மத்திய ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி மீண்டும் உலக அரங்கில் பெரிதாக அடிபடுகின்றது. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாளில் அதிரடியாக ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றினர். 2015 டிசம்பர் 28-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவினதும் மற்ற நட்பு நாடுகளினதும் விமானத் தாக்குதல்களின் உதவியுடன் ஐந்து மாதப் போரின் பின்னர் ஈராக்கிய அரச படைகள் ரமாடி நகரின் நடுப்பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.
சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஈராகில் ரமாடி சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு நகராகும். இது தலைநகர் பாக்தாத்தில் இருந்து 60மைல்கள் தொலைவில் இருக்கின்றது. சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் அங்கு பல நிலக்கண்ணி வெடிகளை விதைத்துள்ளனர். ராமாடியில் ஆங்காங்கு சில சிறு நிலப்பரப்புக்கள் ஐ எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பின் 400 போராளிகள் மட்டும் ராமாடி நகரில் நிலைகொண்டிருந்தனர். ரமாடி வாழ் சுனி முஸ்லிம்களை ஈராக்கின் சியா படையினர் எப்படி இனி நடத்தப் போகின்றார்கள் என்பதில்தான் ஈராக்கியப் படையினரின் வெற்றி தங்கியுள்ளது. ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்ப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மக்களைச் சரியாக நடத்தவில்லை என்பதும் ரமாடி நகரின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.
சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தற்போது பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில் அமெரிக்காவின் பெண்டகன் ஐநூறு மில்லியன் டொலர்கள் செலவில் செய்த பயிற்ச்சி வீணாகிப் போன வேளையில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் ஈராக்கியப் படையினருக்கு வழங்கிய பயிற்ச்சிகள் பயனளிக்க ஆரம்பித்துள்ளனவா? ஈராக்கியப் படையின் பொறியியல் பிரிவிற்கு அமெரிக்கா அளித்த கண்ணிவெடிகளுக்கு எதிரான பயிற்ச்சி வெற்றியளித்துள்ளனவா?
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தமது தரைப் படையினரை எமக்கு எதிராகக் களமிறக்க அஞ்சுகின்றார்கள் என ஐ எஸ் அமைப்பினர் மார் தட்டி நின்றார்கள். அவர்கள் வந்தால் அத்தனை பேரையும் கொல்வோம் எனவும் சூளுரைத்திருந்தனர்.
2015 மே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது. அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றினர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்திருந்தது.
சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ஐ எஸ் அமைப்பு ஒரு வலுமிக்க நிலையிலும் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க சார்புப் போராளிகள் ஒன்றிணைந்த வேளையிலும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் ஆட்டம் காணும் வேளையில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி இரசியப் படையினர் சிரியாவில் இறங்கின. இதுவரை கணிசமான நிலப்பரப்பு எதையும் கைப்பற்றவில்லை. 18 மாதங்களுக்கு மேலாக அமெரிக்கா தலைமியிலான நாற்பது நாடுகளின் கூட்டுப்படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தாத நிலையில் அமெரிக்காவின் ஐ எஸ் தொடர்பான கேந்திரோபாயக் கொள்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. அமெரிக்கப் படைகள் தரையிறக்கப்படாமல் ஐ எஸ் அமப்பினரை அழிக்க முடியாது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். இச்சூழலில் ஈராக்கியப் படையினர் ரமாடி நகரில் ஐ எஸ் போராளிகளைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.
அன்சாரி டைன்
இயக்கம் அல் கெய்தாவுடன் இணைந்து மாலியில் பிரான்ஸ் நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பை கைப்பற்றிய போது பிரெஞ்சுப் படையினர் அங்கு சென்று ஒரு மாதத்தில் அந்த நிலப்பரப்பை மீட்டனர். ஈராக்கிலும் சிரியாவிலும் பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்பை ஒத்த நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க்கின்றார்கள்.
ரமாடியில் ஐ எஸ் அமைப்பினர் பெருமளவில் கொல்லப்பட்டதாகவோ அவர்களிடமிருந்து படைக்கலங்கள் பறிக்கப் பட்டதாகவோ அல்லது அவை அழிக்கப் பட்டதாகவோ செய்திகள் வெளிவரவில்லை. ரமாடியில் ஈராக்கியப் படையினரின் வெற்றி சிரியப் படைகளுக்கும் இரசியப் படைத்துறை ஆலோசகர்களுக்கும் ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளன. இது போன்ற ஒரு வெற்றியை அவர்களும் ஈட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அடுத்த இலக்கு மொசுல்
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரைக் கைப்பற்றுவது தமது இலக்கு என ஈராக்கியப் படையினர் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினரின் தலைமைச் செயலகம் அங்குதான் அமைந்துள்ளது. 400 போராளிகளைக் கொண்ட ரமாடியைக் கைப்பற்ற ஐந்து மாதங்கள் எடுத்தன. மொசுலில் மிகவும் அதிகமான போராளிகளின் கடுமையானதும் தற்கொடைகள் நிறைந்த மோசமான எதிர்ப்புக்களை ஈராக்கியப் படையினர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
ரமாடி ஐ எஸ்ஸின் வீழ்ச்சியின் ஆரம்பமா?
பிரித்தானிய விமானப் படையினர் தாழப்பறந்து ரமாடியில் ஐ எஸ் நிலைகளின் மீது செய்த தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தது. ஏற்கனவே ஐ எஸ் அமைப்பினர் குர்திஷ் மற்றும் யதீஷியப் போராளிகளிடம் சின்ஜோர் நகரை இழந்துள்ள வேளையிலும் ஐ எஸ் அமைப்பினர் நாற்புறமும் சூழப்பட்டும் அவர்களது பொருளாதார வருமானங்கள் தடுக்கப்பட முயற்ச்சிகள் எடுக்கப்படும் வேளையிலும் ரமாடி நகரை அவர்கள் இழந்துள்ளனர். அடுத்து மொசுல் நகரையும் கைப்பற்றுவோம் என ஈராக்கியப் படையினர் சூழுரைத்துள்ளனர். இது ஐ எஸ் அமைப்பினரின் வீழ்ச்சியின் ஆரம்பமா? ஐ எஸ் அமைப்பினர் ஏற்கனவே ஆப்கானிஸ்த்தான், லிபியா, யேமன், நைஜீரியா ஆகிய நாடுகளில் தமது கால்களைப் பதித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் அடுத்து சோமாலியாவில் கால் பதிக்க முயல்கின்றனர். சோமாலியாவில் ஏற்கனவே அல் கெய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் இயங்கிவருகின்றது. தமது போராளிகள் ஐ எஸ் அமைப்பில் இணைவதை அவர்கள் தடை செய்துள்ள போதிலும் அல் ஷபாப் அமைப்பினர் ஐ எஸ் அமைப்பினருடன் அண்மைக்காலங்களாக மேம்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் ஐ எஸ் அமைப்பினரிடம் இருக்கும் பெரும் பணம்தான். நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பும் இதே நிலையில்தான் உள்ளது. ஐ எஸ் அமப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் முழுதாக ஒழிக்கப்பட்டாலும் வளைகுடா நாடுகளிலும் துருக்கியிலும் அவர்களுக்கு இருக்கும் ஆதரவு வேறு நாடுகளில் அவர்கள் நிலைகொள்ள பெரிதும் உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment