தொடரும் பொருளாதாரப் பிரச்சனை, சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2015-ம் ஆண்டு ஆரம்பமானது. இப் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படாமல் மோசாமாகிக் கொண்டே போகின்றது. உலகப் பொருளாதாரம் தொடர்ந்தும் தீவிர கவனிப்புப் பிரிவிலேயே இருக்கின்றது.
புட்டீனின் ஆண்டு
2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் ஆகியோரின் பெயர்கள் உலகச் செய்திகளில் அதிகம் அடிபட்டாலும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அதிகம் பார்க்கப் பட்டவர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன்தான். உள்நாட்டில் எதிர்க்க ஆளில்லாத விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உச்சத்தில் இருக்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடரும் சிரியப் பிரச்சனையில் அதிபர் அல் அசாத்தின் படைகள் ஆட்டம் காணும் நிலையில் புட்டீன் அதிரடியாக இரசியப் படைகளை அங்கு களமிறக்கி நிலைமையை தலைகீழாக்கினார். இரசியாவின் செய்மதிகளில் பத்துக்கு மேற்பட்டவை தற்போது சிரியாவைக் குறிவைத்துச் செயற்படுகின்றன. செய்மதிகளின் உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் குண்டுகள் சகிதம் எப்படி புதிய போர் முறைகளைக் கையாள்வது என்பதில் இரசியப் படைகள் நேரடிப் பயிற்ச்சியில் சிரியாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் சிரியாவில் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எல்லாம் உலக அரங்கில் இரசியா இழந்த நிலையை மீளப் பெறுவதற்கே என்கின்றார் புட்டீன்.
படைத்துறைப் போட்டி ஆண்டு
2008-ம் ஆண்டில் இருந்து உலகின் முன்னணி நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதிலும் அவை பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிகளிற்குச் சவால் விடக் கூடியவகையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களை மேம்படுதியது. பதிலாக அமெரிக்கா நீர் மூழ்கிகளை வேட்டையாடக் கூடிய விமானங்களையும் உழங்கு வானூர்திகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனா ஒலியி்லும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை உருவாக்க அவற்றை அழிக்கக்கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றது.
எரிபொருளின் ஆண்டு
உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா உலக எரிபொருள் வீழ்ச்சியை இரு முனைக் கத்தியாகப் பயன்படுத்துகின்றது. ஒரு முனையால் அது பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களை முக்கியமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளின் ஷெல் எரியாவு உற்பத்தி நிலையங்களை மூட வைக்கப் பார்க்கின்றது. மறுமுனையால் சியா முஸ்லிம்களுடன் கை கோர்த்த இரசியாவைப் பழிவாங்கப் பார்க்கின்றது. இரசியாவுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்திச் செலவு மிகவும் குறைந்ததாகும். இதனால் சவுதி அரேபியா தனது எரிபொருள் உற்பத்தியைக் குறைக்க மறுக்கின்றது. சவுதி அரேபியாவிடம் இருக்கும் 750பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு அதை இன்னும் சில ஆண்டுகள் அதை எரிபொருள் விலை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும். இரசிய அரசு தனது பாதீட்டை மசகு எண்ணெய் விலை நூறு டொலர்கள் என்ற எதிர் பார்ப்புடன் 2014இல் திட்டமிட்டது. 2015இல் அது ஐம்பது டொலர்களாகக் குறைக்கப் பட்ட வேளையில் மசகு எண்ணெய் விலை நாற்பதிலும் குறைந்தது. குறைந்த எரிபொருள் விலை உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவில்லை. மாறாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அவற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது.
குடிவரவுப் பிரச்சனையின் ஆண்டு - சிறுவன் அயிலன் குர்தி
2015-ம் ஆண்டில் பல நாடுகளில் குடிவரவுப் பிரச்சனை மோசமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் சிக்கன நடவடிக்கைகள் 2015-ம் ஆண்டு ஒரு குழப்பத்தை உருவாக்கி அதை சின்னா பின்னப் படுத்தும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அரசியல் தஞ்சம் கோரி சிரியாவில் இருந்து வருபவர்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு பொதுவான குடிவரகுக் கொள்கையை வகுப்பதால் தற்போது அதிக பிளவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இப்போது ஏற்படுத்தியுள்ளது. 40இலட்சம் சிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். . 1800 பேர் சிரியாவை விட்டு வெளியேறும் முயற்ச்சியில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் அவலம் துருக்கிக் கடலோரம் ஒதுங்கிய இரண்டு வயதுச் சிறுவன் அயிலன் மூலம் உலகின் பார்வைக்கு உட்படுத்தப் பட்டது. மேற்காசியாவில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களின் மூலம் 19-நூற்றாண்டில் ஏற்படுத்தப் பட்ட ஐரோப்பிய அரசுகளின் குடியேற்ற ஆட்சிகளேயாகும். அவர்கள் உருவாக்கிய பிரச்சனை தஞ்சம் கோருவோர் என்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் செய்வோர் என்றும் அவர்களை நோக்கி 2015-ம் ஆண்டு சென்றன. 2015-ம் ஆண்டு பிரான்ஸில் இரு தடவை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. டென்மார்க்கிலும் ஒரு தாக்குதல் பெப்ரவரி மாதம் நடந்தது.
ஐ எஸ் அமைப்பின் ஆண்டு
பெய்ரூ லெபனானிலும் பிரான்ஸிலும் குண்டுத் தாக்குதல்கள், எகிப்தில் இரசிய விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பு, டென்மார்கிலும், கலிபோர்ணியாவிலும் துப்பாகிச் சூட்டுத் தாக்குதல், எகிப்தில் இரசிய விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தமை என பல செய்திகள் மூலம் உலக அரங்கில் அதிகம் பேசப்பட்ட அமைப்பு ஐ எஸ் அமைப்பே. நைஜீரிவில் செயற்படும் பொக்கோ கரம் அமைப்பும் சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் அமைப்பும் அல் கெய்தாவிடம் இருந்து விலகி ஐ எஸ் அமைப்பினருடன் தமது உறவுகளை அதிகரித்துக் கொண்டன. அமெரிக்கா 19 மாதங்களாகவும் இரசியா 3 மாதங்களாகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தும் விமானத் தாக்குதல்கள் அவர்களை இன்னும் அடக்கவில்லை.
சீனா பொருளாதாரத்தின் ஆண்டு
2015இல் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைகளை எதிர் கொண்டது. அதன் வளர்ச்சி வேகம் குறைந்தது. அதன் பங்கு சந்தையும் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டன. இரண்டையும் சீனா சமாளித்துக் கொண்டது. சீன நாணயம் பன்னாட்டு நாணய நிதியத்தின் Special Drawing Rights இன் பெறுமதியைத் தீர்மானிக்கும் நாணயங்களில் ஒன்றாக 2016-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இணைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டது.
கோடுகள் அழிக்கப் பட்ட ஆண்டு
முதலாம் உலகப் போரின் பின்னர் இனி ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கில் சிரியா, ஈராக், லிபியா, லெபனான் போன்ற நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. Sykes-Picot எல்லைகள் எனப்படும் கோடுகளை ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பும் குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் அழித்து விட்டன. இப்போது சிரியாவின் மூன்றில் இரண்டு பகுதியையும் ஈராக்கின் மூன்றில் ஒரு பகுதியையும் இணைத்து ஐ எஸ் அமைப்பு ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது. நூறாண்டுகளாகப் போராடிவரும் குர்திஷ் மக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளார்கள்.
இந்தியா பயன்படுத்தத் தவறிய ஆண்டு
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும். இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன. ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள். உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளும் சீனாவும் மக்கள் தொகையில் இளையோர் குறைவாகவும் முதியோர் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இந்தியாவில் இளையோர் தொகை அதிகமாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள இளையோர் தொகையைச் சரியான முறையில் பயன்படுதப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே முறையான தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்..
ஆட்சி மாற்ற ஆண்டு
இலங்கையிலும் பர்மாவிலும் ஆட்சிமாற்றங்களைப் புவிசார் அரசியல் காரணிகளும் பிராந்திய ஆதிக்கப் போட்டிகளும் தீர்மானித்தன. ஆட்சிகள் மாறின ஆனால் காட்சிகள் மாறவில்லை. துருக்கியில் தேர்தல் ஏற்கனவே இருந்த ஆட்சியை உறுதி செய்தது. வெனிசுவேலாவிலும் ஒரு தேர்தல் நடந்தது. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. நைஜீரியாவில் தீவிரவாதத்தில் இருந்து மக்களைப் பாதுக்க வேண்டி மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுதினர்.
பலஸ்த்தீனியர்கள் போராட்ட முறையை மாற்றிய ஆண்டு
பலஸ்த்தீனிய மக்கள் தமது போராட்டத்தை கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு, கார்களாள் யூதர்களை மோதுதல் என தமது போராட்டத்தை மாற்றிக் கொண்டனர். அதேவேளை பலஸ்த்தீனிய அதிகார சபை பன்னாட்டு நீதிமன்றத்திலும் இணைந்து கொண்டது.
volkswagen மகிழூர்த்தி உற்பத்தி நிறுவனத்தின் களவு அம்பலமான ஆண்டு. தமிழ்நாட்டில் பெரும் வெள்ளம் ஏற்படுத்திய ஆண்டு. நேப்பாளம் தன்னை ஒரு இந்துக் குடியரசு அல்ல எனப் பிரகடனப் படுதிய ஆண்டு. உலக நாடுகள் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக ஓர் உடன்பாட்டிற்கு வந்த ஆண்டு.
சீனாவும் தாய்வானும் ஈர் அரசுகள் ஒரு நாடு என உணர்ந்து கொண்ட ஆண்டு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைக்கழகத்தில் கடைசித் தீர்மானம் கொண்டு வந்த ஆண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
No comments:
Post a Comment