Tuesday 28 July 2015

இரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள்

உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன. உலகம் ஈரானுடனான அணு உற்பத்தி உடன்படிக்கை தொடர்பாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 2008-ம் ஆண்டு இரசியாவால் ஜோர்ஜியாவிடமிருந்து அபகரிக்கப்பட்ட தெற்கு ஒஸேஸியாப் பிராந்தியத்தில் இரசியா தனது படைகளை மேலும் ஜோர்ஜியாவிற்குள் நகர்த்தி நில அபகரிப்புச் செய்துள்ளது.

போல்ரிக் வரலாறு
போல்ரிக் நாடுகள் மற்ற நாடுகளின் தொடர் ஆக்கிரமிக்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. 1939-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வியசெஸ்லவ் மொலொடோவும் ஜேர்மனிய வெளியுறத்துறை அமைச்சர் ஜோக்கிம் வொன் ரிப்பெண்ட்ரொப்பும்  கைச்சாத்திட்ட மொலொடோவ்-ரிப்பெண்ட்ரொப் உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிப்பதில்லை என ஒத்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் ஒரு இரகசிய இணைப்பின் படி போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா, பின்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளை சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றியும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டன. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்துப் பங்கு போட்டுக் கொண்டன. பின்லாந்தை சோவியத் ஆக்கிரமித்துக் தன்னுடன் இணைந்துக் கொண்டது. ருமேனியாவின் ஒரு பகுதியும் சோவியத்தின் வசமானது. சோவியத் ஒன்றியம் 1940-ம் ஆண்டு எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகளைத் தனதாக்கிக் கொண்டது.

இரசியாவிடமிருந்து மேலும் விலகிய போல்ரிக் நாடுகள்
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனி நாடுகள் ஆகியதுடன் 2004-ம் ஆண்டு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்து கொண்டன. இந்த நகர்வுகளை இரசியா தனக்கு அச்சமூட்டும் செயலாகப் பார்த்தது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து அதிக அச்சம் கொண்டிருந்த போல்ரிக் நாடுகள் நேட்டோப் படைகள் தமது நாட்டில் அதிக அளவின் நிலை கொள்ள வேண்டும் எனக் கருத்துக்கள் வெளியிட்டன. அந்த நாடுகளின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் 1991-ம போல்ரிக் நாடுகளைத் தனிநாடுகளாய் அங்கீகரிக்கும் போது இரசியா சட்டபூர்வமாகச் செயற்பட்டதா என்பது பற்றி ஆராயும் படி 2015 ஜூன் மாதம் முதலாம் திகதி இரசிய அரசின் சட்டத்துறையினர் பணிக்கப்பட்டனர். அதற்கு ஒரு வாரத்தின் முன்னர் 1953-ம் ஆண்டு நிக்கிட்டா குருஷேவ் கிறிமியாவை உக்ரேனுடன் இணைத்தது சட்ட விரோதமானது என இரசியச் சட்டதுறையினர் அறிவித்தனர். லித்துவேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் தமது நாடு சுதந்திரமடைந்தமை தொடர்பான இரசியாவின் சட்ட ஆய்வு ஆத்திரமூட்டுவதுடன் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் அபத்தமான ஒன்று என்றார்.

பயம் போக்கும் போர்வையில் அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.

லத்வியாவிற்குக் கட்டிய லாடன்

2015 ஜனவரியில் லத்வியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் லட்கேல் சுதந்திரக் குடியரசு ஒன்று இணையத்தில் பிரகடனப் படுத்தப் பட்டது. இந்தப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் இந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றியிருந்தனர். இதன் மூலத்தைத் தேடிச் சென்ற ஊடகவியலாளர்களும் உளவுத் துறையினரும் இப்பிரகடனத்திற்கும் இரசியாவிற்கும் தொடர்புண்டு என்றனர். இரசியாவிற்கு ஆதரவான விக்டர் யனுக்கோவிச் உக்ரேன் அதிபர்பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உக்ரேனைத் துண்டாடிச் சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கையில் லத்வியாவில் உள்ள இரசியர்களின் சுதந்திரப் பிரகடனம் லத்வியர்களைக் கரிசனை கொள்ள வைத்தது.

இரசியாவின் குடியேற்றவாதம்!
லத்வியாவில்  38 விழுக்காடும் எஸ்த்தோனியாவில் 24விழுக்காடும் இரசியர்கள் வசிக்கின்றார்கள். இவர்களை வைத்து தனது பிராந்திய ஆதிக்கக் காய்களை நகர்த்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முயல்கின்றார் என்பது ஒரு குற்றச் சாட்டாக முன்வைக்கப்படுகின்றது.  லத்வியாவில் இருக்கும் குடியுரிமையற்ற 280,000 வெளிநாட்டவர்கள் அந்த நாட்டின் மக்கள் தொகையின் 14 விழுக்காட்டினராகும். இவர்களுக்கும் வாக்குரிமையுமில்லை அரச உயர்பதவிகள் வகிக்க் அனுமதிக்கப்படுவதுமில்லை. இவர்களின் அதிருப்தியையும் இரசியா தனது பிராந்திய நலன்களுக்குப் பயன்படுத்த முடியும். உக்ரேனில் உள்ள 17 விழுக்காடு இரசியர்களை வைத்து இரசிய அதிபர் விளடிமீர் விளையாடிய அரசியல் சதுரங்கத்திலும் பார்க்க அதிக அளவு விளையாட்டை லத்வியாவிலும் எஸ்த்தோனியாவிலும் விளையாட முடியும்.

இரசிய எதிர்ப்புவாதம்
2012-ம் ஆண்டு லத்வியாவில் இரசியா இரண்டாவது அரச மொழியாக இருப்பது ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஒழிக்கப்பட்டது. எஸ்த்தோனியாவில் இரசியர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு காணப்படுகின்றது. அங்கு அவர்களுக்கு குடியுரிமை இல்லை. சோவியத் ஒன்றியம் எஸ்த்தோனியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் குடியேறிய  இரசியர்களுக்கு அங்கு குடியுரிமை இல்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாது. குடியுரிமை பெறுவதற்கு அவர்கள் எஸ்த்தோனிய மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அச்சத்தின் உச்சத்தில் லித்துவேனியர்கள்
லித்துவேனியாவில் சுமார் 177,000 இரசியர்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இது 5.8 விழுக்காடு மட்டுமே. மற்ற இரு நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையாகும். ஆனால் போல்ரிக் நாடுகள் மூன்றிலும் இரசிய ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சத்தால் அதிகம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் லித்துவேனியர்களே. 2015-ம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆக்கிரமிப்பின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பான கையேடு ஒன்று லித்துவேனிய அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டத்து. உக்ரேனில் இரசியா செய்த நில அபகரிப்பைத் தொடர்ந்து லித்துவேனியாவில் 2,500 பேரைக் கொண்ட ஒரு துரித நடவடிக்கைச்  சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 16,000 படையினரை மட்டும் கொண்ட லித்துவேனியாவை ஒரு சில நாட்களுக்குள் இரசியாவால் ஆக்கிரமிக்க முடியும். இதனால்  லித்துவேனிய படைத்துறைக்கு கட்டாயமாக ஆட் சேர்ப்புச் செய்யும் சட்டத்தை 2015- ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தியது. போல்ரிக் கடலில் இரசியாவின் கலினினிகிராட் கடற்படைத் தளத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் லித்துவேனியா இருப்பதால் மற்ற இரு போல்ரிக் நாடுகளையும் விட அது இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் கீழ் லித்துவேனியர்கள் அனுபவித்த கொடுமைகளை லித்துவேனியர்கள் இன்னும் மறக்கவில்லை. சோவியத் ஆட்சிக்கு எதிரானவர்களை சைபீரியாவிற்கு கடத்திச் சென்று கடும் பனியில் வாழவைத்ததை இன்றும் லித்துவேனியர்கள் ஆத்திரத்துடனும் அச்சத்துடனும் நினைவு கூருகின்றனர்.

ஒன்றியத்துடன் ஒன்றுபட்டதால் வந்த வாழ்வு
உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியம் இரசிய ஆதிக்கத்தில் இருந்து பறித்து தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்ற போது உக்ரேனில் உள்ள இரசியர்கள் இரசியாவை ஆதரித்து அதன்கேந்திரோபயா நோக்கங்களை நிறைவேற்ற உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது போல போல்ரிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உள்ள இரசியர்கள் கிளர்ச்சி செய்தவதற்கான வாய்ப்புக் குறைவு என்று சொல்லலாம். உக்ரேனிய மக்களின் வாழ்கைத் தரத்திலும் பார்க்க இரசியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த மூன்று போல்ரிக் நாடுகளின் வாழ்க்கைத் தரம் இரசியர்களின் வாழ்கைத் தரத்திலும் உயர்வானது. அத்துடன் போல்ரிக் நாடுகளின் ஆட்சி முறைமையும் இரசிய ஆட்சி முறையிலும் மேம்பட்டது. இதனால் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளில் வாழ்வதை அவர்கள் விரும்புகின்றார்கள். அத்துடன் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அவர்கள் குடியேறி வாழவும் வேலை தேடிச் செல்லவும் முடியும்.

இரசியாவைச் சமாளிக்க அமெரிக்காவின் அதிரடி         
                                      ஐக்கிய அமெரிக்கா அவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது. தற்போது அமெரிக்காவின் வான் படையின் செயலராக இருக்கும் டெபரா ஜேம்ஸ் விண்வெளிப் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்டருக்கு ஆலோசகராக விரைவில் நியமிக்கப்பட விருக்கின்றார்.  சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் விண்வெளியில் உருவாகியுள்ள சவால்களை சமாளிக்க அடுத்த ஆறுமாதங்களுக்குள் Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் அமெரிக்காவால் திறக்கப்படவிருக்கின்றது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மீள் சீரமைப்புச் செய்யும் படி வேண்டியுள்ளது. இதற்கான காரணங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாத போதிலும் இரசியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் அல்லது இரசியாவை அடக்கும் வகையில் இந்த நிதி மீள் ஒதுக்கீட்டு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. நீர்மூழ்கிகளை இனம் காணும் கருவிகள், கவச ஊர்திகளுக்கான மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், அணுக்குண்டு கட்டளையகத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவை ஆதிக்க நாடுகள் தமது போட்டிக்களமாக மீண்டும் மாற்றிவிட்டன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...