Monday, 12 September 2016

அழித்துக் கொண்டே இருக்கும் இஸ்ரேலை அழிக்க முடியுமா?

உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி ஆணையிட்டால் இஸ்ரேலை எட்டு நிமிடங்களில் அழித்தொழிப்போம் என்றார் ஈரானியப் புரட்சிப் படைத்துறையின் ஆலோசகர் அஹ்மட் கரிம்போர். இஸ்ரேலை அழித்தொழிப்போம் என சூளுரைத்தது இது முதற் தடவையுமல்ல கடைசித் தடவையுமல்ல. ஈரான் 2016-ம் ஆண்டு மே மாதம் 2000 கிலோ மீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சித்த பின்னரே அஹ்மட் கரிம்போர் இப்படிச் சூளுரைத்திருந்தார். 1965-ம் ஆண்டு அப்போதைய எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் நாம் நுழையப் போவது மணல் நிறைந்த பலஸ்த்தீனத்திற்குள் அல்ல இரத்தத்தில் தோய்ந்த நிலத்தினுள் நாம் நுழையப் போகின்றோம் என்றார். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ பலஸ்த்தீனியர்கள் யூதர்களை இனச் சுத்திகரிப்புச் செய்கின்றார்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவுட்டது பல எதிர்ப்புக்களைக் கிளறியுள்ளது. 

பலஸ்த்தீனம் யாருக்கு?
தற்போது உள்ள இஸ்ரேல், காசா நிலப்பரப்பு,  கிழக்கு ஜெருசலம், மேற்குக் கரை ஆகியவை இணைந்த பிரதேசம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலஸ்த்தீனம் என்னும் பெயருடன் அரபு மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு பிரதேசமாக இருந்தது. 1917-ம் ஆண்டு பிரித்தானிய அரசு செய்த பல்ஃபர் பிரகடனம் யூதர்களுக்கு என ஒரு பிரதேசத்தை பலஸ்த்தீனத்தில் உருவாக்கி அதையும் தனது குடியேற்ற ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இதற்கு அரபுக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 1948-ம் ஆண்டு யூதர்கள் தமக்கு என ஓர் அரசைப் பிரகடனப் படுத்தினர். அது பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் முழுப் பலஸ்த்தீனமும் யூதர்களுக்கே உரித்தானது என அவர்கள் முழங்கியிருந்தனர். 1948-49இல் நடந்த முதல் அரபுப்போரின் பின்னர் பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பை எகிப்த்தும் மேற்குக் கரையை ஜோர்தானும் ஆக்கிரமித்துக் கொண்டன. 12இலட்சம் மொத்த மக்கள் தொகையைக் கொண்ட அரபு பலஸ்த்தீனியர்களில் ஏழரை இலட்சம் பேர் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர். 1949-ம் ஆண்டின் பின்னர் உலகெங்கிலும் இருந்து பல யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறினர். 1957-ம் ஆண்டு இஸ்ரேல் அணு மின் உற்பத்தி செய்ய பிரான்ஸ் உதவி செய்தது. அது இஸ்ரேலை அணுக்குண்டு உற்பத்தி செய்ய எடுத்த இரகசிய முயற்ச்சியாகும். 1967-ம் ஆண்டு ஆறு நாட்கள் நடந்த அரபு இஸ்ரேல் போரில் கிழக்கு ஜெருசலம் முழு மேற்கும் கரை, காசா நிலப்பரப்பு கோலான் குன்றுகள், சினாய் பாலைவனம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. 1967-ம் ஆண்டுப் போரின் போது 300,000 பலஸ்த்தீனியர்கள் பலஸ்த்தீனியத்தில் இருந்து வெளியேறினர். 


காசா நிலப்பரப்பு

காசா நிலப்பரப்பில் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கின்றனர்.  இஸ்ரேல் என்ற நாடு 1948இல் உருவான போது அரபு நாடுகள் அதற்கு எதிராகப் போர் தொடுத்தன அவை வெற்றி பெறாத போதிலும் காசா நிலப்பரப்பை எகிப்து கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரில் காசா நிலப்பரப்பை எகிப்த்திடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அங்கு யூதர்களை இஸ்ரேல் குடியேற்ற முயன்றாலும் அங்குள்ள மக்கள் நெருக்க மாக குடியிருந்ததாலும் அரபுக்களின் இனப்பெருக்கத்தாலும் யூதக் குடியேற்றம் மேற்குக் கரையில் வெற்றி கொடுத்தைப் போல் காசா நிலப்பரப்பில் வெற்றி பெற முடியவில்லை.  1993இல் செய்து கொண்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் படி காசா நிலப்பரப்பின் முகாமையை இஸ்ரேல் பலஸ்த்தீன அதிகாரசபையிடம் கையளிக்க ஒத்துக் கொண்டது.  ஆனாலும் காசா நிலப்பரப்பில் வான் தரைத் தொடர்புகள் யாவும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கும் எனவும் ஒஸ்லோ உடன்படிக்கியில் ஒத்துக் கொள்ளப்பட்டது. 2005இல் நடந்த கல்லெறி போராட்டம் என்னும் intifadaவின் பின்ன்ர் தான் காசா நிலப்பரப்பு பலஸ்த்தீனிய அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்த யூதர்களையும் வலுக்கட்டாயமாக இஸ்ரேல் வெளியேற்றி தனது படை நிலைகளையும் விலக்கிக் கொண்டது. 2006-ம் ஆண்டு காசா நிலப்பரப்பில் நடந்த தேர்தலில் FATAவிலும் பார்க்க அதிக வாக்குகளைப் பெற்று கமாஸ் அமைப்பு வெற்றி பெற்றது. 2007-ம் ஆண்டு கமாஸ் காசா நிலப்பரப்பை பலஸ்த்தீன அதிகார சபையிடம் இருந்து பறித்துக் கொண்டது. அதன் பின்னர் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் கடல், வான், தரை வழியாக முற்றுகையில் வைத்திருக்கின்றது. ஆண்டு தோறும் இஸ்ரேலியப் படைகள் கமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களுக்கு எதிராக காசா நிலப்பரப்பின் மீது தாக்குதல் நடத்தும். 2009,2014, 2021களில் இஸ்ரேல் கமாஸ் மோதல் கடுமையானதாக இருந்தது. 

1993 ஒஸ்லோ உடன்படிக்கை
ஒஸ்லோ உடன்படிக்கையின் படி காசா நிலப்பரப்பு பலஸ்த்தீனிய அதிகாரசபைக்கு என்று ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் மேற்குகரை 1. முழுக்க பலஸ்த்தீனிய அதிகார சபைக் கட்டுப்பாட்டு பிரதேசம், 2. முழு இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பிரதேசம், 3. இஸ்ரேலும் பலஸ்தீனிய அதிகார சபையும் இணைந்து கட்டுப்படுத்தும் பிரதேசம் எனப் பிரிக்கப்பட்டது. கமாஸ் அமைப்பு ஆதிக்கம் செய்யும் காசா நிலப்பரப்பின் கட்டுப்பாட்டை பலஸ்த்தீனிய அதிகார சபையிடம் கையளித்தது ஏமாற்றும் செயலே. 

இஸ்ரேலின் இருப்பு
1947-ம் ஆண்டு இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிக்கப் பட்டபோது 57உறுப்பு நாடுகளில் 37 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. தற்போது ஐநாவில் ஒரே கூரையின் கீழ் இஸ்ரேலுடன் உறுப்புரிமை பெற்றிருக்கும் அரபு நாடுகள் இஸ்ரேலின் இருப்பை ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொண்டுள்ளன எனச் சொல்ல முடியாது. பல அரபு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலியக் கடவுட் சீட்டுடன் அந்த நாடுகளுக்கு யாரும் பயணம் செய்யவும் முடியாது. தற்போது ஐநாவில் உறுப்பினராக இருக்கும் 193 நாடுகளில் 83 விழுக்காடு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கிகரித்துள்ளன.பலஸ்த்தீனிய மேற்குக் கரையில் இருந்து செயற்படும் ஃபற்றா அமைப்பு (முன்னாள் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம்) பலஸ்த்தினியர்களின் விடுதலைக்குப் போராடுகின்ற போதிலும் அது இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் பலஸ்த்தீனியத்தின் இன்னொரு நிலப்பரப்பான காசாவில் இருந்து செயற்படும் கமாஸ் அமைப்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. லெபனானிய சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லாவும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதில் ஈரான் மட்டுமே முனைப்புடன் செயற்படுகின்றது.

அரபு வசந்தமும் இஸ்ரேலின் இருப்பும்.
அரபு வசந்தத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலின் இருப்பு என்பது அசைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரபு வசந்ததம் ஆரம்பித்த பின்னர் பல பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள் இஸ்ரேலுக்கு அது ஆபத்தான ஒன்றாக அமையும் என எச்சரித்தார்கள். இஸ்ரேலியர்கள் மீது பல தீவிரவாதத் தாக்குதல்களும் 2011-ம் ஆண்டு செய்யப்பட்டன. இஸ்ரேலின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இருக்கும் ஜோர்தானில் அரபு வசந்தம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் இஸ்ரேலுக்கு ஆபத்து உருவாகியிருக்கலாம். மேற்குக் கரையில் இருக்கும் பலஸ்த்தீனியர்கள், லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பு ஆகியவையே இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அரபு வசந்தம் சிரியாவிற்குப் பரவி அது சியா முஸ்லிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையிலான போராக மாறிய போது ஈரானின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிரிய அரச படைகளுடன் இணைந்து போராடத் தொடங்கினர். வளைகுடா நாட்டு ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே அதிக நிதி வழங்கத் தொடங்கினர். இதனால் இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல் அரபு வசந்தத்தின் பின்னர் குறையத் தொடங்கியது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றிய போது அது இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த ஆட்சி ஓராண்டு மட்டும்தான் நீடித்தது. அரபு வசந்தத்தின் பின்னர் லிபியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை கமாஸ் அமைப்பினருக்கு பெரும் படைக்கலன்களைக் கடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதனால் சில விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காமாஸ் அமைப்பினரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. சிரியாவில் இருந்து லெபனானிற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் படைக்கலன்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க சிரியாவிற்குள்ளும் லெபனானிற்குள்ளும் இஸ்ரேலிய விமானங்கள் அத்து மீறிப் பறந்து சென்று தாக்குதல்கள் நடத்தின. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. அசாத் இல்லாத சிரியா தீவிரவாத முஸ்லிம்களின் சிரியாவாக இருக்கும் என இஸ்ரேல் கருதுகின்றது. சிரியாவிலும் ஈராக்கிலும் கொல்லப்படும் ஒவ்வொரு இஸ்லாமியத் தீவிரவாதிகளாலும் (குறிப்பாக ஹிஸ்புல்லா போராளிகள்) இஸ்ரேலுக்கான ஆபத்து குறைந்து கொண்டே போகின்றது. இஸ்ரேல் சிரியாவிடமிருந்து பறித்து வைத்திருக்கும் கோலான் குன்றுகளுக்கு எந்தவித ஆபத்தும் தற்போதைக்கு இல்லை. அதற்கான உறுதிமொழியை இரசியா கூட இரகசியமாக இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. அதற்கு மாற்றீடாக சிரியாவில் செயற்படும் இரசியப் போர்விமானங்கள் தப்பித் தவறி இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைவதை இஸ்ரேல் அத்துமீறல் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளாது.

ஈரானின் அணுக்குண்டு
இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முயற்ச்சித்த போது அதிகரித்தது. ஆனால் இஸ்ரேலிடம் ஏற்கனவே அணுக்குண்டுகள் இருக்கின்றன அல்லது தேவை ஏற்படின் அணுக்குண்டுகளைத் தாயாரிக்கும் நிலையில் இஸ்ரேல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதாகும். ஈரானுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் ஒரு நல்ல உறவு இருந்ததில்லை. இருந்தும் இஸ்ரேலுக்குப் பிரச்சனை கொடுக்கக் கூடிய அமைப்பு என்ற அடிப்படையில் ஹமாஸிற்கு ஈரான் உதவி செய்து கொண்டிருக்கின்றது. ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவைத் துண்டிக்க சவுதி அரேபியா முயற்ச்சி செய்தது.

இரும்புக் கூரை என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இரும்புக் கூரை (Iron Dome)  என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இஸ்ரேலின் பாதுகாப்பை மேலும் உறுதிப் படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு இஸ்ரேல் மீது கமாஸ் அமைப்பினர் வீசிய 1506 எறிகணைகளுல் 58 மட்டுமே இஸ்ரேல் மீது விழுந்தன. எஞ்சியவையாவும் இரும்புக் கூரையால் இடைமறித்துத் தாக்கியழிக்கப்பட்டன. ஹமாஸ் வீசிய எறிகணைகள் யாவும் ஈரானால் வழங்கப்பட்டவையாகும். இரும்புக் கூரையின் அனுபவத்தை வைத்து அமெரிக்கப் படைத்துறை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரேல் David's Sling, Arrow I, Arrow IIஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உருவாக்கியுள்ளது. இவை ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறிகணைகளையும் இடைமறித்துத் தாக்கி அழிக்கக் கூடியவை. ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்கு அரபு நாடுகள் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை வாங்கும் படி அமெரிக்கா இரகசியத் தரகர் வேலை பார்த்தது.

இஸ்ரேலின் படைத்துறைத் தொழில் நுட்பம்
பாக்கிஸ்த்தானுடனான கார்கில் போரின் போது இந்தியா இஸ்ரேலின் உதவியை நாடும் அளவிற்கு இஸ்ரேலின் படைத் துறைத் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது. இரசியா, சீனா, இந்தியா மட்டுமல்ல பல தென் அமெரிக்க நாடுகள் கூட இஸ்ரேலுடன் படைத் துறை உற்பத்தி ஒத்துழைப்பைச் செய்வதிலும் படைத்துறை உபகரணங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றன. 2015-ம் ஆண்டு இஸ்ரேலின் படைத் துறை ஏற்றுமதி 5.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாக இருந்தது. 1967-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களில் காவற்துறை அனுபவம் இஸ்ரேலால் அமெரிக்கா உட்படப் பல நாடுகளிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இஸ்ரேலிடம் காவற்துறைப் பயிற்ச்சி பெறுவதையும் பல நாடுகள் விரும்புகின்றன.

இஸ்ரேலியப் பொருளாதாரம்
300 பில்லியன் டொலர்கள் பொருளாதார உற்பத்தியைக் கொண்ட இஸ்ரேலின் மக்கள் தொகை எண்பது இலட்சம் மட்டுமே. அண்மைக் காலங்களாக இஸ்ரேல் ஆசிய நாடுகளுக்கான தனது ஏற்றுமதியை அதிகரித்துள்ளது 2015-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் பார்க்க ஆசியாவிற்கு அதிக ஏற்றுமதியை இஸ்ரேல் செய்தது. 250இற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனங்களை இஸ்ரேலில் நிறுவியுள்ளன. இஸ்ரேலின் மனித வளத்தையும் கண்டு பிடிக்கும் திறனையும் உயர் தொழில்நுட்பத் திறனையும் பல பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. 2015-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த முதலீடு நான்கு பில்லியன் டொலர்கள் அதில் அப்பிளின் முதலீடு ஒரு பில்லியன்கள். அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இரசியா தனது நாட்டில் அமெரிக்காவின் சிலிக்கன் வலி போன்ற தகவற் தொழில் நுட்ப வலயத்தை உருவாக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடியுள்ளது. சீனா தனது நாட்டில் இஸ்ரேலுடன் இணைந்து ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை வளர்த்து வருகின்றது. இஸ்ரேலின் கடற்படுக்கைகளில் எரிபொருள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இனி இஸ்ரேலும் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறலாம்.

கடற்படையை வலிமையாக்கும் இஸ்ரேல்
உலகிலேயே மிகச் சிறந்த போர் விமானிகளைக் கொண்டது இஸ்ரேல். அதன் வான்படை பல போர்களிலும் படை நடவடிக்கைகளிலும் தனது திறமையை வெளிக் காட்டியுள்ளது. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் தனது புதிய எரிபொருள் கண்டு பிடிப்பையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு வலிமை மிக்க கடற்படை தேவைப்படுகின்றது. அதற்காக அமெரிக்காவுடன் இணைந்து தனது கடற்படையின் வலிமையை உயர்த்தும் திட்டத்தை இஸ்ரேல் தீட்டியுள்ளது.

இன்னும் ஓர் அரபு இஸ்ரேலியப் போர் நடக்குமா?
இஸ்ரேலுக்கு சவால் விடைக் கூடிய படைத்துறையை எகிப்து, ஈராக், சிரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஈரான் இஸ்ரேலில் இருந்து தொலைவில் இருப்பதால் அது சிரியாவினூடாக லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாவிற்கும் காசா நிலப்பரப்பில் செயற்படும் படைக்கலன்களும், பணமும் பயிற்ச்சியும் வழங்கி இஸ்ரேல் மீது தாக்குதல்களை அவ்வப் போது செய்கின்றது. அது இஸ்ரேலுக்குப் பிரச்சனை கொடுக்க முடியும் இஸ்ரேலை அழிக்க முடியாது. சிரியாவும் ஈராக்கும் பல நாடுகளாகத் துண்டாடப் படும் ஆபத்தில் இருக்கின்றன. சவுதி அரேபியா இஸ்ரேலுடன் கள்ளத்தனமாக உறவைப் பேணுகின்றது. இத்தகைய நிலையில் மீண்டும் ஒரு அரபு இஸ்ரேல் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஐ எஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்துவதில்லை. அது இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப் பட்ட அமைப்பு என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

காணாமல் போன ஈரரசுத் தீர்வு!
1967-ம் ஆண்டுப் போரில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்டளவில் சொல்லி வருகின்றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச் சூளுரைத்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்கின்றார்கள். இஸ்ரேலும் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கின்றது. எல்லோரும் ஈர் அரசு என்ற ஒரே பதத்தைப் பாவித்தாலும் அவர்களின் எண்ணங்கள் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். 2000-ம் ஆண்டு இஸ்ரேல் பல ஈர் அரசு முன்மொழிவுகளை முன்வைத்தது. பெரும்பகுதி மேற்குக் கரையையும் முழு காஸா நிலப்பரப்பையும் விட்டுக் கொடுப்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தை பலஸ்த்தீனியர்களின் கட்டுப்பாட்டில் விடுவதாகவும் இஸ்ரேல் முன் மொழிந்தது. மேலும் பலஸ்த்தீன ஏதிலிகளுக்கு முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான தீர்வை ஒத்துக் கொள்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசர் அரபாத் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பலஸ்த்தீனத்தில் ஈர் அரசுகளைக் கொண்ட ஒரு தீர்வு வேண்டும் என்ற முன் மொழிபு அரபு சமாதான முனைப்பு (The Arab Peace Initiative) என்னும் பெயரில் 2002-ம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் 1967-ம் ஆண்டு கைப்பற்றிய எல்லா நிலப்பரப்புக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். அதை இஸ்ரேல் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் மஹ்மூட் அப்பாஸ் ஈர் அரசுக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அரபு வசந்தத்தின் பின்னர் ஈர் அரசுத் தீர்வு என்பது காணாமல் போய்விட்டதா என்னும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. படைத்துறை ரீதியில் இஸ்ரேலுக்குச் சவால் விடக் கூடிய அளவிற்கு அரபு நாடுகளின் உள் நாட்டு நிலைமைகளும் இல்லை, அத்துடன் அரபு நாடுகளிடை ஒற்றுமையும் இல்லை. துருக்கியும் இஸ்ரேலை எதிர்க்கும் நிலையில் இல்லை.

மக்கள் தொகை ஆபத்து
இஸ்லாமியர்களின் வலிமை மிக்க படைக்கலனாக உலகெங்கும் இருப்பது அவர்களது மக்கள் தொகைப் பெருக்கமே. முதலாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரித்தானியாவும் பிரான்ஸும் இணைந்து உருவாக்கிய லெபனான் என்னும் நாடு கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையினராக இருக்கும் வகையில் அதன் எல்லைகள் வகுக்கப் பட்டன. ஆனால் காலப் போக்கில் அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகினர். உலக மக்கள் தொகை வளர்ச்சியிலும் பார்க்க முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி இரு மடங்காக இருப்பது பல மேற்கு நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களைக் கலவரமடைய வைத்துள்ளது.  அமெரிக்க நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின்படி 2010-ம் ஆண்டு உலகில் இருந்த முஸ்லிம் மக்கள் தொகையிலும் பார்க்க 2050-ம் ஆண்டு உள்ள முஸ்லிம் மக்கள் தொகை 73 விழுக்காடாக அதிகரித்திருக்கும்அத்துடன் உலகிலேயே சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தொகை கொண்டிருக்கின்றது. அதில் அதிக அளவு இளையோரும் குறைந்த அளவு முதியோரும் இருக்கின்றனர். 2070-ம் ஆண்டு உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிருஸ்த்தவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்துவிடும். ஆனால் மிக அதிக அளவு இளையோர் ஒரு நாட்டில் இருக்கும் போது வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்து கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. எகிப்தில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சிக்கு இதுவே காரணமாகும் 2015-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி பலஸ்த்தீனத்தில் தற்போது 6.32 மில்லியன் யூதர்களும் 6.22 மில்லியன் பலஸ்த்தீனியர்களும் இருக்கின்றனர். 2020-ம் ஆண்டின் இறுதியில் யூதர்களின் தொகை 6.96ஆக இருக்கையில் பலஸ்த்தீனியர்களின் தொகை 7.13மில்லியன்களாக யூதர்களின் தொகை 6.96 மில்லியன்களாக மட்டுமே இருக்கும். அப்போது பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறுவதும் பல்ஸ்த்தீனிய இனக் கொலையைத் தடுப்பதும் மற்ற அரபு நாடுகளின் கைகளிலேயே இருக்கின்றது.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...