Saturday, 21 March 2015
வனத்துக் கவிதையின் வனப்பு
புள்ளினங்கள் அங்கு பாடும்
மயில்களும் வந்து ஆடும்
தெள்ளென நீரும் ஓடும்
மெல்லெனக் காற்றும் வீசும்
எம் தாயக வனமாகும்
அங்கு நிறையும் வனப்பாகும்
நீள் நதியில் வான் மதியும் முகம் திருத்தும்
வந்த துதிக்கை அந்த வனப்பைத் துதிக்கும்
ஆழ் கடலலைகளும் நுரைப்பூக்கள் தொடுக்கும்
தாய் நிலத்தின் வனங்களின் வனப்பு
காய் கனிகள் அங்கு விளையும்
விலங்குகள் வயிறு நிறையும்
நலங்கள் யாவும் பொலியும்
நல்ல நீர்ச்சுழற்ச்சி கொடுக்கும்
மெல்ல இயற்கையை இயங்கும்
அதுவே வனத்தின் வனப்பாகும்
சீரான முகில்கள் கூடும் - நிறக்
கதம்பத்தில் வானவில் தோன்றும்
சித்திரம் போன்ற தோற்றம்
தவில் போல இடி முழங்கும்
கவின் தேன் போல் மழை பொழியும்
அதுவே வனத்தின் வனப்பாகும்
தேனோடு திணைமாவும்
தின்று களிக்க தேடி வந்தான்
பாதி மதி நதி சூடிய மாதொருபாகன் மகன்
வள்ளிப்புன வனம் நாடி வந்தான்
வேடங்கள் பல பூண்டான்
வனத்தினல் வள்ளி வதனம்
பார்த்து மயங்கி அவன் பாடிய
கவிதையின் வனப்போ வனப்பு
எதுகை தேடியெடுத்து
மோனை முகர்ந்தெடுத்து
சந்தங்கள் தொடுத்தெடுத்து
யாப்பினை கருத்தில் கொண்டு
பாப்புனையும் வனப்பே வனப்பு
ஈரடியில் உலகளந்ததும் கவிதை
தேரடியில் பக்தர் பாடுவதும் கவிதை
ஏரடியில் உழவர் பாடுவதும் கவிதை
ஊரடியில் உழைப்பாளி பாடுவதும் கவிதை
வனத்தின் வனப்புச் சொல்லும் கவிதை
அன்று இந்த மண் எங்கள் சொந்த மண் - என
வனப்பு மிகு வன்னி வனத்தில் இருந்து
புதுவை முழங்கிய கவிதைகளின் வனப்போ வனப்பு
எதிரிகளின் பாசறையை நோக்கி போக வைத்த
விடுதலை முழக்கமே வனத்துக் கவிதையின் வனப்பு
வீறு கொடுத்த உணர்ச்சிகளின் வார்ப்பு - அவை
தீரமிகு சொற்களின் தொடுப்பு
பூவரச மரங்களில் புலுணிக் குஞ்சுகளைப்
பார்த்து மகிழ்ந்த வனத்துக் கவிதையின் வனப்பு
நவாலிப் படுகொலையும்` நாகர்கோவிலில்`
நாம் தீயோர்க்குக் கொடுத்த விலையும்
சந்திரிக்காவின் சமயலறைக்குத் தெரியாது.
என சத்தமிட்டுப் பாடிய புதுவைக் கவிதையின் வனப்பு
உறவை நீ இழக்காதே! தமிழையே மொழிவாய்!
பிறமொழி கலக்காதே! கலந்தால் நீ அழிவாய்!
இடித்துரைத்த உணர்ச்சிக் கவிஞர்
கவிதையின் வனப்போ வனப்பு
இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!
குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!
காசி அண்ணனின் கவிதையின் வனப்போ வனப்பு
உயிருக்கு நேராக நிலவுக்குப் பெயராக
விளைவிற்கு நீராக நாசிக்கு மணமாக
பயிருக்கு வேராக இளமைக்குப் பாலாக
புலவர்க்கு வேலாக உயர்வுக்கு வானாக்
அசதிக்குத்தேனாகஅறிவுக்கு தோலாக
கவிதைக்கு வாளாகபிறவிக்குத் தாயாக
உளமுற்ற தீயாக உத்தம வரிகளாக
பாரதிதாசன் தமிழை எம் தாய் மொழியை
வியந்து பாடிய கவிதையின் வனப்போ வனப்பு
வன்னி வனத்து ஒவ்வொரு மணலும் - எம்மவர்
சிந்திய இரத்தங்களின் நனைப்பு
வன்னிக்காற்றெல்லாம் அழுகையின் நிறைப்பு - அது
இனக்கொலையின் நீங்காத நினைப்பு
விடுதலையில் மீளும் வனத்து வனப்பு
வானில் எந்திரப்பறவைகளின் பறப்பு
கண்களையும் மூடிய கந்தகப் புகைப்பு
தாய் மண் நீரேல்லாம் சிவந்த சிவப்பு - அது
இனக்கொலையின் நீங்காத நினைப்பு
விடுதலையில் மீளும் வனத்து வனப்பு
கருவோடு சிசுவும் அன்று அழிப்பு
பூவோடு பிஞ்சும் தீயினில் சிதைப்பு
உயிரோடு ஊனும் மண்ணில் புதைப்பு நிறைப்பு - அது
இனக்கொலையின் நீங்காத நினைப்பு
விடுதலையில் மீளும் வனத்து வனப்பு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment