வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் தமது வான் படைகளை வலிமை மிக்கதாக்கிக் கொண்டிருக்கின்றன.
சிக்கனமும் படை வலிமையும்
ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படை உலகில் தனது மேலாதிக்கத்தைத் தக்க வைக்கப் பெரும் பாடு படுகின்றது. அமெரிக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியில் விமானப் படைத்துறையினர் தமது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரும் அமெரிக்கப் பாராளமன்றமும் வெள்ளை மாளிகையும் பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக நீண்ட விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் செலவில் பத்து பில்லியன்களை குறைக்கப் பட வேண்டும் என பாராளமன்றம் வலியுறுத்துகின்றது
அமெரிக்காவை வென்ற இந்தியா
2014-ம் ஆண்டு அமெரிக்க விமானப் படையின் தாக்குதல் கட்டளையகத்தின் தளபதி ஹால் எம் ஹோர்ண்பேர்க் இரசியப் போர் விமானங்கள் அமெரிக்கப் போர் விமானங்களிலும் பார்க்க மேன்மையானவை என்றார். இரசியப் படைத்துறையினரையே இந்தக் கூற்று ஆச்சரியப்படவைத்தது. அமெரிக்க விமானப் படையினரும் இந்திய விமானப் படையினரும் நடாத்திய போர் ஒத்திகையின் போதே தான் இதை உணர்ந்து கொண்டதாக ஹோர்ண்பேர்க் தெரிவித்தார். அமெரிக்காவின் F-15 C/D Eagle விமானங்களும் இந்தியாவிடமுள்ள இரசியத் தயாரிப்பு Sukhoi Su-30 MKI போர் விமானங்களும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் போர் ஒத்திகை நடாத்திய போது 90 விழுக்காடு தருணங்களில் இந்திய விமானங்கள் வெற்றியடைந்தன.
சாம் - இரசியாதான் முன்னோடி
இரசியா தனது சாம் எனப்படும் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணை முறைமைகளை மேம்படுத்தியதன் பின்னர் அமெரிக்காவின் F-22, F-15, A-10 ஆகிய போர்விமானங்கள் இரசியாவின் ஆதிக்கத்திலுள்ள கலினின்கிராட் மற்றும் கிறிமியாப் பகுதிகளை ஒட்டிப் பறக்கும் போது மிகவும் கவனத்துடன் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வியட்னாம் போரின் போது ஐக்கிய அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.
தொடரும் தலைமுறைகள்
இரசியாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலை முறை விமானமான F-35ஐ விட மேன்மையானது எனப்படுகின்றது. படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன. இரசியாவின் SU-35 என அழைக்கப்படும் Sukhoi Su-35S Flanker-E என்னும் போர்விமானங்கள் பல மேற்று நாட்டு விமானப் படையினரை கலங்க வைத்துள்ளது.
சீனாவின் விமானத் தொழில்நுட்பம்
தொன்மையான தனது விமானப் படையை கடந்த இருபது ஆண்டுகளாக புதுயவையாக்குவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சீனா இரசியாவைப்போல் விமானத் தொழில்நுடப்பத்தில் ஒரு முன்னணி நாடாக இருந்ததில்லை. ஆனால் அது ஒரு முன்னணி நாடாக தன்னை மாற்ற முயற்ச்சிக்கின்றது.
சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை - China’s People’s Liberation Army Air Force (PLAAF)
அண்மைக்காலங்களாக பல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீனா 2012-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் நடாத்திய விமானப்படை ஒத்திகை எடுத்துக் காட்டியது. பதின்நான்கு பல்வேறுபட்ட விமானப் படையணிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் சீன விமானப்படையின் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். சீன விமானப்படை வரலாற்றில் இது ஒரு பெரிய ஒத்திகையாகும். இது பதினொரு நாட்கள் நீடித்தது. 30-11-2012இல் சீனா அரங்கேற்றிய விமானப்படை ஒத்திகை பல படைத்துறை ஆய்வாளர்கள் சீன விமானப்படையின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டிருந்தனர் என்று நிரூபித்தது. நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor. சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. ராடார்களுக்கு தென்படாத stealth fighter விமானங்கள் வைத்திருக்கும் மூன்றாவது நாடாக சீனா 2010இல் இணைந்து கொண்டது. ஆப்கானிஸ்த்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்க stealth fighter விமானத்தை சீனா விலைக்கு வாங்கி stealth தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது. இக் குற்றச் சாட்டை சீனா வன்மையாக மறுக்கின்றது. சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின்கள் இரசியாவிடமிருந்தே வாங்கப்பட்டன. இது சீனா இன்னும் விமான உருவாக்கற் துறையில் பின் தங்கியே இருக்கின்றது எனக் காட்டுகின்றது என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.
சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. இவை விமானப் படைத்துறையில் நாய்ச் சண்டை என விபரிக்கப்படும் குறுதிய தூரத்தில் இருந்து கொண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரியும் பணிகளுக்கு உகந்தவை அல்ல. பின்னர் சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது.
துல்லிய வழிகாட்டி படைக்கலன்கள் - Precision-Guided Munitions (PGM)
ஐக்கிய அமெரிக்கா சிறந்த துல்லிய வழிகாட்டி ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் அவை பெருமளவில் பயன் படுத்தப்பட்டன. வானில் இருந்தும் தரையில் இருந்தும் கடற்கலன்களில் இருந்தும் வேறு வேறுவகையான துல்லிய வழிகாட்டி ஏவுகணைகள் அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்டன. இவ் ஏவுகணைகள் போரை இலகுவாக்கின. அமெரிக்கப் படைகளின் இழப்பைக் குறைத்தன. கணனியில் விளையாடுவது போல் இந்த ஏவுகணைகளை இயக்கலாம். ஈராக்கியப் படையினருக்கு இவை பலத்த இழப்புக்களை ஏற்படுத்தின. ஆனால் ஈராக்கியப் படைகளை முற்றாக ஒழித்துக் கட்டவுமில்லை அவர்களின் போராட்ட மனப்பாங்கை சிதைக்கவுமில்லை.
அடையாளத்துக்கு முந்து
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.
அடுத்த தலைமுறைக்கான திட்டம்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க விமானங்கள் எண்ணிக்கை அடைப்படையில் அதிக விமானங்களைக் கொண்ட எதிரியைச் சமாளிக்க வேண்டும். அதற்கு எதிரியிலும் பார்க்க மிக மேன்மையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விமானங்கள் அமெரிக்கப் படையினருக்கு அவசியம் என்பதை அமெரிக்காவின் பாராளமன்றமும் உணர்ந்துள்ளது. தனது விமானப் படையின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண அமெரிக்கா The Next-Generation Air Dominance program என்னும் திட்டத்தை வரைந்துள்ளது. பல உட் பிரிவுகளை இத் திட்டம் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மொத்த செலவீனத்தில் 25 விழுக்காடு வெட்டு தேவை என அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை அமெரிக்க விமானப்படைக்கு புதிய தொலைதூரத் தாக்குதல் விமானங்களை உருவாக்குவதற்கான செலவீனங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களில் தற்போது Lockheed Martin நிறுவனம் தயாரித்த F-22 Raptor போர் விமானங்களே தற்போது ஓரளவுக்கு சீனா மற்றும் இரசியப் போர் விமானங்களுடன் நின்று பிடிக்கக் கூடியவை.
ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள்
அமெரிக்காவின் வான் படையினர் 2030-ம் ஆண்டு தாம் உலக வான் பரப்பில் ஆதிக்கம் முழுமையாகச் செலுத்தக் கூடிய திட்டத்தை வரைந்துள்ளனர். இத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும். சில வையானவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக அதாவது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். பி-3 வகையறாக்கள் ஒலியிலும் குறைவான கதியில் பறக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உன்னத தகவல் பரிமாற்றமும் இருக்கும். சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாக இயங்காது. சீனாவின் J-20 ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கும் ஆனால் திடீரெனத் திருப்ப முடியாத்து. திரும்ப முன்னர் 300மைல்கள் பறக்க வேண்டும். இதனால் அமெரிக்கா தனது ஆறம் தலைமுறைப் போர் விமானங்களை வானில் இருந்து வேறு விமானங்களுடன் சண்டை செய்யக் கூடிய வகையில் இலகுவாகவும் துரிதமாகவும் திரும்பிப் பறக்கக் கூடிய வகையில வடிவமைக்கின்றது. அமெரிக்கா உருவாக்க விருக்கு பி-3 போர் விமானங்கள் பி-2 விமானங்களிலும் பார்க்கக் குறைந்த அளவு எடையுள்ள படைக்கலன்களையே தாங்கிச் செல்லும். ஆனால் தொடர்ந்து 5000 மைல்கள் பறக்கக் கூடியவை. இதனால் பல அமெரிக்கத் தளங்களில் இருந்து இரசியாவையோ அல்லது சீனாவையோ ஒரே பறப்பில் சென்றடையும்.
பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்கும் முகமாக அமெரிக்காவின் கடற்படையும் விமானப் படையும் இணைந்து ஆறாம் தலைமுறை விமானங்களை உருவாக்கவிருக்கின்றன.
இரசியாவின் எதிர்வினை எப்படி?
2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது. விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமான ஆதிக்கப் போட்டி தீவிரமடையும் போது சீனா ஒன்றில் பின் தங்க வேண்டும் அல்லது இரசியாவுடன் இணைந்தும் சார்ந்தும் செயற்பட வேண்டும். மூன்றாவது தெரிவு இணைய வெளியூடாக 6-ம் தலைமுறை விமானங்களின் தொழில்நுட்பங்களைத் திருட வேண்டும். இருந்தும் 2015 டிசம்பரில் சீனா ஆறாவது தலைமுறைப் போர்விமானங்களைத் தானும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment