக் கொண்டன. ஆனால் அதை ஒவ்வொரு நாடுகளினதும் பாராளமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகின்றன. 12 நாடுகளில் மலேசியப் பாராளமன்றம் மட்டுமே பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கையை அங்கீகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனும் டொனால்ட் ரம்பும் தமது எதிர்ப்பை வெளிவிட்டுள்ளனர். பசுபிக் தாண்டிய பங்காண்மை சீனாவை அமெரிக்கா பொருளாதார ரீதியில் சுற்றி வளைக்கும் தந்திரமே. கனடிய அரசின் ஆய்வின் படி பசுபிக் தாண்டிய வார்த்தக பங்காண்மை உடன்படிக்கை கனடிய மொத்த பொருளாதார உற்பத்தியை 4 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும். ப.தா.வ.ப உடன்படிக்கை பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும் அது பல மீள் பேச்சு வார்த்தைகளின் பின்னர் மீளவும் உயிர் பெறும் வாய்ப்புக்களே அதிகம்.

சீனாவின் கடற்படை டம்மி பீஸா?
சீனா ஒரு விமானம் தாங்கிக் கப்பலை வைத்திருந்தாலும் இன்னும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருந்தாலும் அது அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை பின் தங்கியுள்ளது. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் லியோனிங் முழுமையான செயற்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டுக்கு மேல் எடுக்கலாம். சீனா பல வலுமிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டிருந்தாலும் சீனக் கரையோரம் ஆழம் குறைந்த கடலாகும். அதனால் சீனக் கடற்படை ஒரு நீலக் கடல் கடற்படை (Blue Water Navy) அல்ல எனச் சில படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நீலக் கடல் கடற்படை என்பது உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று தாக்குதல் செய்யக் கூடிய கடற்படையாகும். சீனாவின் முத்து மாலைத் திட்டம் அரபிக் கடலுடன் முடிவடைகின்றது.


சீனாவின் காசோலை அரசுறவியல் (chequebook diplomacy)
ஒரு நாட்டின் பொருளாதாரம் அல்லது அதன் ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது நிதி உதவி செய்து அதை தமது நட்பு நாடாக்குவது காசோலை அரசுறவியலாகும். சீனா குக் தீவுகள், மிக்ரோனேசியா, பப்புவா நியூ கினி, சமோ, டொங்கா ஆகிய பசுபிக் பிராந்திய நாடுகளுடன் தனது உறவை காசோலை அரசுறவாலேயே வளர்த்தது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அபரிமிதமான கடற்படை வளர்ச்சியும் பல பசுபிக் கரையோர நாடுகளை அச்சமடைய வைத்துள்ளன. சீனாவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிவிடுமா என்ற அச்சமும் சில நாடுகளை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால் சீனாவின் மொத்தப் படைத்துறைச் செலவிலும் பார்க்க அமெரிக்கா தனது கடற்படைக்குச் செய்யும் செலவு அதிகமாகும். அமெரிக்கக் கடற்படையின் வலுவிற்கு சமமாக சீனக் கடற்படை வளர இன்னும் 30 ஆண்டுகள் எடுக்கும் எனச் சீன நிபுணர்களே மதிப்பிட்டுள்ளார்கள்.

இரசியாவும் பசுபிக் பிராந்தியமும்
சோவியத் ஒன்றியம் பசுபிக் பிராந்தியத்தில் பெரும் கடற்படையை நிறுத்தியிருந்தது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக பல இரசியக் கடற்படைக்கலன்கள் பசுபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறின. 2000-ம் ஆண்டு இரசியாவின் ஒரு வழிகாட்டி ஏவுகணை தாங்கிக் கப்பல் மட்டுமே பசுபிக்கில் இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டு ஒரு பெரிய வழிகாட்டல் ஏவுகணைதாங்கிக் கப்பல், ஐந்து நாசகாரிக் கப்பல்கள், பத்து அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள், எட்டு டீசலில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் பசுபிக்கில் இரசியாவால் நிறுத்தப்பட்டன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் இரசியா பசுபிக்கிற்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் பத்து அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகள் மீது வீச வல்லன. இவை 8300 கிலோ மீட்டர் தூரம் பாயக் கூடியவை. இரசியாவின் இந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் எந்த அளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றது. இரசியாவால் மட்டுமே அமெரிக்காவின் படைத்துறைக்குப் புலப்படாத அணுவலுவில் இயங்கும் Borei- and Yasen-class வகை நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முடியும். 2020-ம் ஆண்டு இரசியா இப்படிப்பட்ட எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை உலகெங்கும் நிறுத்தவுள்ளது.  1996-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கும் திட்டம் பல தடைகளைத் தாண்டி நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியத்துவம்
பசுபிக்கில் இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு அவசியம்
7517 கிலோ மீட்டர் நிளமான கடற்கரையைக் கொண்ட இந்தியாவிற்கு உலகிலேயே முன்னணிக் கடற்படை அவசியம். அதற்கு ஏற்ப இந்தியாவும் தனது கடற்படையின் வலுவை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. எதிரி உன் எல்லைக்கு வர முன்னர் எதிரியின் எல்லைக்கு நீ செல்ல வேண்டும் என்பது போல் இந்தியா செயற்பட வேண்டும் என்னும் நிலை இந்தியாவிற்கு உருவாகியுள்ளது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கல் வசதி மாற்றிகளை மாற்றிக்கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எவ்வளவு கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக் காட்டுகின்றது. இந்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மற்ற நாட்டின் துறைமுகங்களிலும் விமானத் தளங்களிலும் தங்கி எரிபொருள் மீள் நிரப்பல், பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளைச் செய்ய முடியும். இது நரி கொக்குக்கு கொடுத்த விருந்து போன்றது. தற்போது உள்ள சூழ் நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் பெருமளவில் இந்தியாவைப் பயன்படுத்த முடியும். இந்தியா எந்த அளவு அமெரிக்காவில் உள்ள தளங்களைப் பாவிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இந்தியா பயன் படுத்த முடியும், இந்த ஒப்பந்தம் இந்தியாவில் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த ஒப்பந்தத்தின் முழுவிபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உலகக் கடல்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முதுகெலும்பாக இருப்பது அதன் விமானம் தாங்கிக் கப்பல்களே. ஆனால் ஒரு அமெரிக்கப் படைத்துறை நிபுணர் தான் அமெரிக்கக் கடற்படை மீது தாக்குதல் தொடுப்பதாயின் அதன் வழங்கற் கப்பல்கள் மீதே முதல் தாக்குதல் நடத்துவேன் என்றார். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் கடுமையான பாதுகாப்புடன் பயணிப்பவை அவற்றின் மீது தாக்குதல் நடத்துவது பல நாடுகளுக்கு முடியாத காரியம். ஆனால் அமெரிக்காவின் வழங்கற் கப்பல்களுக்குப் பலத்த பாதுகாப்பு இல்லை. அமெரிக்காவின் இந்த வலுமின்மைப் புள்ளியை இந்திய உறவாலும் ஒத்துழைப்பாலும் சரி செய்ய முடியும். சீனாவின் படைத்துறையின் வழங்கற் சேவை எனப் பார்த்தால் அமெரிக்காவின் வழங்கற் சேவையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகவே உள்ளது. அது மட்டுமல்ல சீனாவின் மொத்தப் படைத் துறையே களமுனை அனுபவம் இல்லாததாகும்.

சமநிலையைத் தீர்மானிக்கும் இந்தியா
இந்தியா ஒரு வல்லரசாக இல்லாத போதிலும் வல்லரசுகளிடையான ஆதிக்கப் போட்டியில் இந்து மாக்கடலில் படைத்துறைச் சம நிலையைத் தீர்மானிக்கும் நாடாக தற்போது இந்தியா இருக்கின்றது. அதாவது எந்த வல்லரசின் பக்கம் இந்தியா இருக்கின்றதோ அந்தப் பக்கம் அதிக வலுவுள்ளதாக இருக்கும். அதனால்தான் சீனாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவை கொண்ட ஒரு படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே அதிக அக்கறை காட்டுகின்றார் ஆனால் இந்த இரண்டு நாடுகளையும் நம்பி சீனாவிற்கு எதிராகக் கூட்டணி அமைத்து அதனுடனான பகைமையை மோசமாக்குவதா என இந்தியா யோசிக்கின்றது. இந்து மாக்கடலில் மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிக்கும் வலிமையை இந்தியப் படைத்துறையின் வளர்ச்சி ஏற்படுத்தும். 2020-ம் ஆண்டு இரசியா தனது படத்துறையை புதுப்பிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னரும் சீனாவின் படைத்துறை மேலும் வளர்ச்சியடைந்த பின்னரும் உலகப் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அமையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...