உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, மிகப் பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் என்றும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் என்றும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை.
கூடையின் சீனாவின் றென்மின்பி
2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி கூடிய பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு யுவான் என்றும் றென்மின்பி என்றும் அழைக்கப்படும் சீனாவின் நாணயத்தை நிதியத்தின் நாணயக் கூடைக்குள் அனுமதித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு நாணயங்கள் நாணயக் கூடை எனப்படும். இந்த அனுமதி 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும். சீன நாணயத்தை நாணயக் கூடைக்குள் அனுமதித்தது பெருமிதமடைய வேண்டிய வெற்றி என சீன ஆட்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒரு வளர்முக நாடு முதற்தடவையாக இந்த நிலையை எட்டியுள்ளது. இதுவரை முதலாளித்துவ நாடுகளே இந்த நிலையைப் பெற்றிருந்தன. முதற்தடவையாக ஓர் அரச முதலாளித்துவ நாடு இந்த நிலையை எட்டியுள்ளது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு
பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பாக அமெரிக்க டொலரும் தங்கமும் இருந்தன. பின்னர் 1969-ம் ஆண்டு சிறப்புப் பணம்பெறும் உரிமை (special drawing rights ) உருவாக்கப் பட்டது. நிதியத்தின் உறுப்பு நாடுகள் இதிலிருந்து கடன் பெறலாம். சிறப்புப் பெறும் உரிமையில் அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், பிரெஞ்சு பிராங், மேற்கு ஜேர்மனியின் மார்க் ஆகிய நாணயங்களே முக்கிய பங்கு வகித்தன. இந்த நாணயங்களுக்குக் கொடுக்கப் படும் பாரமதிப்பு சிறப்புப் பணம்பெறும் உரிமத்தின் பெறுமதியைக் தீர்மானிக்கும். தற்போது அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானியப் பவுண், ஜப்பானிய யென் ஆகிய நான்கு நாணயங்களே சிறப்புப் பணம்பெறும் உரிமையின் மதிப்பை நிர்ணயிக்கும் கூடை நாணயங்களாக இருக்கின்றன 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து சீனாவின் யுவான் ஐந்தாவது நாணயமாக இணைகின்றது. சிறப்புப் பணம் பெறும் உரிமை ஒரு நாணயமாகக் கருதப்படா விட்டாலும் அது ஒரு நாணயமாகச் செயற்படுவதுண்டு. எகிப்தின் சூயஸ் கால்வாயினூடாகச் செல்லும் கப்பல்களுக்கான கட்டணம் சிறப்புப் பணம்பெறும் உரிமையிலேயே அறவிடப்படுகின்றது. அமெரிக்க டொலர் 41.73விழுக்காடும், யூரோ 30.93 விழுக்காடும், சீன றென்மின்பி (அல்லது யுவான்) 10.92விழுக்காடும் ஜப்பானிய யென் 8.33விழுக்காடும் பிரித்தானியப் பவுண் 8.09விழுக்காடும் நாணயக் கூடையில் இருந்து சிறப்புப் பணம்பெறும் உரிமையின் பெறுமதியைத் தீர்மானிக்கும்.
யென்னையும் பவுணையும் பின் தள்ளிய சீன யுவான்
2007-ம் ஆண்டில் இருந்து சீனா உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்றது. உலக அரங்கில் சீனாவின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுவதால் அதன் பாவனை பிரித்தானியப் பவுணிலும் ஜப்பானிய யென்னிலும் பார்க்க அதிகரித்துள்ளது. சீன நாணயமான யுவான்(றென்மின்பி) உலகில் நான்காவது அதிகம் பாவிக்கப் படும் நாணயமாக இப்பொது இருக்கின்றது. இதனால் இந்த இரு நாணயங்களுக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடைக்குள் கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பு குறைக்கப் பட்டுள்ளது. இனி உலகில் மற்ற நிதி நிறுவனங்களும் நடுவண் வங்கிகளும் தமது நாணய காப்பொதுக்க வைப்பீட்டை யுவானில் செய்யும் என சீனா எதிர்பார்க்கின்றது. இதுவரைகாலமும் அமெரிக்க டொலரிலேயே பெருமளவு நாணய காப்பொதுக்க வைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. சீனா தனது நாணயத்தை உலகமயமாக்கும் முயற்ச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவும் சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள்.
நிபந்தனையில் விட்டுக் கொடுத்த நாணய நிதியம்
ஒரு நாணயம் பன்னாட்டு நிதியத்தின் நாணயக் கூடைக்குள் சேர்க்கப்படுவதாயின் அந்த நாணயம் முக்கியமாக இரண்டு நிபந்தனைகளைத் திருப்தி செய்ய வேண்டும். முதலாவதாக அந்த நாணயம் பரவலாக உலக அரங்கில் பாவிக்கப் படவேண்டும், இரண்டாவதாக அந்த நாணயம் சுதந்திரமாகப் பாவிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த நாணயத்தின் நாட்டின் மொத்தப் பொருளாதார் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும். பரவலாகப் பாவிக்கப் படும் நிலையை சீன நாணயம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று விட்டது. உலகில் 120 நாடுகளின் பெரிய வர்தகப் பங்காளியாக சீனா இருக்கின்றது. இரண்டாவது நிபந்தனையான சுதந்திரமாகப் பாவிக்கக்க் கூடிய தன்மை பற்றி வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. 2010-ம் ஆண்டு சீனா பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடையில் தனது நாணயத்தையும் இணைக்க முயன்ற போது அதன் யுவான் நாணயத்தை சுதந்திரமாக மாற்ற அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதிக்கின்றது என ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்த்தன. அதனால் யுவான் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு சீனா தனது நாணயத்தின் பாவனையின் மீது உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இனிவரும் மாதங்களில் சீனா தனது நாணயத்தின் பாவனைமீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டி வரும் அத்துடன் சீனா தனது நாணயத்தின் மதிப்பைக் குறைந்து செல்ல அனுமதிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனாலும் சீனா தனது நாணயம் மற்ற நாணயங்களாக மாற்றப் படுவதையோ அல்லது மற்ற நாணயங்கள் யுவானாக மாற்றப்படுவதையோ நூறு விழுக்காடு சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப் போவதில்லை. சுதந்திரமாக மாற்றப்படும் தன்மை வரும் போது பல சீனச் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து பெருமளவு நிதியுடன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் குடியேறுவார்கள். ஏற்கனவே சீனாவில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு களவாக 600பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வெளியேறுகின்றது. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இது மேலும் அதிகரிக்கும் போது சீனாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு வீழ்ச்சியடையும். சீன அதிபர் ஜி ஜின்பிங் தமது நாணயம் தொடர்பான தமது கொள்கையில் பெரும் மாற்றம் வரப் போவதில்லை என்றும் ஆனால் தமது பொருளாதாரச் சீர் திருத்தங்கள் தொடர்ந்தும் செய்யப்படும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
சீனா இலகு கடன் பெறலாம்
சீன நாணயத்திற்கு கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பால் அது குறைந்த வட்டிக்கு பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறலாம். இதனால் சீனா தனது உட்கட்டுமான அபிவிருத்திக்குத் தேவையான பணத்தை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடனாகப் பெறலாம். கட்ந்த பல ஆண்டுகளாக சீனாவின் ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாய நிலங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 272விழுக்காடாக இப்போது இருக்கின்றது. இந்தக் கடனில் பெரும்பான்மையானவை சீனாவின் கூட்டாண்மைகளின் கடனாகும். அதில் பெரும் பகுதி அமெரிக்க டொலரில் பெற்ற கடனாகும். அமெரிக்கா இந்த மாதம் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. அப்படிச் செய்யும் போது சீனா யுவானிற்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது சீனாவில் டொலரில் கடன் பட்ட பெரு நிறுவனங்களைக் கலங்கச் செய்யும். சீனா தனது நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தன்னிடமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான் 3.5ரில்லிய்யன் டொலரை விற்று யுவானை வங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கரைக்கும்.
கனவே கலையாதே
சீனா உலகின் தன்னிகரில்லாத பெரு வல்லரசாக வேண்டும் என்ற கனவுடனும் சீன நாணயம் உலக நாணயமாக்கப் பட வேண்டும் என்ற கனவுடனும் சீன ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். உலக வர்த்தகத்தில் தற்போது 2.79 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப்படுகின்றது. சீனாவின் சொந்த வர்த்தகத்தில் 24.6 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப் படுகின்றது. சீன நாணயம் உலகில் மற்ற எல்லா நாணயங்களையும் விட அதிக அளவு பாவிக்கப் படுவதற்கு சீன இன்னும் மிக நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுக் கடன் முறிகளில் முதலீடு செய்வதற்குக் கட்டுப்பாட்டு உண்டு. சீன பல நாடுகளுடன் தனது வர்த்தகத்தை அமெரிக்க டொலர்களில் செய்யாமல் யுவான் நாணயத்தில் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ரெம்பத்தூரம் போக வேண்டும்
உலகின் முதற்தர வல்லரசு ஆவதற்கு அதிக அளவு படையினரும் படைக்கலன்களும் இருந்தால் மட்டும் போதாது. அடிக்கடி போரில் ஈடுபட்டு களமுனை அனுபவம் உள்ள படையினர் இருக்க வேண்டும். உலகெங்கும் செயற்படும் உளவுத் துறை இருக்க வேண்டும். பல நாடுகளுடன் நட்பும் படைத்துறை ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். பல நாடுகளில் தேவை ஏற்படின் ஆட்சி மாற்றம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் பர்மா எனப்படும் மியன்மாரில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்திலும் சீனா ஓரம் கட்டுப்பட்டுவிட்டது என எண்ணத் தோன்றுகின்றது.நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வரக்கூடிய ஒரு நிலையைச் சீனா அடைய இன்னும் பல தூரம் சீனா பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment