Wednesday, 7 September 2016

இந்திய வியட்னாமிய உறவு சீனாவிற்கு அச்சுறுத்தலா?

 பாக்கிஸ்த்தானுக்கு சீனா செய்யும் படைக்கல உதவிகளுக்குப் பதிலடியாக இந்தியா வியட்னாமிற்கு படைக்கல உதவிகளைச் செய்கின்றது. வியட்னாமிற்கு செப்டம்பர் 3-ம் திகதி சென்ற இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இந்தியாவிடமிருந்து வியட்னாம் படைக்கலன்களை வாங்குவதற்கான 500பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் வசதிகளை செய்ய ஒத்துக் கொண்டுள்ளார். வியட்னாமின் 4510கிலோ மீட்டர் நீளமான தரை எல்லையில் 1306கிலோ மீட்டர் சீனாவுடனானதாகும். தரை எல்லையிலும் பார்க்க சீனாவுடன் கடல் எல்லையிலேயே வியட்னாம் மிக அதிக முரண்பாட்டை எதிர் கொள்கின்றது. இந்தியாவும் சீனாவும் 2200மைல்கள் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இந்தியா சீனாவிடமிருந்து பல முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டாலும் மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல் சீனா பாக்கிஸ்த்தானிற்குச் செய்யும் உதவிகளாகும். சீனாவின் உதவியுடனேயே பாக்கிஸ்த்தான் அணுக்குண்டை உற்பத்தி செய்தது. 1979-ம் ஆண்டு சீனாவும் வியட்னாமும் போர் செய்தன. சீனாவும் இந்தியாவும் 1962-ம் ஆண்டு போர் புரிந்தன. வியட்னாமுடன் செய்த போரிலும் பார்க்க இந்தியாவுடன் செய்த போரிலேயே சீனா தனது எதிரிக்கு அதிக மானபங்கத்தையும் நிலப்பரப்பு இழப்பையும் ஏற்படுத்தியது.

காசில்லா இந்தியா கடன் கொடுப்பது ஏன்?
இந்தியாவின் வர்த்தக மற்றும் களிப்பூட்டும் தலைநகரமான மும்பாயின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் உலகின் மிகப்பெரிய சேரியான தராவியில் வசிக்கின்றனர். அவர்களுக்கு சரியான குடிநீர் வசதிகளோ கழிப்பிட வசதிகளோ கிடையாது. நாடெங்கும் 60 கோடி இந்தியர்கள் இப்படி வசதிகளற்ற சேரிகளிலேயே வாழ்கின்றார்கள். இந்தியாவில் உள்ள வறிய மக்களின் தொகை ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள வறிய மக்களின் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் முப்பது இலட்சம் சிறுவர்கள் ஊட்டச் சத்தின்றி வாடுகின்றார்கள். நூறு கோடி மக்களில் எண்பது கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பிட வசதிகள் கிடையாது. இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருக்கும் இந்தியா வியட்னாமிற்கு கடனாக 500மில்லியன் டொலர்கள் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுதல் நியாயமே. ஆனால் அந்தக் கடன் இந்தியாவின் படைக்கல உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிப்பதுடன் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவிற்கு அச்சுறுத்தல் கொடுப்பாதாக அமைகின்றது.

அக்ஷாய் சின்னை இழந்த இந்தியா

1962-ம் ஆண்டு போரில் அக்ஷாய் சின் என்னும் 32,744 கிலோ மீட்டர் அதாவது 14,380 சதுர மைல் பிரதேசத்தை இந்தியாவிடமிருந்து சீனா பிடுங்கிக் கொண்டது. தற்போது சீனா இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுகின்றது. 1962-ம் ஆண்டு போரின் பின்னர் இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி சீனாவைச் சமாளிக்கும் நிலையை இப்போது அடைந்துள்ளது. அது சீனாவிற்கு சவால் விடும் நிலையை நோக்கி வளர்ந்து வருகின்றது. அதன் ஒரு பகுதிதான் சீனாவுடன் கிழக்குச் சீனக் கடலில் முரண்படும் நாடுகளுடனான இந்தியாவின் படைத்துறை ஒத்துழைப்பு அமைந்துள்ளது. நரேந்திர மோடி வியட்னாமுடன் சுகாதாரத்துறை, இணையவெளிப் பாதுகாப்பு, கப்பல் கட்டுமானம், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படை நடவடிக்கை ஆகியவை தொடர்பாக 12 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். அத்துடன் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு காத்திரமான கேந்திரோபாய ஒத்துழைப்பை நோக்கி நகர்த்தப் படும் எனவும் இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் ஒத்துக் கொண்டனர். இந்தியா வியட்னாமில் ஐந்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான மென்பொருள் பூங்கா (software park) ஒன்றையும் அமைக்க இணங்கியுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் வியட்னாமின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்கின்றது. வியட்னாமுடன் கடல் சார் உளவு மற்றும் வேவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்தியா இணங்கியுள்ளது.
  
வியட்னாமிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா
இந்தியா முதலில் 1990களில் கிழக்கு நோக்கிய கொள்கை வர்த்தகத்தை மட்டும்மே நோக்கமாகக் கொண்டது. இந்தியா தற்போது மேற்கொள்ளும் கிழக்குச் செயற்பாட்டுக் கொள்கை வெறும் பொருளாதார நோக்கங்களை மட்டுமல்ல பரந்த கேந்திரோபாய நோக்கங்களைக் கொண்டது. படைத்துறை ஒத்துழைப்பும் புவிசார் படைவலுச் சமநிலையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இந்தியா வியட்னாமிலேயே அதிக அக்கறை காட்டுகின்றது. ஜப்பான், இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா நல்ல உறவுகளைப் பேணுகின்ற போதிலும் வியட்னாமிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. வியட்னாமுடனான உறவு இந்திய உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதளவில் பாதிக்காது.

வியட்னாமில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள்
வியட்னாமிற்கு இந்தியா தனது பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டும் நாடாக வியட்னாம் இருக்கின்றது. பிரம்மோஸ் ஏவுகணைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் வியட்னாமில் இந்திய தொழில்நுட்பவியலாளர்களை நிலை கொள்ளச் செய்ய இந்தியா விரும்புகின்றது. இது சீனாவிற்கு எதிராக இந்தியா வியட்னாமில் ஒரு படைத்தளம் அமைப்பதற்கு இணையானதாகும். சீனாவின் அச்சுறுத்தலை கிழக்குச் சீனக் கடலில் எதிர் கொள்ளும் வியட்னாம் உலகின் எட்டாவது பெரிய படைகலன் இறக்குமதி செய்யும் நாடாகும். உலகின் படைத்துறைச் சந்தையில் தனக்கு என ஓர் இடம் பிடிக்கத் துடிக்கும் இந்தியாவிற்கு வியட்னாம் ஒரு நல்ல வாய்ப்பாகும். இரு நாடுகளும் தமக்கிடையான வர்த்தகத்தை 2020-ம் ஆண்டு மும்மடங்காக அதிகரிக்கவும் இணங்கியுள்ளன. பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்னாமிற்க்கு விற்பதற்கு அவற்றின் இணை உற்பத்தியாளரான இரசியா வியடானாமிற்கு இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பதற்கு இணங்கியுள்ளது.

பாக்கிஸ்த்தான் வேறு வியட்னாம் வேறு
இந்தியப் போர்க்கப்பல்கள் வியட்னாமின் அழைப்பின் பேரில் அடிக்கடி வியட்னாம் சென்று வருகின்றன. வியட்னாமின் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு செய்யும் பணிகளையும் இந்தியா செய்யவிருக்கின்றது. இது சீனாவை நிச்சயம் ஆத்திரமூட்டும். சீனாவிற்குப் பாக்கிஸ்த்தான் போல் இந்தியாவிற்கு வியட்னாம் வரப்போவதில்லை. வியட்னாம் ஆட்சியாளர்களும் மக்களும் தமது நிலையையும் சீனாவின் நிலையையும் நன்கு அறிவர். பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்களும் மக்களும் இந்தியாவை எதிர்க்க என்ன விலையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். தமது நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்ததைக் கூட அவர்கள் கவலைப்படாமல் இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்தார்கள். சீனாவுடன் ஒரு போரை தம்மால் எதிர் கொள்ள முடியாது என்பதை வியட்னாமியர்கள் உணர்ந்துள்ளது போல் இல்லாமல் பாக்கிஸ்த்தானியர்கள் இந்தியாவுடன் போர் புரியத் தயக்கம் காட்டியதுமில்லை காட்டப் போவதுமில்லை. கடந்த 12 ஆண்டுகளாக வியட்னாம் சீனாவைக் கவனமாகக் கையாள்கின்றது. அதற்கான ஒரு அரசுறவியல் நெம்பு கோலாகவே தனது உறவை ஐக்கிய அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவிற்கு சவால் விடும் நோக்கம் வியட்னாமிற்கு இல்லை. ஆனால் இந்தியாவிற்கு சவாலாக இருப்பதைப் பாக்கிஸ்த்தானியர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். 2016 செப்டம்பர் இறுதியில் வியட்னாம் தலைமை அமைச்சர் சீனாவிற்குப் பயணம் செல்ல விருக்கின்றார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கிழக்குச் சீனக் கடலில் ஒரு சமத்துவமான எல்லைப் பங்கீட்டை சீனாவுடன் சமாதானமாகச் செய்யவே வியட்னாம் விரும்புகின்றது.
பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ரீதியில் அயல் நாடுகள் துரித வளர்ச்சியடைவதும் அதற்கு ஏற்ப தமது ஆதிக்க எல்லையை விரிவாக்கம் செய்ய முயல்வதும் இரண்டாம் உலகப் போரின் முன்னர் ஐரோப்பாவில் இருந்த சூழ் நிலையாகும். அது போன்ற ஒரு சூழ்நிலை இப்போது ஆசியாவில் காணப்படுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...