Tuesday, 8 December 2015

இஸ்லாமிய அரசு அமைப்பின் தசாவதாராம்.

ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அதில் பதினையாயிரம் பேர் 90இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து போய் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்கள். அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பு தற்போது சிரியாவின் கிழக்குப் பகுதியிலும் ஈராக்கின் மேற்குப் பகுதியிலும் பெரு நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

வடிவங்களைமாற்றிக் கொண்டிருக்கும் ஐ எஸ்

முதல் அவதாரம் அல் கெய்தாவின் கிளை:
2003-ம் ஆண்டு சதாம் {ஹசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன.  அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவியினால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது.  இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது.

இரண்டாவது அவதாரம் ஐ எஸ் ஐ எஸ்:
ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது.  இஸ்லாமிய முறைப்படியான அரசு ஒன்றை தாம் நிறுவுவதாக அவர்கள் பிரகடனப் படுத்தினர். அல் கெய்தா அமெரிக்காவை ஒழித்துக் கட்டிய பின்னர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடையது. ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய மார்க்கப் படி ஆட்சியை நிறுவி அதன் மூலம் அமெரிக்காவை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கூறுகின்றது. இஸ்லாமிய அரசை உருவாக்கியதாக ஐ எஸ் அமைப்பு அறிவித்த பின்னர் உலகெங்கும் இருந்தும் பல இளையோர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.

மூன்றாவது அவதாரம் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்:
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு  பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது.

நான்காம் அவதாரம்: அல் கெய்தாவிற்கு எதிரான அமைப்பு
சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இதனால் சிரிய உள்நாட்டுப் போர் ஒரு மும்முனைப் போராக மாறியது.

ஐந்தாம் அவதாரம்: மரபுப் படையணி
சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.  ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஆறாவது அவதாரம்: நிதிவளமிக்க அமைப்பு
ஈராக்கில் ஐ எஸ் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து பெரும் நிதியை அவர்கள் வங்கிகளில் இருந்தும் வேறு நிறுவனங்களில் இருந்தும் தமதாக்கிக் கொண்டனர். சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களும் அவர்கள் வசமானது. மாதம் ஒன்றிற்கு நாற்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் வருமானமாகப் பெறுகின்றார்கள். சிரிய அரச படைகள் கூட அவர்களிடம் இருந்தே தமக்குத் தேவையான எரிபொருளைப் பெறுகின்றன. இதில் முப்பது மில்லியன் அமைப்பிற்காகப் போர் புரிபவர்களுக்கும் பணி புரிபவர்களுக்கும் ஊதியமாக வழங்கப் படுகின்றது.

ஏழாவது (ஐயப்படும்) அவதாரம்; இஸ்ரேலிய உளவாளிகள்
ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்தர் அல் பக்தாதி ஒரு யூதப் பெற்றோர்க்குப் பிறந்தவர் என்றும் அவரது உண்மையான பெயர் எலியட் சைமன் என்றும் அமெரிக்காவில் இருந்து உளவு இரகசியங்களுடன் இரசியாவிற்குத் தப்பிச் சென்றவரான எட்வேர்ட் ஸ்நோடன் தெரிவித்ததாகச் சில செய்திகள் தெரிவித்தன. ஈரனிய உளவுத் துறையும் இதையே நிழற்பட ஆதாரங்களுடன் தெரிவித்தது. கலிபா அரசர் என அழைக்கப்படும் அபு பக்தாதி என்னும் எலியட் சைமன் அரபு பிரதேசங்களைக் கைப்பற்றி பின்னர் அதை இஸ்ரேலுக்குக் கையளித்து ஒரு அகன்ற யூத அரசை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப் படுகின்றது. பலஸ்த்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ ஐ எஸ் அமைப்புத் துணை போவதில்லை.
   
எட்டாவது அவதாரம்: இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைக்களம்
அல் கெய்தா அமைப்பு போராளிகளைப் பயிற்றுவித்து மேற்கு நாடுகளுக்கு தாக்குதல்கள் செய்ய அனுப்பும் கொள்கையைக் கொண்டது. ஆனால் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடுடையவர்களை தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அழைத்து வைத்துள்ளது. இது மேற்கு நாடுகளில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை அகற்றிச் சுத்தப் படுத்தியுள்ளது. அத்துடன் அத்தனை பேரும் விமானக் குண்டு வீச்சுக்களால் கொல்லப் படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒன்பதாவது அவதாரம்: பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள்.
ஈராக்கிலும் சிரியாவிலும் அதிக கவனம் செலுத்தி வந்த ஐ எஸ் அமைப்பு திடீரென இரசியப் பயணிகள் விமானத்தை வானில் வைத்துக் குண்டு வைத்து தகர்த்தும் லெபனானிலும் பிரான்ஸ்லும் தீவிரவாதத் தாக்குதல்களை நடாத்தியும் உலகை உலுப்பியது. அது போதாது என ஐக்கிய அமெரிக்காவிலும் ஓர் இளம் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களைக் கொன்றவர்கள் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என நம்பப்படுகின்றது.

பத்தாவது அவதாரம்: உலகெங்கும் ஐ எஸ்
தற்போது ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையில் அவர்களால் உலகெங்கும் உள்ள பல நாடுகளிற்குத் தப்பிச்செல்ல முடியும். துருக்கியில் அவர்களுக்கு பேராதரவு உண்டு. பாரிஸ் குண்டு வெடிப்பின் பின்னர் துருக்கியில் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நடந்த நட்புக் காற்பந்தாட்டப் போட்டியின் போது பாரிஸில் கொல்லப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய போது மைதானத்தில் இருந்த பலரும் கூச்சலிட்டும் ஐ எஸ்ஸிற்கு ஆதரவாக அல்லாஹு அக்பர் என்று குலரெழுப்பியும் குழப்பம் விளைவித்தனர். துருக்கியினூடாக ஐ எஸ் அமைப்பினரால் தப்பி பல நாடுகளுக்குச் செல்ல முடியும்.

நெரிசலில் தப்பும் ஐ எஸ் அமைப்பு

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பினருக்கு ஒன்றுடன் ஒன்று பல் வேறு வகைகளில் முரண்படும் பல தரப்பினர் தாக்குதல் நடத்துகின்றார்கள். சிரிய அரச படைகளுக்கு எதிராக நூற்றிற்கு மேற்பட்ட அமைப்புக்கள் போராடுகின்றன. ஒரு புறம் சிரிய அரச படைகள், இரசியப் படைகள், ஈரானியப் படைகள், ஹிஸ்புல்லா அமப்பு ஆகியன ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன. இரசிய விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகச் செய்வதிலும் பார்க்க மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவும் சிரிய அரச படைகளுக்கு எதிராகவும் செயற்படும் அமைப்புக்களுக்கு எதிராகவே அதிக தாக்குதல்களைச் செய்கின்றன. துருக்கியப் படைகள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் செய்வதிலும் பார்க்க குர்திஷ் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். இரசியா குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குர்திஷ் போராளி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றது. சிரியாவில் வாழும் துருக்கியர்களின் போராளி அமைப்பு மீது இரசியா தாக்குதல் செய்வது துருக்கியை ஆத்திரப் படுத்தி அது இரசிய விமானத்தைச் சுட்டு விழுத்தியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்துவதை விட்டு ஒன்றின் மீது ஒன்று சேறு வீசிக் கொண்டிருக்கின்றன. மேற்காசியாவிலோ வட ஆபிரிக்காவிலோ ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் இறங்குவது பிரான்ஸ்தான். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

அமெரிக்கா மேலும் ஐம்பது சிறப்புப் படையினரை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3400 அமெரிக்கப் படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுரை வழங்க அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்புப் படையினர் சிறு குழுக்களாகச் சென்று தெரிவு செய்யப் பட்ட இலக்குகள் மீது, தெரிவு செய்யப் பட்ட ஐ எஸ் தலைவர்கள் மீது நன்கு திட்ட மிட்ட துணிகரத் தாக்குதல்கள் செய்வர். . ஆனால் டிசம்பர் முதலாம் திகதி வெளிவந்த வாஷிங்டன் போஸ்ற் தினசரியில் பல ஈராக்கியர்கள் அமெரிக்கா ஐ எஸ் அமைப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக நம்புகின்றார்கள். பலர் அமெரிக்க உழங்கு வானூர்திகள் ஐ எஸ் அமைப்பினருக்கு படைக்கலன்களும் நீர்ப் போத்தல்களும் வழங்குவதை நேரில் கண்டதாகவும் வாஷிங்டன் போஸ்ற் தெரிவித்துள்ளது. ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்லும் பார ஊர்திகளை அமெரிக்காவால் இலகுவாக விமானத் தாக்குதல் மூலம் அழிக்க முடியும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை அமெரிக்கா செய்யவில்லை. இப்போது அந்தப் பார ஊர்திகளுக்கு எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் வீசி அதன் ஓட்டுனர்களைத் தப்பி ஓடச் சொல்லி விட்டுத் தாக்குதல் செய்கின்றன. அமெரிக்காவின் நட்பு நாட்டுக் குடிமக்களைக் கொல்லாமல் இருக்கவே இப்படி அமெரிக்கா செய்கின்றதாம்.

இதுவரை காலமும் பிரித்தானியா ஈராக்கில் மட்டும் ஐ எஸ் அமைபினருக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதல்கள் ஈராக்கிய அரசின் வேண்டுதலின் பேரில் நடந்த படியால் பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் தாக்குதல் செய்யக் கூடியதாக இருந்தது. சிரிய அரசு அப்படி ஒரு வேண்டுதலை விடுக்காதப் படியால் பிரித்தானியா சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலைச் செய்யவில்லை. டிசம்பர் இரண்டாம் திகதி பத்து மணித்தியால விவாதத்தின் பின்னர் பிரித்தானியப் பாராளமன்றம் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த பிரித்தானியப்பாரளமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெறும் விமானத் தாக்குதல் மட்டும் ஒரு கரந்தடிப் போர் செய்யும் படையை அழிக்க முடியாது. அதை அடக்க மட்டும் முடியும். ஐ எஸ் அமைப்பினர் தமது தளங்களை வேறு பல இடங்களுக்கு மாற்ற முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...