Monday, 26 September 2016

இடியப்பச் சிக்கலான லிபியப் பிரச்சனை

லிபிய நாடாளமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் லிபியக் கசாப்புக் கடைக்காரர் என்றார். லிபியாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு அவர் பின்னணியில் இருக்கின்றார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஐ எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப் படும் டவகா என்ற இனக்குழுமத்தின் பிரதிநிதிகளே ஹிலரி மீது இக்குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். லிபிய உள்நாட்டுக் குழப்பத்தால் டவகா இனக்குழுமத்தினர் எல்லோரும் வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியப் போராளிகள் ஆயிரக்கணக்காக பெண்களைக் கொடுமைப் படுத்துகின்றார்கள். பல்லாயிரக் கணக்கானவர்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளார்கள். இஸ்லாமியப் போராளிகள் அப்பாவிகளைப் பெருமளவில் சிறை வைத்திருக்கும் மிஸரட்டா நகருக்கு ஹிலரி கிளிண்டன் பல தடவைகள் பயணம் மேற்கொண்டிருந்தார் எனக் குற்றம் சாட்டுகின்றார் டவகா இனக்குழும நாடாளமன்ற உறுப்பினர் ஜபல்லா அல் ஷிபானி. திரிப்போலியையும் லிபிய எரிபொருள் வளங்களையும் கட்டுப்படுத்துவதற்காக ஹிலரி இப்போதும் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருக்கின்றார் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். 


மோசமான நிலைமை
ஈராக்கிலும் சிரியாவிலும் இருந்து ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசின் உயர் மட்டத்தலைவர்கள் பலர் தற்போது லிபியாவின் சேர்ட் நகரிற்கு நகர்ந்துள்ளார்கள். அந்த அளவிற்கு லிபியாவில் நிலைமை மாறியுள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி பிறந்த நகரான சேர்ட் 2015-ம் ஆண்டு மே மாதம் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மத்திய தரைக் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சேர்ட் நகரைக் கைப்பற்றினால் அங்கிருந்து ஐரோப்பா மீதான தாக்குதலுக்கு வசதியாக அமையும் என்பது அவர்கள் நோக்கமாக இருந்தது. படையணி-166 என்ற போராளிக்குழுவிடமிருந்து ஐ எஸ் அமைப்பினர் சேர்ட் நகரைக் கைப்பற்றினர். சிரியாவில் இரண்டு நாடாளமன்றங்களும் மூன்று அரசுகளும் இருக்கின்றன. ஐரோப்பாவில் தஞ்சம் கோர வட ஆபிரிக்காவில் இருந்து செல்வோர் லிபியாவினூடாகவே செல்கின்றனர். அதனால் லிபியாவில் ஒரு தஞ்சம் வழங்கல் பணிமனை அமைத்து அங்கிருந்து தஞ்சக் கோரிக்காயாளர்களைக் கையாள் வேண்டும் என்றார் ஹங்கேரியின் தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன். 

ஐ எஸ் அமைப்பினரின் அதிரடியான லிபிய நுழைவு
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திர்ப்போலியில் ஓர் உல்லாச விடுதி மீது தாக்குதல் செய்து ஓர் அமெரிக்கர் உட்பட ஒன்பதுபேரை இஸ்லாமிய அரசு அமைப்பினர் கொன்றதைத் தொடர்ந்தும் பெப்ரவரி மாதம் எகிப்திய கொப்ரிக் கிருத்தவர்கள் 21பேரை ஐ எஸ் அமைப்பினர் லிபியாவில் தலைகளை வெட்டிக் கொன்றதைத் தொடர்ந்தும் ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் மட்டுமல்ல லிபியாவிலும் தன்னை விரிவுபடுத்தியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து லிபியாவில் எகிப்திய விமானங்கள் ஐ எஸ் இலக்குகள் மீது குண்டு வீசின. இரண்டாயிரம் வரையிலான ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளூம் படைக் குழுக்களைக் கொண்ட லிபியாவில் சிறு நிலப்பரப்பு மட்டுமே ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அமெரிக்க ஆதரவு படைக்குழுக்கள் சேர்ட் நகரின் பல பகுதிகளில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை விரட்டினர். லிபியப் பெற்றோலிய வசதிப் பாதுகாப்புப் படை (Libyan Petroleum Facilities Guard) என்னும் போராளிக் குழுவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றனர். லிபியத் தேசியப் படை என்ற போராளிக் குழு ஐ எஸ் சார்பானது எனச் சொல்லி அவர்கள் மீதும் லிபியப் பெற்றோலிய வசதிப் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அன்சர் அல் ஷரியா என்னும் போராளிக் குழு பெங்காசி, டொப்ருக், டெர்னா, சப்ராத்தா ஆகிய பிரதேசங்களில் வலுவுடன் இருக்கின்றது. அன்சர் அல் ஷரியா அமைப்பு மற்ற இஸ்லாமியவாத அமைப்புக்களுடன் இணைந்து பெங்காசி புரட்சிகர ஷ்ரா சபை (Benghazi Revolutionaries Shura Council) என்னும் குடை அமைப்பை உருவாக்கியுள்ளது.

தீர்க்க முடியாத ஐநா சபை
லிபியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத் தூதுவர் பெர்ணாடினோ லியோன் (Bernardino Leon) மிகவும் சர்ச்சைக்கு உரியவராகி இருக்கின்றார். ஒரு நாட்டில் பிரச்சனை என்றால் அல்லது நாடுகளுக்கிடையில் பிரச்சனை என்றால் ஐநா சபை ஒரு சமாதானத் தூதுவரை நியமிக்கும். அவருக்கு கொழுத்த சம்பளம் வழங்கப்படுவதுடன், உல்லாசமான விமானப் பயணம், உல்லாச விடுதிகளில் தங்கல் எனப் பலவற்றை அவரால் அனுபவிக்க முடியும். அவர்கள் சமாதான் பேச்சு வார்த்தையை உள்நாட்டில் செய்து பார்ப்பார்கள் பின்னர் அது சரியில்லை என்று சொல்லி ஜெனிவாவில் அல்லது ஏதாவது உல்லாச நகர்களில் பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு செய்வார்கள். ஜெனீவா என்பது பன்னாட்டு அரசுறவியலாளர்களுக்கு மிகவும் பிடித்த இடம். உலகிலேயே ஊழல் நிறைந்ததாகவும் மோசமான முகாமைத்துவம் கொண்டதாகவும் ஓர் அமைப்பு இருக்கின்றதென்றால் அது ஐநா சபைதான் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஐநாவின் சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக நியமிக்கப் பட்ட முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் சில மாதங்களில் தனது பதவியை துறந்தார். பதவி விலகும் போது ஐநாவின் நிரந்தர உறுப்புரிமையுள்ள நாடுகளான வல்லரசுகள் மீது அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்குப் பின்னர் சிரியாவிற்கான ஐநா தூதுவராகப் பதவியேற்ற அல்ஜீரியர அரசுறவியலாளர் அல் அக்தர் பிராமி 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் அங்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் பதவியில் இன்று வரை ஒட்டிக் கொண்டே இருக்கின்றார்.

பெர்ணாடினோ லியோன்  தொட்ட இடம் துலங்கும்
லிபியாவிற்கான ஐநா சமாதானத் தூதுவரான ஸ்பானிய நாட்டு அரசுறவியலாளர் பெர்ணாடினோ லியோன் மிகவும் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றார் என்பது அவர் ஐக்கிய அமீரகத்தின் மன்னருக்கு எழுதிய மின்னஞ்சல் அம்பலமான போது தெரிய வந்துள்ளது. இவர் தொட்ட இடம் துலங்கும் என்பதற்கு இவர் முன்னர் ஆப்கானிஸ்த்தான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு ஐநாவின் சிறப்புத் தூதுவராக இருந்தமையே சான்று. லிபியாவில் நடந்த தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட நாடாளமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லாதபடியால் ஐநா சபை லிபியாவில் ஓர் அரசைத் திணிக்க முயன்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.


நரியூருக்கு அஞ்சி புலியூருக்குப் போன கதை
நாற்பது ஆண்டுகள் சிரியாவில் ஆட்சியில் இருந்த மும்மர் கடாஃபி 2011-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொல்லப்பட்ட பின்னர் லிபியாவின் பெரும் குழப்ப நிலை உருவானது. படைக்கலன்கள் ஏந்திய பல தரப்பட்ட குழுக்கள் தமக்கு என பிராந்தியங்களைக் கைப்பற்றிக் கொண்டன. லிபியா படைக்கலன்கள் களவாக விற்பனை செய்வதற்குப் பிரபலமான நாடாகியது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைகளுக்கு வலிமை மிக்க படைக்கலன்கள் முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போய்ச் சேராமல் இருக்க அமெரிக்கா பெரு முயற்ச்சி எடுத்தது. சதாம் ஹுசேயினை ஆட்சியில் இருந்து அழிக்கும் போது அவரது படையினரை அமெரிக்கா அழித்து ஒழித்தது. அதனால் சதாமிற்கு பின்னர் ஒரு திடமான அரசை ஈராக்கில் அமெரிக்காவால் உருவாக்க முடியாமல் போனது. அதனால் கடாஃபியை ஆட்சியில் இருந்து அகற்றும் போது அவருக்கு நெருக்கமானவர்களைத் தவிர ஏனைய படையினர் உயிருடன் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொண்டது. ஆனால் நூற்றி நாற்பதிற்கும் மேற்பட்ட இனக் குழுமங்களை கொண்ட லிபியாவை கடாஃபி உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கொண்ட ஆட்சி மூலமும் அடக்கு முறை மூலமும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தார். கடாஃபியின் ஆட்சியின் கீழ் இலவச மின்சாரம் பெற்ற லிபியர்கள் பலர் தற்போது மின்சார வசதி இன்றி இருக்கின்றார்கள். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மின்சாரம் இல்லாததால் வாகனங்கள் மைல் கணக்கில் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்குக் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் அயல்நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றார்கள்.

தீர்வு தராத தேர்தல்
2014-ம் ஆண்டு லிபியாவில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு தலைமையிலான லிபிய உதயம் குழுவினர் தோல்வியடைந்த போதிலும் லிபியத் தலைநகர் திரிப்போலியைத் தம் வசமாக்கினர். அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரைக்கப் பட்ட ஆட்சியாளர்களை எகிப்திற்கு அண்மையாக உள்ள மத்திய தரைக் கடல் நகரனா தொப்ருக்கிற்கு விரட்டினர். இரு “ஆட்சியாளர்களும்” தொடர்ந்து மோதிக் கொண்டனர். மூன்றாவது ஆட்சியாளர்களாக ஐ எஸ் அமைப்பினர். கடாஃபியைப் பதவியில் இருந்து விலக்குவதில் ஒன்றுபட்டுச் செயற்பட்ட ஐக்கிய அமெரிக்க அமீரகமும் கட்டாரும் பின்னர் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிர் அணியில் நிற்கின்றன. தொப்ருக்கில் இருந்து செயற்படும் படைக்கலன் ஏந்திய குழுவிற்கு ஐக்கிய அமீரகம், இரசியா எகிப்து ஆகியவை பின் வலுவாக இருக்கின்றன. திரிப்போலியில் செயற்படும் இஸ்லாமியவாதிகளுக்கு காட்டர், துருக்கி, சூடான் ஆகிய நாடுகள் உதவியாக இருக்கின்றன. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் எகிப்தியப் படைத்துறை ஆட்சியாளர்களுக்கும் அப்துல் கமால் நாசர் ஆட்சியில் இருந்தே தீராத பகை. மக்களாட்சிப்படி இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மதவாத ஆட்சி நடக்க வேண்டும் என்ற கொள்கையுடைய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை மன்னராட்சி செய்யும் அரபுநாடுகளின் ஆட்சியாளர்களும் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த இருதரப்பில் யாருடன் சேர்வது என்று தெரியாத நிலையில் சவுதி அரேபியா இருக்கின்றது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஜின்ரான் படையினர், லிபியத் தேசியப் படையினர், ஆகியவை லிபியக் கௌரவம் என்னும் குடை அமைப்பின் கீழும் மேற்குப் பிராந்தியத்தில் லிபிய உதயம் என்னும் பெயரில் இன்னும் ஒரு குடை அமைப்பும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன.

கடாஃபியின் கைக்கூலிப் படைகள்
2011-ம் ஆண்டு கடாஃபிக்கு எதிரான போரின் போது கடாஃபியால் தனது படையினரை நம்ப முடியாமல் போனது. அதனால் சாட் போன்ற அயல் நாடுகளில் இருந்து இளைஞர்களைத் தனது படையில் சம்பளத்திற்குச் சேர்த்துக் கொண்டதுடன் அவர்களுக்கு லிபியக் குடியுரிமையும் வழங்கினார். ஏற்கனவே லிபியாவில் உள்ள பலபடைக்கலன்கள் ஏந்திய குழுக்களுடன் இவர்களின் குழுக்களும் தமக்கென நிலப்பரப்புக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். இது லிபியச் சிக்கலை மேலும் மோசமாக்கின்றது.

லிபியாவில் அமெரிக்கா
லிபியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவால் அங்கு ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தாவிடினும் குறைந்தது கடாஃபியின் ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்த நிம்மதியைக் கூட அமெரிக்காவால் லிபிய மக்களுக்கு வழங்க முடியவில்லை. கடாஃபிக்குப் பின்னர் லிபியாவில் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதைத் திட்ட மிட்டு நிறைவேற்றாமல் விட்டது தனது ஆட்சிக் காலத்தில் விட்ட மிகப் பெரும் தவறு என்கின்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்கா அவ்வப் போது தனது சிறப்புப் படையணிகளை லிபியாவிற்கு அனுப்பி இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கொலை செய்து கொண்டிருக்கின்றது. 2016-ம் ஆண்டு எட்டாம் மாதத்தில் இருந்து அமெரிக்கப் படையினர் லிபியாவின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. ஐ எஸ் அமைப்பின் தலைவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்து தப்பி லிபியா சென்றமையே இதற்கான காரணம். அமெரிக்கா தனக்கு ஏதுவான குழுக்கள் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதற்கு உதவி செய்கின்றது. இதற்காக சிறிய அளவு எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படையணியினர் அடிக்கடி லிபியா சென்று வருகின்றனர். அடிக்கடி அமெரிக்க விமானங்கள் லிபியாவிற்குள் சென்று குண்டுகளையும் வீசுகின்றன.

ஈரானும் லிபியாவும்
ஈரானியக் கரங்கள் ஈராக், சிரியா, லெபனான், சூடான், ஆகிய நாடுகள் வரை நீண்டிருக்கின்றன. இதனால் அரபு நாடுகளில் ஐந்தில் ஒரு பகுதியில் அரபு நாடல்லாத ஈரான் ஆதிக்கம் செலுத்துகின்றது. எகிப்த்து லிபியா, பாஹ்ரேன், அல்ஜீரியா, துனிசீயா ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ஒரு வல்லரசாக வேண்டும் என்ற ஈரானிய மதவாத ஆட்சியாளர்களின் கனவு பல ஆட்சிக் கூறுகளாகப் பிரிவு பட்டிருக்கும் லிபியாவில் கூட சரிவரவில்லை. ஈராக்கைப் போல் லிபியாவில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லை. சிரியாவைப் போல் சியா முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்திலும் இல்லை. இதனால் ஈரானால் கணிசமான அளவு ஆதிக்கம் லிபியாவில் செலுத்த முடியவில்லை.

பலஸ்த்தீனியப் பிரச்சனையை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தீர்க்க முடியாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையாலும் மேற்கு நாடுகளாலும் அவற்றுடன் நட்புப்பாராட்டும் வளைகுடா நாடுகளாலும் லிபியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. மத்திய தரைக் கடலின் தென் கரையில் உள்ள நாடுகளான எகிப்த்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினால் ரணகளத்தில் மிதக்க வேண்டுமா?


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...