2016ஆங்கிலப் புத்தாண்டு சீனாவிற்கு மோசமாக ஆரம்பித்தது. வீழ்ச்சியடையும் பங்கு விலைகள், வேகம் இழக்கும் பொருளாதாரம், விழும் நாணயப் பெறுமதி, என்பன ஒரு புறம் சீனாவை ஆட்டிப் படைக்க மறு புறம் சீனா தனது என அடம் பிடிக்கும் தென் சீனக் கடற் பிரதேசத்தில் ஐக்கிய அமெரிக்கா மூன்றாவது முறை "அத்துமீறியது". போதாக் குறைக்கு தாய்வானில் சீனவிற்கு எதிரான கொள்கை கொண்டோர் ஆட்சியைக் கைப்பற்றினர். அவை போகட்டும் சீனாவின் தேசியப் புத்தாண்டான குரங்கு ஆண்டுப் பிறப்பாவது ஒழுங்காக நடக்குமா என சீனா எதிர்பார்த்துக் கொண்டு சீனா வாண வேடிக்கை செய்து கொண்டிருக்கையில் சீனாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பாரிய வாணம் ஒன்றை வட கொரியா வெடிக்க வைத்தது. வட கொரியா வெடிக்க வைத்தது நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் சென்றதுடன் ஒரு செய்மதியையும் மிதக்க விட்டுள்ளது. இந்த ஏவுகணைகளின் மூலம் வட கொரியாவால் முழு ஐரோப்பியக் கண்டம், கனடா, ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பகுதி, ஒஸ்ரேலியா, வட ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களில் அணுக்குண்டுகளை வீச முடியும்.
வாடும் கொரியாவை வாழவைக்க ஏவுகணை!
வட கொரியா பரிசோதித்த ஏவுகணை 440 இறாத்தல் எடையுள்ளது. அது 2012-ம் ஆண்டு பரிசோதித்த ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு பாரமானது. இந்த ஏவுகணைப் பரிசோதனை பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங்கின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2016 மே மாதம் மக்கள் கட்சியின் மாநாட்டில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது. அத்திட்டம் அணுக்குண்டு பரிசோதனைகளுடன் கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகும். கிம் உல் ஜொங்கின் பேரனது ஆட்சிக்காலத்தில் இருந்த செழிப்பை நாட்டில் மீண்டும் கொண்டுவரும் திட்டம் அப்பொருளாதாரத் திட்டமாகும். வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு உள்நாட்டில் இருக்கும் பேராதரவைத் தகர்க்கக் கூடிய வகையில் வெளிநாட்டு அழுத்தங்கள் அவசியமாகும். அப்படிப்பட்ட ஒரு வெளி அழுத்தத்தை சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். வட கொரியா இன்னும் ஒரு அணுக்குண்டுப் பரிசோதனையைச் செய்யவிருக்கின்றது என தென் கொரிய உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அப்படி ஒரு பரிசோதனை 2016 மே மாதத்திற்கு முன்னர் நடக்கலாம் என்கின்றது. வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பான் வட கொரியாவிற்குப் பணம் அனுப்புவதை கட்டுப்படுத்தியது. தென் கொரியா வட கொரியாவில் நிறுவிய கைத்தொழிற் பேட்டையை மூடியது. தென் கொரியா வடகொரியாவுடன் இணைந்து நடத்திய கைத்தொழிற்பேட்டையில் உள்ள 120இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 54,000இற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் பணிபுரிந்தார்கள். 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கைத்தொழிற்பேட்டையில் தென் கொரியா 840மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் வட கொரியா 110மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றது. இக் கைத்தொழிற்பேட்டை மூடப்பட்டதுடன் தென் கொரியாவில் இருந்து செய்து வந்த மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
குருவிற்கு அடங்கா மாணவன்
சீனா வட கொரியாவின் புரவலர் (patron) நாடு என்னும் அளவிற்கு அதற்குப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. வட கொரியா அணுக்குண்டுப் பரிசோதனை செய்வதை நிறுத்தும் படி சீனா விடுக்கும் வேண்டு கோள்களிற்கு வட கொரியா செவிமடுப்பதில்லை. வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் முன்னணி அரசுறவியலாளரான வு டவே(Wu Dawei) வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். வட கொரியா 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹைட்ரஜின் அணுக்குண்டு ஒன்றை வட கொரியா வெடித்துப் பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி சீனத் தலைநகர் பீஜீங் சென்று வட கொரியாவிற்கு எதிராக சீனா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்தே சீன அரசுறவியலாளர் வு டவே(Wu Dawei) பியோங்யாங் சென்றார் ஆனால் அங்கு அவரது வேண்டுகோள் எவற்றிற்கும் வட கொரிய அதிபர் கிம் உல் ஜொங் இணங்கவில்லை. அவரை வட கொரியா வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதாக அமெரிக்க முன்னணி நாளிதளான நியூயோர்க் ரைம்ஸ் எள்ளி நகையாடியது. கிம் உல் ஜொங் பதவிக்கு வந்ததில் இருந்து சீன வட கொரிய உறவு மோசமடைந்து வருகின்றது. கிம் உல் ஜொங் ஆட்சிய்க்கு வந்ததில் இருந்து இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. கிம் உல் ஜொங் ஆட்சியை இரும்புப் பிடியாகப் பிடித்துள்ளார். அவரை ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள் காணாமற் போய்விருவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. அப்படி அண்மையில் காணாமற் போனவர் படைத்தளபதி ரி யிங் ஜொல். அவர் கொல்லப்பட்டதாக்வும் செய்திகள் வெளிவந்தன.
காத்திருந்த அமெரிக்கக் கொக்கு
சிறு அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்குவது ஐக்கிய அமெரிக்காவை இரண்டு வகையில் கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஒன்று வட கொரியாவால் ஐக்கிய அமெரிக்காமீது அணுக்குண்டுத் தாக்குதல் செய்யக் கூடிய நிலை உருவாகும். இரண்டாவது இத் தொழில் நுட்பத்தை வட கொரியா ஈரானுக்கு வழங்கினால் அது இஸ்ரேலின் இருப்பிற்குப் பேராபத்தாகும். இதைத் தவிர்க்க அமெரிக்கா தனது காய்களை நகர்த்த வேண்டும். அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defence ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன. இவற்றை தென் கொரியாவில் நிறுவ ஐக்கிய அமெரிக்கா நீண்ட காலமாக விரும்பி இருந்தது. அதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தாட் ஏவுகணைகள் தென் கொரியாவில் நிறுவினால் அது தனது ஏவுகணைகளைவலுவிழக்கச் செய்து தனக்கு சாதகமான படைத்துறைச் சமநிலையை உருவாக்கும் என்றது சீனா. சீனாபெருமளவு வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதால் சீனாவை அதிருப்திப் படுத்த தென் கொரியாவும் விரும்பவில்லை. ஆனால் 2016-ம் ஆண்டு வட கொரியா செய்த அணுக்குண்டுப் பரிசோதனையின் பின்னர் தென் கொரியா அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தனது நாட்டில் நிறுவுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.
என்ன இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை?
ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும். . அமெரிக்காவின் புதிய தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது. அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும். அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.
பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம்
வட கொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்தவுடன் ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்கப் பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்டின. அதில் வட கொரியாவிற்கு எதிரான ஒரு கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது. சீனப் படைத்துறையினர் வட கொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பாதுகாப்பு அரணாக வட கொரியா உள்ளதாகக் கருதுகின்றனர். தென் கொரியா போல் அதுவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறுவதையோ அல்லது இரு கொரியாக்களும் இணைந்து முழுக் கொரியாவும் அமெரிக்க சார்பாக மாற்வதோ சீனாவிற்கு ஆபத்தாகும். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை தற்போதைய ஆட்சியாளர்ளிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து அங்கு அமெரிக்கா சார்பு நிலை தோன்றுவதற்கு வழி வகுக்கும் என சீனா கருதுகின்றது. இதனால் கடந்த காலங்களில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையை சீனா தடுத்து வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவிருக்கும் வட கொரியாவிற்கு எதிரான தீர்மானத்தில் சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்க விருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும். வட கொரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டுவரக் கூடிய தீர்மானத்திற்கு ஆதரவா அல்லது தென் கொரியாவில் அமெரிக்கா புதுத் தர ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுவச் செய்வதா என்ற இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலைக்கு சீனாவை அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment