Tuesday 11 November 2014

ஐ.எஸ்ஸிற்கு எதிரான போரின் துருப்புச் சீட்டு துருக்கியின் கையில்

அண்மைக்காலங்களாக இரசியாவிற்கு இணையாக அல்லது ஒரு படி மேலாக மேற்கு நாட்டு ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. மேற்குலகப் பத்தி எழுத்தாளர்கள் துருக்கி நேட்டோக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் துருக்கி குர்திஷ் மக்களைக் கைவிட்டு ஐ. எஸ் தீவிரவாதிகளுடன் இரகசியமாகக் கை கோர்ப்பது வெட்கக் கேடான செயல் என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.

துருக்கி எப்போதும் மூன்றின் நடுவில். 
துருக்கி ஐரோப்பா,ஆசியா ஆகிய நாடுகளுக்கு நடுவில் இருக்கின்றது. அங்கு ஒரு மக்களாட்சி நிலவினாலும் அது மக்களாட்சி, படைத்துறை, இசுலாமியவாதம் ஆகிய மூன்றின் நடுவில் இருக்கின்றது. துருக்கியில் நிலப்பரப்பில் 97 விழுக்காடு ஆசியாக் கண்டத்தில் இருக்கின்றது. ஓர் இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்துள்ளது. நேட்டோவினது ஓர் உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு இருந்து வருகின்றது. ஐரோப்பா, அரபு நாடுகள், ஈரான் ஆகிய மூன்றின் மத்தியில் துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை தடுமாறுகின்றது. துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான உறுப்புரிமை பெறவிரும்புகிறது ஆனால் அது இழுத்தடிக்கப்படுவதால் இரசியாவின் யூரோ ஏசியன் கூட்டமைப்பில் அல்லது பிரேசில், இரசியா, இந்தியா, சீனா ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைவது குறித்து கருத்தில் கொள்கின்றது. இங்கும் ஐரோப்பிய ஒன்றியமா யூரோ ஏசியனா பிரிக்ஸா என்பது துருக்கியின் தடுமாற்றம்.

 துருக்கிய ஆட்சியாளர்கள் இசுலாமியவாதிகளே!
துருக்கியில் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி அடிப்படையில் ஒரு மதவாதக் கட்சியாகும். நாளடைவில் பொருளாதார அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு தன்னை ஒரு மேற்குலகு சார்பானதாகவும் அமெரிக்காவிற்கு நட்பானதாகவும் காட்டிக் கொண்டது. தாராண்மைவாத சந்தைப் பொருளாதாரக் கொள்கையை தனது கொள்கையாகவும் காட்டிக் கொண்டது. ஆனால் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் ஆட்சியில் துருக்கி தேவையான போதெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் இரகசியமாக இணைந்து செயற்பட்டது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவும் துருக்கியும்
அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு 1950-ம் ஆண்டு ஆரம்பமான கொரியப் போரில் மலர்ந்தது. இந்த உறவில் முதல் விரிசல் துருக்கி 1973-ம் ஆண்டு சைப்பிரசை ஆக்கிரமித்த போது உருவானது. இதனை அடுத்து துருக்கி மீது அமெரிக்கா படைக்கல விற்பனைத் தடை விதித்தது. 2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயினிற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் படை எடுத்த போது இரண்டாவது விரிசல் உருவாகியது. துருக்கியின் கேந்திர நிலை ஈராக் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு மிகவும் தேவைப்பட்டது. துருக்கியை தளமாக வைத்து ஈராக் மீது தாக்குதல் நடாத்த அமெரிக்கா விரும்பியது ஆனால் துருக்கியப் பாராளமன்றம் அதை நிராகரித்து விட்டது. தற்போது ஐ. எஸ் போராளிகளுக்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் தாக்குதல் நடாத்த துருக்கியைத் தளமாகப் பாவிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் துருக்கிய விமானத் தளங்களில் அமெரிக்காவின் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மட்டும் பாவிக்க துருக்கி அனுமதி வழங்கியுள்ளது. எகிப்த்தில் முஹமட் மேர்சியின் ஆட்சி தொடர்வதை துருக்கி விரும்பியது. அதை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்ததுடன் படைத்துறையினரின் ஆட்சி மீண்டும் அமைய சவுதி அரேபியாவும் வேறு அரபு நாடுகளும் விரும்பின. அமெரிக்கா எகிப்திய விவகாரத்தில் விலகி இருப்பது போலக் காட்டிக் கொண்டது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. துருக்கி திரைமறைவில் ஈரானின் எரி பொருள் விற்பனைக்கு உதவி செய்கின்றது. 2012 மார்ச் மாதத்தில் இருந்து 2013 ஜூலை மாதம் வரை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தங்கம் துருக்கியில் இருந்து ஈரானுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவை ஈரானிடமிருந்து துருக்கி பெற்ற எரிவாயுவிற்கான விலையாகும். இதில் சம்பந்தப் பட்ட துருக்கிய அரச வங்கியை அமெரிக்கா தண்டிக்கவில்லை! அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் செய்த ஆக்கிரமிப்பை துருக்கிய மக்கள் பரவலாக எதிர்க்கின்றார்கள். சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கி உறுதியாக இருக்கின்றது. அமெரிக்கா அதுவே தனது நீண்டகாலத் திட்டம் என்கின்றது. அதை துருக்கி ஏற்க மறுக்கின்றது.

நேட்டோவும் துருக்கியும்
சோவியத் விரிவாக்கத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பில் 1952-ம் ஆண்டு துருக்கி இணைந்து கொண்டது.  ஆனால் தற்போது நேட்டோவின் முக்கிய பணிகளில் ஒன்றாக இசுலாமியத் தீவிரவாத ஒழிப்பு உருவெடுத்து விட்டது. லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்தது போல சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை நேட்டோ கவிழ்க்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேட்டோப் படைகள் படைக்கலங்கள் வழங்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் இரண்டையும் நேட்டோ செய்யவில்லை. வேல்ஸில் நடந்த நேட்டோக் கூட்டமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐ. எஸ் தீவிரவாதிகளின் பணம் கடத்தல், இரகசிய எரிபொருள் விற்பனை போன்றவற்றைத் தடுக்குமாறு துருக்கியை வேண்டியிருந்தார். துருக்கி தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையை சீனாவிடம் வாங்க முடிவு செய்தமை பல நேட்டோ நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

ஐ.எஸ் இற்கு எதிரன தாக்குதலும் துருக்கியும்
துருக்கி ஈராக்குடனும் சிரியாவுடனும் 780 மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் ஒரு உறுதியான அரசியல் சூழ்நிலை உருவாக துருக்கியின் உதவி தனக்கு அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது. துருக்கியின் அடானா மாகாணத்தில் உள்ள இன்செர்ளிக் விமானப் படைத்தளத்தில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் இலகுவானதாகும். ஆனால் துருக்கி  இதை அனுமதிக்கவில்லை. இந்த அனுமதியைப் பெறுவதற்கு அமெரிக்காவின் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் ஜோன் அலன் துருக்கிகுப் பயணத்தையும் மேற் கொண்டிருந்தார். அமெரிக்கப் படைத்துறையின் உச்சத் தளபதி மார்டின் டிம்செ துருக்கி உட்பட இருபது நாடுகளின் படைத்துறைத் தளபதிகளின் கூட்டம் ஒன்றை 2014-10-13-ம் திகதி வாஷிங்டனின் கூட்டியிருந்தார். துருக்கியப் படைத்தளபதி இதில் பங்கேற்கவில்லை. ஐ. எஸ் அமைப்பிற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும்படி அமெரிக்கா துருக்கிய அதிபரை வலியுறுத்தியது ஆனால் துருக்கியின் அதிபர் ஐ. எஸ் அமைப்பிற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறியதுடன் நிறுத்திக் கொண்டார். சிரியாவில் செயற்படும் குர்திஷ் மக்களின் மக்களாட்சி ஒன்றிய கட்சியினருக்கு அமெரிக்கப் படையினர் விமானத்தில் இருந்து படைக்கலன்களைப் போட்டது துருக்கிக்குப் பிடிக்கவில்லை. குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சி என்பது  துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சியின் சிரியக் கிளை என்பதால் துருக்கி இதை விரும்பவில்லை. குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சி அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட "பயங்கரவாத" அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் துருக்கி செய்த பேருதவி ஈராக்கில் இருக்கும் குர்திஷ் அமைப்பான பெஸ்மேராப் போராளிகளை சிரியப் பிரதேசமான கொபானிக்கு துருக்கியூடாகச் சென்று அங்குள்ள குர்திஷ் அப்பாவிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலையில் இருந்து பாதுகாக்க அனுமதித்தமையாகும். துருக்கியில் செயற்படும் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பும் துருக்கியை குர்திஷ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. ஐ. எஸ் போராளிகள் வெற்றி பெற்றால் அது துருக்கிக்கும் ஆபத்தாக முடியும். அந்த ஆபத்து குர்திஸ் போராளிகளால் ஏற்படும் ஆபத்தைவிட மோசமானதாக இருக்கும்.

துருக்கியும் டென்மார்க்கும்
டென்மார்க்கைச் சேர்ந்த பசில் ஹசான் என்னும் ஐ.எஸ்சின் "புனிதப் போராளி" லார்ஸ் ஹெடெகார்ட் என்னும் இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக எழுதும் ஒரு ஆய்வாளரைக் கொலை செய்ய முயன்றார். இவர் துருக்கியில் பிடிபட்டிருந்த வேளை அவரை நாடுகடத்தும் படி டென்மார்க் அரசு துருக்கிய அரசைக் கோரியிருந்தது. பசில் ஹசானை நாடு கடத்தாமல் துருக்கி விடுவித்தது. ஐ. எஸ் அமைப்பினர் ஈராக்கில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது துருக்கிய இராசதந்திரிகள் 39 பேரைப் பணயக் கைதிகளாக பிடித்திருந்தனர். இவர்களை விடுவிக்க துருக்கி பசில் ஹசானை விடுவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் துருக்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் செயற்படப்போவதாகச் சூளுரைத்துள்ளது. புதிதாக சேரும் ஒரு நாட்டின் விண்ணப்பத்தை ஒரு நாடு நிராகரித்தாலே விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான கிரேக்கமும் சைப்பிரசும் துருக்கியுடன் நல்ல உறவு நிலையில் இல்லை.  ஏற்கனவே துருக்கி ஐரோப்பிய ஒன்றியம் தன்னை முழுமையான உறுப்பினராக இணைப்பதில் இரட்டை நாக்குடன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

குர்திஷ் போராளிகளா ஐ.எஸ் போராளிகளா?
சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படைகளாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சுகின்றது.

துருக்கியின் கையில் துருப்புச் சீட்டு

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மாதக் கணக்காகச் செய்து வரும் விமானத் தாக்குதல்கள் அவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் ஆரம்பத்திலேயே ஒருதரைவழிப் படை நகர்வு செய்யாமல்ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க முடியாது என எச்சரித்திருந்தனர். ஐ. எஸ் போராளிகளுக்கு எதிரான தக்குதல் தொடர்த் தொடர மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளை இனம் காணுவதும் இலகுவாகிக் கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு அங்குள்ள இசுலாமியர்களில் தீவிரவாதப் போக்குள்ளவர்கள் ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் சுத்தப்படுத்த உதவுகின்றது. ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிரான போர் விரைவில் முடியுமா அல்லது இழுபடுமா என்பது துருக்கியின் கையில்தான் இருக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...