இரசியா மத்திய கிழக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தனது உளவு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தை ஈராக்கில் அமைத்துள்ளது. தகவல் நிலையம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இத் தலைமையகம் இரசியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் படைகளுக்கிடையில் உளவுத் தகவல்களைத் திரட்டுவதையும், பகுப்பாய்வு செய்வதையும் பரிமாறிக் கொள்வதையும் ஒன்றிணைக்கும் என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கான தலைமைப் பொறுப்பை இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் ஏற்றுக் கொள்வார். புட்டீனின் நகர்வுகள் அவரது புவிசார் அரசியல் வித்துவத்துவமா அல்லது உள்நாட்டுப் பிரச்சனை திசைதிருப்பும் முயற்ச்சியா என்பதில் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
ஹிஸ்புல்லாவும் வரவேற்பு
இரசியாவின் அதிரடி நகர்வுகளை லெபலானிய சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லாவும் வரவேற்றுள்ளது. ஈரானிய ஆதரவு அமைப்பானா ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு ஐ எஸ் அமைப்பைத் தோற்கடிக்கத் தவறிவிட்டது என்று கூறிய அவர் அமெரிக்காவின் நோக்கங்களில் தனக்கு ஐயம் இருப்பதாகவும் தெரிவித்தார். அண்மைக்காலங்களாக ஹிஸ்புல்லா அமைப்பினர் 4+1 என்னும் பெயரில் இரசியா, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நான்கு நாடுகளும் தமது அமைப்பும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்து வந்தனர். அந்தக் கூட்டமைப்பின் முதற்பணி சிரியாவின் அல் அசாத் ஆட்சிக்கு ஆதரவாகப் போராட படையினரை அனுப்புவதாக இருக்க வேண்டும் எனவும் ஹிஸ்புல்லாவின் ஊடகங்கள் பரப்புரை செய்து கொண்டிருந்தன.
ஈரானும் மறுக்கிறது இரசியாவும் மறுக்கிறது
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கு பற்றச் சென்ற ஈரானிய அதிபர் ஹஸன் ரௌஹானி இரசியா, ஈரான், சிரியா, ஈராக் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதை மறுத்துள்ளார். இரசிய அரசுறவியலாளர்களும் மத்திய கிழக்கில் தமது நாடு ஒரு தீவிர ஈடுபாடு செலுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் எமக்கென்று ஒரு பணி இல்லை, நாம் ஈராக்கில் தலையிடப்போவதில்லை என்கின்றனர். அவர்கள். அத்துடன் மத்திய கிழக்கில் இரசியாவினதும் ஈரானினதும் நிலைப்பாடுகள் வித்தியாசமானவை இரண்டும் நெருங்கி இணைந்து அங்கு செயற்பட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஈரானிய சிறப்புப் படையான கட்ஸ் படையின் (Quds Force) தளபதி ஹஸ்ஸெம் சொலைமானி 2015 ஓகஸ்ட் மாதம் இரசிய சென்று பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடையையும் மீறி இவர் இரசியா சென்றிருந்தார். சிரிய விவகாரத்தில் இரசியாவிற்கும் ஈரானிற்கும் தொடர்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி 2015 மே மாதம் மொஸ்க்கோ சென்று இரசியாவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார்.
சுருங்கும் அசாத்தின் ஆதிக்கப் பரப்பு
மூன்று இலட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இடப்பெயர்வுக்கும் உள்ளாகி இருக்கும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பு மட்டும் இருக்கின்றது. சிரியப் பிரச்சனையால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தஞ்சம் கோருவோரின் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றன. இவை யாவற்றிற்கும் பராக் ஒபாமாவின் பிழையான வெளியுறவுக் கொள்கையும் அவர் சிரிய விவகாரத்தைக் கையாண்ட விதமும் தான் என விள்டிமீர் புட்டீன் ஐக்கிய நாடுகள் சபையில் வைத்துத் தெரிவித்தார். இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஈராக்கின் மீதான சட்ட விரோதப் படையெடுப்பே உருவாக்கியது என்பதையும் புட்டீன் தெரிவிக்கத் தவறவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவின் உதவியின்றி ஐ எஸ் என்னும் பேயை ஒழிக்க முடியாது எனக் கருதுகின்றன என வரும் செய்திகளும் பராக் ஒபாமாவிற்கும் அமெரிக்காவிற்கும்பேரிடியாகும். ஜேர்மனியும் இத்தாலியும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான இரசியாவின் படை நடவடிக்கைகளை இரகசியமாக வரவேற்றுள்ளன.
இரசியாவிற்கும் ஒரு களமுனை தேவை
சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்தில் இரசியா தனது படையினரையும் போர் விமானங்களையும் முதலில் தரையிறக்கியது. அமெரிக்காவின் உளவுத்துறைகளில் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரசியா இந்த நகர்வுகளைச் செய்ததால் இது மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்துடன் இரசியாவின் கடற்படையினரின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிலையமாக இருந்த சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் இரசியக் கடற்படைக் கப்பல்கள் சென்று நிலை எடுத்துள்ளன. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியின் முக்கிய கலமான The Moskva missile-carrying cruiser என்னும் ஏவுகணைதாங்கிக் கப்பலும் நாசகாரிக் கப்பல்களும் சிரியாவை ஒட்டிய மத்திய தரைக்கடலில் நிலை எடுத்துள்ளன. அமெரிக்காவின் செய்மதிப் படங்களின் படி 28 போர் விமானங்கள் 26 தாக்குதல் உலங்கு வானூர்திகள், பல துருப்புக் காவி வண்டிகள், பல தரையில் இருந்து வானிற்கு ஏவும்கணைகள், பல தாங்கிகள் ஆகியவற்றுடன் இரண்டாயிரம் இரசியப் படையினர் லதக்கியாவில் நிலை கொண்டுள்ளனர். நேட்டோ நாடுகள் பல நாடுகளுக்கு தமது படைகளைப் போர் செய்ய அனுப்பி அவர்களுக்கு களமுனை அனுபவத்தை வழங்குவதுடன் தமது படைக்கலன்களின் பயன்பாட்டையும் பரீட்சிக்கின்றன. இரசியா 1990இல் இருந்து அப்படி ஒரு பரந்த அனுபவம் இன்றி இருக்கின்றன. ஜோர்ஜியாவுடன் நடந்த போரில் வலுவற்ற ஜோர்ஜியாவை அது துரிதமாக அடக்கி விட்டது.அண்மைக்காலங்களாக ஐக்கிய அமெரிக்கா தரைப்படைகளை அனுப்பாமல் வான் தாக்குதல்கள் மூலம் போர் புரியும் திறனையும் அனுபவத்தையும் வளர்த்துள்ளது. அதே அனுபவத்தையும் திறனையும் அமெரிக்கா பெறத் துடிக்கின்றது.
மத்திய கிழக்கில் இடைவெளிகளை நன்கு பயன்படுத்திய இரசியா!
சியா மற்றும் சுனி இஸ்லாமியர்களிற்கு இடையே உள்ள முறுகல் நிலை என்று பார்க்கும் போது ஐக்கிய அமெரிக்காவின் நட்பு சுனி முஸ்லிம்கள் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கட்டார், குவைத் போன்ற நாடுகளுடனேயே சிறப்பாக இருக்கின்றன. சியா முஸ்லிம் நாடான ஈரான் அமெரிக்காவை வெறுக்கும் ஒரு நாடாக இருக்கின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானினதும் ஈராக்கினதும் நட்பை இரசியாவால் இலகுவாகப் பெற முடியும். ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து ஈரானை தம்முடன் ஒரு உடன்பாட்டுக்கு கொண்டு வருமுன்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது காய்களை நகர்த்தி விட்டார். மத்திய கிழக்கில் உள்ள அடுத்த இடைவெளி ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் தமது படைகளின் காலடிகள் அங்கு படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தமையாகும். அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் போராளிகளின் நடமாட்டங்களுக்கு தடையாக அமைந்தன ஆனால் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை. அவர்கள் கால நிலை மாற்றங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இஸ்ரேலுக்குப் பேரிடி
இரசியா சிரியாவில் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் விமானத்தில் இருந்து விமானத்தை நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் இறக்கி இருப்பது இஸ்ரேலுக்குப் பேரிடியாகும். 2010-ம் ஆண்டு சிரிய உள் நாட்டுக் குழப்பம் ஆரம்பமானதில் இருந்து இஸ்ரேல் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாவிற்கு பெரும் படைக்கலன்கள் அனுப்பப் படுவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றது. மூன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்களும் செய்துள்ளன.சிரியா கோலான் குன்றுகளை மீளக் கைப்பற்ற இரசியப் படைகள் உதவுமா என்ற அச்சமும் இஸ்ரேலில் சிலரிடம் தோன்றியுள்ளது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் கோலான் குன்றை இஸ்ரேல் சிரியாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. 1981-ம் ஆண்டு இஸ்ரேல் கோலான் குன்றை தன்னுடன் ஒரு தலைப்பட்சமாக இணைத்துக் கொண்டது. இதைப் பன்னாட்டு சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இருபதினாயிரம் இஸ்ரேலியர்கள் கோலான் குன்றில் குடியேற்றப்பட்டனர். இந்தக் கோலான் குன்றில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இலகுவாகச் செய்ய முடியும். இந்தக் குன்றுகள் ஹிஸ்புல்லாவின் வசமானால் அதனால் இஸ்ரேல் பேரழிவை ஏற்படுத்த முடியும்.
புட்டீனின் கேந்திரோபாயமா தந்திரமா
சிரியாவில் சுதந்திர சிரியப் படை என்னும் அமைப்பு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அமைப்பாகும். அதற்குப் படைக்கலன்களும் பயிற்ச்சியும் அமெரிக்கா வழங்கி வருகின்றது. அவர்கள் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினருக்கு எதிராகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அமைப்புக்களுக்கு எதிராக இரசியா தாக்குதல் நடத்தக் கூடும். இது அமெரிக்காவின் சிரியா தொடர்பான அரசுறவியலுக்கு பெரும் இழுக்காக அமையும். வெள்ளை மாளிகையில் சிலர் புட்டீன் தனது இரசியப் பார்வையாளர்களைத் திருப்திப் படுத்த சும்மா "சீன் போடுகின்றார்" எனச் சொல்வதும் உண்டு. 13 விழுக்காடு சியா முஸ்லிம்களையும்74விழுக்காடு சுனி முஸ்லிம்களையும் கொண்ட சிரியாவில் சியா ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் சுனி முஸ்லிம்களின் அமைப்பான ஐ எஸ் இற்கு எதிராகவும் இரசியா களமிறங்கியுள்ளது. அது அமெரிக்காவின் DIPLOMATIC MANEUVER ஐ முற்றாக checkmate செய்துவிட்டபோதிலும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இரசியா இருக்கின்றதா? சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம், துருக்கி ஆகியவை அசாத்தை அகற்றுவதில் உறுதியாக நிற்கின்றன. இரசியாவிடம் சிரியாவில் உறுதியாக நிலைகொள்ளக் கூடிய logistic support வளங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. உலகெங்கும் உள்ள சுனி முஸ்லிம்கல் மட்டுமல்ல இரசியாவில் உள்ள சுனி முஸ்லிம்களின் வெறுப்பை இரசியா சம்பாதிப்பது இரசியாவிற்கு உகந்ததா? புட்டீனின் நகர்வுகள் இரசியாவிற்கும் அவர் தலையிடும் நாடுகளுக்கும் செழிப்பை கொண்டுவருமா? இரசியாவின் நட்பு நாடுகளின் வட்டடத்தை விரிவாக்குமா? இது போன்ற கேள்விகளுக்குச் சரியான விடையைக் காலம் தான் கூறும்.
மேற்கின் குற்றச் சாட்டும் இரசியாவின் பதிலும்
ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் செய்யச் சென்ற இரசியப் படையினர் அதைச் செய்யாமல் மற்ற அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதாக அமெரிக்கா முதலில் குற்றம் சாட்டியது. இரசியா முதல் தாக்குதல் செய்த இடமான சிரியாவின் ஹொம்ஸ் நகரில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சுந்ததிர சிரியப் படையினரும் இருக்குக்கின்றனர். 2015-ஒக்டோபர் 3-ம் திகதி இரசியப் படையினர் ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக கடுமையான விமானத் தாக்குதல்களை நடாத்தினர். ரக்கா நகரில் உள்ள ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாடு-கட்டளைப் பணியகத்தை தாம் நிர்மூலமாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். BETAB-500 எனப்படும் கொங்கிறீட் சுவர்களைத் துளைத்துச் செல்லும் குண்டுகள் Su-34 போர்விமானங்களில் இருந்து வீசப்பட்டன. இதனால் நிலத்தின் கீழ் இருந்த ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் அழிக்கப்பட்டது. சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் இரசியாவின் Su-24M tactical bombers களால் அழிக்கப்பட்டன. இரசியாவின் KAB-500 missilesகள் பரவலாகப் பாவிக்கப்பட்டன. இரசியப் படைத்தளபதி ஐ எஸ் அமைப்பின் போராளிகள் தமது தாக்குதல்களால் பெரும் கலவரமடைந்துள்ளனர் என்றும் பலர் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
குர்திஷ் மக்களுக்கு இரசியா விடுதலை பெற்றுக் கொடுக்குமா?
சிரியாவில் வாழும் குர்திஷ் மக்களின் Democratic Union Party, (or PYD) இரசியப் படைகளின் தாக்குதல்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. துருக்கியப் படைகளின் தாக்குதல்களுக்கு அண்மைக்காலங்களாக உள்ளாகி வரும் குர்திஷ் போராளிகளுக்கு இரசியாவின் சிரிய வருகை ஆறுதலாக அமைந்தது. இதுவரைகாலமும் அமெரிக்கப் படைகளுக்குத் தேவையான ஐ எஸ் தொடர்பான உளவுத் தகவல்களை குர்திஷ் போராளிகளே வழங்கி வந்தனர். ஆனால் துருக்கியப் போர் விமானங்கள் குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா அதைத் தடுக்கவில்லை. குர்திஷ் போராளிகள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சிரியப் பிரதேசத்தை தனதாக்க துருக்கி அவர்களின் பிரதேசத்தை விமானப் பறப்பற்ற பிரதேசம் ஆக்க முயன்றது. அதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. சிரியாவில் குர்திஷ் மக்கள் இராசியாவின் ஆதரவுடன் தன்னாட்சி பெற்றால் அதை வைத்துக் கொண்டு நோட்டோப் படைக் கூட்டமைப்பில் இரண்டாவது பெரிய படையினரைக் கொண்ட நாடான துருக்கிக்கு இரசியா பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். துருக்கியில் உள்ள குர்திஷ் மக்கள் தமக்கு என ஒரு தனிநாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாட்டு அரசுகளும் குர்திஷ் மக்களை அழிக்கத் துடிக்கின்றனர்.
சவுதி அரேபியாவின் ஏதிர் வினை என்ன?
சுனி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா சியா முஸ்லிம் நாடான ஈரானின் ஆதரவுடன் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை கடுமையாக எதிர்க்கின்றது. சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளின் அரபுச் செல்வந்தர்கள் அசாத்திற்கு எதிராகப் போராடும் தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதி உதவி செய்கின்றனர். இரசியப் படைகளின் சிரிய வருகை அசாத்தின் ஆட்சியைத் தக்க வைப்பதை வளைகுடா ஒன்றிய நாடுகளிற் பெரும்பான்மையாவை விரும்பப் போவதில்லை. இதே நிலையில்தான் எகிப்தும் துருக்கியும் இருக்கின்றன. இந்த நாடுகள் இரசியாவின் அசாத்தின் ஆட்சியை தக்கவைக்கும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை அடித்துச் சொல்லலாம்.
விமானப் பறப்பற்ற பிரதேசம்
சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்க வேண்டுமென்பது துருக்கியின் நீண்ட நாள் கோரிக்கை. பிரித்தானியாவின் முன்னாள் படைத்தளபதி சேர் கிரஹாம் லாம்ப் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசம் அமைக்கப் படவேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். மும்மர் கடாஃபிக்கு எதிரான நேட்டோ நாடுகளின் படை நடவடிக்கை ஒரு விமானப் பறப்பாற்ற பிரதேசம் என்னும் போர்வையில்தான் நடந்தது. அதையே சாட்டாக வைத்துக் கொண்டு கடாஃபியின் முழு வான்படையையும் நேட்டோ அழித்து விட்டது. சிரியாவில் இரசியப் படையினர் நிலை கொண்டிருப்பதால் அப்படி ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை அங்கு உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்றாகி விட்டது, சிரிய மருத்துவர்களைக் கொண்ட சிரியாவிர்கான மருத்துவ நிவாரண அமைப்பு சேர் கிரஹாம் லாம்பினின் விமானப் பறப்பற்ற பிரதேசம் உருவாக்கும் கருத்தை வரவேற்றுள்ளது. அதன் மூலம் காயப்பட்டவர்களிற்கு மருத்துவ உதவிகள் வழங்கலாம் என அது கருத்து வெளியிட்டுள்ளது.
இன்னும் ஓர் இடைவெளி
மத்திய கிழக்கில் அரபு வசந்தத்தின் பின்னர் நிலை குலைந்து போய் இருக்கும் ஒரு நாடாக லிபியா இருக்கின்றது. மும்மர் கடாஃபியின் ஆட்சியின் கீழ் இரசியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த லிபியாவில் இரசியாவிற்குப் பழக்கப்பட்ட பல நண்பர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அங்கும் ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. ஈரானின் ஆதிக்க நிலப்பரப்பு விரிவாக்கத்தில் லிபியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்த இடைவெளியைப் பாவித்து லிபியாவின் தனக்கு சாதகமான ஓர் ஆட்சியாளரை பதவியில் அமர்த்தும் முயற்ச்சியில் இரசியா ஈடு படலாம். அது இரசியாவின் நட்பு வட்டத்தை பரந்ததாக்கும்.
விளடிமீர் புட்டீனும் பராக் ஒபாமாவும்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது இருவரினதும் உரைகள் ஒன்றிற்கு ஒன்று கடுமையாக முரண்பட்டதாக இருந்தன. தற்போது இருக்கும் முக்கிய முரண்பாடு பஷார் அல் அசாத் பதவியில் தொடருவதா இல்லையா என்பதாகும். அசாத்துடன் தமக்கு எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்னும் இரசியா அவரைப் பதவியில் இருந்து வெளியார் அகற்றுவதைத் தான் எதிர்ப்பதாகச் சொல்கின்றது. அசாத்தைப் பதவியில் இருந்து விலக்கியே சிரியாவில் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்கா சற்று விட்டுக் கொடுத்து தீர்வு காணும் வரை அவர் பதவியில் இருக்கலாம் எனச் சொல்கின்றது. தனது மக்கள் மீது வேதியியல் குண்டுகளையும் பீப்பாய் குண்டுகளையும் வீசிய அசாத் தண்டிக்கப் படவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகின்றது. இந்த இழுபறி சிரியாவில் தொடர்ந்து அவல நிலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பல இலட்சம் அப்பாவிகளைப் பற்றி எந்தத் தரப்பினரும் கவலை கொள்ளவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment