துருக்கிப்படைகள் சிரியாவில் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுப் போராளிகள் மீதும் ஈராக்கில் குர்திஷ்த்தான் தொழிலாளர்கள் கட்சியின் போராளி அமைப்பினர் மீதும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியமை மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் பெரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடுமான துருக்கி இதுவரை காலமும் தனது விமானப் படைத்தளங்களை ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன் படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்திருந்தது. தற்போது அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துருக்கியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் துருக்கியின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
அமெரிக்காவிற்கு இரட்டை நன்மை
யேமனில் சவுதி அரேபியா களமிறங்கி இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகையில் சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக துருக்கி தாக்குதல் தொடங்கியது ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு வெற்றி எனச் சொல்லாம். அமெரிக்கப் படைகள் தரையில் இறங்கிப் போர் புரியாமல் ஐ எஸ் அழிக்கப் பட முடியாது எனப் பல படைத்துறை நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆளணி எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய படைத்துறையைக் கொண்ட துருக்கி தாக்குதல் செய்வது அமெரிக்காவிற்கு ஆறுதல் அளிப்பதாக அமைகின்றது. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நேரடிப் போரில் ஈடுபட்டால் அது ஆளணி இழப்புக்களையும் பணச் செலவையும் உருவாக்கும். சவுதி அரேபியாவும் துருக்கியும் தாக்குதல் செய்வது அந்த இரண்டும் அமெரிக்காவிற்கு நடக்காமல் செய்யும். அத்துடன் அமெரிக்காவிடமிருந்து இரு நாடுகளும் படைக்கலன்களை வாங்கும் போது அமெரிக்காவின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். மேலும் ஒரு இரட்டை நன்மையாக ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவின் தற்கொடைத் தாக்குதல் போராளிகளின் பிரிவின் தலைவர் அபு காகில் அல் சுதானி அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனது படையில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK) - இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும் சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும் YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா - இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.
குட்டையைக் குழப்பிய துருக்கி
இதுவரை அமெரிக்காவுடன் இணைந்தும் அமெரிக்காவிடமிருந்து படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களின் போராளிகளிற்கு எதிராக துருக்கியப் படைகள் தாக்குதல் நடாத்தியமை இன்னும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுபதுகளில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தனது உறவுகளை நெருக்கமாக்கிய போது ஈராக்கில் உள்ள குர்திஷ் மக்களுக்கு அமெரிக்கா மட்டுப்படுத்தப் பட்ட அளவில்படைக்கலன்களை ஈரானுடாக வழங்கியது. பின்னர் ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அமெரிக்கா ஈராக்குடன் தனது உறவை வளர்த்தது. பின்னர் சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிரான ஓர் இன அழிப்புத் தாக்குதல் செய்யும் போது குர்திஷ் மக்கள் அமெரிக்கா தமக்கு உதவி செய்யும் என நம்பி ஏமாந்தனர். அந்த ஏமாற்றத்தின் இரண்டாவது கட்டமாக இப்போது துருக்கி குர்திஷ் மக்களை அழிக்கப் போகின்றதா? துருக்கி தாக்குதலைத் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலும் ஐ எஸ் அமைப்பினர் மீது நடாத்திய தாக்குதலிலும் பார்க்க ஈராக்கில் உள்ள குர்திஷ் நிலைகள் மீதே அதிக தாக்குதல்களை நடாத்தியது. ஐ எஸ் இற்கு எதிராக ஒரு விமானப் பறப்பும் பெஷ்மேர்காவிற்கு எதிராக 185 பறப்புக்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குர்திஷ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை துருக்கி ஐ எஸ் அமைப்பிற்கு இணையான பயங்கரவாதமாகப் பரப்புரை செய்து கொண்டிருக்கின்றது. ஈராக்கின் காந்தில் மலைப்பிரதேசத்தில் உள்ள குர்திஷ் போராளிகளின் தலைமைச் செயலக முகாம்களிலும் படைக்கலக் களஞ்சியங்கள் மீதும் துருக்கிய விமானப் படைகள் தாக்குதல் நடாத்தின. பதிலடியாக துருக்கியப் படையினர் மீது தற்கொடைத் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.
சுய நிர்ணய உரிமையற்ற குர்திஷ் மக்கள்
ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈராக்கில் உள்ள பெஸ்மேரா எனப்படும் குர்திஷ் போராளி அமைப்பு தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி 13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர். ஆனால் ஈராக்கில் குர்திஷ்ப் போராளிகளின் நிலைகளைத் துருக்கிய விமானங்கள் தாக்கியதுடன் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களின் கட்சியான குர்திஷ் தொழிலாளர் கட்சி துருக்கியுடன் நடாத்தி வந்த சமாதானப் பேச்சு வார்த்தை முறிவடைந்து விட்டதாக அறிவித்தது. துருக்கியில் தமக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என முப்பது ஆண்டுகளாக குர்திஷ் மக்கள் போராடி வருகின்றனர்.சிரியாவில் செயற்படும் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடாத்தியது. ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் குர்திஷ் போராளிகள் இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
கேந்திர முக்கியத்துவம் மிக்க துருக்கி
துருக்கி குர்திஷ் மக்களுக்கு எதிராகச் செய்யும் நடவடிக்கைகளை தட்டிக் கேட்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.
நேட்டோவைக் கூட்டிய துருக்கி
தமது நாட்டில் ஐ எஸ் அமைப்பினர் தாக்குதல் செய்ததாக ஐயப்பட்ட துருக்கிய அரசு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தைக் கூட்டியது. சிரியாவில் இருந்து ஏவுகணைகள் துருக்கி மீது வீசப்பட்டது எனச் சொல்லி துருக்கியில் நேட்டோப்படையினரின் ஏவுகணை எதிர்ப்புக் கணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேட்டோவின் உறுப்பு நாடுகள் துருக்கிக்கு தமது ஆதரவைத் தெரிவித்த வேளை குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் நடாத்துமாறு வேண்டிக் கொண்டன.
அரபு வசந்தமும் துருக்கியும்
2011-ம் ஆண்டு அரபு வசந்தம் தொடங்கியதில் இருந்து துருக்கிக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் நெருக்கடி ஏற்பட்டது. லிபியாவில் கடாஃபியின் ஆட்சியை அகற்றியது போல் சிரியாவிலும் ஒரு விமானப் பறப்பற்ற ஒரு பிரதேசம் பிரகடனப்படுத்தி பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என துருக்கி வற்புறுத்தி வருகின்றது. மேலும் அசாத்திற்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக்காரர்களிற்கு படைக்கலங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் துருக்கி அமெரிக்காவை வேண்டி இருந்தது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி நீடிப்பதை துருக்கி விரும்பியது. சவுதி அரேபியா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒழித்துக் கட்ட விரும்பியது. அமெரிக்கா நடுநிலை வகிப்பது போல் காட்டிக் கொண்டது.
கேந்திரோபாயப் போட்டி
ஈராக்கின் வட பகுதியையும் சிரியாவின் வட பகுதியையும் தன்னுடன் இணைக்க துருக்கி விரும்புகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சவுதி சுனி முஸ்லிம்கள் ஆட்சி நடத்த வேண்டும் எனக் கருதுகின்றது. ஈரான் அங்கு சியா முஸ்லிம்களின் ஆட்சி நடப்பதை விரும்புகின்றது. இவற்றால் சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களிடையே ஒரு பிராந்திய ஆதிக்கப் போட்டி நிலவுகின்றது. ஈரானைப் போல் ஒரு அரபு நாடு அல்லாத துருக்கி அரபுப் பிரதேசத்தின் வடக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகின்றது. அமெரிக்கா மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது கேந்திரோபாயத் தரகர்களாக சவுதி, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இருக்க வேண்டும் என விரும்புகின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட ஈரானுடன் ஒரு புதிய கேந்திரோபாய உறவை உருவாக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. இரசியா மேற்காசியாவில் தனது ஆதிக்கத்தை மீள நிலை நாட்ட முயல்கின்றது. இந்த பல்முனைக் கேந்திரோபாயப் போட்டியில் வதை படப் போவது குர்திஷ் மக்களே.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment